உணவைப் பற்றிய கேள்வி இல்லாத இந்துவே இருக்க முடியாது. எல்லா மதங்களிலும் ஆசாரவாதம் உண்டு. எல்லா மதங்களிலும் ஆசாரவாதம் சார்ந்த உணவுவிலக்குகள் உண்டு. இஸ்லாமியர் பன்றி உண்ணலாகாது. யூதர்கள் ஓடுள்ள உயிரிகளை உண்ணலாகாது, இப்படி. ஆனால் இந்துக்கள் இந்த ஆசாரவாத உணவு விலக்குகளை நேரடியாகவே ஆன்மிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். சொல்லப்போனால் உணவை மட்டுமே ஆசாரமாகக் கொள்கிறார்கள்.
இந்த மனநிலையை சுவாமி விவேகானந்தர் கடுமையாக கண்டித்து எள்ளிநகையாடியிருக்கிறார். கடவுளை விட ஆத்மாவை விட சோற்றைப் பற்றி நினைப்பதுதான் ஆன்மிகம் என்னும் நம்பிக்கையை நாம் எங்கும் காணலாம். இரண்டு இந்துக்கள் சந்தித்தால் எதை, எங்கு, எவருடன், எப்படிச் சாப்பிடலாம் என்று மட்டுமே பேசுவார்கள்; ஆனால் அதை மதம்சார்ந்த ஆன்மிக உரையாடல் என நினைத்துக்கொள்வார்கள்.
ஆசாரவாதத்தின் உணவுவிலக்குகளை நான் புரிந்துகொள்கிறேன். அவர்கள் அதை மூர்க்கமாக முன்வைப்பதும் இயல்புதான். அவர்களின் வழிமுறை என்பதே இவ்வுலகில் ஆற்றப்படும் புறவயமான ஒழுங்குமுறை, புறவயச் சடங்குகள் வழியாக அகவயமான ஒருங்குகுவிதலையும், விடுதலையையும் அடைய முயல்வதுதான். மற்றவர்கள் உணவைப்பற்றி மிகையாகக் கவலைப்படுவதென்பது ஒருவகை மனச்சிக்கல் என்பதற்கு அப்பால் வேறொன்றுமில்லை.
நம்மிடம் இந்த உணவு சார்ந்த உளச்சிக்கல் எங்கிருந்து வருகிறது? நமக்கு தொடர்ச்சியாக வந்த உணவுப்பஞ்சங்கள் இந்த மனநிலையை உருவாக்கினவா? அல்லது இந்த நாடு வெவ்வேறு உணவுப்பழக்கங்கள் கொண்ட மக்களின் திரள்களாக இருந்து காலப்போக்கில் ஒருங்கிணைந்து ஒரே சமூகமாக ஆனபோது ஒவ்வொருவரும் அவரவர் உணவுப்பழக்கங்களால் அடையாளம் காணப்பட்டதனால் உருவானதா?
இந்துமதத்திற்குப் பின் உருவான சமண, பௌத்த மதங்களில் கொல்லாமை நேரடியாக உணவுடன் சம்பந்தப்படுத்தப்பட்டது. ஆகவே கடும் விலக்குகள் உருவாயின. அந்த கொல்லாமை நெறி இந்தியாவுக்கு சமணம் அளித்த பெருங்கொடை. பழங்குடிப் போர்களால் கொந்தளித்துக்கொண்டிருந்த இந்த தேசம் எரியணைந்து குளிர அது வழிவகுத்தது. இன்னும் பலநூற்றண்டுகளுக்கு சமண முனிவர்களுக்கு நாம் கடமைப்பட்டவர்கள்.
ஆனால் சமணத்தில் இருந்து கொல்லாமை நெறியும் அதன் விளைவான உணவு விலக்குகளும் பௌத்தம், இந்து மதப்பிரிவுகள் அனைத்துக்கும் சென்றன. அவை ஒருவகை நோன்பாக மாறின. இன்று சமூகத்தடைகளாகவும் நீடிக்கின்றன. இந்த கொல்லாமை, சைவ உணவு சார்ந்த நெறிகள் எல்லாம் மகாபாரதத்தில் அல்லது உபநிடதங்களில் வலியுறுத்தப்படவில்லை.
உணவு பற்றிய இந்த மனச்சிக்கலுக்கு நமக்கு சில மூலநூல் சார்ந்த காரணங்களும் உள்ளன. பகவத்கீதை சாத்விக உணவு பற்றிச் சொல்கிறது. சரகசம்ஹிதை உணவு சார்ந்து சிலவற்றைச் சொல்கிறது. அதன்பின் வந்த ஆசாரநூல்கள் அவற்றையொட்டி உணவுத்தடைகளை, உணவுநோன்புகளை அழுத்தமாக வலியுறுத்தின.
அவை ஆசாரங்கள், ஆன்மிக நெறிகள் அல்ல. யோக முறையின் நிபந்தனைகளும் அல்ல. உணவு மட்டுமே எந்த சிந்தனையையும் மாற்றிவிடாது. எந்த உடலியக்க முறையையும் மாற்றிவிடாது. மிகையுணவும், கடுமையான உணவும் உடலுக்குச் சுமையேற்றுவன. ஊனுணவு சற்று கட்டுப்பாடு மீறினால்கூட மிகையுணவாகவோ கடுமையான உணவாகவோ ஆகக்கூடிய தன்மை கொண்டது.
உளவியல்ரீதியாக ஊனுணவுடன் இணைந்துள்ள கொலை நம்மை பாதிக்கிறது. கர்மவினை சார்ந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு அந்த ஊன்விலங்குக் கொலை மேலும் அதிக பாதிப்பை உருவாக்குகிறது. ஆகவே ஊனுணவு அவர்களுக்கு உளச்சுமையே.
அத்துடன் மக்கள்தொகை மிக்க இந்தியா போன்ற நாட்டில் கட்டற்ற ஊனுணவு அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்தியாவில் விலங்குகளே இருந்திருக்காது. இங்கே வேட்டையே முன்பு ஊனுணவுக்கு முதன்மை ஆதாரமாக இருந்தது.
இப்படி பல காரணங்களால் நானும் ஊனுணவுக்கு எதிரானவனே. ஊனுணவை முற்றிலும் தவிர்க்க முடிந்தால் அது யோகப்பயிற்சி மட்டுமல்ல, அறிவுச்செயல்பாட்டுக்கும் நல்லது என்பதே என் எண்ணம். ஆயினும் ஒருவர் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்தே சுவை உருவாகிறது. ஒரு சுவையை முற்றிலும் தவிர்ப்பதென்பது கடும் நோன்பு. அதை இயற்றலாம். இயற்ற முடியவில்லை என்பதனால் குற்றவுணர்வு கொண்டால் அது ஆன்மிகம், அறிவுச்செயல்பாடு, உணர்வுநிலை ஆகிய மூன்றுக்கும் எதிரானதாகவே ஆகும்.
ஊனுணவால் செயல்திறன் கூடுமா? கூடாது. ஊனுணவால் நுண்ணுணர்வு குறையுமா குறையாது. ஊனுணவால் உளத்திட்பம் அமையுமா? அமையாது. ஊனுணவால் காமம் முதலிய புலன்நாட்டங்கள் கூடுமா? கூடாது.
ஆகவே உணவைச் சார்ந்து யோசிப்பதை தவிர்ப்பதே யோகம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று நிலைகளிலும் உகந்த வழி. ஒருவர் தனக்கு உகந்த உணவுப்பழக்கத்தை கைக்கொள்ளலாம், அது அவருக்கு சிறிதளவு உதவக்கூடும், ஆனால் அந்த உணவுப்பழக்கத்தால் மட்டுமே கிடைக்கும் எதுவும் யோகம், ஞானம், பக்தி முறைமைகளுக்குள் இல்லை. இதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
காமம் குரோதம் மோகம் பற்றிய ஆர்வத்தில் இருந்து எழுத்தாளர்கள் மீளவே முடியாது. மொத்த இலக்கியமே அதைப்பற்றித்தான். மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட எல்லா புராணங்களும் முதன்மையாகப் பேசுவது அதைப்பற்றித்தான். ஆனால் அதில் உழல்பவர்களால் அவற்றை சிறப்பாக எழுத முடியாது. ஒருபக்கம் அதில் உழல்கையிலேயே இன்னொரு பக்கம் விலகி நின்று அதைநோக்கி, அதை அறிந்து, அதை கடந்து சென்று, அறிந்தவற்றைத் தொகுத்துக்கொள்ளும் உளம்கொண்டவர்களால்தான் காமகுரோதமோகம் என்னும் ஒன்றை எழுதமுடியும்.
அவ்வாறு கடந்துசெல்ல உதவுபவை சில உண்டு. அவற்றையும் கீதையைச் சார்ந்தே சொல்லிவிடமுடியும். ஒன்று, செயல்- அதாவது கர்மம். இரண்டு, ஞானம் அதாவது அறிவிலாழ்தல். மூன்று, பக்தி, அதாவது தன்னளிப்பு. மூன்றுமே மூன்றுவகை யோகங்கள் என்றே கீதை சொல்கிறது. இம்மூன்றில் எதைக் கைக்கொண்டாலும் காமகுரோதமோகங்களில் அடித்துச்செல்லப்படாமலிருக்கும் பிடிமானம் ஒன்று அமைகிறது.
செயல், அறிவு, பக்தி என மூன்றும் வேறுவேறு மையம் கொண்டவை. செயலை சிறப்புறச் செய்து செம்மையாக்கிக்கொண்டே போய் அதில் தன்னை முழுமை எய்த வைப்பது ஒரு யோகம். எச்செயலானாலும் அதன் விளைவுகளில் விருப்பு கொள்ளாமல் அச்செயல் அளிக்கும் நிறைவை மட்டுமே கொள்பொருள் எனக்கொண்டு அதில் மூழ்குவது அது.
இணையானது அறிவு அளிக்கும் நிறைவு. அறிந்து மேலும் அறிந்து செல்வது. அறிதலின் இன்பத்தையே அறிவின் பெறுபயன் எனக் கருதுவது. அறிவு அளிக்கும் ஆணவத்தில் இருந்து தொடர்ச்சியாக விலக்கம் கொண்டிருப்பது.
பக்தி என்பது முழுமையாக தன்னை அளிப்பது. இறைவனுக்கு தன்னளிப்பது இறைபக்தி. ஒரு கொள்கைக்கு அளிப்பதும் பக்தியே.
இம்மூன்றும் ஒன்றையொன்று நிரப்பும்படி இணையவும்கூடும். அறிதலையே செயலென ஒருவர் கொள்ளலாம். அறிவியக்கம் மற்றும் அதன் ஆளுமைகள் மீதான பக்தி அவரிடம் இருக்கலாம். மானுடசேவையை ஒருவர் செயல் எனக்கொள்ளலாம், அதற்கான அறிவியக்கமும் தன்னளிப்பும் அவரிடம் இருக்கலாம்.
உலகியல்சூழலில் இருந்து அகன்று, நோன்பு என வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, குறுகிக்குறுகி உட்சென்று காமகுரோதமோகத்தில் இருந்து அகல்வது ஒரு வழி. உலகியலில் இருந்தபடி அவ்வாறு அகல்வதற்கு இருக்கும் ஒரே வழி மேலே நான் சொன்ன யோகம்தான்.
அந்த மூன்று யோகங்களில் எதில் இருக்கிறீர்கள்? அவ்வாறு எதிலும் இல்லாமல் சில யோகப்பயிற்சிகளைச் செய்வதனால் நீங்கள் எதையும் அறியவோ கடக்கவோ முடியாது. உணவுக்கட்டுப்பாடோ பிற நோன்புகளோ எவ்வகையிலும் அதற்கு உதவாது.
ஜெ