காமம், உணவு, யோகம்-2

Eliza Lynn Tobin

காமம் உணவு யோகம்- 1

யோகமரபு காமத்தை ஒரேவகையாக விளக்கிக் கொள்ளவில்லை என்னும் தெளிவு நமக்குத் தேவை. பலசமயம் ‘முதிரா யோக’ வகுப்புகள் அந்த குழப்பமான புரிதலை அளித்துவிடுகின்றன.

காமம் உயிர்விசை. அதன் ஆற்றல் எதிர்மறையானது அல்ல. நித்யசைதன்ய யதியிடம் நடராஜ குரு சொல்வது அதையே. அதை ‘அறியச்’சொல்கிறார். அஞ்சி விலக்கச் சொல்லவில்லை. ஒடுக்கச் சொல்லவில்லை.

காமம் மட்டுமாக எங்கும் பேசப்படுவதில்லை என்பதை நினைவுகூர்க. காமமும் குரோதமும் மோகமும் இணைத்தே எப்போதும் பேசப்படுகின்றன. காமம் என்பது ஓர் உயிர் பெருகி நிறைவதற்காகக் கொள்ளும் விழைவு. மோகம் என்பது அது உலகை நிறைப்பதற்குக் கொள்ளும் விழைவு. அவ்விரு விழைவுகளும் தடைபடும்போது உருவாவது வஞ்சம், கோபம். அதுவே குரோதம்.

இம்மூன்றையும் ஒட்டுமொத்தமாக மேலை உளவியலில் id என்கிறார்கள். அடிப்படை உணர்ச்சிநிலைகள். அவையே மானுடனின் தன்னுணர்வு ஆகின்றன. நாம் அதையே அகங்காரம் என்கிறோம். அகம் என்றால் நான் என்னும் நிலை. அகங்காரம் என்பது நான் என நாம் நம்மை உணரும் விதம்.

இரண்டுவகையான வாழ்வுப்பாதைகள் உள்ளன. ஒன்று செயலூக்கம் கொண்டு விரிவது. இன்னொன்று ஒடுங்கிச் சுருங்கி உள்ளே செல்வது. இரண்டுமே நிகரானவையே. அவரவர் இயல்புக்கு ஏற்ப அவை அமைகின்றன.

செயலூக்கம் கொண்ட பாதையில் காமம் ஆற்றலின் ஊற்றாக அமையும். சிந்தனைத் திறன், கலைத்திறன் ஆகியவற்றின் ஊற்றுக்கண் அது. மோகம் கற்பனை, இலட்சியவாதம் ஆகியவற்றின் வேர். அதன் விளைவு குரோதம். அதை எந்த அளவு வெல்ல முடியுமோ அந்த அளவு நல்லது. ஆனால் செயலூக்கத்தின் பாதையில் குரோதத்தை முழுக்க தவிர்க்க முடியாது.

காமத்தை இழக்குந்தோறும் நாம் அந்த அடிப்படை செயல்விசையை இழப்போம். மோகம் மடிந்தால் செயல்கள் பொருளில்லாதவையென தோன்றும்.  ‘காமமோகிதம்’ எனப்படும் நிலையை ரதி என சொல்கிறார்கள். அதுவே பற்று. அது இல்லாத நிலை அரதி. அதுவே சோர்வு சலிப்பு. விரதி என்றும் விரக்தி என அதைச் சொல்கிறார்கள்.

காமகுரோதமோகங்களில் உள்ள குரோதத்தை முற்றிலும் வெல்லவேண்டும் என்றால் காமமும் மோகமும் அகலவேண்டும். அதன்பொருட்டு தன்னை முற்றாக ஒடுக்கிக் கொள்பவர்கள் இன்னொரு வழியில் செல்கிறார்கள்.

துறவிகளிலேயே இந்த இருவழிகளும் உண்டு. செயலூக்கத்துடன் உலகை எதிர்கொள்பவர்கள், உள்ளூர தன்னை ஒடுக்கிக் கொள்பவர்கள். பௌத்த துறவியர்களில் இவ்விரு பிரிவுகளும் மிக தெளிவான இரு மரபுகளாக பிரிந்தன. ஒடுங்குபவர்கள் ஹீனயானிகள் அல்லது தேரவாதிகள் (ஸ்தவிரவாதிகள், அதாவது நிலைகொள்பவர்கள்) செயலூக்கம் கொண்டவர்கள் மகாயானிகள்.

செயலூக்கம் கொள்பவர்களின் வழி காமத்தை அறிந்து கடத்தல். அதற்கும் இரண்டு வழிகள் உண்டு. காமத்திலாடி அதை அறிபவர்கள் தாந்த்ரீகர்கள். இன்னொரு வழி காமத்தை குறியீடுகள் வழியாக, கலைவழியாக, உன்னதமாக்கி கடத்தல் (sublimation). அது அழகியல் வழி. முதல்வழி வாமம் (இடப்பக்கம்) என்றும் இரண்டாம் வழி தக்ஷிணம் (வலப்பக்கம்) என்றும் சொல்லப்படுகிறது.

தந்த்ரா ’அனுபவத்தை விலக்கத்துடன் ஈடுபட்டு அறிவது’ என்னும் வழிமுறையை முன்வைப்பது. அகப்பயிற்சி வழியாகவும் பலவகை குறியீட்டுச் சடங்குகள் வழியாகவும் அந்த விலக்கத்தை அவர்கள் அடைகிறார்கள்.

அழகியல் வழிமுறையின் கலையிலக்கியங்கள் வழியாக, பல்வேறு குறியீடுகள் வழியாக காமத்தை உன்னதப்படுத்துகிறார்கள் (sublimation) சௌந்தரிய லகரி , அஷ்டபதி போன்ற கவிதைகளில் வெளிப்படுவது அந்த உன்னதமாக்கலே. அஜந்தா ஓவியங்கள் பௌத்த துறவிகள் தங்கள் காமத்தை உன்னதமாக்கிக் கொள்ள கலையை பயன்படுத்தியமையின் வெளிப்பாடுகள்.

ஒடுக்கிக் கொள்ளும் முறையை பின்பற்றுபவர்களுக்கு அவர்களுக்கான கடும் நெறிகள் உண்டு. அன்றாடவாழ்க்கையின் எல்லா களங்களிலும். பேச்சு, உணவு, உறைவிடம் அனைத்திலும். அந்த வழி உலகியலில் ஈடுபடுபவர்களுக்குரியது அல்ல. தாந்த்ரீக வழிமுறையும் அன்றாட உலகியலுக்குள் இயற்றப்படுவதல்ல.

உலகியலில் ஈடுபடும் துறவியருக்குரிய வழி என்பது உன்னதமாக்கல் மட்டுமே. அழகியலால், கலையால் காமகுரோதமோகங்களை அறிந்து கடந்துசெல்லுதல். முற்காலத்தில் புராணங்கள் அதற்குரியவையாக இருந்தன. இன்று அந்த இடத்தில் இலக்கியத்தை வைக்கலாம். நித்ய சைதன்ய யதி விக்டர் ஹ்யூகோவின் லெ மிசரபில்ஸ் நாவலை ஒரு பெரும்புராணமாகக் கண்டு ஆழ்ந்து பயின்றிருக்கிறார்.

இப்பின்னணி விளக்கத்துடன் உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் யார்? ஆசாரவாதத்தை தெரிவுசெய்துள்ளீர்களா? அல்லது துறவுபூண்டு ஒடுங்கும் வழியை தெரிவு செய்துள்ளீர்களா? இரண்டில் எதற்காவது ஆம் என்றீர்கள் என்றால் நீங்கள் காமகுரோதமோகங்களை ஒடுக்கவேண்டும். அதன்பொருட்டு உணவுக்கட்டுப்பாடுகளை பேணவேண்டும்.

ஆனால் நினைவில்கொள்ளுங்கள். காமத்தை மட்டுமாக ஒடுக்க முடியாது. கூடவே மோகமும் ஒடுங்கும். செயலூக்கமும் ஒடுங்கும். அது உலகியலில் நாம் தேடும் அமைதி அல்ல, அது ஒருவகை அடங்கி அமைதல் மட்டுமே. உலகியலில் நமக்கு பல இன்பங்கள் உள்ளன. உணவு, காமம் போன்ற உடலின்பங்கள் மட்டுமல்ல. கலையின்பம், அறிதலின் இன்பம் போன்றவையும் உள்ளன. அவையும் மெல்ல இல்லாமலாகக் கூடும்.

ஏனென்றால் இன்பம் என்பது விழைவின் மறுபக்கமாக நாம் அடையும் நிறைவு. விழைவடங்கினால் இன்பம் இல்லை. விழைவும் அதன் நிறைவும் நம்மில் உருவாக்குவது ஒருவகை கொந்தளிப்பையும் அலையையும்தான். ஆசாரவாதம், ஒடுங்கும்தவம் இரண்டுமே அந்த கொந்தளிப்பு, அலை இரண்டையுமே எதிர்நிலையாகப் பார்ப்பவை.

உங்கள் வழி மேலே சொல்லப்பட்ட இரண்டும் இல்லை என்றால் உங்களுக்கான வாழ்க்கைமுறை வேறு. நீங்கள் பக்தி, யோகம், ஞானம் என மூன்றிலொரு வழியை கடைப்பிடித்தால் ஆசாரவாதத்தின் இறுக்கமோ, ஒடுங்கும்முறையின் நோன்புகளோ தேவையில்லை. அவற்றை நிபந்தனைகளாக ஆக்கிக்கொண்டு குற்றவுணர்ச்சி அடையவேண்டியதில்லை.

நீங்கள் உலகியலில் இருக்கிறீர்கள். அன்றாடவாழ்க்கையை இயற்றவேண்டியிருக்கிறது. அதில் உங்கள் அகங்காரம் செயல்பட்டே ஆகவேண்டும். அகங்காரம் என்பது காம-குரோத-மோகம் வழியாகவே செயல்பட முடியும்.  ஆகவே காமத்தை முற்றொடுக்குவதெல்லாம் உங்கள் வாழ்க்கைச் சூழலில் இயல்வதே அல்ல.

இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள், காமகுரோதமோகத்தை ஒறுத்தல் என்பதை இயற்றுபவர்கள் தங்கள் புறவாழ்க்கையை மிகமிகமிகச் சிறியதாக ஆக்கிக் கொள்ளவேண்டும். ஆசாரவாதிகள் மிகச்சிறிய வாழ்க்கைவட்டத்திற்குள் மீண்டும் மீண்டும் ஒன்றே நிகழும் வாழ்க்கையை வாழ்வார்கள். மாற்றமே இல்லாத அன்றாடம் கொண்டிருப்பார்கள். ஒடுங்குதவம் மேற்கொள்பவர்கள் ஆசிரமங்களில் தனிமையில் வாழ்வார்கள். அவர்கள் புறவுலகுடன் கொள்ளும் உறவும் மிகக்குறைவாக இருக்கும்.

அத்துடன் இந்த கட்டுப்பாடு நோன்புகள் காமத்தை ஒடுக்குதலாக மட்டுமே நிகழமுடியாது. ஐம்புலன்கள் மீதும் கட்டுப்பாடுகள் தேவை. குறிப்பாக கண். நீங்கள் ஒவ்வொருநாளும் தொலைக்காட்சியில் அழகிகளை பார்த்தபடி உள்ளத்தை ஒடுக்க முடியாது. நாக்கு இணையாகவே முக்கியமானது. ஒடுங்குதவம் செய்பவர்கள் நேரடியாகச் செல்வது மௌனம் நோக்கி. பேச்சு பேசுபவனின் அகத்தை உலகம் நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே தொடர்ச்சியாக தியான மந்திரங்களை அகத்தும் புறத்தும் சொல்கிறார்கள்.

புறஉலகத்தை விலக்குபவர்கள் புற உலகம் தங்களையும் அவ்வாறே விலக்கவேண்டும் என நினக்கிறார்கள். ஆகவே காவி போன்ற ஆடைகள். தீக்ஷை (தாடி) போன்ற தோற்றங்கள்.

இத்தனை செயல்பாடுகளுடன் இணைந்தே உணவுக் கட்டுப்பாடுகள். அதாவது உடலை வளர்க்கும் தன்மைகொண்ட உணவுகளை தவிர்த்தல். புலன்தூண்டும் உணவுகளை தவிர்த்தல். சாத்விக உணவு எனப்படுவனவற்றை மிகக்குறைவாக உண்ணுதல்.

மற்றபடி நீங்கள் எண்ணுவதைப் போல உணவை மட்டுமே குறைத்துக்கொண்டால் காமமோ குரோதமோ மோகமோ மட்டுப்படாது. அது ஒரு தற்பாவனை மட்டுமே. பிறப்புச்சூழலால் சாத்விக உணவு மட்டுமே உண்ணும் பழக்கம் கொண்டவர்கள் உண்டு. அவர்களெல்லாம் காமகுரோதமோகங்களை வென்றவர்கள் அல்ல. பலசமயம் சராசரியை விட அவை அவர்களிடம் கூடுதலாகவே இருப்பதைக் காணலாம். காரணம், தங்கள் உடல் பலவீனமானது என்னும் எண்ணமே அவர்களை காமகுரோதமோகங்களை உள்ளூர பெருக்கிக்கொள்ளச் செய்கிறது.

யோகத்தின் வழிமுறைகளை சரியாக பின்பற்றுபவர்கள் முதலில் தாங்கள் எந்நிலையில் இருக்கிறோம் என்பதையே உணர்வார்கள். அந்நிலையில் இயற்றப்படத்தக்கது என்ன என்பதை வகுத்துக் கொள்வார்கள். அதற்குத்தான் நல்ல யோக ஆசிரியர் வழிகாட்டுவார். யோகம் பயில்வது என்பது ஒருவகை கல்விதான். அகக் கல்வி. கல்வி எந்நிலையிலும் மகிழ்ச்சியையே அளிக்கும். கற்கக் கற்க மகிழ்ச்சி பெருகும்.

ஆகவே கடுமையான நிபந்தனைகள், எய்தமுடியாத இலக்குகள், அவை சார்ந்த குற்றவுணர்ச்சிகள் ஆகியவை யோகத்தின் வழிமுறைகளாக இருக்க முடியாது. காமகுரோதமோகங்களை பெருக்குவது யோகம் அல்ல. அவற்றை ஒடுக்க முயல்வதும் யோகம் அல்ல. அவற்றை அறிந்து இயல்பாக கடந்தமைய வழிவகுப்பதே யோகம்

(மேலும்)

 

முந்தைய கட்டுரைஅழகியநாயகி அம்மாள்
அடுத்த கட்டுரைதவாங் சமவெளி பயணம்