வணக்கம் ஜெ,
தங்களது கனிவான சொற்கள் எனக்குப் பெரும் பாராட்டு. என் பாதையைக் குறித்த திடவுணர்வும் பெருகுகின்றது. தற்போது திருக்குறளைச் சார்ந்த மூச்சுப்பயிற்சி நூலொன்றை எழுதிக்கொண்டுள்ளேன். விரைவில் பணியை முடித்துவிடுவேன். இதுவரை
- PranaScience: Decoding Yoga Breathing,
- Mind Your Breathing: The Yogi’s Handbook with 37 Pranayama Exercises
- முரட்டுக் குதிரைக்கு 37 கடிவாளங்கள்
(இது எனது Mind Your Breathing நூலின் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் புதிதாகவே எழுதினேன்)
ஆகிய மூன்று நூல்களை எழுதியுள்ளேன். இவை குறித்து எனக்கு நிறைவும், இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமே என்ற அங்கலாய்ப்பும், இனிமேல் நன்றாக எழுதவேண்டும் என்ற உந்துதலும் உண்டு. உங்கள் எழுத்துக்கள் என் பாதையைச் செப்பனிடும்.
எனக்கு ராஜன் சோமசுந்தரத்தின் சங்கப் பாடல்களை மிகவும் பிடிக்கும். அதிலும் கலம் செய் கோவே உண்மையிலேயே நம்மைக் கலங்கவைத்துச் சோகத்தை நெஞ்சு முழுக்க ஊற்றி நிறைக்கும் இசைப்பிழிவு. அவரது பெயரை உங்கள் உரையொன்றில் கேட்டபின் அவரது வெண்முரசு இசையையும் கண்டேன், கேட்டேன். அவரையும் அறிமுகத் தொடர்புகொண்டிருக்கிறேன். நான் வசிக்கும் ஊரிலிருந்து சுமார் 4 மணி நேரப் பயணத்தில் அவர் இருக்கிறார்.
அடுத்த முறை அமெரிக்காவிற்கு வரும்போது நிச்சயம் நீங்கள் சார்ள்ஸ்டனுக்கு (Airport: CHS) வரவேண்டும். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர். அடிமைச் சந்தை, 16ஆம் நூற்றாண்டின் வீட்டமைப்பு, அடிமைப் பண்ணைகள்/பண்ணையார்களது வீடுகள் (முக்கியமாக அவை இன்று எவ்வாறு சுதந்திர விழுமியங்களுக்கேற்பத் தம்மை உருமாற்றிக்கொண்டிருக்கின்றன), இவ்வாண்டு தொடங்கப்படவுள்ள International African American Museum, ஏற்கெனவே இயங்கிவரும் அருங்காட்சியகம் போன்றவை தங்களுக்கு நிச்சயம் விருப்பமானவையாக இருக்கும். சில மாதங்களுக்கு முன் ஓவியர் திரு மருது அவர்கள் இங்கு வந்திருந்தபோது இந்த ஒழுங்குகளை அவருக்குச் செய்திருந்தேன். தங்களை அன்போடு அழைக்கிறேன்!
நன்றி!
அன்புடன்
சுந்தர்