மரபு, குறள் – ஓர் இணையதளம்

அன்பு ஜெ,

வேலையாக வெளியிலே அலையும்போதெல்லாம் எதையேனும் கேட்டுக்கொண்டே செல்வது எனக்கு விருப்பம். அது என்னைக் காரோட்டும் அலுப்பிலிருந்து விரட்டும். 15 மணிநேரம்கூட நில்லாமல் காரோட்டுவதுண்டு. இன்றைக்கு ஒருமணி நேர ஓட்டத்தில் உங்களுடைய மரபு இலக்கியம் (ஏப்ரல் 13, 2021 தேதியிட்ட ஸ்பாட்டிபை ஒலிக்கோப்பு) உரையைக் கேட்டேன். கண்களி நீர் கசியக் கேட்டேன். அது உங்களது அதே ஆனந்தத்தை, உணர்வை நான் என்னுள் கண்டுகொண்டதன் வெளிப்பாடே. ஒரு ஆசிரியன் ஆனந்தத்தையே கற்பிக்கிறான் என்று வேறெங்கோ சொன்னீர்கள்.

எனது மூச்சுப் பயிற்சி வகுப்பு முடிந்து அன்றைக்கு ஒருவர் அவ்வகுப்பு ஆனந்தமாக இருந்தது என்னிடம் சொன்னார்!  அழகு, அறம், சொல்லழகு, மெய்யியல் என்ற யாவற்றையும் இணைத்துணர்த்திய சிறந்த உரை. விசும்பின் துளியைக் கண்ட புல்லாகக் கசிந்தேன். விசும்பு என்ற வார்த்தையைச் சிவ வாக்கியத்திலும் நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ எனக் கோர்த்துப் பார்த்தது மனது.

அம்மாவின் அன்பு செழிந்த மறத்தைப் பற்றிக் கேட்டபோது எனக்கொரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. ஒரு முறை அமெரிக்க விமான நிலையத்தில் நின்றிருந்தேன். கரோனா தொற்று முடிந்து பயண இறுக்கம் சற்றே தளர்ந்து, ஆனால் முகக் கவசம் அணிந்தே இருக்க வேண்டிய கட்டாயத்துடன் பயணங்கள் அனுமதிக்கப்பட்ட காலம். ஒரு இளைஞன், கனடாக்காரன். முகக்கவசமணியாமல் தன் செல்பேசியில் யாருடனோ பேசுகிறான். உரத்துச் சிரித்து, இங்கே பார் நான் முகக்கவசமணியாமல் திரிகிறேன், யாரும் கண்டுகொள்ளவில்லை என்றவாறு, சில இழிசொற்களையும் வரிசையாகத் தூவியபடி பேசிக்கொண்டேயிருக்கிறான். எனக்கு உள்ளே கொதித்துத் துடிக்கிறது. அவனை எப்படி அடக்கலாம் என்று படபடக்கிறேன். சில நிமிடங்களில் ஒரு அம்மா எழுந்து அவனிடம் வந்து ‘இங்கே குழந்தைகள் இருக்கிறார்கள், உன் வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொள்’ என்றார். நான் அந்த அம்மாவுக்குத் துணையாக, ஆமாம் இது சரியில்லை என்றேன் அவனிடம். அவன் மன்னிக்கவும் என்று சொல்லிவிட்டு அமைதியானான். குழந்தைகள் இருக்கிறார்கள் என்று அந்தம்மா சொன்னது எனக்கேன் தோன்றவில்லை! அது அறம் மட்டுமல்ல, அன்பும், தாய்மையும், பொறுப்பும், எவரும் மாறுபட முடியாத புத்திக் கூர்மையும் கொண்ட சொற்களும் கூட. அன்றுமுதல் பொது இடங்களில் குழந்தைகளை மையப்படுத்திப் பார்க்கக் கற்றுக் கொள்கிறேன்.

அப்புறம் கெய்ஷா சிறுகதையையும் கேட்டேன். ஏதிற்பிணந்தழீஇ யற்று என்று சொல்வீர்களோ என எதிர்பார்த்தேன். அந்தத் துள்ளற் காலங்களின் முடிவில் சாரமற்று நீண்டு விரியும் வருடங்களில் ஒருவர் எதைத் தேடுவார் அல்லது துய்ப்பார். அங்குதான் போய்க்கொண்டிருக்கிறேன். அந்த ஓட்டந்தான் கல்பொரு சிறுநுரையற்று ஓடும் தெளிவோ.

ஜவகர் நேசனின் நூலைப் பற்றி எங்கேனும் சொன்னீர்களா எனத் தெரியவில்லை. புதிய கல்விக் கொள்கை குறித்த அவரது உரைகளைக் கேட்டேன். எது கல்வி, ஏன் தமிழ் படிக்கவேண்டும் என்ற உரைகளினூடு நான் உணர்ந்த உங்கள் பார்வைகளோடு அவரது கருத்துக்களில் நிறைய ஒற்றுமைகளைக் காண்கிறேன். அவரது தலைமையிலமைந்திருக்கும் பள்ளிக் கல்விக்கான ஒரு குழுவில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பொன்று உருவாகியுள்ளது.

எனக்குத் திருக்குறள் விருப்பம். 1330 குறட்பாக்களையும் நண்பர்களைக் கொண்டு ஓதுதல் முறையில் உருவாக்கினேன். தற்போது திருக்குறள் மற்றும் மரபிலக்கியங்களோடு மூச்சுப் பயிற்சிகளையும் இணைத்துக் கற்பிக்கிறேன். 2008 வாக்கில் நாங்கள் தயாரித்த திருக்குறள் மறையோதுதலை இயன்றால் கேட்டுப் பாருங்கள்: maraimozhi.wordpress.com

உங்கள் உரைகளை இன்னும் நிறையக் கேட்டு ஆனந்தமடைய வேண்டும்!
நன்றி!

அன்புடன்
சுந்தர் பாலகிருஷ்ணன்

***

அன்புள்ள சுந்தர்,

மறைமொழி இணையப்பக்கம் சிறப்பாக உள்ளது. குறிப்பிடத்தக்க முயற்சி. திருக்குறளை வெறும் அறிவுநூலாக, ஆய்வு நோக்குடன் அணுகுவதற்கு எதிரான எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. அது ஒரு மறை, அதை ஓதவேண்டும் என்றே சொல்லிவருகிறேன். அந்த நிறைவை அடைந்தேன். வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஆசிரியன் எனும் நிலை, கடிதம்
அடுத்த கட்டுரைபுகையிலை விடு தூது