ஜெ,
நீங்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளை அளிக்கும் அரியவை இணையப்பக்கத்தில் இந்தக்கவிதையை வாசித்தேன்.
அம்மாவுக்கு எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக் குரல்
ஒலிக்கிறது
”நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள்?”
உணர்ச்சியால் கண்கலங்க வைத்த கவிதை . இதற்குமேல் என்ன சொல்ல?
ஜெயராமன்
அன்புள்ள ஜெயராமன்
நன்றி.
அந்த இணையதளத்தில் பல அபூர்வமான கவிதைகள் உள்ளன. என் சென்ற இருபதாண்டுக்காலக் கவிதை விமர்சனங்களில் நான் மேற்கோள் காட்டிய கவிதைகளை அங்கே தொகுக்கிறார்கள் நண்பர்கள்
நகுலனின் அந்தக்கவிதையே அவரது சிறந்த ஆக்கம். கவிதைக்கு இருக்கவேண்டிய உண்மையான உணர்ச்சிப்பெருக்கும் ஆழ்ந்த வாழ்க்கைநோக்கும் கொண்டது.
ஜெ