குளச்சல் மு.யூசுப் கடிதம்

குளச்சல் மு யூசுப் தமிழ் விக்கி  

வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ,

எம்.டி. வாசுதேவன் அவர்களின் ‘நாலுகெட்டு’ படித்துக்கொண்டிருக்கிறேன். குளச்சல் யூசுஃப் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். படித்துக்கொண்டிருந்த போது “திருவாய்க்கு எதிர்வாயில்லை” என்று ஒரு வரி வந்தது…நான் அப்படியே சிறிது நேரம் படிப்பதை நிறுத்திவிட்டேன். என்ன அழகான வரி, எவ்வளவு அழகான மொழியாக்கம்.

இவர் மொழியாக்கத்தில்தான் நான் பஷீரின் அனைத்து படைப்புகளையும் படித்தேன். நம் நாட்டின் ஆகச்சிறந்த எழுத்தாளராக நான் பஷீரையே கருதுகிறேன். ஆனால் இந்த நிலைப்பாடு வேறொருவர் மொழிபெயர்த்திருந்தால் வந்திருக்குமா என்று தெரியவில்லை. அவ்வளவு அழகாக மொழியாக்கம் செய்கிறார். தேனாய் இனிக்கிறது மொழி.

திருடன் மணியன் பிள்ளை படித்த போதும் சரி, பஷீரின் படைப்புகளை படித்த போதும் சரி, இப்போது நாலுகெட்டு படிக்கும் போதும் சரி, இவரிடம் பேசியே ஆகவேண்டும் என்று அவ்வளவு ஆசை பிறக்கும். அவருடைய கைப்பேசி எண்ணும் உள்ளது, பேசதான் கூச்சமாக இருக்கிறது. என்றாவது ஒரு நாள் அவரிடம் கட்டாயம் பேசுவேன்

மணிமாறன்

அன்புள்ள மணிமாறன்,

யூசுப்பின் பஷீர் மொழியாக்கங்கள் வாசிக்கையில் நானும் எண்ணுவதுண்டு, மொழியாக்கம் செய்ய மொழியறிதலும் இலக்கிய அறிதலும் மட்டும் போதாது. ஆசிரியருடன் ஓர் தன்மய பாவனையை உணரும் அணுக்கமும் தேவை என. யூசுப்புக்கு வாழ்க்கை, மனநிலை எல்லாவற்றிலும் பஷீருடன் ஓர் அணுக்கம் உள்ளது. அது மொழியாக்கங்களில் வெளிப்படுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஅழகில் கொதிக்கும் அழல்
அடுத்த கட்டுரைஅஜிதன், மைத்ரி- கடிதம்