ஆசிரியன் எனும் நிலை, கடிதம்

உளம் கனிந்த ஜெவிற்கு,

இன்றைய  ஏற்பும் நிறைவும் என்ற அற்புதமான கடிதம் படித்ததும் மனம் இக்கடிதத்தை எழுத தூண்டியது. 2022 வருடம் எனக்கு பல அதிசயங்கள் நிகழ்ந்த வருடம். 2021  விஷ்ணுபுரம் விழாவில் தங்களை பார்பதற்காகவே வந்தேன். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கல்தூணும் கனிமரமும் உரை கேட்க வந்தேன். முதல் வரிசையில் அமர்ந்து சிதறல் இல்லாமல் கேட்ட முதல் உரை முதல் திறவு எனக்கு. பின்பு, ஜூலையில் நாமக்கல்லில் விடுதலை என்பது என்ன? என்ற தலைப்பில் நீங்கள் ஆற்றிய உரை தத்துவத்திற்கான நற்துவக்கமாக இருந்தது, சந்தேகத்திற்கு விளக்கமும் அளித்தீர்கள். அதே மாதம் கோவை புத்தக திருவிழாவில் குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்து நீங்கள் ஆற்றிய உரை வரலாற்றை எப்படி அணுக வேண்டும் அதன் தேவை,வரலாற்று வாதம், வரலாற்றுத்  தன்மை போன்றவற்றை தெளிவாக புரிந்து கொள்ள உதவியது.

செப்டம்பர் மாத தத்துவ வகுப்பில் கலந்து கொண்ட 3 நாட்களும் வேறு உலகத்தில் இருந்தது போன்ற உணர்வு, குருகுல முறைப்படி கற்பது போல அமைந்த வகுப்பு ஒரு ஞான துவக்கம்.  உங்கள் முன்பு திருமுறை பாடியதும் மறக்க முடியாது ஒன்று.அக்டோபர் மாதத்தில் ஜெ 60 நிகழ்வு கோவையில் நடைபெற்றது.    என் உள்ளம் கவர் பட்டி பெருமானின் தலத்தில் நீங்கள் மாலை மாற்றிய தருணம் நீங்காத பரவசத்தையும்  மகிழ்வையும் தந்த தருணம்.அன்றைய உரைகளும் நெகிழ்வை தந்தன. மேலும் முத்துலிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் தங்களின் சிற்றுரை கேட்டு பங்கு கொண்டது, நிறைவாக விஷ்ணுபுர விழாவில் வெள்ளி முதல் திங்கள் காலை வரை அங்கு பெற்றதை எழுதி மாளாது.

அறிதலுக்கான பெரும்விழைவு உள்ளே பொறிக்கப்பட்டுள்ளது. அறிதலின்போது மட்டுமே அவன் அடையும் நிகரற்ற இன்பம் ஒன்று உண்டு  என்று நீங்கள் கூறியது போல இந்த வருடம் ஏழு முறை தங்களை சந்தித்து இன்பம் பெற வாய்ப்பளித்த திருவருளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். திருமுறையில் ஏழாவது நம்பியாரூரக்குரியது.  இலக்கிய நம்பிக்கும் எனக்கும். செப்டம்பர் மாதம் முதல் ஒன்பதாம் திருமுறையை கவனத்திற்கு கொண்டு வர பன்முக நோக்கில் ஒரு வருடம் சிந்திக்க ஏற்பாடு செய்து அதில் வாரம் ஒருமுறை நானும் பேசி வருகிறேன். வரும் வருடத்தில் சில திட்டங்கள் உள்ளன. செயலூக்கம் உங்கள் சொல் வழிப்பெற்றதே.

ஆசிரியனுக்கு வாசகன் செய்யவேண்டியது,அவனை முழுதறிவதுதான். அவனை தொடர்ந்து அணுகுவதுதான். அவன் எழுதிய எல்லாவற்றையும் வாசிப்பதுதான். இந்த வருடம் அதற்கான முதற்படியை எடுத்து வைத்ததாக உணர்கிறேன். முதற்கனல் மற்றும் மழைப்பாடல் நிறைவு பெற்றது, மற்ற படைப்புகளையும் இந்த வருடம் படிக்க வேண்டும் என எண்ணியுள்ளேன். தங்களினால்  இந்த வருடம் இனிமையான நிறைவான வருடம். புத்தாண்டு வாழ்த்துக்கள்  ஜெ, பட்டி பெருமான் எல்லா வளங்களையும் நலங்களையும் தர வேண்டிக் கொள்கிறேன். நிறைவாக, இவ்வருடம் பல அறிதலை தந்தீர்கள்.

ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான அன்புதான் ஞானத்தின் ஊடகம், ஆதலால்,

uங்கள் ஆசிகளை எதிர்நோக்கி,

பிரியமுடன்

பவித்ரா, மசினகுடி

***

அன்புள்ள பவித்ரா

நலம்தானே? முன்பெல்லாம் ஆசிரியர் என்னும் இடத்தை நான் சூடிக்கொள்வதில்லை. அதை ஏற்க மறுப்பதே வழக்கம். இன்று அப்படி இல்லை. ஆசிரியர் என என்னை முன்வைக்கலாமென ஒரு துணிவை மெல்ல அடைந்துள்ளேன். அதற்குப்பின்னரே உரைகளாற்றவும் வகுப்புகள் நடத்தவும் துணிந்தேன். நான் எண்ணுவது தனிப்பட்ட முறையில் என்னிடமிருந்து இந்த வேகத்தைப் பெற்றுக்கொள்ளும் சிலரை கண்டடையவேண்டும் என்பதே. எழுத்து என்றுமிருக்கும், அதற்கும் அப்பாலிருப்பது மனிதனிடமிருந்து மனிதனுக்குச் செல்லும் ஒரு விசை. அதையே முன்வைக்க விரும்புகிறேன். வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைமழை பாடலாகும்போது… ரம்யா மனோகரன்
அடுத்த கட்டுரைமரபு, குறள் – ஓர் இணையதளம்