ஆசிரியரை அணுகுதல்

அன்புள்ள ஜெ

வணக்கம்…

கடந்த ஒரு வாரமாக நேரில் எப்படியாவது ஒருமுறையேனும்  உங்களை பார்த்துக்கொண்டே இருந்தேன் அதுவொரு அகநிறைவை தந்தது படைப்பூக்கத்தோடு  இருக்க செய்தது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் “எதுவும் நிகழட்டும் என் குரு அருகிலிருக்கிறார்” என்று தோணியது. நேற்றும், இன்றும் அது நிகழாமல் ஏதோ ஒரு பறி கொடுப்பு நிலையை உணர முடிகிறது என்னவென்றே தெரியாமல் குரோம்பேட்டை தேவாலயத்தில் வந்து அமர்ந்திருக்கிறேன்.

இங்கு வந்தும்  காதுகளில் நாகூரில் உள்ள அமீர் ஹம்ஷா என்ற பக்கீர் ஷா(சூபி யாசகன்) முகமதுவை பார்க்க நினைத்து பாடிய பிரார்த்தனை பாடலின் வரிகள் (அலை கடல் துரும்பென ஆடுது என் மனம் ஆர்வத்தின் காரணத்தால்…. நபி மீது ஆசையின் காரணத்தால்…. அவன் அருளாளன்… அன்பாளன்… மக்கத்தில் பூத்த மலர். மதினாவின் வாச மலர்… திக் எட்டும் போற்றுகின்ற மலர்… தெய்வீக ஞான மலர்… வாடாத மலர் முகத்தை நானும் காண்பேனா…. திக்கு திசை புகழும் மக்கா முகமதுவை நேரில் காண்பேனா… அமீர் ஹம்ஷாவின் இரு கண் குளிர காண நாடும் இறைவா….) ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஒருவகை தனிமையும், சோகமும்  சூழ்ந்திருக்கிறது.

அதிலிருந்து ஏதேனும் ஓர் விடுதல் கிடைக்குமென நேற்று விஷ்ணுபுரம் ஸ்டாலுக்கு சென்று அஜிதனை பார்த்து பேசிவிட்டு வந்தேன். இன்று மீண்டும் அந்த படலம் தொடங்கி விட்டது என்ன செய்வதென்று புரியவில்லை உங்கள் இளம் வயதில் இதுமாதிரியான உணர்வலைகள் இருந்திருக்கிறதா சார் குரு யதி, சு ரா வை சந்தித்து விட்டு திரும்பிய தருணங்களில்? எப்படி இதை கையாளுவது அல்லது புரிந்து கொள்வது?

அன்பு ஹனிஃபா

சென்னை

***

அன்புள்ள ஹனீஃபா

உங்கள் கடிதம் கண்டேன். உங்கள் உணர்வுகளை மிக அணுக்கமாகப் புரிந்துகொள்கிறேன். ஏனென்றால் நான் எப்போதுமே அப்படித்தான் இருந்து வருகிறேன். நான் ஓர் எழுத்தாளனாக ஆவதற்கு முன் தொடர்ச்சியாக என் ஆதர்ச ஆளுமைகளை தேடிச்சென்று சந்தித்திருக்கிறேன். அதீன் பந்த்யோபாத்யாயவை சந்திக்க வங்காளத்திற்குச் சென்றேன். கேளுசரண் மகாபாத்ராவை சென்று சந்தித்தேன். லாரி பேக்கர், வைக்கம் முகமது பஷீர், தகழி சிவசங்கரப்பிள்ளை, சிவராம காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி என நான் சந்தித்த ஆளுமைகள் பலர். அனைவருமே என்னை ஒரு தீவிர நிலையை நோக்கிச் செலுத்தினர். நான் எழுத்தாளனாக அறியப்பட்டபின்னரும்கூட அந்த மனநிலைதான். நீண்ட இடைவேளைக்குப் பின் ஸகரியாவை சந்தித்தேன். அதே உணர்வெழுச்சி.

ஏன்? நான் வாழநேரிட்டிருப்பது அன்றாடத்தின் உலகியலில். அதற்கு அப்பால் ஒரு ரகசிய நதிபோல ஓடிக்கொண்டிருக்கும் அறிவியக்கத்தில், அதன் ஆன்மிகத்தில் என்னை இணைத்துக்கொள்ள விரும்புகிறேன். அப்போது மட்டுமே என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருப்பதை உணர்கிறேன். அன்றாடத்தின் எளிய அரசியல், எளிமையான சழக்குகள் என்னை சீண்டினால் எதிர்வினையாற்றிவிடக்கூடும். ஆனால் உடனே என் ஆற்றலையும் இழக்கிறேன். உள்ளூரக் கூசுகிறேன். நான் என்னை எப்போதும் வேறொன்றின் தொடர்ச்சியாக முன்வைத்துக்கொள்ள முயல்கிறேன். ஆனால் அன்றாடம் பேராற்றல் மிக்கது. நம் ஆணவம், நம் நுகர்வுவிழைவு ஆகியவற்றை காட்டி நம்மை ஈர்த்துக்கொண்டே இருப்பது. ஆகவே இது இன்றுவரை நீளும் ஒரு தொடர்போராட்டமாகவே உள்ளது.

அந்த மனநிலையை நாம் பொதுவாகப் பகிர முடியாது. உடனே உலகியலாளர்களிடமிருந்து ஆலோசனைகள் கிளம்பி வரும். ‘எதையுமே தர்க்கபூர்வமாக அணுகவேண்டும்’ ‘எவரையுமே முழுக்க ஏற்றுக்கொள்ள கூடாது’ என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அவர்களின் மதத்தையும், சாதியையும், அரசியலையும், அதன் தலைவர்களையும் கடவுள்நிலையில் வைத்து வெறிகொண்டு வழிபடுவதை அவர்களிடம் நாம் சுட்டிக்காட்டவே முடியாது. அந்த மனநிலையை நமக்கேயான ஒரு பிடிமானமாக, நாம் நம்மை வைத்திருக்கும் ஓர் அந்தரங்கமான அறையாக மட்டுமே கொண்டிருக்கவேண்டும்.

ஆனால் நான் அப்படி வைத்துக்கொண்டதில்லை. ஏனென்றால் எனக்கு எப்போதுமே பொதுமக்கள் மனநிலை பற்றிய ஒவ்வாமை உண்டு, முன்பு அலட்சியமும் எரிச்சலும் இருந்தது, இன்று அனுதாபம் மட்டுமே. ஆகவே நான் என்னுடைய பற்றுகளை, உணர்வுகளை மிக வெளிப்படையாக எல்லா மேடைகளிலும், எல்லா நூல்களிலும் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன். இதை ஒரு மனிதர், ஒரு தரப்பு மீதான பற்றாகக் கொள்ளவேண்டியதில்லை. ஒரு மரபு, ஒரு பெருக்கின் மீதான ஈடுபாடாக மட்டுமே நாம் வகுத்துக் கொண்டால்போதுமானது.

அந்த உணர்வுநிலைகளை பேணிக்கொள்க. எதுவரை நீடிக்குமோ அது வரை அது நீடிக்கட்டும். காதல் புனிதமானது என்பார்கள். அதைவிடப் புனிதமானது நம்மை வந்தடைந்திருக்கும் அறிவு மரபின்மேல் நமக்கிருக்கும் பிரியம்.

ஜெ

முந்தைய கட்டுரைகண்மணி
அடுத்த கட்டுரைபெங்களூர் சந்திப்பு, கடிதம்