வாழ்வு விண்மீன்களில்- கடலூர் சீனு

இனிய ஜெயம்

நண்பர் இயக்குனர் ரத்த சாட்சி ரஃபீக் அவர்களின் அழகியதொரு குறும்படம் கண்டேன். தமிழ் நிலத்தின் நகரம் ஒன்றில் நாளை எனும்  நிரந்தரமின்மை அளிக்கும் பதற்றம் கொண்டு இன்றைய நாளை நகர்த்தும், தனித்து வாழும் (அழகுக்கலை நிபுணி) வட புல நிலத்தை சேர்ந்த வந்தேறி இளம் தாய் ஒருவரை மையம் கொள்ளும் கதை.

மிக அழகிய படம்.கதையாக இதன் பெண் உலகு அதன் அன்றாடம் மற்றும் உணர்வு தளம் அசோகமித்திரன் கதைகளுக்கு இணையானது.எல்லாமே அத்தனை நம்பகம் கொண்ட முகங்கள். அத்தனை நம்பகம் கொண்ட நடிப்பு.

உன் வேலை நிரந்தரம் இல்லை என்று சொல்வதும் ஒரு பெண் குரலே. அந்த பெண்ணும் இந்த கதையின் நாயகி போலவே அதே நிலையிலும் இருக்கவும் கூடும்.நாயகி தோளில் குழந்தையாக தூங்குவதும் பெண்தான். நாயகி எனும் பெண்ணின் அம்மாவின் அதே வாழ்வை அவ்வாறே தொடர போகிற மகள் எனும் மற்றொரு பெண்.வெளி மற்றும் உள்ளரங்க சூழல் சித்தரிப்பு காட்சிகளும், அதற்கான ஒலிக்கலவையும், நிகர் வாழ்வுக்கு அத்தனை அணுக்கமாக அமைந்திருக்கிறது. படத்தின் பன்னிரண்டு நிமிடத்துக்குள் 12 மணிநேரத்தை செறிவாக்கி பொதிந்து தரும் எடிட்டிங்.

இரவு கவிழும் நாளிறுதியில் வீடுகளிலும் தெரு மின்கம்பத்திலும் எழும் ஒளிச்சுடர்களும், அதற்கான ஒளிப்பதிவும் இருப்பதே தெரியாமல் எழும் அந்த மெல்லிய பின்னணி இசையும் படத்தின் இறுதி அளிக்கும் ஆசுவாச உணர்வை இன்னும் அழுத்தம் பெற வைக்கிறது.

தமிழ் கலைப்பட ஓடையில் வசந்த் சாய் அவர்கள் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் கதை வரிசையில் நிற்கும் வகையிலான வலிமையான ஆக்கம்.உலக அளவில் எனில் பெலா தார் இயக்கிய டுயுரின் ஹார்ஸ்  படத்தை குறுநாவல் எனக் கொண்டால் இந்தப் படத்தில் இறுதியில் செய்வதறியாது அந்தத் தாய் அமர்ந்திருக்கும் காட்சியை அதே டுயுரின் ஹார்ஸ் படத்தின் காட்சித் தீவிரம் கொண்ட சிறுகதை என்று சொல்லலாம்.

அந்த இனிய அனுபவம் இதோ உங்கள் பார்வைக்கும்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபுதைந்தவை
அடுத்த கட்டுரைசி.கன்னையாவும் வி.கே.ராமசாமியும்