நீர்நிலவும் வான்நிலவும்

அன்பின் ஜெ,

கூட்டத்துடன் தனித்திருத்தல் உரை மிகச் சிறப்பாக இருந்தது.  வாழ்நாள் முழுமைக்கும் விரித்தெடுத்துக்கொள்ளக்கூடிய பல்வேறு படிமங்களின் வழி நிகழ்த்தப்பட்ட மிகச் செறிவான உரை.

பொதுவாக கலைப்படைப்புகள் வழியாக Catharsis நிகழ்வதை கண்டிருப்போம். இம்முறை ஒர் உரையில் அது நிகழ்ந்தது.

கீதைத்தருணம் கட்டுரையில் முறிவுக்கணங்களில் பேதலித்த மனதின் கட்டற்ற அரற்றலைக் குறித்து எழுதியிருப்பீர்கள். கூட்டத்துடன் தனித்திருத்தல் உரையின் முதல் பகுதியில், அந்த பேதலித்த மனதுடன் அலையும் ஒருவனின் இடைவிடாத முட்டிமோதல்களை, விடைதேடி அலைதலை, ஆயிரம் பத்தாயிரம் எனப் பெருகும் எண்ண ஓட்டங்களின் தாளவியலா கொந்தளிப்பை, அந்த மனதுடன் இருக்க இயலாமல், அதிலிருந்து தப்பி ஓட அவன்செய்யும் பிரயத்தனங்களை என கிட்டத்தட்ட மேடையில் நிகழ்த்திக் காட்டிவிட்டீர்கள். அது கேட்பவர்களின் மனதையும் அந்த முறிவுக்கணங்களுக்கு எடுத்துச் சென்று விட்டது.அவ்வுணர்வூட்டப்பட்ட நிலையிலிருந்தே, தேடலின் பாதை குறித்தான இவ்வுரை நிகழ்த்தப்பட்டதும், பெற்றுக்கொள்ளப்பட்டதும்.

உரையின் முதற்பகுதியில், தேடலின் பாதையில் ஒருவன் எதிர்கொள்ள நேரும் வெவ்வேறு கருத்துத் தரப்புகளின், தத்துவங்களின் மோதல்களுக்கு மத்தியில் தனது தேடலை, தனது சுயத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொண்டு, தனது பயணத்தை தனித்து மேற்கொள்வது என்பது குறித்து பேசப்பட்டது. இரண்டாம் பகுதி, தேடலில் உள்ள ஒருவன் உலகியலில் எதிர்கொள்ளும் அடையாளங்களையும் அவற்றிற்கு மத்தியில் தனது தன்னிலையை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது  என்பதும் பேசப்பட்டது. ‘நான் அழிவதில்லை’ எனும் கீதையின் வரிகளோடு நிறைவு செய்யப்பட்டது.

இவ்வுரையின் தனித்துவமாக நான் கருதுவது, இதில் நிகழ்ந்த Catharsis அனுபவம்தான். முறிவுக்கணங்களுக்கு நம் உள்ளத்தை எடுத்துச் சென்று அதிலிருந்து கீதைத்தருணத்திற்கும் அங்கிருந்து தேடலின் பாதைக்கும் இட்டுச்சென்றது.  இதில் பேசப்பட்ட சில கருதுகோள்கள் நமக்கு முன்னரே  பரிச்சயமானவையாகக் கூட இருக்கலாம். ஆனால் மூன்று மணி நேரத்தில், தனித்தலைத்தலின் துயரத்திற்கும் அனந்த-ஆனந்தத்திற்குமான இந்தப் பயணம் என்பது, நம் முன்னோடி ஒருவன் நாம் இதுவரை கடந்துவந்த பாதையையும் இனி செல்லவிருக்கும் பாதையின் சாத்தியங்களையும் ஒளியூட்டி காண்பித்தது போல் இருந்தது. அது ஒரே நேரத்தில் ஆழ்ந்த துக்கத்திற்கும் பின் விடுதலையின் ஆனந்தத்திற்கும் கொண்டு சென்றது.

பருவ மழையை விட, கோடை மழை ஏன் மனதை அவ்வளவு பரவசம் கொள்ள செய்கிறது? கடும் கோடையில், ஓரிரு நாட்கள் மந்தாரமாக இருக்கும் வானம், ஒரு மாலையில் கருமேகங்கள் திரள, பூமி வெப்பமுற, பெரும் முத்துக்களென மழைத்துளிகள் விழ ஆரம்பிக்கும். பலத்த காற்றும் இடியும் மின்னலும் சேர்ந்து கொள்ள பறையோசையென,ஆர்ப்பரிப்பென,  அரற்றலென, ஒப்பாரியென இரவு முழுவதும் கொட்டித் தீர்க்கும். நம் கனவுகளிலும் ஊடுருவிச் செல்லும். அவ்விரவு சரியான உறக்கமும் இருக்காது. விடிந்தால், வானம் வெளுத்து, தூய நீல நிறத்தில் இருக்கும். பஞ்சுப் பொதிகளென புத்தம்புதிய வெண்மேகங்கள் உலாவும். மரங்களில் செடிகளில் ஒட்டியிருந்த தூசு முழுதும் அகன்று, பூமியே துடைத்து வைத்தது போல் இருக்கும். நிலத்திலிருந்து மெல்லிய வெப்பம் கிளர்ந்து வரும், மண் வாசனையும் மழையீரத்தின் வாசனையும் சூழ்ந்துகொள்ளும். ஒர் இனிமை நம்முள் ஊற்றெடுக்கும், நம் இருப்பே மதுரமாக மாறி அக்காலையின் மென்னொளியை நோக்கி அமர்ந்திருக்கும். ஓர் இரவிற்குள், அரற்றலிலிருந்து ஆனந்தம் வரையிலான இம்மாற்றம், அதுவே கோடை மழையின் வசீகரம். Catharsis நிகழ்ந்த தருணங்களில் மனதில் தவறாது தோன்றும் படிமம் கோடை மழை இரவும் அதுமுடிந்த காலையும்தான். இவ்வுரை முடிந்ததும் மனதில் மீண்டும் வந்தது, அந்த அமைதியில், இனிமையில் அகம் நிறைந்து நின்றது.

இவ்வுரை முதன்மையாக தேடலின் பாதையின் சவால்களையும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் குறித்து பேசியது. இவ்வுரையினூடே மேலதிகமாக எனக்கு நிகழ்ந்தது இப்பாதையில் நான் எங்கிருக்கிறேன் எனும் விழிப்புணர்வு. உரை நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, ஆழ்மனதில் நிகழ்ந்த அறிதல் அது. மலைப் பாதைகளில் வைக்கப் பட்டிருக்கும் வரைபடங்களில் பார்த்திருப்போம், மலைகளின் ஏற்ற இறக்கங்களை காண்பித்து You Are Here என்று வட்டமிடப்பட்டிருக்கும். அது போன்ற ஒரு சுட்டுதல் அல்லது வழிகாட்டுதல். நிகாஸ் கசந்த் ஸகீஸின் The last Temptation of the Christ நாவலில் வரும் வரி இது: The desert is not big enough for two. தேடலின் பாதை என்பது பெரும்பாலையில் தனித்தலைவது தான். அங்கு துணை வர சாத்தியமானது ஆசிரியரின் அல்லது மரபின் இது போன்றதொரு வழிகாட்டுதல் மட்டுமே.

Broken and broken again
in the water
there is still the moon.

– Ueda Choshu

இந்த நீர்நிலவிலிருந்து, அந்த வான்நிலவைச் சுட்ட ஓர் ஆசிரியன் அமைவதும், அவனுடன் அமர்ந்து அந்நிலவைக் காண வாய்ப்பதும் ஓர் நல்லூழ். அனைத்திற்கும் நன்றி ஜெ!

அன்புடன்,
கிருஷ்ணப்பிரபா,
பெங்களூரூ.

முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சி சந்திப்புகள், கடிதம்
அடுத்த கட்டுரையாதுமாகி