இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள்- மின்னூல் வாங்க
பேரன்புக்குரிய ஜெ,
இந்து மெய்மை
இந்து மதம் பற்றிய நுணுக்கமான புரிதல் இக்கட்டுரைகள் வாயிலாக அடைய முடிகின்றது. பொதுவாகவே ஒன்றை நாம் கொண்டாடும் போதும் எதிர்க்கும் போதும் முதலில் ஒன்றை பற்றிய நுணுக்கமான புரிதல் வேண்டும். இக்கட்டுரைகள் பல வகையான நுணுக்கமான கேள்விகளை முன் வைக்கின்றது. குறிப்பாக இந்து மதம் இந்து வழிபாடு சமகால அரசியலில் இந்துவின் இடம் இந்து மரபு தொடங்கிய இடம் அதன் தொடர்ச்சி சந்தித்த சந்திக்கின்ற சவால்கள் என எண்ணற்ற விவாதங்கள் அதற்குரிய தெளிவான பதில்கள் என நீள்கிறது.
முதலில் இந்து மதம் என்பது ஒரு அமைப்பல்ல அது ஒரு ஞானமரபு என்பதை ஜெ முன்வைக்கும் இடம் சிறப்பானதொரு ஆராய்ச்சியினை வெளிப்படுத்துகிறது.
மேலும் மதம் சார்ந்த அரசியல் குறிப்பாக தமிழகத்தில் எப்படி நடந்து கொண்டிருக்கின்றது என்பது குறித்த விளக்கங்களும். அனைத்தையும் தாண்டி ஒரு தனி மனிதன் அவன் மதம் சார்ந்த மரபுகளை பற்றிய ஆய்வை மேற்கொள்ளாமல் பொதுவான கருத்து பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொண்டு எதிர்வினை ஆற்றுவது எவ்வளவு பெரிய மூடத்தனம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
ஒரு விடயத்தை மேலோட்டமாக பார்த்து விட்டு கருத்து தெரிவிக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த ஒரு சிந்தனையையும் வெளிப்படுத்துவதற்கு முன்பாக ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய செயல் என்றால் அது அச்செயலின் உண்மைத் தன்மையை ஆழமாகச் சென்று கண்டறிவது ஆகும்.
இந்திய மரபு மற்றும் இந்து ஞான மரபு இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், மதத்திற்கும் மரபிற்கும் உள்ள வேறுபாடுகள் தரிசனங்கள், அவற்றின் தொடக்கம் என பல தகவல்களை ஆழமாக ஆராய்ந்து ஜெ இப்படைப்பில் அளித்துள்ளார்.
வேதங்கள், தரிசனங்கள், மதங்கள், தத்துவங்கள் இவற்றை பற்றிய அடிப்படைகளை சாதரணமாக புரிந்து அறிந்துகொள்வது என்பது அறிய காரியம்.
இன்றைய சூழலில் ஒரு குழந்தைக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் மேலோட்டமாக எதையும் சொல்லி நகர்ந்து விட முடியாது. ஏனென்றால் இக்கால குழந்தைகள் கேள்வி ஞானம் அதிகம் கொண்டவர்களாகவே கருத்தரிக்கிறார்கள்.
முதலில் இன்று நடக்கும் மத அரசியல் சூழலில் ஒருவர் ஒரு மதத்தை பற்றி முழுமையாக வெளிப்படையாக அறிந்து கொள்வதே சிரமம் தான். அதையும் தாண்டி ஒரு மரபினை தெரிந்து கொள்ள பயணிக்கும் போது அதற்கு தேவையான சரியான தரவுகள் கிடைக்க வேண்டும் என்பது இரண்டாவது தடை.
சரி, அனைத்து தடைகளையும் கடந்து வரும் ஒருவனுக்கு மரபு என்றால் என்ன, தத்துவம் என்றால் என்ன, மதங்கள் என்றால் என்ன, அது எங்கு தொடங்கியது, இப்போது எப்படி அதனை அறிந்து கொள்வது, எப்படி அது வகைப்படுத்தப்படுகிறது, எல்லாவற்றையும் தாண்டி எப்படி தத்துவத்தை பற்றிய அடிப்படைகளை கற்பது எனும் வினா எழும் பட்சத்தில் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ஒரு சிறந்த பரிந்துரையாக அமையும்.
ஒரு வாசிப்பில் முழுவதுமாக அறிந்து அனுபவித்து விட முடியாத, கல்லாதது உலகளவு என்பதை உணர்த்தியது. துறை சார்ந்து இயங்குவதற்கும் அறிவு சார்ந்த மேம்படுதலுக்கும் மேலும் தர்க ரீதியாக ஒரு செயலை எதிர்கொள்வதற்கும் அகதிறப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி கலந்த பேரன்புடன்
இரா.மகேஷ்