கேரள இலக்கிய விழா
அன்புள்ள ஜெ,
வணக்கம். கேரள இலக்கிய விழாவில் கே.சி. நாராயணன் வழிநடத்திய உரையாடலைக் கேட்டேன். அவர் அளித்த அறிமுகக் குறிப்பு வேறெந்த மேடைகளில் அளிக்கப்பட்டதைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது. பேச்சில் அமைந்த கதைத்தன்மை கூட்டத்தைச் சிதறவிடாததையும் கவனிக்க நேர்ந்தது.
இறுதியில் கே சி ஆர் ஒரு மட்டுருத்துனராக மட்டும் அவ்வரங்கில் இருப்பதை நினைத்து வருந்தினீர்கள். அன்றைய தினத்தில் உங்கள் வருகைக்கு முன் அவருக்கென ஒரு தனி உரையாடல் பால் சக்கரியாவுடன் இருந்தது. அதில் அவர் மாத்ருபூமி வார பத்திரிக்கையின் பொறுப்பாசிரியராக இருந்தபோது ஓய்வுபெற்ற குடிமைப்பணி அதிகாரிகள், எழுத்தாளர்களையெல்லாம் எங்கனம் இதழுக்கு எழுத வைத்தார் என பேசினார்.
விஜயகுமார்.
***
அன்புள்ள ஜெ
கேரள கலைவிழாவில் உங்கள் உரையாடலை கேட்க வந்திருந்தேன். கேள்விகளும் பதில்களும் சிறப்பாக அமைந்திருந்தன. உங்கள் உரைகேட்க அத்தனைபெரிய கூட்டம் திரண்டிருந்ததைக் கண்டு திகைப்பு உருவானது. கேரளத்தின் பெரிய எழுத்தாள நட்சத்திரங்களுக்குக் கூட அந்த கூட்டம் இல்லை. நீங்களும் மிக நிமிர்வுடன் பேசினீர்கள். மலையாளிகளின் இயல்புகளைக் கண்டிப்பதற்கு தயங்கவில்லை. மலையாளிகள் காடுகள் மேல் கொண்டிருக்கும் மனநிலை, அதைப்பற்றி யானைடாக்டர் வசையாகச் சொன்ன சொல்லை அங்கே குறிப்பிட்டீர்கள். மலையாளிகள் பொதுவாக பயன்படுத்தும் க்ளீஷேக்களை கண்டித்தீர்கள். உங்களை கண்டிக்க துணிவில்லை என்றால் எழுதவே வந்திருக்கவேண்டியதில்லை என்று சொன்னீர்கள். ஆனால் அந்த நிமிர்வை அரங்கம் ரசித்தது என தோன்றியது. அந்தக்கூட்டமே அந்த நிமிர்வினால்தான் உங்களை நோக்கி வந்தது. தமிழ்நாட்டில் நல்ல கூட்டம் வருவதை கண்டுள்ளேன். கேரளத்தில் வந்த இந்த கூட்டம் பலமடங்கு. நீங்கள் அங்கே ஒரு கொண்டிருக்கும் இடம் தெரிகிறது. நிறையபேர் உங்கள் நூல்களையும் வாங்கியிருந்தார்கல்
ராஜசேகரன்