ஆங்கிலமும் நானும்

அன்புள்ள ஆசிரியருக்கு,

மும்மொழிக் கல்வி குறித்த தங்கள் பதிவினை வாசித்தேன். தாங்கள் கூறுவது போலவே, என் மூளையும் இரண்டு மொழிகளில் தமிழையே தேர்வு செய்தது. தமிழில் வெண்முரசை நேரம் போவது தெரியாமல் இன்பமாக வாசிக்கும் எனக்கு, ஆங்கிலத்தில் சேத்தன் பகத்தை தாண்டுவதே இயலாமல் உள்ளது. 80% வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் இல்லை. இலக்கணம் ஓரளவு நன்றாகவே அறிவேன். (பன்னிரண்டில் ஆங்கிலம் 192/200) ஆனாலும் ஏதோ ஒரு தடை. மூன்று நான்கு பத்திகளில் மூளை சோர்வடைகிறது. வலுக்கட்டாயமாக முயன்றால் வாசிப்பின்பம் மாறி வதை ஆகிறது. பல முறை ஆங்கிலத்துடன் முயன்று தோற்றுள்ளேன். ஆங்கிலம் கற்காமல் இனி விரிவு இல்லை. முடங்கியதாக உணர்கிறேன்

ஆங்கிலத்தை தாங்கள் எவ்வாறு எதிர் கொண்டீர்கள்? தங்களுக்கும் ஆங்கிலத்துக்குமான உறவு அன்றும் இன்றும் எப்படி உள்ளது என்பதை அறிய ஆவல். உங்கள் பதில் பலருக்கு வெளிச்சமாக இருக்கலாம்

(பிகு என்னை பற்றி: பள்ளிக்கல்வி முழுக்க தமிழ்வழி, கல்லூரி நான்காண்டு ஆங்கிலவழி, தற்போது மாநில அரசுத்துறை பணிபணியிடத்தில் ஆங்கில தொடர்பு பெரிதாக இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் இயல்பாக உலாவுபவர் பெரிதும் விரும்பப்படுகிறார். தமிழுடன் பிழைக்க முடிகிறது. ஆங்கிலம் இயல்பாக புழங்குபவரால் இலகுவாக பறக்க முடிகிறது

இப்படிக்கு,

எம். நவீன் குமார்

குமுளி.

***

அன்புள்ள நவீன்குமார்,

ஆங்கிலம் இன்றியமையாதது என்பதில் ஐயமே இல்லை. ஏன்? சில காரணங்களைச் சொல்லலாம்

. இன்றைய உலக அறிவுப்பரப்பை இன்றிருக்கும் நிலையில் ஆங்கிலம் வழியாகவே முழுமையாகத் தொடமுடியும். தமிழில் நிறைய நூல்கள் வருகின்றன. ஆனால் ஆங்கிலம் உருவாக்கும் விரிவான அறிவுலகு இன்னும் தமிழில் இல்லை

. தமிழில் கலைச்சொற்கள் இல்லை. ஆகவே நாம் இன்று உலக அறிவியக்கத்தை சரியாக தமிழ் வழியாக அறிந்துகொள்ளும் நிலையில் இல்லை.

. நாம் ஆங்கிலவழிக் கல்வியை அடைந்துள்ளோம். மேலதிக அறிதல் நாம் கற்ற கல்வியின் தொடர்ச்சியாக அமைவதென்றாலும் ஆங்கிலம் தேவை. 

. அறிவியக்க நெறிகள், ஆய்வுநெறிகள், நூலாக்க முறைமைகள் தமிழில் அனேகமாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. தமிழக வரலாறு, தமிழகப் பண்பாடு பற்றியானாலும்கூட ஆங்கிலத்தில் வாசிக்கும் ஒருவரிடம் இருக்கும் முறைமைசார்ந்த பார்வை தமிழில் வாசிக்கும் ஒருவரிடம் இருப்பதில்லை என்பதை கண்கூடாகவே காணலாம்.

ஆகவே ஆங்கிலமின்றி அறிவியக்கம் பெரும்பாலும் இல்லை என்பதே இன்றைய நிலை.

நான் கற்ற காலகட்டத்தில் ஒப்புநோக்க ஆங்கிலக் கல்வி கூடுதலாக இருந்தது. அன்றைய கல்வியில் அறிவியல்தொழில்நுட்பம் ஆகியவை மிகக்குறைவு.  1992க்குப்பின் மெல்லமெல்ல நம் கல்வி தொழில்நுட்பக் கல்வியாகவே ஆகியது. விளைவாக எல்லா பண்பாட்டுக்கல்வியும், மொழிக்கல்வியும் தேய்வடைந்தன. விளைவாகவே ஆங்கில ஞானம் குறைந்தது.

நான் கல்லூரியில் புகுமுக வகுப்பு படிக்கும்போதே எங்களுக்கு நான்கு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பாடமாக இருந்தன. சாமர்செட் மாம் நாவல்கள் பாடமகா இருந்தன. கல்லூரியிலும் Advanced English பாடம் இருந்தது. நான் என் கல்லூரி நாட்கள் முதல் ஆங்கிலத்தில் வாசிப்பவனாகவே இருந்தேன்.

ஆனால் 1991ல்  பழைய பிரிட்டிஷ் இலக்கியங்களை வாசிக்கையில் என் ஆங்கிலத்தின் குறைபாட்டை உணர்ந்தேன். அதை வெல்ல சில பயிற்சிகளை மேற்கொண்டேன். 

. வாசிக்கையில் ஒரு தெரியாத ஆங்கிலச் சொல்லைக்கூட விட்டுவிடுவதில்லை. அவற்றை ஒரு தனி கையேட்டில் அகரவரிசையில் எழுதிக்கொள்வேன். (டைரிகள் மிக உதவியானவை) அவற்றின் பொருளை குறிப்பேன்.

. அதன்பின் அவற்றின் வேர்ச்சொல், துணைச்சொற்களை அகராதியில் பார்த்து இன்னொரு குறிப்பேட்டில் விரிவாக எழுதிக்கொள்வேன். சொல்லாய்வில் எனக்கு எப்போதுமே ஆர்வமுண்டு. அன்று சேம்பர்ஸ் அகராதி எனக்கு மிகமிக ஆர்வமூட்டும் வாசிப்பனுபவத்தை அளித்தது. (இன்றும் அந்த அகராதியை வைத்திருக்கிறேன்) 

. ஆங்கிலத்தில் வாசிக்கையில் எப்போதும் இலக்கியரீதியாக நம்மை ஆட்கொள்ளும் நூல்களை, நம்மை கட்டாயமாக வாசிக்கச்செய்யும் நூல்களையே வாசிக்கவேண்டும். அதாவது வாசிப்பின்வழி நம்மையறியாமல் நம் மொழி மேம்படபேண்டும். நான் டால்ஸ்டாய் வழியாகவே ஆங்கிலத்தை கற்றுக்கொண்டேன். 

. ருஷ்யாவில் இருந்து மொழியாக்கமாக வந்த ஆங்கில நாவல்கள் வாசிக்க எளிமையானவை. அவற்றை தொடர்ச்சியாக வாசித்தேன். ஆங்கில திரில்லர் நாவல்களும் வாசிப்பை முன்னெடுப்பவை.வாசிப்பதொன்றே மொழியை மேம்படுத்தும் வழி

உ. ஆங்கிலத்தில் இருந்து தொடர்ச்சியாக மொழியாக்கங்கள் செய்தேன். ஒருநாளில் சில பக்கங்களாவது செய்தேன். எமர்ஸன், டி.எஸ்.எலியட். எலியட்டின் கட்டுரைகள் ஒரு தொகுப்பளவுக்குச் செய்தேன், அவை தமிழினி பதிப்பகத்தில் நூல்வடிவமாக இருந்தன. தொலைந்துவிட்டன. ஒரு கட்டத்தில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்வது என் தமிழ்நடையை பாதிக்கிறதோ என்ற ஐயம் வந்தது. அதன்பின் ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்தேன். 2005 வரைக்கும்கூட என் முக்கியமான வருவாய் தரும் துணைத்தொழிலாக அது இருந்தது.

*

1987 ல் நான் ஆங்கிலத்தில் சொற்பொழிவுகள் ஆற்றியதுண்டு (தொழிற்சங்க அரசியல் சொற்பொழிவு). அன்று ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டும் இருந்தேன். 1988ல் ஆற்றூர் ரவி வர்மா நான் தமிழில் எழுதவேண்டும் என்றால் தமிழ் என் செவியிலும் நாவிலும் திகழவேண்டும் என்றார். மொழிக்குள் வாழ்வதே இலக்கியவாதியின் பணி என்றார். ஆகவே நான் காசர்கோட்டில் என் உயிர்நண்பர்கள், என் அரசியல்இலக்கியக் களம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தமிழகம் வந்தேன். 

ஆற்றூரின் கருத்தே சுந்தர ராமசாமிக்கும். அது எம்.கோவிந்தனின் கருத்து சு.ரா என்னிடம் என்னிடமஒருமொழியில் ஆழ்ந்திருத்தல்என்பது எழுத்தாளனுக்கான அடிப்படை என சொன்னார். அதை அசோகமித்திரனும் பலவாறாக எழுதியிருக்கிறார். அது எனக்கும் சரியாக பட்டது. 

ஒருவரின் அகமொழி அவர் எழுதும் அதே மொழியைச் சார்ந்ததாகவே இருக்கவேண்டும், இல்லையேல் நடையழகு அமையாது என்பது சுந்தர ராமசாமியின் நம்பிக்கை. ஆகவே இன்னொரு மொழியில் பேசிப்புழங்கலாகாது என்று சுரா வலியுறுத்தினார். அவரால் ஆங்கிலத்தில் பேசமுடியும், ஆனால் பேசமாட்டார்.

1992ல் நான் பிரிட்டிஷ் கௌன்சிலுக்குச் சென்றுகொண்டிருந்த நாட்களில் அசோகமித்திரன் என்னிடம் என் நடையின் அசலான அழகை ஆங்கிலம் வழியாக இழந்துவிடலாகாது என்று எச்சரித்தார். 

(தன் மொழிநடை அழகற்றது என்றும், அது ஆங்கிலச் சாயல் கொண்டது என்பது பெரிய குறைபாடு என்றும் அவர் நம்பினார். அவருக்கு தி.ஜானகிராமனின் நடையே உன்னதமானது என்று தோன்றியிருந்தது)

அதன்பின் நான் ஆங்கிலத்தில் பேச முயன்றதே இல்லை. என் தாய்மொழியான மலையாளத்திலும் மிகமிக அரிதாகவே பேசுகிறேன். பேச்சு, சிந்தனை, எழுத்து மூன்றுமே தமிழ்தான்.

ஆகவே நாவில் ஆங்கிலம் வருவது நின்றுவிட்டது. இயல்பாகவே மொழியாக்கம் செய்துதான் பேசிக்கொண்டிருக்கிறேன். அதற்குரிய சொற்தடுமாற்றம் உண்டு. ஆங்கிலத்திலும் மலையாளத்திலும். 

ஆனால் அண்மையில் வேறுவழியே இல்லாமல் ஆங்கில உரைகளை ஆற்றுகிறேன். இலக்கியச் சந்திப்புகளில் ஆங்கில உரையாடல்களை நிகழ்த்துகிறேன். இந்த ஒரு மாதத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மாறிமாறி பேசிக்கொண்டிருக்கிறேன். 

என் அகமொழியின் தமிழ் குலைந்துவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் சிந்தனையில் புதிய களங்களை எதிர்கொள்ள ஆங்கிலத்தில் வாசித்தாகவேண்டும், உரையாடியாகவேண்டும். ஓர் இழப்பு இருக்கலாம், ஆனால் எய்துவது கூடுதல். ஆங்கிலம் அகமொழிக்குள் ஒரு நிபந்தனையாக இருந்துகொண்டிருப்பது மொழியை செறிவாக்கவும்கூடும்

ஆனால் கவிஞர்களுக்கு ஆங்கிலம் அகமொழியில் புகுந்துவிட்டால் அவர்கள் அதன்பின் கவிதை எழுதமுடியாது. 

ஜெ

முந்தைய கட்டுரைராஜாளியார்
அடுத்த கட்டுரைஒலிநூல்கள்