(அ.முத்துலிங்கம் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை)
எழுத்தாளர்கள் கி.ரா-வும், அ. முத்துலிங்கமும் எனது ஞானத் தந்தைகள் என்று சொல்லி நெருங்கியவர்களிடம் பெருமை கொள்வது வழக்கம். கி.ரா.வையாவது நேரில் பார்த்து இருக்கிறேன். என் அப்பாவும் உங்களைப் போல விவசாயி என்று அவரோடு உரையாடியிருக்கிறேன். அவரே எனது ஆதர்சம் என்று கட்டுரையும் எழுதியிருக்கிறேன். இரண்டாமவரை நான் பார்த்ததே இல்லை.
புலம்பெயர்ந்த இடத்தில், நேர்க்கோடு போட்டது போலச் செல்லும் வாழ்க்கையென புனைவுகளைப் படைக்கும் தமிழ் வளர்க்கும் பத்திரிக்கைகள். தட்பவெப்பம், நேற்று பார்த்த சினிமா, புதிதாக வந்த ஆப்பிள் ஃபோன், மைல் கணக்கில் நீளும் பாலங்கள், சொன்னதைக் கேட்கும் டால்ஃபின்கள் என்று தட்டையாக எழுதுகிற இவர்களின் மத்தியில் புலம்பெயர்ந்த வாழ்க்கையை அச்சு அசலாகச் சொல்பவர் யார் என்ற என் தேடலில் எனக்குக் கிடைத்தவர்தான் அ.முத்துலிங்கம்.
அவரது படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்க வாசிக்க, புலம்பெயர்ந்த வாழ்வு பற்றிக் கற்க மட்டுமல்ல, மொத்த மானுடத்தைப் பற்றியும் புரிந்துகொள்ள அவரும் அவரது படைப்புகளுமே வழிகாட்டியெனக் கண்டுணர்ந்தேன்.
2003-ல் கூபர்ட்டினோ, கலிபோர்னியாவில் வசிக்கும்பொழுது பத்திரிக்கையில் செய்தி ஒன்றை வாசித்தேன். தனியாக வசிக்கும் ஒரு பாட்டியின் வங்கிக் கணக்கிலிருந்து அவர் அந்தந்த மாதங்களுக்குக் கட்டவேண்டிய மின்சாரத்துக்கும், தண்ணீருக்கும் ஆட்டோமேடிக் பேமென்ட் வசதியில் பணம் எடுக்கிறார்கள். ஒரு சில நாட்களுக்கு அப்புறம் பணம் இல்லாமல் ஆகிவிடுகிறது. தொலைபேசியில் கூப்பிட்ட குரலுக்கு, பதிலில்லை. பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தால் அவர் இறந்துவிட்டது தெரிகிறது.
கணினித் துறையில் வேலை பார்க்கும் எனக்கு இந்தச் செய்தி ஆட்டோமேடிக் பேமென்ட் என்ற விஷயத்தை நினைத்தாலே வயிற்றைக் கலங்கவைத்துவிட்டது. கைவிடப்பட்டவர்களும், அன்றன்றைய சாப்பாட்டுக்கு, அன்றன்றே சம்பாதிப்பவர்களும் சுக வாழ்க்கை வாழ்பவன் கண்ணில் படுவதில்லை. ஆனால் அ.முத்துலிங்கம் கண்களில் இருந்து அவர்கள் தப்புவதில்லை. அவர்களது வேதனைகளை உள்வாங்கி எழுத அவரால் முடிகிறது.
‘கடைநிலை ஊழியன்’ கதையில் வரும் அப்துலாட்டி, ‘கருப்பு அணில்’ லோகிதாசன் போன்ற, வாழ்க்கையால் வஞ்சிக்கப்பட்டவர்களின் கதைகளைச் சொல்லி வாழ்வின் நிதர்சனங்களைப் படம்பிடிக்கிறார். ரொட்டியும் மீனுமாகச் சாப்பிடும் நேரம் அவர்களின் நினைவு வர ஒரு ரொட்டி குறைவாக இறங்குகிறது.
காலை, மாலை, எனக்கு இந்த வேலை, உனக்கு அந்த வேலை எனத் திட்டமிட்டு வேலைபார்க்கும் என் போன்றோருக்கு லோகிதாசன் வாழ்க்கை கண்ணில் படுவதில்லை. தாமதமாக வேலைக்கு வரும் கடைநிலை ஊழியனிடம், காரணம் அறிந்திட எந்தவொரு அதிகாரிக்கும் மனம் இருப்பதில்லை. அ.மு-வின் கதைகளை வாசிக்கும் வாசகனை மேலாளராக அடைபவர்கள் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவர்கள். அந்த மாயத்தை அவர் எழுத்து நிகழ்த்திவிடும்.
புலம்பெயர்ந்து, நினைத்த துறையில் பட்டம், கேட்டுக்கொண்டபடி சம்பளம் அப்பாடா என்று அமர வாழ்க்கை விட்டுவிடுமா என்ன? தெரிந்த நண்பரின் மனைவி ஒருவருக்கு பார்ப்பதெல்லாம் வெள்ளையாகத் தெரியும் என அவரது கண்ணின் பார்வை பழுதுபட, மருத்துவர் சொன்ன பதில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அவர் புலம்பெயராமல் இருந்திருந்தால், இந்த பாதிப்பு வராமல் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்று சொன்னார்.
ஆப்ரிக்காவில், சங்கீதாவும், கணேசானந்தனும் பிள்ளைப் பேறு அடைவதை குடியுரிமை கிடைக்கும் வரை தள்ளிப்போடுகிறார்கள். அ.முவின் ‘முழு விலக்கு’ கதையில் வாழ்க்கை அவர்களுக்குக் கொடுக்கும் தீர்ப்பு வேறாக இருக்கிறது. சொந்த நிலத்திலிருந்து மொத்த வாழ்க்கையையும் பெயர்த்து எடுத்து வந்தவர்களுக்கு மட்டும் என்று இல்லை; பிடித்ததைப் பார்க்க சில நாட்கள் வருபவர்களுக்கும் நினைத்துப் பார்க்காதது நடக்கலாம்.
‘விசா’ கதையில், கோணேஸ்வரன், இருபது வருடப் போராட்டங்களுக்குப் பிறகு, விசா கிடைத்து, தான் பார்க்க விருப்பப்பட்ட அதிசய வண்ணத்துப்பூச்சியைப் பார்க்க வருகிறார். விசா இல்லாமல் போக ஓர் இடம் இருக்க, எதற்கு இத்தனை போராட்டம் என்ற கேள்வியை முன்வைக்கும் நெகிழ்வுடன் கதை முடிகிறது.
விலகி நின்று பார்க்கும் அவரது பார்வையை ஒவ்வொரு கதையிலும் பார்க்கலாம். கல்வீட்டுக்காரி கதையில், அவள் வயிற்றுப் பசியை ஆழச் சொல்லி, அவளின் இன்னொரு பசியையும் சூட்சுமமாகக் காட்டி விடுகிறார். இந்தக் கதை பேசுவது வெகு ஆபத்தான பேசுபொருள். கல்வீட்டுக்காரியின் உடற்பசியைச் சொல்லி, அணிலை அடித்துக்கொன்றவனை வேலையை விட்டு எடுக்கும் அவள் அன்பைச் சொல்லி, எந்த ஒரு ஜட்ஜ்மென்ட்டும் இல்லாமல் அவளைப் பார்க்கும் கலைப்படைப்பைக் கொடுத்துவிடுகிறார்.
எந்தக் காலத்தில் என்ன நடந்தாலும், அந்தக் காலத்தில் வளரும் ஒரு இளைஞனாக, மாணவனாகவே கற்கவும் எழுதவும் தொடர்ந்து இயங்குகிறார். கம்ப்யூட்டரில் 486 ப்ராஸஸ்ஸர் அறிமுகம் ஆவதற்கும், ஊபர் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கும், கிட்டத்தட்ட இருபது வருடங்கள் இடைவெளி. கம்ப்யூட்டர் கதையில், டைரக்டரிவாரியாக தனக்குத் தேவையான ஃபைல்களை வைத்துக் கொள்வதில் புரிதல் இல்லாமல் வரும் சிக்கல் வைத்து கதைப் பின்னல். ஊபர் கட்டுரையில், ஒரு இடத்துக்குச் செல்வதற்கு ஊபர் பிடித்துச் செல்ல எந்தப் பிரயத்தனமும் இல்லாமல் சென்றதையும், டாக்ஸி பிடித்து இருப்பிடத்துக்குத் திரும்பிவர அவர் உயிர் பிழைத்து வருவதே அரிதாகிவிட்டது என நகைச்சுவையுடனும் சொல்கிறார்.
எர்னெஸ்ட் ஹெமிங்க்வேயின் Ten Indians என்ற கதையில், நிக் என்பவனின் காதலியை இன்னொருவனுடன் அவன் அப்பா பார்த்ததாகச் சொல்ல, நிக் தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு எனது இதயம் உடைந்துவிட்டது என்று புலம்புகிறான். முதல் காதல் தோல்வியை சித்திரிக்கும் சிறுகதைகளில் திரும்பத் திரும்பக் குறிப்பிடப்படும் கதை இது. அ.மு-வின் ‘அக்கா’ கதையில், சிறுவன், “அக்கா குப்புறப்படுத்துக் கிடந்தா; திரும்பவே இல்லை. தடவிப் பார்த்தன்; முகமெல்லாம் நனைஞ்சு கிடந்தது’ என்கிறான். அக்காவின் அழுகைக்கு காரணம் புரியாத சிறுவனின் பார்வையில் சொல்லப்படும் அ.மு-வின் இந்த ஆரம்பகாலக் கதையும் முத்திரைக் கதையே.
முப்பத்தைந்து முப்பத்தாறு வருடங்களுக்குப் பிறகு, ‘உடும்புரித்தன்ன வென்பெழு மருங்கிற் கடும்பின் கடும்பசி’ என புறநானூறு படிக்க, ஒன்றுவிட்ட அக்காவின் காதலை மீண்டும் சிறுவனின் பார்வையில் ‘உடும்பு’ கதையில் பதிவு செய்கிறார்.
நான் சிறுவனாக வானம் பார்த்த பூமியில் வாழ்ந்தபொழுது, உணவு அருந்தும்போது குடிப்பதற்கு ஒரு செம்பில் நல்ல தண்ணீர், சாப்பிட்டு முடித்ததும் கை கழுவ இன்னொரு செம்பில் உப்புத் தண்ணீர். என் சகோதரி மூன்று கிலோமீட்டர் சென்று நல்ல தண்ணீர் கொண்டு வரவேண்டும். இதில் எங்கே ஒரே தண்ணீரை குடிப்பதற்கும், கை கழுவவும் பயன்படுத்துவது?
‘ஒட்டகம்’ சோமாலியாவில், மைமுன் ஒரு குடம் தண்ணீர் எடுக்க ஒரு நாளைக்கு பதினாறு மைல் நடக்கிறாள். அவள் தண்ணீர் சுமக்கும் கஷ்டத்துக்குத் தீர்வாக தனது காதலைத் துறந்து 50 வயது மாப்பிள்ளையை மூன்றாம் தாரமாக மணம் செய்துகொள்ள சம்மதிக்கிறாள்.
அ.மு-வின் கதைகளில் எனக்கு மிகவும் அணுக்கமானது இது என்றால், ‘பருத்திப் பூ’ வேறு ஒரு வகையில் அணுக்கமானது. சுடான் நாட்டின் கெஸுரா நீர்ப்பாசனத்துறையின் நீர்வள நிபுணராக தண்ணீர் பங்கீட்டைக் கண்காணிக்கும் பொறுப்பு வகிக்கும், கதையின் நாயகன் குணசிங்கம். தண்ணீர் அதிகம் செலவாகாமல் இருக்கும்பொருட்டு, ஷவரில் குளிக்காமல், வாளியில் தண்ணீர் பிடித்துக் குளிப்பார். என் தந்தையும் அமெரிக்காவில் எங்களுடன் இருக்கும்பொழுது இப்படித்தான் குளித்தார்.
இப்படி அவர் கதைகளை வாசிப்பவர்களின் உள்ளிருக்கும் வெவ்வேறு கதைகளின் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். நாம் வந்து தேடினால் அவரைக் காணவில்லை. எங்கோ இருக்கை அமைக்க ,விருது கொடுக்க யாருக்கும் தெரியாமல் உதவப் போய்விடுகிறார்.
ஒரு மனிதன் எப்படி தொடர்ந்து இவ்வளவு நல்ல காரியங்களைச் செய்துகொண்டே இருக்கமுடியும் என்று நாம் ஆச்சர்யப்படுகையில், ‘ஹலோ எப்படி இருக்கிறீங்க. ஸோ பிஸி இல்ல. அதான் உங்களக் காணலை. வேலை வேலை என்று இருக்காமல் உடம்பையும் கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று பரிவுடன் ஒரு கரிசனக் குரல் அலைபேசி வழியே. மறுபடியும் அ.மு-வைக் காணவில்லை.
எவ்வளவு பேர்கள்… எவ்வளவு கதைகள்… எவ்வளவு பணிகள் அவருக்கு! ‘அ.முத்துலிங்கம் கதைகள் – அணுக்கமான நண்பர்கள்’ என்று தலைப்பிட்டு அ.மு-விற்கு எனது எளிய வாசிப்பனுபவத்தை அனுப்பி வைத்தேன். அதை வாசித்துவிட்டுத்தான் முதன்முதலில் அவர் என்னை அழைத்தார். அதன் பின் வாரம் ஒரு முறை நடந்த உரையாடல்களில் தன்னை முன்னெடுக்காமல் தமிழை முன்னெடுக்கும் ஆளுமையாக அவரை நான் அறிந்துகொண்டேன்.
அவரின் கதைகளை, நானோ எனது நண்பர்களோ மொழியாக்கம் செய்கிறோம் என்று அணுகுவோம். மற்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அடையாளப்படுத்தி அவற்றை மொழியாக்கம் செய்யச் சொல்லி, அன்புடன் கேட்டுக்கொள்வார். மொழியாக்கம் செய்து அனுப்பும் படைப்புகளை உடனுக்குடன் வாசித்து, அவரது கருத்துக்களைப் பரிமாறுவார். வளர்ந்த பிறகு அடிபட்ட பிறகு அனுபவத்துக்குப் பிறகு பலருக்கும் பண்பு வரும். ஆனால் அ.மு. ஐயா பிறக்கும்போதே அப்படித்தான் பிறந்திருப்பார் போல.
அவரை நான் அணுக அணுக, ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டாலும், தமிழை விரும்பிப் பேசுபவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் இவரை அப்பா என்று அன்புடன் விளிப்பதைப் பார்த்து மெய்சிலிர்ப்பேன். அனைவரையும் கனிவுடன் வழிநடத்தும் இனிய தந்தை ஒருவர், இதைச் செய் என்று கேட்டுக்கொண்டால், மறுக்கும் மக்கள் உண்டா என்ன? தமிழ் இலக்கியத் தோட்டம் (கனடா), ஹார்வர்ட் தமிழ் இருக்கை, டொரான்டோ தமிழ் இருக்கை என அவர் தமிழ்த்தொண்டு தொடர்வதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.
பரந்த வாசிப்பு. அம்மாவிடம் கற்றுக்கொண்ட கம்பராமாயணம் மஹாபாரதம் கதைகள் தொடங்கி நோபல் பரிசு பெற்ற அலிஸ் மன்றோ வரை தொடரும் நேர்காணல்களில் விரியும் அறிவின் விஸ்தரிப்பு, அவரது படைப்புகளில் வாசகனுக்குக் கிடைக்கிறது.
சில எழுத்தாளர்களைப் பற்றிய அவதானிப்புகள் வெவ்வேறு வாசகர்களிடம் வெவ்வேறாக இருக்கும். இந்தத் தொகுப்பில், இருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும், அ.மு-வைப் பற்றி ஒருமித்த அவதானிப்பாக இருப்பதைப் பார்க்கலாம். கதையின் பெயர்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவா, கொடுக்கும் தகவல்களுக்கு சரியான தரவுகள் உள்ளனவா என்ற எனது கேள்விகளுக்கு எல்லாம் போதிய ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது நன்றியும் வந்தனங்களும்.
இதில் பங்களித்த எழுத்தாளர்கள் பலரையும் பெரும்பாலோனோர் அறிவார்கள். ஆனாலும் புலம்பெயர்ந்த வாசகர்கள் அறிந்துகொள்ளும்பொருட்டு, ஒவ்வொரு கட்டுரையாளரைப் பற்றியும் ஒரு சிறிய அறிமுகக் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
உயிர் என்று ஒன்று இருந்தால் போதும். மரம், அணில், பறவை, விலங்கு, தன் மொழி பேசுபவன், வேற்று மொழி பேசுபவன் என்று வேற்றுமை எதுவும் பார்க்காமல் விலகி நின்று கண்காணித்து தமது படைப்புகளின் வழியாக மானுடத்தை எடுத்துச் செல்பவர்.
யாதுமாகி நின்றாய் எந்தையே எனப் போற்றி, கி.ரா. விருது பெறும் இந்த நன்னாளில், அறியாச் சிறுவனாய் அறிமுகமில்லா வனத்தில் கால்சராயை இழுத்து விட்டுக்கொண்டு வியர்த்து விறுவிறுக்க மூச்சிரைக்க ஓடி ஓடி ஐயாவிற்காகக் கொய்து வந்த சில பூக்கள் இவை.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்.