நடுவே கடல்-அருண்மொழி நங்கை

(அ.முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தொகுதிக்கு அருண்மொழி நங்கை எழுதிய தொகுப்பாளர் உரை) 

அ.முத்துலிங்கம் இந்தியா பற்றி எழுதியதில்லை. தமிழகம் அவருடைய களமே அல்ல. ஈழப்படைப்பாளிகளில் ஒருவராகவே அவர் வரையறை செய்யப்படுகிறார். ஆனால் நான் உட்பட தமிழ் வாசகர்கள் பெரும்பாலும் அவரை ஈழப்படைப்பாளிகளின் வரிசையில் வைப்பதில்லை. அதேசமயம் தமிழகப்படைப்பாளிகளின் வரிசையிலும் அவர் இல்லை. அவ்வாறென்றால் அவருடைய நிலம் எது? அவருடைய வேர்கள் எங்கே விரவியுள்ளன? 

மனித மனமும் பிரக்ஞையும் வாழும் மண்ணோடும் சூழலோடும் பிணைக்கப் பட்டவை. பிரக்ஞை முதலில் தொட்டுணரும், கண்டுணரும் , முகர்ந்தும், கேட்டும் உணரும் அனைத்தும் அவனைச் சூழ்ந்தவையே. இதையே அகம் காலத்தாலும், இடத்தாலும் பிணைக்கப்பட்டுள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே ஒரு சமூகத்தின் பிரக்ஞையின் கூர்முனையென திகழும் படைப்பாளியும் அவ்வாறே. அவனைச் சூழ்ந்த மண்ணை, இயற்கையை, பருவகாலத்தை, மனிதர்களையே படைக்கிறான். திரும்பத் திரும்ப அவன் அகம் சென்று படியும் இடம் அதுவே.

 மகத்தான படைப்பாளிகள் மனிதகுலத்தின் ஆதார சிக்கல்களை பேசுவதற்கு ஒரு நிலத்தை, ஒரு பண்பாட்டை மாறாத களமாகக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் அரங்கு. அவர்களின் நிலம் நங்கூரம் போல் நிலையாகப் பிணைக்கிறது. உதாரணமாக, தாரா சங்கர் பானர்ஜி, பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய போன்ற வங்கப்படைப்பாளிகளையோ, சிவராம காரந்த், எஸ்.எல்.பைரப்பா போன்ற கன்னடப்படைப்பாளிகளையோ சொல்லலாம். தகழி சிவசங்கரப்பிள்ளையை ஆலப்புழையில் இருந்தும் தி.ஜானகிராமனை தஞ்சையிலிருந்தும் பிரிக்கமுடியாது. 

அவ்வாறு, மாபெரும் மானுடநாடகத்தின் அரங்கமாக ஆகும்போது நிலம் ஆழ்ந்த பொருள்கொள்கிறது. அவ்வாறு அல்லாமல் வெறும் கதைப்புலமாக, ஆசிரியர் அறிந்த பின்புலமாக மட்டுமே நிலைகொள்ளும்போது நிலம் ஒரு சிறையாக ஆகிறது. ஆசிரியனின் புனைவை அழுத்தும் ஒரு பாறாங்கல்லாக  மாறுகிறது. 

புலம்பெயர் எழுத்தாளர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் தங்கள் இளம்பருவ, வளரிளம் பருவ வாழ்க்கையையும், அது நிகழ்ந்த நிலத்தையும் மட்டுமே எழுதுவதை நாம் பார்க்கலாம். புலம் பெயர்ந்து வாழ நேரிடும் அனேக படைப்பாளிகள் அங்கு சென்று வாழும் நிலத்தையோ, மனிதர்களையோ, அப்பண்பாட்டையோ துளியும் பிரதிபலிப்பதில்லை. அவர்களின் அகம் கதவுகளை உட்பக்கமாக தாளிட்டு கொள்கிறது. அப்படி மீறி பதிவு செய்பவரிலும் சுற்றுலா பயணிகள் வெளிநாட்டினரை வேடிக்கை பார்க்கும் ஒரு பார்வை மட்டுமே உள்ளது. 

ஏனென்றால் அப்படைப்பாளிகள் மானசீகமாக பிறந்த மண்ணை விட்டு வெளியேறவில்லை. அவர்களின் நனவிலியை அறிந்த நிலமும், மனிதர்களும் நனைத்த சாக்குத்துணி போல் மூடிக் கொண்டுள்ளனர். புதிய மண்ணை, அதன் மனிதர்களை, பண்பாட்டை அவர்களின் அகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே ஒரு கட்டத்தில் எழுத்து என்பதே கடந்தகால ஏக்கம் என ஆகிறது. கெட்டிப்பட்டுப்போன அந்த உணர்வுநிலை சிதறடிக்கப்படுவதே இல்லை. 

அ. முத்துலிங்கம் நிலம் கடந்த படைப்பாளி. உலகநிலத்தில் வாழ்பவர். வெவ்வேறு நாடுகளின், பண்பாட்டின், சூழலின் கதைகளாக அவர் எழுதிய ஏராளமானவற்றில் 12 கதைகளை அவர் அனுமதியுடன் தொகுத்துள்ளோம். 

பொதுவாக மனிதனின் தன்னிலை என்பது அவனுடைய பண்பாடே, தன் நடைமுறை பழக்கவழக்கங்களே , தன் மொழியே உலகிலேயே உயர்ந்தது என்னும் உணர்வுதான். அவ்வுணர்வு ஓர் உயர்ந்த பண்பாகவும் விழுமியமாகவும் முன்வைக்கவும் படுகிறது.  மக்கள் திரளின் உணர்வாக ஆகிறது. 

ஆனால் தன் ஆளுமையின் பெருமிதத்தை  உணராத, சுய மதிப்பில்லாத ஒருவரே தன் இனத்தின், குலத்தின், மொழியின், நாட்டின் பெருமையைத் தன்னுடையதெனக் கொள்வார். மெய்யான அறிவுஜீவி எப்போதும் கூர் தீட்டி வைத்திருக்கும் நுண்ணுணர்வால் தன்னைச் சார்ந்த இவை அனைத்தின் மேலும் ஒரு விமரிசனத்துடன் இருப்பார். அதன் போதாமைகளையும், கீழ்மைகளையும் உணர்ந்திருப்பார். 

ஆனால் படைப்பாளி இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு மனநிலையில் இருப்பார். பற்று உணர்வுரீதியாக அவரை ஆள்கிறது. அறிவார்ந்த அணுகுமுறை அவரை சமநிலையில் வைத்திருக்கிறது. அந்தச் சமநிலையே இலக்கியப்படைப்புக்கு கட்டுப்பாடான வெளிப்பாட்டை அளிக்கிறது. அ.முத்துலிங்கத்தின் கலை அத்தகையது. 

சாமானியன் பிற பண்பாட்டை நேரிடும்போது அதுவரை தனக்கு  வழிவழியாக சொல்லப்பட்ட மதிப்பீடுகள், ஒழுக்க வரையறைகளின் அடிப்படைகளைக் கொண்டே அதை பரிசீலிக்கிறான். இந்த சரி-தவறுகள் அவன் பார்வைக் கோணத்தில் ஒரு குறுகலைத் தருவது மாத்திரமல்ல, எதையும் திறந்த மனதுடன் அணுக முடியாமல் செய்துவிடுகிறது. இதற்கு படைப்பாளிகளும் விலக்கல்ல. 

ஆனால் முத்துலிங்கம் ஒரு குழந்தை திறந்த மனதுடன் புதிய பண்பாட்டை நேரிடுவதுபோல் எதிர்கொள்கிறார். அதை உற்சாகமான மொழியில் பதிவுசெய்கிறார். வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் பார்வை அல்ல அவருடையது. அப்பண்பாட்டின் சாரத்தை தன் திறந்த கண்களால், ஆர்வம் வற்றாத அகத்தால் பார்த்து அள்ளிக் கொள்கிறார். அதற்கும் நமக்கும் உள்ள ஒரு உலகளாவிய பொதுமை அவரது நுண்ணுணர்வுக்கு மட்டுமே தட்டுப் படுகிறது. அதனாலேயே முத்துலிங்கம் மிக, மிக தனித்துவம் பெற்ற படைப்பாளியாகிறார். 

எல்லா மனிதர்களையும் இணைக்கக் கூடிய உலகளாவிய விழுமியம் என்ன என்றால் பெரும்பாலானவர்கள் மானுடநேயம், அன்பு, கருணை, இரக்கம் என்று கூறுவார்கள். இவையனைத்தையும் விட மனிதனை அடிப்படையில் ஒன்றிணைக்கக் கூடியது சுவை. சுவை என்பது   ருசி மட்டும் அல்ல. ரசனை, அழகு, காட்சி துய்ப்பு அனைத்துமே அடங்கும். சுவையின் நுண்ணிய பேதங்களுக்கு அடியிலுள்ள ஒருமையே மனிதனை அடிப்படையில் ஒன்றிணைக்கின்றது. ஏனென்றால் சுவை உடல்சார்ந்தது, மானுட உடல் ஒன்றே. உடலில் இருந்து அது உள்ளத்துக்குச் செல்கிறது. பண்பாடாக ஆகிறது. 

ஆகவே தான் அ.முத்துலிங்கம் கதையில் உயர்தர ஐரோப்பிய வைனை ஒரு ஜப்பானியன் மெய்மறந்து சுவைக்க முடிகிறது, ஆப்பிரிக்க உணவை வேறு தேசத்தவன் லயித்து சாப்பிடுகிறான். காபூல் திராட்சையின் சாறு அந்நிலத்தின் அடையாளமாக ஆகிறது. ஒரு உள்வட்டாரத்தின் பாடலை, நடனத்தை வேறு தேசத்தவன் ரசிக்கமுடிகிறது. 

பெண்ணழகுகள் எத்தனை விதமானவை. முத்துலிங்கம் குறைவான சொற்களில் காட்டும் பெண்களில் எத்தனை வகைகள், மஞ்சள் இனத்தவர் , கருப்பினம் , வெள்ளையர், மத்திய ஆசியர் என எல்லா வகையினரும் உள்ளனர். மிகச் சிறு உடலமைப்பு கொண்ட மஞ்சள் இனத்திலிருந்து ஓங்கு தாங்காக , நாவல்பழக் கருமையின் பளபளப்புடன் இருக்கும் ஆப்பிரிக்க இனப் பெண்கள் வரை. பொன்னிறக் கூந்தல் முதல் கறுத்து சுருண்ட பாம்புகுட்டி கூந்தல் அழகிவரை. அந்தச் சுவையறிதல் வழியாகவே அ.முத்துலிங்கம் உலகை தரிசிக்கிறார். 

அவருடைய கதைகள் காட்டுவது உலகின் சுவையை. மானுடரின் சுவை என்னும் ஒற்றைச்சரடை. ஆனால் அ.முத்துலிங்கம் வெறுமே வேடிக்கை பார்ப்பதில்லை. தான் உணர்ந்த சுவைப்புள்ளியை குறியீடாகவோ அல்லது படிமமாகவோ மாற்றுகிறார். அப்போது அச்சுவை அப்பண்பாட்டின் வெளிப்பாடாக ஆகிறது. அப்பண்பாடு பல்லாயிரமாண்டுகளாகத் திரட்டி எடுத்தது அந்தச் சுவையைத்தான் என்று தோன்றுகிறது. அதுதான் அவர் கதைகளுக்கு மேலதிகமான ஆழத்தையும், ஒரு கவித்துவத்தையும் தருகிறது. 

உதாரணமாக ‘குதம்பேயின் தந்தம்’ கதையில் கொல்லப்பட்டு ட்ரக் வண்டியில் ஏற்றப்பட்ட பெரும் யானை மல்லாக்க தன் கால்களை வானை நோக்கி விரித்தவாறு கிடப்பது அவருக்கு சிலுவையில் அறையப்பட்ட யேசுவாக தோற்றமளிக்கிறது. உலகின் பாவங்களுக்காக தன் புனித ரத்தத்தை சிந்தியவன். 

‘பூமாதேவி’ கதையில் எல்லா அழுக்குகளையும் வெளுக்கும் பொது உபயோகத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் மாபெரும்  வாஷிங் மெஷின் பூமித்தாயாக உருவெடுக்கிறது. அழுக்குகளை செரித்து சுத்தப்படுத்தி நமக்கு தூய்மையாக்கி அளிப்பவள். அதிலும் கதைசொல்லியும் அவர் மகளும் ஒரு குறிப்பிட்ட மெஷினில் மட்டுமே அவர்கள் துணிகளை தூய்மை செய்கின்றனர். அந்த இயந்திரத்திற்கு அவர்களோடு ஒரு உயிர்ப்புடன் கூடிய நிலைத்த பந்தம் வந்துவிடுகிறது.

 ‘கறுப்பு அணில்’ கதையில் தரைக்கு அடித்தளத்தில் ஒரு பெருச்சாளியின் வாழ்க்கைக்கு நிகரான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும், கிட்டத்தட்ட தன்னிரக்கத்தின் உச்சிக்குப் போய் உலகமே தன்னை கைவிட்டு விட்டதாக உணரும் ஒருவன் தன் தளத்தின் சாளரம் வழியாக பார்க்கிறான். வெளியே தோட்டத்தில் பாய்ந்து செல்லும் அதுவரை அவன் பார்த்திராத கறுப்பு அணிலை கண்ட அந்த கணத்தில் அவன் மனம் மலர்கிறது. அதோடு தன்னை இணைத்து பார்த்துக் கொள்கிறான். வாழ்க்கையே திருப்பிப் போடப்பட்டதுபோல் உணர்கிறான். இனி அவன் வாழ்வில் சோர்வில்லை , கழிவிரக்கமில்லை, அவன் வேறு ஒருவனாகிவிட்டான். 

பாத்திரங்களின் நீட்டிக் கொண்டிருக்கும் காதுகளை மடக்கி விடுவதன் மூலம் அதிகமான பாத்திரங்களை கப்பலில் ஏற்றலாம் என அறிபவனின் கதையில் அந்த சிறு மடங்கிக்கொள்ளுதல் ஒரு குறியீடாகிறது. மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் இணக்கமாக இயைந்து, மற்றவர்களோடு பொருத்திக் கொண்டு, முட்டிக்கொள்ளாமல் இருப்பது வழியாக அடையும் ஒரு நிலையை அது குறிப்பதாகவும் கொள்ளலாம். முத்துலிங்கத்தின் தரிசனமே அதுதானா? 

‘தொடக்கம்’ கதையில் ருஷ்யாவின் வடமூலையில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு வலசை வரும் Saker Falcon கதைசொல்லியின் கண்ணாடியில் மோதி அர்த்தமற்று இறக்கிறது. 

‘விருந்தாளி’ கதையின் தொடக்கத்தில் வரும் ஆதியாகமத்தின் வரிகள் கதையை முடிவில்லா காலத்துடன் இணைக்கின்றன. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும், உங்கள் கால்களைக் கழுவி ,மரத்தடியில் சாய்ந்து கொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டு வருகிறேன். அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம். மாட்டு மந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து வேலைக்காரன் கையிலே கொடுத்தான். அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். வெண்ணையையும், பாலையும், சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து அவர்கள் முன்பாக வைத்து அவள் நின்று கொண்டிருந்தாள். அவர்கள் புசித்தார்கள்.— ஆதியாகமம்  18. 

உங்கள் எளியவர்களுக்குச் செய்தது எனக்குச் செய்தது போல என்னும் கிறிஸ்துவின் வரியுடன் கதையை இணைக்கிறது இந்த முகப்புவரி. டால்ஸ்டாயின் புகழ்பெற்ற குட்டிக்கதையை நினைவூட்டுகிறது. 

இதயம் கனிந்து ஒரு அன்னை சொல்வதுபோல. ‘விருந்தாளி’ கதையில் நீண்ட பயணத்தில் சிக்கான செம்மண் புழுதி படிந்த தலையும் அழுக்கு உடையுமாக ஒருவர் வருகிறார். முன்பின் அறிந்திராதவர். அவருக்கு  சமைக்க கதைசொல்லி  வேலைக்காரனைப் பணிக்கிறார். வேலைக்காரன் சனூசி அன்று அம்ருதமாக சமைக்கிறான். அளவான வெந்தயம் இட்டு வெந்தயக் குழம்பு மணக்க, ஆப்பிரிக்க முறைப்படி வைத்த இறைச்சியும், ருசிக்கும் சம்பலுமாக. அவன் கைகளிலும் புகுந்த அன்னைமையும், கருணையும் தான் அதற்கு காரணம். 

இருப்பதிலேயே உயர்தர கபெர்னெ சாவினொன்  வைனை அவரோடு பகிர்கிறார். சுவைக்கிறார்கள். டேப் ரிகார்டரில் காருக்குறிச்சி சக்கனி ராஜ  நட்டநடு நிசியில் ஆப்பிரிக்க காட்டில் மரவீட்டில் இவர்களுக்காக வாசிக்கிறார்.  கண்ணீர் உருண்டோடுகிறது. கரகரப் பிரியாவில் மனம் நெகிழ்ந்து. இறுதியில் உருதுக் கவிதை ஒன்று வாசிக்கிறார்கள். வாழ்வின் உன்னத சுவைகள் எல்லாம் ஒன்றாகும் தருணம். 

அ.முத்துலிங்கம் அடிப்படையில் ஒரு மனிதாபிமானி. நம்பிக்கைவாதி. மனிதனின் நேர்நிலைத் தன்மையை சொல்லக் கூடியவர். அவரை படிப்பது எப்போதுமே சோர்வூட்டக் கூடியது அல்ல. எல்லா வாசிப்புகளுமே நிறைவூட்டும் அனுபவமாகவே இருக்கின்றன.. உற்சாகமான கதைகள்.  

நவீனத்துவக் கதைகளில் காணப்படும் இருண்மை, எதிர்மறைத் தன்மை அனேகமாக முத்துலிங்கம் கதைகளில் இல்லை எனலாம். மனிதனின் எல்லா இன்னல்கள், கீழ்மைகள், சிறுமைகள், இவற்றுக்கு அப்பால் பரிமாறிக்கொள்ளக்கூடிய புன்னகை அவருடைய எல்லா கதைகளிலும் உள்ளது. ஒரு புன்னகையால், மௌனத்தால், கண்ணசைவால் சரிசெய்து கொள்ளக்கூடியவைதான் எல்லாம். அதற்கு அவ்வளவு முஷ்டி பிடிக்கதேவையில்லை என்பதுபோல. ஒரு நல்ல சுவையால் மானுடம் எல்லா பேதங்களையும் கடந்து இணைந்துவிடலாம் என்பதுபோல. 

விதிவிலக்காக, மனிதனின் இருட்டையும் கசப்பையும் சொல்லக்கூடிய ‘கொழுத்தாடு பிடிப்பேன்’ போன்ற சிறுகதைகளையும் அவர் எழுதியுள்ளார். கலாசாரங்களுக்கு இடையே உள்ள பொதுமையை  அவர் கதையில் இயல்பாக  எப்படி சாதிக்கிறார்? தன் மரபின்  வேரிழைகளை அவர் தான் எதிர்கொள்ளும் பண்பாட்டின் வேர்களுடன் பின்னிக்கொள்கிறார். இதை ஊடுபாவாக நெய்யும் ஒரு அழகிய மொழியின் தறி அவரிடம் உள்ளது. 

அவருடைய சுவை தொன்மையான தமிழிலக்கியங்களிலும் தோய்ந்தது. ஆகவே அது ஓர்   இக்கட்டில் கச்சியப்பரின் கந்த புராணத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது.  ‘ஒரு சாதம்’ கதையில் அவ்வையார் வரப்புயர  என்று மட்டும் சொல்லி நிறுத்தி, எப்படி என்று மன்னன் கேட்டதும் வரப்பை சிறிது உயர்த்தினால் அது எப்படி அரசனையே உயர்த்தும் என்று விளக்குவதை கூறுகிறார்.  கணிப்பொறியின் பிழையை நாட்கணக்காக அறிய முயலும் நாயகனின் சாகசத்துக்கு  கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியின் மேல் ராவணன் மறைத்து வைத்த காதலை தேடிப் போகும் ராமனின் அம்புக்கு உதாரணமாக சொல்கிறார். சிறுத் தொண்டர் புராணம், சிற்றிலக்கியங்கள், கலிங்கத்துப் பரணி, கம்பனின் வரிகள், கபிலன், சங்கக் கவிதை, மஹாபாரதக் கதை மாந்தர்கள் என்று அ.முத்துலிங்கத்தின் கதையுலகம் இலக்கியக் குறிப்புகளின் களமும் கூட. 

அதே இயல்பு கெடாமலே ஆப்பிரிக்க பழமொழியும் [ஆற்றில் ஆழம் பார்க்க இரண்டு காலையும் விடாதே, ஒரு காலை மட்டும் விடு முட்டாளே}, கிரேக்க புராணத் தொன்மங்களும், பல தேச நாட்டுப்புறக் கதைகளும், அமெரிக்க, தென்னமெரிக்க எழுத்தாளர்களும் ஊடாக செல்கின்றனர். இந்த  ஊடுபிரதித் தன்மையை [Inter texuality] அவர் எழுத்தின் தனித்தன்மை எனலாம் பல மொழிகளின் சாராம்சமான துளிகளை சேகரித்து வைத்த அழகிய தடாகம் என அவர் ஆழ்மனதை சொல்லலாம்.  எட்ட நிற்கும் மரத்தின் வேர்கள் பூமிக்கு கீழ்  உரசிக் கொள்வதைப் போல அவருக்குள் உலகப்பண்பாடுகள் அனைத்தும் கைகோர்த்துக் கொள்கின்றன. இந்நூற்றாண்டின் உலகமனிதனின் ஆழம் அவருடைய புனைவுலகு. 

அருண்மொழி நங்கை

தினமணி கட்டுரை

முந்தைய கட்டுரைஇரா. திருமாவளவன்
அடுத்த கட்டுரைபெங்களூர் கட்டண உரை, மற்றும் பயணங்கள்…