மணிபல்லவம் – வாசிப்பு

முதுநாவல் வாங்க  

முதுநாவல் மின்னூல் வாங்க

வணக்கம் ஆசிரியர் ஜெயமோகன்,

நான் தங்களின் புதிய வாசகன். இன்று நான் தங்களின் புனைவுக் களியாட்டு சிறுகதைகளில் ஒன்றான மணிபல்லவம் என்னும் கதையை வாசித்தேன். அது பல எண்ணத் தொடர்களை என்னுள் ஓட வைத்து, பல உருவங்களை என் அகத்திரையில் வந்து படிந்திட‌ செய்தது. தொடக்கத்தில் கதையை வாசித்து செல்லுகையில், இது மீனவர் அல்லது கடல் சார்ந்த மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காண்பிக்கும் என்ற தோற்றம் எழுந்தது. ஒரு மீனவ சமூகத்தில் ஒரு மீனவன் கரை திரும்பாமல் போனால் அச்சமூகம் அதை எவ்வாறு எதிர் கொள்ளும், அதனால் வரும் குழப்பங்களை விரித்துரைக்கும் என்று என் உள்ளம் தீர்மானித்தது.

ஆனால், கதை என்னுடன் உரையாடிக் கொண்டு இருக்கையில் அது நான் எதிர்பாராத ஒரு தலத்தில் வந்து நின்றதுஅல்லது, ஓர் எதிர்பாராத ஒரு தலத்தை திறந்து காட்டியது. இதுவரை நான் கவனமாய் வரைந்து வைத்த என் அகஓவிங்கள் பொருள் இழந்து போயின‌. கதை தன் அடையாளத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டது போல் ஓர் உணர்வு. ஏதோ ஒரு மாயக்காரன்(magician) தன் வெளித்தோற்றத்தை கிழித்தெறிந்து வேறொரு தோற்றத்தை வெளிப்படுத்துவது போல். ஜெயமோகனால் மட்டும் இதைச் செய்யக் கூடும் என்று முறுவலுடன் எண்ணினேன்.

மணிபல்லவம்அப்டி ஒரு தீவு உண்டுன்னு சின்னவயசிலே கதை கேட்டிருக்கேன் என்று ஆன்றப்பன் சொல்லுகையில், கதை தன் உருவத்தை சற்று மாற்றிக் கொண்டு என்னோடு பேசத் தொடங்குவது உணரமுடிந்தது. ஓரிடத்தில் அந்தோனி ஃபாதரிடம் தான் கண்டவைகளை கூறும் போது, கதை தன் புதிய தோற்றம் இது தான் எனத் துணிவாக காட்டிக்கொண்டு என்னோடு உரையாட தொடங்கியது. மனித உளவியலில் புதைந்து கிடக்கும் தொன்மம் எவ்வாறு யதார்த்தத்துடன் கலப்புறுகிறது என்ற காட்சியை வெளிப்படுத்தியது இக்கதை. என்ன செய்தாலும் நம் வாழ்வியலில் கீழ் படிந்து கிடக்கும் தொனமம் நம்முடன் இன்றும் உரையாடுகின்றன எனப் புரிந்து கொண்டேன். தொனமம் அது உண்மையோ பொய்யோ, ஆனால் அது சில சமயம் அதன் மறைவான் உறைவிடத்தை யதார்தத்திற்கு சுட்டி காண்பிக்கின்றது என்ற ஒரு தோணல் என்னுள். கடலில் மறைந்துக் கிடந்த அந்தப் பாறை அந்தோனிக்கும் இறுதியில் ஃபாதருக்கும் வெளிப்பட்டது போல.

ஆக மொத்தத்தில், இக்கதை மீனவர் வாழ்வியல் தான் பேசுகின்றது ஆனால் அந்த வாழ்வியலில் தொன்மம் வந்து பேச்சு வளர்க்க முற்படுவதை அழகாக காண்பிக்கின்றது. தங்களின் சிறப்பான பணி மேலும் தொடர வாழ்த்துகின்றேன்.

இப்படிக்கு,

ஜோசப் பால்ஸன்

முந்தைய கட்டுரைபுதுச்சேரி இலக்கிய முகாம், கடிதம்
அடுத்த கட்டுரைசி.கன்னையா