எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ் விக்கி
நாவல்களை வாசித்தல் என்பது ஒரு வகையில் நாமே அசௌகரியத்தை சுமையை வலியை தேடிப்போவது போலத்தான்.அறியாத நிலத்தை பழகி இருக்காத பண்பாட்டை முற்றிலும் புதிய வாழ்க்கையை வாசிப்பது பரவசமாக தொடங்கி உற்சாகமாக சென்றாலும் இறுதியில் எஞ்சுவது வலி சோர்வு தான். ஓநாய் குல சின்னம் போல.இயற்கையின் பிரம்மாண்டத்தை பேரழகை அணு அணுவாக ருசிக்கத் தந்து கடைசியில் அதன் அழிவை காட்டும் வனவாசி காடு நாவல்களை போல.வலியின்றி வளர்ச்சியில்லை…
என்னளவில் நாவலின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் ஏனைய காரணிகளை விட மொழி சார்ந்த எழுத்தாளரின் நுண்ணுணர்வு மிக மிக முக்கியமானது.மொழியை ஊடகமாக கொண்டு தான் படைப்புக்குள் நாம் நுழைகிறோம்.
இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கும் மொழி நடை பெரும்பாலும் எவ்வித பற்றும் பரவசமும் இல்லாத விலகலோடுகூடிய மிகை உணர்ச்சிகள் அற்ற நேரடியான யதார்த்தமான கூறுமுறை தான். என்னுடைய வாசிப்பில் எழுத்தாளரது இயற்கை நிலக்காட்ச்சி வர்ணிப்பும் கனவுகளை பற்றி பேசும் இடங்களும் காதல் மற்றும் புணர்வு தருணங்களும் மிக சுவையான வாசிப்பணுபவம் கொண்டவை. இந்தப் பகுதிகள் ஒரு விதமான பறத்தல் அனுபவம் தருபவை கவிதைக்கு நெருக்கமான பகுதிகள் மேலே சொன்னவை.
சிவராஜ், திருச்செல்வம் பரந்தாமன், அன்பழகன், சண்முகம் ஐந்து நண்பர்களின் பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு தொடங்கி அடுத்த இருபத்தைந்து ஆண்டு கால வாழ்க்கை தான் மொத்தநாவலின் களம். முதலில் சைக்கிளில் ஐவரும் கதித்த மலை ஒன்றாக செல்கிறார்கள். இரண்டாவது பயணம் கம்பெனி காரில் சிவன்மலை.மூன்றாவது பயணம் ஓதிமலை. நான்காவது பயணம் திரு வாங்கிய காரில் ஐவரும் அலகுமலை செல்கிறார்கள், ஐந்தாவது பயணம் சிவாவின் குவாலிஸ் காரில் சென்னிமலை ஐந்துமே முருகன் ஆலயங்கள். சைக்கிளில் தொடங்கி டொயோட்டா குவாலிஸ் வரையிலான ஐந்து பயணங்களின் இடைவெளிகளில் நிகழும் வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு தான் நாவல்.
முதல் அத்தியாயத்திலேயே ஐவரைப் பற்றிய துல்லியமான வரையறை வெளிப்படுகிறது. மூடப்பட்டிருக்கும் ரயில்வே கேட்டை குறுக்கு வழியில் பூந்தாவது வேகமாக கடந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறான் சிவா வாழ்க்கையிலே எல்லாவிதமான தந்திரங்களையும் பயன்படுத்தி மேலும் மேலும் முன்னேறிக்கொண்டே இருக்கிறான். சித்தர் சாமி மூலம் ஆண்மீகம், ராஜாமணி மூலம் இலக்கியம், கம்யூனிசம் போன்ற மூன்று பெரிய அலைகளை சூழல்களை எதிர்கொண்டும் எதிலும் அவனால் ஈடுபட முடியவில்லை மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு விரிய வேண்டுமென்ற விழைவே சிவா.எதை முன்னேற்றம் என்று நினைத்தானோ அந்த முன்னேற்றமே அவன் இருப்பை அர்தமற்றதாக்கும் ஏமாற்றத்தில் முட்டி நிற்கிறான்.
இளமையில் அறிமுகமான ஆன்மீக செயல்பாடுகளில் மேலும் மேலும் விரிந்து திரும்ப முடியா எல்லை வரை சென்றவர்களையும் திருப்பூரில் நான் பார்த்திருக்கிறேன் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் கம்யூனிச செயல்பாடுகளில் ஈடுபட்டு நக்சல்பாரி இயக்கங்கள் வரை சென்று வாழ்வை தொலைத்தவர்களையும் பார்த்திருக்கிறேன்.
சண்முகத்துக்கு அன்றாடம் குறித்த இந்த கவலையும் இல்லை சொத்து வாழ்க்கை வசதிகள் புலன் இன்பங்கள் என செழிப்பான வாழ்க்கை. இயல்பிலேயே விதவிதமான காமத்தையும் இலக்கிய ஆர்வத்தையும் தன்னுடைய வெளிப்பாடுகளாக கொண்டிருக்கிறான். இரண்டிலுமே தோற்றுப் போகிறான்.திருப்பூரின் இயல்பான தளகதியோடு ஒட்ட முடியாதவனாக இருக்கிறான் திரு அவன் வாழ்வு முழுவதுமே அன்றைய காலகட்டத்தின் மனநிலைக்கு பெரும் போக்குக்கு எதிர் திசையிலேயே இருக்கிறது கடைசி வரையிலும்.எல்லா திறமையும் இருந்தாலும் எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் நல்ல விளைவையே தந்தாலும் இறுதியில் செவன் ஸ்டாரில் கட்டிய சீட்டு போல நடுத்தெருவில் நிற்கும் தலைவிதி அன்பழகனுக்கு.
இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களில் இருந்து வந்து திருப்பூரில் வாழ்வாதாரத்தை திடமாக நிலைநாட்டிக் கொள்வோர் லட்சக்கணக்கில் இருந்தாலும். திருப்பூரில் இருந்து குவைத்திற்கு பிழைப்பு தேடி செல்ல வேண்டி இருக்கிறது பரந்தாமனுக்கு. படுதோல்வி அடைந்த இரண்டு திருமணங்களின் ஆறாத வடுவோடு கழிகிறது வாழ்க்கை.என்னதான் பள்ளி கல்லூரி நட்பாக இருந்தாலும் பொருளாதாரத்தில், அந்தஸ்தில், அறிவு நிலையில், பெரும் வேறுபாடுகளை கொண்ட நட்புகள் நெடுங்காலம் நீடிப்பதில்லை. வறுமையும் தகுதிகளில் இருக்கும் இடைவெளிகளும் ஒற்றுமையை தருவதில்லை பெரும்பாலும் வேற்றுமையை வளர்க்கத்தான் செய்யும். சண்டையிடுவதற்கு பிரிவதற்கும் காரணிகள் இருந்தாலும் கடைசி வரை நண்பர்கள் அனைவரும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள்.
நவாப்,பாக்யா,உமா, ரத்னவேல் செட்டியார், சுப்பிரமணிய,அருணா,சித்ரா,விமலா, சம்பங்கி,நாட்றாயன்,கண்ணம்மா,குடுமி அண்ணாச்சி போன்ற ரத்தமும் சதையுமாக எழுந்து வரும் நிறைய பாத்திரங்கள். பஸ் ஸ்டாண்டில் வேலை தேடுபவர்களை பிடிக்கும் மாதவன் திரைப்படம் எடுக்கச் சென்று சொத்தை வாழ்வை தொலைத்தவர்கள், மேம்பால பைத்தியம், என்ன என்றென்றும் நம் நினைவில் நிற்கும்படியான பாத்திரங்களை படைத்திருப்பது இந்த நாவலின் சிறப்புக்களில் ஒன்று.
கால மாற்றத்தை யாரும் எதிர்த்து வெல்ல முடியாது மாற்றம் மாறாத பெருவிசை. நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வந்த திருப்பூரின் பல்வேறு பாரம்பரிய தொழில்களை நசித்து விட்டு தான் அந்த இடத்தில் பனியன் தொழிற்சாலைகள் பெருகுகின்றன. நெசவுத் தொழில் பாத்திர தொழிற்சாலைகள், விவசாயம் என. மக்களுக்கும் குறைந்த வருவாயும் கடுமையான உழைப்பும் கொண்ட சூழலில் இருந்து பணியன் கம்பெனி வேலை ஒரு பெரிய மீட்சியாக தெரிகிறது ஆரம்பத்தில். குறைந்த வருவாயும் கடுமையான உழைப்பும் இருந்தாலும் பாரம்பரியமான மரபான தொழில்களில் இருந்த அக நிறைவினை திடீர் பனியன் கம்பெனி பெருக்கம் எல்லோருக்கும் வழங்கி விடுவதில்லை. மேலும் இந்த புதிய மாற்றங்களின் எதிர் விளைவாக நொய்யல் நதி நாசமாகி ஒரத்துப்பாலம் அணையே விஷக்கடலாக மாறி பல லட்சம் மக்கள் உண்ணும் உணவிலும் நீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் சாயக்கழிவுகள் கலந்து தலைமுறைகளையும் அழிக்கும் நோய்க்காரணியாகியிருக்கிறது. எற்றுமதிக்கும் வேலை வாய்ப்பிற்க்கும் அன்னியச் செலவானிக்கும் கொடுத்த விலை இது. இன்னும் ஒரு 25 ஆண்டுகள் கழித்த பின்பு தான் நிகர லாபநட்டம் தெரிய வரும். ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளும் ஈரோடு பவானி சாயப்பட்டறைகளும் இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றிது. இலங்கையிலும் பங்களாதேஷிலும் இப்போது பனியன் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. நாளை ஆப்பிரிக்காவிலும் இது நடக்கலாம். ஆகவே இந்தக் களம் உலக பொதுவானது.
நாவல் நிகழும் காலகட்டத்தில் நாட்டைக் குலுக்கிய முக்கிய வரலாற்று திருப்பங்களையும் ஆங்காங்கே காலக்கணிப்பிற்கு உதவியாக தொட்டுச் செல்கிறது. இந்திரா காந்தி கொலை, கோவையில் தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பு பற்றிய குறிப்புகள்.வீரப்பனை சுட்டுக்ககொன்றது, இந்திய வரலாற்றோடு தொடர்புடைய திருப்பூரின் இடங்கள் காந்தி தங்கிய வீடு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எரிக்கப்பட்ட காவலர்கள் பற்றிய இடங்கள் நன்று.
அதாரது, ரீவ்(லீவ்), சித்தநேரம், எத்தனாப்பு பன்னென்டு, கடேசி, சாலியா, ராஸ்கோல், எதுர்ல, சீராடிட்டு, அக்கியானம், நிக்கோணும், திரும்போணும் இதுபோன்ற பல நூறு கொங்கு தமிழ் சொற்கள் இயல்பாக நாவலில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. அழகு.
நான் பிறந்தது வளர்ந்தது தொழில் செய்தது முப்பத்தி இரண்டு வருடங்கள் வாழ்ந்தது எல்லாமே திருப்பூரில் தான். 1982 ல் பிறந்து 2013 வரை. அதன் பின்பு வயநாடு அட்டப்பாடி இப்போது கோவை என வசித்தாலும் பெற்றோர் உடன் பிறந்தோர் உறவுகள் நட்புகள் என என் வேர் இருப்பது இன்னும் திருப்பூரில் தான்.
நாவலில் விவரிக்கப்படும் தெருக்களில் ஆலயங்களில் தொழிற்கூடங்களில் மலைகளில் பள்ளிகளில் என் காலடி படாத ஒரு இடம் கூட இல்லை. சில ஆண்டுகள் பனியன் ஏற்றுமதி நிறுவனத்திலும் வேலை செய்திருக்கிறேன். ஆறாம் வகுப்பு இறுதியாண்டு விடுமுறையில் எட்டு மணி நேர வேலைக்கு ஐந்து ரூபாய் சம்பளத்தில் அடுக்கிக்கட்டும் வேலையை செய்திருக்கிறேன்.
எட்டாம் வகுப்போடு நின்று போன என் கல்விக்கு பின் இந்நாவலின் நாயகன் என்று சொல்லத்தக்க சிவாவை போல் குழந்தை தொழிலாளியாக பனியன் நிறுவனங்களில் பல்வேறு வேலைகளை செய்து இருக்கிறேன்.
இந்நாவலின் கதாபாத்திரங்களில் பெரும் பகுதியை தனிப்பட்ட முறையில் நான் நேரிலேயே அறிவேன். இந்நாவல் அர்ப்பணிக்கப்பட்டிருப்பதும் என் நெருங்கிய நண்பர் கோவிந்தராஜன் அவர்களுக்குத்தான்.
வாசிப்பு என்பது நிகர் வாழ்வு என்று சொல்வார்கள் உண்மையில் இது என் நிஜ வாழ்வு. நெடுங்காலம் நான் வாழ்ந்த என்னை சுற்றி நிகழ்ந்த வாழ்வு. இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் குறைந்தது பத்து மடங்காக விரித்துக் கொள்ளும் அளவுள்ள சம்பவங்களின் தொகுப்பு நினைவின் அடுக்குகளில் இருந்து எழுந்து வந்து கொண்டே இருந்தது. நினைவேக்கத்தை கிளறி விடுகிறது என்பதல்ல அதைத் தாண்டியும் முப்பது ஆண்டு வாழ்வை வாழ்ந்த ஊரை பழகிய மனிதர்களை பல்வேறு கோணங்களில் பார்க்கவும். அவர்களாகவே சிறிது நேரம் இருந்து வாழ்ந்துணரும் வாய்ப்பை நாவல் எனக்குத் தந்தது.
உலகெங்கும் இருந்து பல லட்சம் பேர் திருப்பூருக்கு வந்து வேலைகள் செய்து தொழில்கள் செய்து வாழ்ந்து வந்தாலும் நான் திருப்பூரை விட்டு வெளியேறும் வேறு ஒரு நல்ல இயற்கை சூழ்ந்த மலையடிவார ஆற்றோரத்தில் வாழும் கனவோடு தான் எப்போதும் இருந்தேன். அதன் பொருட்டே வயநாட்டிலும் அட்டப்பாடியிலும் சென்று வாழ்ந்தேன். சென்னை கோவை போன்ற தமிழகத்தின் பெரு நகரங்களுக்கு இணையாக 2006ம் ஆண்டிலேயே தமிழகத்தின் முதல் பத்து அங்காடிகளில் ஒன்றாக என்னால் இயற்கை அங்காடி துவங்கி வெற்றிகரமாக நடத்த முடிந்ததற்கு திருப்பூரின் வளமான பொருளாதாரம் பின்னணியும் ஒரு காரணம்.
என்னால் ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாத பவர் டேபிள் கோன் வைண்டிங் பேப்ரிகேஷன் எந்திரங்கள் ஓடும் சப்தமே ஒடுக்குமுறைகளும் வறுமையும் நிறைந்த பின் தங்கிய கிராமங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பேருக்கு இனிய ஓசையாக இருந்ததை இப்போதும் இருப்பதை புரிந்து கொள்கிற அதே நேரத்தில் சரி தவறு நன்மை தீமை வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் எப்போதும் தனிநபர்களை பொறுத்து அவர்கள் இருக்கும் நிலையை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று தானா. பல ஊர்களில் வாழ்ந்து பார்த்து சென்னை உள்ளிட்ட இந்தியாவின் எந்த ஊரிலும் சென்று வாழ வாய்ப்பு இருந்தும் பல காரணங்களால் விரும்பி தேர்வு செய்து இப்போது மனதிற்கு மிகவும் உகந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கோவையும் ஒரு நாள் கசக்குமா…
ஆழ்மனதை ஊடுருவும் என் ஆளுமையை மாற்றி அமைக்கவல்ல பெரிய அறிதல்கள் நாவல் மூலம் எனக்கு திறக்கவில்லை. திருப்பூரில் இருந்து இமயமலை நெடுந்தொலைவு தான் குறைந்தபட்சம் நீலகிரி உயரத்தையாவது மேற்கு மலைத் தொடர்களின் மர்மத்தையும் புதிர்களையுமாவது நான் எதிர்பார்க்கிறேன் வெறும் கதித்த மலை அலகுமலை சிவன்மலை ஒதிமலை சென்னிமலை குன்றுகள் போதுமானதாக இல்லை.
ஆயினும் இவ்வைந்து குன்றுகளுக்கும் அதற்கே உரித்தான தனித்தன்மையும் அழகுகளும் உள் மடிப்புகளும் ஆழங்களும் உண்டு இவ்வைந்து குன்றுகளுக்கும் பலமுறை விரும்பி சென்று இருக்கிறேன் சென்று கொண்டே இருக்கிறேன். மனைவி குழந்தைகளை மருத்துவமனை சேர்த்தும் அளவு சிக்கல்கள் இருந்த நாட்களிலும் அதீத சோர்வு தரும் அளவு வேலைப்பளுவில் மூழ்கி இருந்த நாட்களிலும் கூ கீழே ட வைக்க முடியாத அளவு நள்ளிரவு ஒரு மணி இரண்டு மணி மூன்று மணி வரை எல்லாம் நாவலை வாசித்தேன். மிகச் சிறிய பொடி எழுத்துக்களில் நெருக்கி அச்சடிக்கப்பட்ட 550 பக்க நாவல் இது உண்மையில் 750 பக்கம் வரும் இயல்பான எழுத்துருவில் அடித்திருந்தால். நேரமும் சூழ்நிலையும் அனுமதித்திருந்தால் ஒரிரு நாளிலேயே படித்து முடித்திருப்பேன் நாவலோடு ஒழுகிச்செல்வது அவ்வளவு சுகமாக இருந்தது.
கடைசி அத்தியாயம் வாசித்து முடிக்கையில் பெரும் வெறுமை சோர்வு.
மனித வாழ்வே ஒரத்துப்பாளையம் அணை போல முழுக்க நீர் நிரம்பியிருந்தாலும் மின்னி ஒளிர்ந்தாலும் எதற்க்கும் பயனற்று எல்லா வகையிலும் தீங்கு சூழ்ந்ததுதானென்றால் என்னதான் செய்வது…
மு.கதிர் முருகன்
மணல்கடிகை வாங்க
சுரேஷ் பிரதீப் எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை பற்றி
http://manalkadigai50.blogspot.in/2017/12/blog-post_8.html?m=1