மிளகு – வாசிப்பு-ஷங்கர் ப்ரதாப்

இரா முருகன் தமிழ் விக்கி

மிளகு தமிழ் விக்கி 

‘கடந்த கால ஏக்கம்’ என்பது தேனின் சுவை கொண்ட நஞ்சு என்ற உங்கள் வாக்கியத்தை வாசித்தபொழுது எங்கோ அகம் அறிந்த உண்மை சொல்லாகி முன்வந்து நிற்பதை காணும் உவகையே ஏற்பட்டது, இது ஒரு நஞ்சு மட்டுமல்ல ஒரு காலத்தில் Nostalgia என்பது முறையாக வரையறுக்கப்பட்டு மருத்துவ ஆவணங்களில் பட்டியலிடப்பட்ட நோயாகவே இருந்திருக்கிறது. மயக்கம், காய்ச்சல் துவங்கி மரணம் கூட ஏற்படலாம் என விக்கிப்பீடியா சொல்கிறது, எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இதைவிடப் பரவலான ஒரு நோய் இருக்க முடியாது என்பது உறுதி.

சமூகத்தில் எல்லோருமே இந்த நோயால் ஓரளவு பீடிக்கப்பட்டவர்கள், அதன்  தீவிரத்தன்மை வேண்டுமானால் ஆளுக்குஆள் மாறுபடலாம். பெரும்பாலானவர்களுக்கு நோய் இருப்பதே தெரியாது. அது குற்றமில்லை, மொத்தச் சமுகத்தையும் பிடித்திருந்தால் அது ஒரு நோய் அல்ல அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை முறை மட்டுமே. நோயைக் கட்டுக்குள் வைக்கும் வழிமுறைகள் தெரிந்திருந்தால் சமாளித்துவிடலாம்.

அமெரிக்காவில் நினைவேக்கதுக்கான(nostalgia)  பத்திரிக்கைகள் நிறைய  உண்டு. நூலகங்களிலும், பல்பொருள் அங்காடியில் பணம் செலுத்தும் இடத்திலும் பார்த்திருக்கிறேன். நோயின் உட்பிரிவுகளுக்கு தகுந்தபடி செய்திகள், கட்டுரைகள், புனைவுகள், வாசகர் கடிதங்கள் எல்லாம் இருந்தாலும் அவற்றின் முக்கியமான அம்சம் என்பது அவை பிரசுரிக்கும் படங்களே. பெரும்பாலும் கருப்பு வெள்ளை படங்கள், அந்தக்கால வாழ்க்கையை மனிதர்களை சித்தரிக்கும் காட்சிகள், பார்ப்பவர்களின் ஏக்கத்தை மேலும் தூண்டும் வகையில் அமைந்திருப்பவை.

இணையத்தில் காணொலி வடிவிலும் இவை பரவலாகி விட்டன, அவையும் பெரும்பாலும்  கருப்பு வெள்ளை படங்களே, பழைய பாணி கட்டிடங்கள், டிராம் வண்டிகள், முழங்கால்வரை சாக்ஸும் தொப்பியும் அணிந்த செய்தித்தாள் விற்கும் சிறுவர்கள், லிங்கன் தொப்பியுடன் கோட்டும் கழுத்துப்பட்டையும்  அணிந்த கனவான்கள் , இறகுவைத்த அலங்காரத்தொப்பி அணிந்த சீமாட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல அடுக்குகளில் நேர்த்தியாக உடையணிந்த சாதாரண மக்கள், அந்தக் காணொலிகளில் எல்லோருமே சார்லி சாப்ளின் போல வேக வேகமாக நடப்பார்கள்.

உலகம் இயல்பாக இயங்கும் வேகத்தை திரையில் கொண்டுவர வினாடிக்கு 24 படச்சட்டகங்கள் தேவை. ஆனால் புகைப்படக்கலை வளராத அந்தக்காலத்தில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் 24க்கும் குறைவான படச்சட்டகங்களையே கொண்டுள்ளன. ஆகவே இந்த வினோதமான நடையோட்டம்.

இன்றைய கணிப்பொறியியலில்  அந்த இல்லாத படச்சட்டகங்களை அதற்கு முன்னும் பின்னும் உள்ள சட்டகங்களை வைத்துக்கொண்டு செயற்கையாக உருவாக்கும் அளவுக்கு செயற்கை அறிவு வளர்ந்துவிட்டது, ஆகவே இந்த காணொலிகள் இயல்பான வேகத்துக்கு மாற்றப்பட்டன, அத்துடன் கருப்பு வெள்ளையின் செறிவை வைத்துக்கொண்டு வண்ணங்களை ஊகித்து அந்த காணொளிகள் நிறமேற்றப்பட்டன, இவையெல்லாம் நிகழ்ந்தவுடன் அந்தக் காணொளிகள் விசித்திரத்தன்மையை இழந்து சமகால அன்றாடத்தன்மையை அடைந்தன.

அப்படி சமகாலப் படுத்தப்பட்ட காணொலிகள் நினைவேக்க விருப்பு கொண்டவர்களால் முற்றாக புறக்கணிக்கப்பட்டன, அவர்களுக்கு தேவை மாயத்தன்மை கொண்ட, இடைவெளிகளை இட்டு நிரப்பாத பழைய கருப்பு வெள்ளைப் படங்களே. அந்தக்காலத்தில் சாதாரண மக்கள் அப்படி விஸ்தாரமாக அடுக்கடுக்காக உடை அணிந்தது அவர்களின்  ரசனை மேம்பாடு காரணமாக அல்ல, மாறாக கட்டிடங்களில் வெப்பமூட்டிகள் இல்லாததே என்ற உண்மையை கூட காதை பொத்திக்கொண்டு மறுக்கும் மனநிலை கொண்டவர்கள் அவர்கள்.

மிளகு நாவல் வாசிக்கையில் கலங்கலான பழைய மாயத்தன்மை கொண்ட காணொலியின் அன்றாடப் படுத்தப்பட்ட வடிவத்தை காணும் அனுபவமே ஏற்பட்டது, நாவலின் விவரணைகள் சமகாலத்தியவை ,கதை சொல்லும் காலத்துக்காக எந்த சமரசமும் இல்லாமல், கதை மனிதர்களையும் சூழல்களையும் சமகால நோக்கிலேயே அணுகுகின்றன, கிட்டத்தட்ட கணிப்பொறியின் செயற்கை அறிவுக்கு மட்டுமே சாத்தியமான பாரபட்சமற்ற கருணையின்மை.

சென்னபைரதேவிக்கு அவர் அரண்மனையில் புதிதாக செய்யப்பட்டிருக்கும்  பனிக்கூழ் உணவுப்பண்டம் மீது ஆவல், வைத்தியரின் பரிந்துரையை புறக்கணித்து அளவுக்கு மீறி சுவைத்து விடுகிறார், விஷயம் அறிந்த வைத்தியர்

“ராணி, நீங்க என்னை முதல்லே ஆனைக் கால்லே இடற வச்சுக் கொன்னுடுங்கோ.அப்புறம் பனிக்கூழோ கட்டியோ விருப்பம் போல சாப்பிடுங்கோ, என் சாவுக்கு பால் மட்டும் ஊத்திப் படைக்கச் சொல்லிடுங்கோ”  என்கிறார், இந்த மாதிரியான சம்பிரதாயமற்ற அரசவை உரையாடல்கள் எந்த தமிழ் சரித்திர நாவல்களிலும் வந்ததாக என் வாசிப்புக்கு எட்டியவரை இல்லை

”ஏண்டா வைத்தியா, நீ உங்க அப்பா வைத்தியரோடு சின்னப் பையனா மருந்து மூட்டையைத் தோளிலே தூக்கிக்கிட்டு வந்ததை இன்னிக்குத் தான் பார்த்த மாதிரி இருக்கு. நீயானா வளர்ந்து என் கிட்டேயே அழிச்சாட்டியம் பண்ணிண்டு நிக்கறே”

ஒரு சிறிய உரையாடல் வழியே மகாராணி அரச வைத்தியர் உறவு சமகாலப் படுத்தப்படுவதுடன் அவர்களின் உறவைப் பற்றி யதார்த்தத்தின் எல்லைக்குள் அடங்குகிற சித்திரம் வாசகனுக்கு அளிக்கப்படுகிறது, மகாராணி, அரசவை போன்ற கடந்தகாலத்தை சேர்ந்த விஷயங்களை பற்றி சரித்திர நாவல்களை வாசித்த தமிழ் வாசகன் கொண்டிருக்கச் சாத்தியமான கலங்கலான கற்பனைகளை இந்த சித்திரம் அழிக்கிறது. ஒருவகையில் இந்த நாவல் செய்யும் முதன்மை வாசக அனுபவமே இந்த வகை அழித்தல்கள் தான்.

வீர நரசிம்மர் விஜயநகர பேரரசில் பன்குடி என்ற சிறு தேசத்தின் அரசர், சென்னாவின் இளவயது பாடசாலைத் தோழர்.  தோழியை சந்திக்க அதிகாலையில் வருகிறார்

நேற்றிரவே வெளிநாட்டவர் குடிக்கும் மதுசாலையில் கலகம் விளைவித்து கடைநிலை துரைமார்களிடம் கட்டிப்புரண்டு சண்டைபோட்டு துரத்தப்பட்ட விஷயம் சென்னாவுக்கு தெரியும், எதற்கு வந்திருக்கிறார் என்பதே கேள்வி.

”அறுபது வயசிலேயும் நீ அழகா இருக்கே சென்னா” என்றெல்லாம் பேசி தோழியை மயக்கிய பின்னர் விஷயத்துக்கு வருகிறார்

“ஒரு நூறு வராகன் கொடு அவசரமா வேண்டியிருக்கு”.

அவரிடம் குதிரையோ சாரட் வண்டியோ கூட இல்லை, “எப்படி திரும்ப போகப் போறே?” என்று கேட்கிறாள் சென்னா “பெருவழி ஓரமா நின்னா, அரசன் நிக்கறான்னு போகிற வர்ற சாரட் எதுவாவது நிக்காதா என்ன?”. குடிமக்களிடம் லிப்ட் கேட்கும் அரசர்!.

இதைப்போன்ற தருணங்கள் நாவலில் வரிசையாக வந்துகொண்டே இருக்கின்றன. கதை நிகழ்காலத்திலும் கடந்தகாலத்திலுமாக ஆலப்புழை, ஜெருஸப்பா, நாக்பூர் என்று இந்தியாவிலும் லண்டன், ஆப்கானிஸ்தான் என்று வெளியே பல இடங்களிலும் நிகழ்கிறது.

தலிபான்கள் கடத்திய விமானத்தில் சிக்கிக்கொள்கிறான் சின்ன சங்கரன், போர்த்துப்பாக்கிகள் ஏந்தியபடி முகமுடி அணிந்த கடத்தல்காரர்கள் வாழ்வின் இறுதிக் கணத்தை கண்முன்னே காட்டுகிறார்கள், உயிர்ப்பயத்தில் சங்கரனின் கால்சட்டை நனைந்துவிட்டது, பக்கத்துக்கு இருக்கையில் துளசி மணி உருட்டி ஜபித்துக் கொண்டிருந்த முதியவர் ”எனக்கு வெங்காயம் இல்லாத மசாலாவும் சப்பாத்தியும் ராத்திரி சாப்பாடாக வேண்டும் என்று கோலாலம்பூரில் இருந்து வரும்போதே பதிந்து கொடுத்திருந்தேன். வைத்திருக்கிறார்களா கேள்” என்று சங்கரனை கேட்கச்சொல்கிறார். தீவிரமான கட்டங்களில் இடையே வரும் இம்மாதிரி கூர்மையான அங்கதத்  தருணங்கள் வாசகனை நிலைகுலைய வைக்கின்றன.

இந்த நாவல் மாய யதார்த்த வகைமையை சேர்ந்ததாக பேசப்படுகிறது, ஒரு வாசகனாக தனிப்பட்ட முறையில் இந்த மாதிரி உத்திகள் மேல் சிறிய தயக்கமும் மன விலக்கமும் உண்டு, முதல் காரணம் இலக்கிய வகைமைகள் பற்றிய என் அறியாமை, இரண்டாவதாக இப்படி தேய்வழக்காக மாற்றப்பட்டுவிட்ட கூறுகளை கையில் வைத்துகொண்டுதான் ஒரு வாசகன் படைப்பை அணுக வேண்டுமா என்ற கேள்வி, தீட்டிய நுண்ணுணர்வுடனும் திறந்த மனதுடனும் படைப்பை அணுகும் வாசகன் இப்படிப்பட்ட இலக்கிய உத்திகள் வாக்களிக்கும் இறுதிப்  பெறுமதிப்பை தன் வாசிப்பு வழியே இயல்பாகவே அடைவான் என்ற நம்பிக்கையும் உண்டு.

அம்பலப்புழையில் தனிமையில் வாழும் திலீப் என்கிற வயசாளியை காலம் வெளி போன்ற எல்லைகளுக்கப்பால் இருக்கும் மனிதர்கள் வந்து சந்திக்கிறார்கள், காலை நடையை முடித்துவிட்டு வழக்கத்தைவிட தாமதமாக வரும் திலீப்பை  “வடசேரிக்காவிலே தொடுப்பு எவளையாவது பார்க்கப் போனீரா?” என்று அர்ச்சித்தபடி எதிர்கொள்கிறாள் வீட்டுக்காரி அகல்யா. “ஒருநாள் இல்லேன்னா ஒருநாள் பாரும். நான் உம்ம பின்னாலேயே வந்து கையும் களவுமா பிடிக்கத்தான் போறேன்” என்று தொடரும் கிண்டலும், மிரட்டலும் , கொஞ்சலும் கலந்த வயசாளி தம்பதிகளின் வழக்கமான தினசரி உரையாடலில் சம்பந்தமேயில்லாமல் திடுமென அகல்யா உயிருடன் இல்லை எனும் சமகால யதார்த்தம் குறுக்கிடுகிறது.

வயசாளி திலீப்பின் வீட்டுக்கு எந்தவித முன்னறிவிப்பும்  இன்றி அவர் தந்தை வந்து சேர்கிறார்,  திலீப்புக்கு சிறு வயதாக இருக்கும்போதே காணாமல் போனவர், இது உண்மையா அல்லது அகல்யாவை கண்டது போல மாயமா என்று திலீப்புக்கு குழப்பம், உண்மையாக இருந்தால் அவருக்கு நூற்றுப்பத்து வயது இருக்கும், மனக்குழப்பம் இருந்தாலும் சரளமாக அவருடன் உரையாட முடிகிறது, தந்தையும் மகனும் பேசுகிறார்கள், ஆசைதீர அப்பாவுக்கு பணிவிடைகள் செய்கிறார் மகன், பேரனிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார், ஆனால் ஒரே ஒரு சிறிய பிரச்சினை, தந்தையார் அவர் காணாமல்போன பொழுது பயணத்தில் வழிதவறி தவறான காலத்தில்(!) விழுந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அது ஒன்றும் பிரச்சினை இல்லை, காலம் இடம் எல்லாம் ஒரு சவுகர்யத்துக்காக நாம் நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கைகள் தானே?, வசதிக்கேற்ப மாற்றிக்கொள்வதில் என்ன பிரச்சினை?, வாழ்வின் எல்லா அத்தியாயங்களையும் வாழ்ந்துமுடித்தபின் இறுதியில் ஒவ்வொரு மனிதரும் தங்கள் பெற்றோருடன் உரையாட வேண்டும் என்கிற நிறைவேறாத ஆசையை சுமந்து காத்திருந்து காத்திருந்து கடைசியில் எல்லையை கடந்து அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று சேர்வது வாழ்வின் விதிகளில் ஒன்று. ஆனால் இந்த நாவலில் தந்தையுடன் உரையாடும் ஆசையை நிறைவேற்ற திலீப்பின் அப்பா தர்க்கத்துக்கு எட்டாத கால வெளியில் இருந்து எழுந்து வருகிறார், அல்லது அவருக்குளே இருந்தே எழுந்து வருகிறாரா? ஒரு மனிதன் கடைசியில் அவன் முன்னோர்களின் எச்சம் மட்டும் தானா? அவர்கள் வாழ நினைத்து முடியாமல் போன வாழ்க்கையை தான் ‘மொத்தக் குருதியையும் கொடுத்து’ செயலாக்க முனைகிறோமா?

நாவல் இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் வெளிப்படையாக எழுப்புவதில்லை, அல்லது அப்படி எழுந்த கேள்விகள் எல்லாமே நான் செய்த  பிழை வாசிப்பாக இருக்கலாம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் வரும் இந்த பெரு நாவலை எழுத வேண்டுமென்றால் இதுவல்லாவிட்டாலும் இதைப்போன்ற ஆழமான அடிப்படை கேள்விகள் செலுத்து விசையாக இருந்திருக்கும்.

இப்படி ‘மருத்துவக்குறிப்பை வாசிக்கும் நோயாளியின் தீவிரத்தன்மையோடு’  இல்லாமல் மனமகிழ்ச்சிக்காக வாசிக்கும் வாசகருக்கும் இந்த நாவல் பெரு விருந்தை அளிக்கிறது, உவமையாக அல்ல நிஜமாகவே.

இரண்டாம் அத்தியாயத்தில் வரும் ராணியின் பிறந்த நாள் விருந்து விவரணைகள் படிப்பபவரின் இச்சையைத் தூண்டுபவை, இப்படிப்பட்ட விவரணைகள் நாவல் முழுக்க வருகின்றன. அதைப்பற்றி விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் நிகழ்த்திய கா.நா.சு கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட   கேள்விக்கு அத்தகைய விவரணைகளுக்கு எதிர்நிலையில் சென்னா சிறையில் அடைக்கப்பட்டு அவளுக்கு அளிக்கப்படும் ஒரு கோப்பை சூப்பை அணிலுக்கு உணவாக கொடுக்கும் கட்டத்தை சுட்டிக் காட்டினார்.

அதற்கும் மேல் இந்த விவரணைகள் எழுதுபவருக்கும் படிப்பவருக்கும் மகிழ்ச்சியை அளித்தால் அது இருந்துவிட்டுப் போகட்டுமே என்றார், அடிப்படை இச்சையை தூண்டும் இரு விஷயங்கள் காமமும் உணவும். காமத்தை பற்றி ஒரு எல்லைக்குமேல் எழுத முடியாது உணவைத்தவிர வேறு ஏதேனும் செலுத்துவிசையாக அமையாத பொழுது உணவின் மீதான ஆர்வத்தை விசையாக உபயோகித்து சந்தோஷமாக எழுதிவிட்டு போகிறேனே என்று பதிலளித்தார்.

இந்த நாவலில் துலங்கிவரும் கதை மாந்தர்களின் உலகம் துவங்கும் இடம் நாவலாசிரியரின் ‘அரசூர் வம்சம்’ என்று தெரிகிறது, அது இரா.முருகன் அவரது முன்னோர்களின் வாழ்க்கையைப் பற்றி கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு இடைவெளிகளை கற்பனையால் இட்டு நிரப்பி ஒரு முழுமையான சித்திரத்தை உருவாக்கும் முயற்சி என்று கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.

அரசூர் நாவலில் வரும் பகவதி எனும் பாத்திரம் அவரால் கற்பனையாக பெயர் சூட்டப்பட்டது ஆனால் சில காலம் கழிந்து நிஜ வாழ்வில் அந்த பாத்திரத்துக்கு கருப்பொருளாக இருந்த அவரது முன்னோர் பெயரும் பகவதி என்று அறிய வந்ததை கலந்துரையாடலில் குறிப்பிட்டார், தான் விசைப்பலகையில் எழுதும்பொழுது அவருடன் யாரோ கூடவே சேர்ந்து செயல்படுகிறார்கள் என்று அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் குறிப்பிட்டிருந்தார்.

அரசூர் வம்சத்தில் துவங்கும் மொத்த நாவல் வரிசை உருவாக்கும் கதையுலகம் பின்னால் திரும்பிப் பார்த்து காலத்தில் முன்னோர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது ஆனால் நோய்க்கூறு கொண்ட நினைவேக்கம் அற்ற அணுகுமுறையை கொண்டிருக்கிறது, அப்படி ஏதேனும் இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி அவற்றை நையாண்டி செய்து கலைத்துபோட்டு, அன்றாடப்படுத்தி தெளியவைத்து ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது, இந்த படைப்புலகில் கற்பனையை உபயோகித்து வாழ்ந்து வெளிவரும் ஒரு வாசகனுக்கு அப்படிப்பட்ட நோய்க்கூறுகளை பற்றிய பிரக்ஞையை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பையும் இந்த நாவல் அளிக்கிறது என்றே சொல்வேன்.

ஷங்கர் ப்ரதாப்

தொடர்புடையவை :

கா. நா .சு உரையாடல் அரங்கு வரிசையில் இரா.முருகனுடனான உரையாடல் : https://www.youtube.com/watch?v=jNKBNgxmadw

மிளகு வாசிப்புக்கு உதவியாக முன்புரிதல்கள் : https://www.jeyamohan.in/162829/

மிளகு நாவல் வாசிக்க  : மிளகு: இரா முருகன் – நாவல் – சொல்வனம் | இதழ் 287 |22 ஜன 2023 (solvanam.com)

இரா முருகன் தமிழ் விக்கி பக்கம் : இரா.முருகன் – Tamil Wiki

முந்தைய கட்டுரைஅன்பெனும் பிடி, கடலூர் சீனு
அடுத்த கட்டுரைதஞ்சையில் டால்ஸ்டாய்- எம்.கோபாலகிருஷ்ணன்