நடிகையின் நாடகம்

ஜெயகாந்தன் தமிழ் விக்கி

ஜெ,

நேற்று வீட்டின் பின்பகுதியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஜெயகாந்தனின்ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்படித்துக் கொண்டிருந்தேன். மனைவி என்னிடம் எதோ கேட்டார். என்னை அந்த நூலில் இருந்து பிய்த்து எடுத்தது போல ஒரு பரிதவிப்பு. அவர் நகர்ந்து மீண்டும் நாவலில் மூழ்கிய பின்புதான் நிம்மதி. சமீபத்தில் படித்த எந்த ஆக்கமும் என்னை இப்படி ஆட்கொள்ளவில்லை. ஆங்காங்கே வரும்உரக்கக் கூறுதல். தத்துவப் படுத்துதல்கூட தடையாக இல்லை.

மாலை நடையின்போது மனம் விரிந்து கிடந்தது. எதிரில் வருபவர்களை எல்லாம் பார்த்து புன்னகை வந்தது. உள்ளேஅழகுஅழகு…, நீ  நடந்தால்  நடை  அழகு .. அழகு, நீ  சிரித்தால்  சிரிப்பழகு அழகுஎன்ற பாடல் அதிலும்அழகுஅழகு…” என்ற ஹம்மிங் ஓடிக்கொண்டே இருந்தது. நான் அந்தப் பாடலை சமீபத்தில் கேட்டது இல்லை. எந்த படம், யார் இசை, யார் பாடியது என்று கூட அப்போது ஞாபகம் இல்லை. இந்த நாவலில் இருந்து இது எப்படி எழுந்து வந்து ஒட்டிக்கொண்டது என்று அப்போது புரியவில்லை. இன்று காலைதான் புரிந்தது.

இரு நாட்கள் முன்புதான் ஏ கே லோகிததாஸை நீங்கள் எடுத்த பேட்டியை படித்திருந்தேன். அதிலிருந்து நான் பெற்றுக்கொண்டதுஅன்பு, கருணை, அறம், நீதி என்பவையெல்லாம் மனிதனின் இயற்கையான குணங்கள் அல்ல. அவற்றை மீண்டும் மீண்டும் பேசி நிறுவியாக வேண்டி இருக்கிறது. கலை அதையே செய்ய வேண்டும்என்பதே. நீங்கள் எப்படி மடக்கினாலும் அவர் இந்த தன் நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தார். அதைத் தான் ஜெயகாந்தன்ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்நாவலில் செய்திருக்கிறார். இதன் அடியில்அன்புஅன்புஅன்பு…” என்ற இசை ஓடிக்கொண்டிருக்கிறது

மற்றவரை கட்டுப்படுத்தாத, அவர்களைஉள்ளது உள்ளவாறுஏற்றுக்கொள்ளும் அன்பை முன்வைக்கிறார். அதற்கு தன் மீதான அன்பும், தன் சுயத்தை தியாகம் செய்யாத பண்பும், தன் மகிழ்ச்சியைத் தன் உள்ளேயன்றி வெளியில் தேடாத மாண்பும் தேவை என்கிறார். இதற்கு உதாரணமாக கல்யாணி. அவர் வாழ்க்கையில் காணாத ஆனால் இருக்கவேண்டிய முன்மாதிரி. இதற்கு எதிராக மண உறவில் ஆண் ஆதிக்கவாதத்திலிருந்து வெளிவரமுடியாத ரங்கா. வளர்ப்பு சார்ந்த பண்புகளில் ஜாதி, வீதி, குடும்பம் போன்றவற்றில் இருந்து வெளியே வந்து கல்யாணியை விரும்பி மணக்க முடிந்த ரங்காவுக்கு, ஆண் என்ற கட்டுமானத்தில் இருந்து வெளிவர ஏலவில்லை

ஓரே ஒரு எதிர்மறை பாத்திரம் கூட இல்லாத நாவல். அவரவர் இயல்பு, கருத்து, நம்பிக்கை, பண்பாட்டின்படிதான் இருக்கிறார்கள். மற்றவர் செயலை, கருத்தை ஏற்க மறுக்கிறார்கள். சண்டையும் இடுகிறார்கள். கல்யாணிரங்கா மணமுறிவுவரைக் கூடச் செல்கிறார்கள். ஆனால், ஒருவருக்கொருவர் மீதான அன்பு மறைவதில்லை. அவனை மதிக்கும், அவன்மேல் அன்பு காட்டும் தொத்தா குடும்பத்தினருக்கும், ஆதிகேசவலு நாயுடு வீதியினருக்கும் அவன் கல்யாணியை மணப்பதில் கடும் எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், அவனது அறை, தவறிப்போன ஆடு திரும்பிவரும் என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஐந்து ஆண்டுகளாக அவன் குழந்தையை வளர்த்து, அவனுக்கு இறந்து போன மனைவியின் தங்கையை மணமுடிக்கக் காத்துக் கொண்டிருக்கும் மனைவி குடும்பம் அவனை விலக்கி வைப்பதில்லை. ரங்காவுடன் கடும் கருத்து பேதம் உடைய அண்ணாசாமி கல்யாணி அவனை காதலிப்பதை அறிந்து மகிழவே செய்கிறார்

இந்தக் கதையில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் தான்தான் என்கிறார் ஜெயகாந்தன். எல்லோருடைய கதையையும் நல்லதாக் முடித்து வைக்கிறார், அவரது அன்பு. எளிதில் வணிகக் கதையாகக் கூடிய ஒன்றை இலக்கியமாக மாற்றிய மாயம் நிகழ்த்தி இருக்கிறார்.

பா ராஜேந்திரன்

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் வாங்க

முந்தைய கட்டுரைபெங்களூர் சந்திப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைஅம்புப்படுக்கை- கடிதம்