அன்புள்ள ஜெயமோகன்,
வெண்ணிலை, காவல் கோட்டத்திலிருந்து சிறு பகுதிகளை வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன், என்றாலும் வெண்ணிலை அளவுக்கு என்னால் காவல் கோட்டத்தோடு சட்டென்று ஒன்றிப் போக முடியவில்லை. மதுரையைச் சார்ந்த என்னால் மதுரையின் மாதிரியைக் கூட காண இயலவில்லை. காவல் கோட்டம் பற்றிய திரு.ராமகிருஷ்ணனின் விமர்சனத்தில் பட்டவர்த்தனமாக ஒரு வாசகனின் உணர்வுகள் சொல்லப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். உங்களது பார்வைக்கு..
http://www.sramakrishnan.com/view.asp?id=231&PS=1
http://www.sramakrishnan.com/view.asp?id=232&PS=1
–கார்த்திக் முருகன்.
அன்புள்ள நண்பருக்கு,
ஒரு எழுத்தாளன் எழுதிய பெரிய நூலில் ‘சில பக்கங்களை’ படித்தே இறுதி முடிவுக்கு வரக்கூடிய உங்களைப்போன்ற மேதைகள் மேற்கொண்டு படிக்கவேண்டிய தேவையே இல்லை. இனி நீங்கள் அட்டையை மட்டும் பார்த்தே கடைசிக்கருத்துக்களுக்கு வந்துசேரமுடியும்
வாழ்த்துக்கள்
ஜெ
****
ஜெ.
அன்புள்ள அய்யப்ப மாதவன்,
தமிழில் எப்போதெல்லாம் கவனத்தைக் கவரக்கூடிய ஒரு முக்கியமான படைப்பு வருகிறதோ அப்போதெல்லாம் இம்மாதிரியான அவநம்பிக்கைகள், வாய்வழித்தகவல்கள் பரவ விடப்படுகின்றன. சு.வெங்கடேசனை எனக்கு நன்றாகவே தெரியும். நானறிந்தவரை வெங்கடேசன் அப்படியெல்லாம் சொல்லக்கூடியவரே அல்ல.
இது ஒரு சிறு உலகம். ஒவ்வொருவரும் பிறரைப் போட்டியாளராக எண்ணும் சூழல். அவநம்பிக்கைகள் சட்டென்று பல்கிப்பெருகிவிடுகின்றன. அவற்றுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதே உகந்தது. என்னை வெங்கடேசன் ஒரு ·பாசிச மத வெறியர் என்றெல்லாம் ஆக்ரோஷமாக கட்டுரை எழுதி , கூறி வருகிறார். அதனாலென்ன, அது அவரது கருத்து. வாழ்க சகல சம்பத்துகளுடன் என்பதே என்னுடைய நிலைபாடு. அவரை என் நண்பராக நினைப்பதில் அது தடையாகவும் இல்லை
என்னுடைய எல்லா நாவலக்ளும் வெளிவந்ததும் ஆவேசமாக நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. காடு நாவல் வெளிவந்தபோது ஒருவர் அது ஷக்கீலா படம்போல இருக்கிறது என்று இணையத்தில் எழுத கீழே ஒரு அம்மை ‘அய்யோ, தப்பித்தேன். நான் அதை வாங்கவிருந்தேன்’ என்று பின்னூட்டமிட்டிருந்தார். சிரிப்புதான் வந்தது. இந்த நான்குவருடங்களில் காடு அடைந்த வாசக வட்டம் பிரம்மாண்டமான ஒன்று என்பதை இலக்கியமறிந்த எவரும் அறியலாம்.
எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடம் நேரில் பிரசாத் ஸ்டுடியோவில் இதே கருத்துக்களைச் சொன்னார். அவர் நான் மிகமதிக்கும் படைப்பாளி. அவர் தன் சொந்த படைப்புநோக்கு சார்ந்த ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அந்நாவலைப் வாசித்துக் கொள்கிறார் என்று மட்டுமே நான் புரிந்துகொண்டேன்.
‘காவல் கோட்டம்’ நாவலை நான் இன்னும் வாசிக்கவில்லை, வேறு நூல்களில் மனம் சிக்கிக் கிடக்கிறது. என் மனைவி அருண்மொழிநங்கை வாசித்தாள். தமிழகத்தில் அவள் அளவுக்கு நான் மதிக்கும் இலக்கிய வாசகர்கள் சிலரே. எளிதில் அவள் படைப்புகளை அங்கீகரிப்பதும் இல்லை.
அவளுடைய கருத்தில் காவல்கோட்டத்தில் ஓர் ஆயிரம் பக்க நாவலுக்கு இருக்க வேண்டிய தரிசனபலமும், நிகழவேண்டிய மானுட உச்சமும் நிகழவில்லை. ஆனால் மிக ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மை கொண்ட நாவல் அது. ஆயிரம் பக்கத்தையும் ஒரே மூச்சில் கடந்துசெல்லும்போது வரலாறு கண்முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரமை உருவாகிறது. வரலாற்றின் அர்த்தமும் அர்த்தமின்மையும் தெரிகிறது என்றாள். அத்துடன் அவளுக்கு அந்நாவலின் பெண் கதாபாத்திரங்கள் வலுவானவையாக தோன்றின. குறிப்பாக இத்தனை கம்பீரமான பாட்டிகள் தமிழில் எந்த நாவலிலும் வந்ததில்லை என்றாள்.
ராமகிருஷ்ணனின் விமரிசனத்தை அவள் படித்தாள். நெடுங்கால வரலாற்றைச் சொல்லக்கூடிய நாவல் விரிவாக பல இடங்களைச் சொல்லிச் செல்கிறது. அச்சம்பவங்களை இணைப்பதற்கு நடுவே உள்ள வரலாற்றுப் பகுதிகள் நேரடியான ஆசிரியர் கூற்றாக சுருக்கியளிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளையே ராமகிருஷ்ணன் சுட்டிக் காட்டுகிறார் என்று அருண்மொழி சொல்கிறாள். ராமகிருஷ்ணனைப் போன்ற ஒரு படைப்பாளி இவற்றை வேறு பாணியில் எழுதியிருக்கக் கூடும் என்பதே இதற்குப் பொருள் என்று நான் புரிந்துகொள்கிறேன். என்னிடம் இந்நாவலைப்பற்றி பேசிய பத்துக்கும் மேற்பட்ட நல்ல வாசகர்கள் — அவர்களில் நாஞ்சில் நாடனும் அடக்கம்- பொதுவாக அருண்மொழியின் கருத்துக்கு இணையான கருத்தையே சொன்னார்கள்.
ஒரு நாவலை அந்த நாவலில் என்ன இருக்கிறது என்ற நோக்குடன் முன்நிலைபாடுகளும் கசப்புகளும் இல்லாமல் வாசிப்பதே சிறந்த வழியாகும். ஒரு படைப்பை எழுதிய படைப்பாளிக்கு நாம் அளிக்கும் குறைந்த பட்சக் கௌரவம் அதை அக்கறையுடன் வாசிப்பதே. கருத்துக்கள் பல வரலாம். அந்தக்கருத்துக்கள் அப்படைப்பின் மீதான ஒரு வாசிப்பு மட்டுமே, பாராட்டும் சரி, நிராகரிப்பும் சரி.
ஜெ
வெங்கடேசனின் விமரிசனம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20205126&edition_id=20020512&format=html