ஆகாய ஊஞ்சல்

ஓர் ஊசல் மெய்யியல் நூல்களில் ஆடிக்கொண்டே இருக்கிறது. கண்முன்காட்சியில் இருந்து காணாப்பெருநுண்மை வரை. பின் அதிலிருந்து இங்கெலாமென நிறைந்திருப்பது வரை.  சொல்லிச் சொல்லி தீராத பெருந்திகைப்பாகவே அது அவர்களுக்கு இருந்திருக்கிறது. அந்த பெருந்திகைப்பை ஐன்ஸ்டீன் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.

ஆறாம் திருமுறை தேவாரத்தில், திருநாவுக்கரசர் பாடிய வரிகளில் நின்று அந்த ஊசலை நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கிருந்து தொடங்கி எங்குவரை செல்கிறது என்று பார்த்தேன்.

மண்ணாகி விண்ணாகி மலையும் ஆகி
வயிரமுமாய் மாணிக்கம் தானே ஆகிக்
கண்ணாகி, கண்ணுக்கோர் மணியும் ஆகி
கலையாகி,கலைஞானம் தானேயாகிப்
பெண்ணாகி, பெண்ணுக்கோர் ஆணுமாகிப்
பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டமாகி
எண்ணாகி, எண்ணுக்கோர் எழுத்தும் ஆகி
எழுஞ்சுடராம் எம்மடிகள் நின்றவாறே.

இங்கு சூழ்ந்துள்ள நிலமாகி, அதன்மேல் கவிந்த வானம் ஆகி, அவையிரண்டையும் இணைக்கும் மலையும் ஆகி நின்றுள்ளது ஒன்று. அது பெருந்தோற்றம். அடுத்த தாவல் நுண்தளம் நோக்கி. வைரமும் மாணிக்கமும் ஆகி நின்றுள்ளது அது . மெய்யியல் மரபில் வைரம் மாணிக்கம் ஆகிய கற்களுக்கு ஒரு தனித்தன்மை உருவகிக்கப்படுவதுண்டு. இங்குள்ள பருப்பொருட்களும் ஒளியும் வேறுவேறாக நிலைகொள்பவை. ஆனால் வைரமும் மாணிக்கமும் பருப்பொருளும் ஒளியும் ஒன்றே என ஆனவை. ஆகவே அவை நுண்நிலையில் திகழ்பவை.

காட்சியைச் சொன்னதுமே கண்ணுக்குச் செல்கிறது கவிதை. கண்ணாகியதும், கண்ணின் மணி என ஆகியதும், அக்கண்களால் அறியப்படும் அழகுப்பெருவெளியாகிவிடுகிறது அது.  கலை என ஆன பின் கலைஞானம் என்னும் நுண்பொருளாகிறது. அவை ஒன்றையொன்று நிரப்பும் இரண்டு பெருவெளிகள். இங்குள்ள பிரபஞ்சத்தின் அழகுப்பெருந்தோற்றமும் அதை அறியும் ஞானத்தின் முடிவிலியும். அவையிரண்டும் ஆகி நின்றிருப்பது சக்தி. அப்பெண் ஆகி நின்றிருக்கும் அதற்கு ஆணாகவும் ஆகின்றது ஒன்று.  அவையனைத்தும் ஆகியபின் அவை ஊழியில் அழிந்து எஞ்சும் அண்டமாகிறது.

அவ்வாறு அறியவொண்ணாமை வரைச் சென்றபின் அதே விசையில் ஊஞ்சல் திரும்பி வருகிறது. அறியமுடியாமையும் ஓர் அறிவேதான். அந்த அறிதலாகி நின்றிருக்கும் எண்ணமும், அவ்வெண்ணத்தின் எழுத்தும் ஆகியிருக்கும் ஒன்று. அது எழுஞ்சுடர். பேரொளி. அரியும் நான்முகனும் அறியாத  அந்த நுண்ணொளி அக்கணமே அறியத்தக்க  தலைவன் என ஆகி நின்று தன் காலடிகளை கவிஞனுக்குக் காட்டுகிறது. ‘பணிகசிவம்’ என்கிறது.

மீண்டும் மீண்டும் வாசித்து பின் வெறுமே நூல்பக்கத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அறிவென அறிதரும் இங்குள்ள அனைத்திலும் இருந்து அறியமுடியாமை வரை. அங்கிருந்து தன்னை அறியத்தந்து நின்றிருக்கும் அடிகள் வரை. வானூஞ்சலாடிய பேரரங்கு நாவுக்கரசரின் உள்ளம்.

முந்தைய கட்டுரைதமிழ்வேள் உமாமகேஸ்வரனார்
அடுத்த கட்டுரைபுரூய்க்ஸ்மா , குறள்- கடிதம்