அஜிதன், மைத்ரி- கடிதம்

அன்புள்ள ஜெ

சீண்டுவதற்கான கேள்வி அல்ல இது. என்னைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் சொன்னதை சொல்கிறேன். இப்படி ஒரு கேள்விக்கான இடமிருக்கிறது. அஜிதனின் மைத்ரி நூலின் பின்னட்டையில் உள்ள குறிப்புகளை எழுதிய அ.முத்துலிங்கம், தேவதேவன், அபி அனைவருமே உங்களுக்கு நெருக்கமானவர்கள். உங்களால் கௌரவிக்கப்பட்டவர்கள். இது ஒரு கொடுக்கல் வாங்கல் என்று சொல்லலாமா?

மாதவ்

***

அன்புள்ள மாதவ்,

கொடுத்து, வாங்கி எதை அடைகிறோம். எங்கள் உலகுக்கு அப்பாலுள்ள, எங்கள் எழுத்துக்களின் அழகையும் ஆன்மிகத்தையும் எந்த வகையிலும் புரிந்துகொள்ளும் திராணி அற்ற, ஒரு வட்டத்தின் ஏற்பையா? அவர்கள் என்ன செய்தால் எங்களை ஏற்றுக்கொள்வார்கள்? எங்கள் எழுத்துக்களின் அழகையும் ஆன்மிகத்தையும் புரிந்துகொள்ளும் எங்கள் வாசகர்களிடம் நாங்கள் மேற்கொண்டு எந்த ஏற்பை அடையவேண்டும்?

நீங்கள் உங்கள் கேள்வியாக முன்வைக்கவில்லை, சரி. ஆனால் அக்கேள்வி எழும் சூழலில் இருந்தீர்கள் என்றாலே ஒரு கீழ்நிலை வம்புச்சூழலில் இருக்கிறீர்கள். எந்த ஒளியும் சென்றுசேரா இருள் அது. அறிவுச்செயல்பாடேகூட அந்த இருளுக்கு ஒருவரை இட்டுச்சென்றுவிடக்கூடும். எந்த இலக்கிய நுட்பத்தையும் அந்த உலகைச் சேர்ந்தவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கு இலக்கியமென்பதே ஒரு ஓயா வம்புச்செயல்பாடு மட்டுமே.

உங்கள் கேள்வி ஆத்மார்த்தமானது எனில் இதுதான் பதில். சிந்தித்துப்பாருங்கள். பத்துகோடிபேர் வாழும் தமிழ்ச்சமூகத்தில் ஏதேனும் வாசிப்பவர்களின் வட்டமென்பது சில லட்சம் பேர் அடங்கியது. அதில் பெரும்பாலானவர்கள் பக்தி, அன்றாட அரசியல் ஆகிய இரு களங்களைச் சேர்ந்தவர்கள். மிகச்சிறிய ஓர் உள்வட்டமே இலக்கியவாசகர்கள். அந்த இலக்கியவாசகர்களின் வட்டத்திற்குள் ஒரு மிகச்சிறிய வட்டம் என்பது இலக்கியத்தின் அழகியலையும், ஆன்மிகத்தையும் முதன்மையாக முன்வைப்பது. அந்த வட்டத்திற்குள் நான் செயல்படுகிறேன்.

அந்தச் சிறுவட்டத்திற்குள் உள்ள இன்னொருவரையே என்னால் முழுமையாக ஏற்கமுடியும், ரசிக்கமுடியும், முன்வைக்க முடியும். முன்வைப்பதே என் செயல்பாடு. அதையே செய்து வருகிறேன். அந்த வட்டத்திற்கு வெளியே உள்ள அரசியல், சமூகவியல் எழுத்துக்களையும் ; உத்திச்சோதனை முயற்சிகளையும் அவற்றின் இடத்தில் வைத்து மதிப்பிடவும் ஏற்கவும் செய்கிறேன். அவற்றையும் அடுத்தபடியாக முன்வைக்கிறேன். அறிவியக்கச் செயல்பாடென்பதே இதுதானே? ஒருவர் தன் தரப்பை முன்வைப்பது, அதன்பொருட்டு நிலைகொள்வது, அதை உருவாக்குவது.

ஆகவே எனக்கு தேவதேவனும் அபியும் அ.முத்துலிங்கமும் முக்கியமானவர்கள். ஏன் என விரிவாக எழுதியிருக்கிறேன். என் உள்ளமும் அவர்களின் உள்ளமும் ஒன்றென உணரும் உச்சப்புள்ளிகள் பல உள்ளன. அங்கே நான் அவர்களைக் கண்டடைவதுபோலவே அவர்கள் என்னையும் கண்டடைகிறார்கள். நான் அவர்களை முன்வைப்பதுபோலவே அவர்கள் என்னையும் முன்வைப்பார்கள். நாங்கள் ஒட்டுமொத்தமாக முன்வைப்பது ஓர் அழகியல்தரப்பை. ஓர் ஆன்மிகத்தரப்பை. ஓர் இலக்கிய மரபை.

எந்த அழகியல் வழியாக நான் தேவதேவனை கண்டடைந்து கொண்டாடுகிறேனோ அந்த அழகியல் வழியாகவே அவர் அஜிதனை கண்டடைகிறார். மைத்ரி அந்த உலகைச் சேர்ந்தது. அது கவிஞர்களின் நுண்ணுலகம் சார்ந்த படைப்பு. ஏதேனும் ஒரு காரணத்தால் அக்கண்டடைதலை அவர்கள் முன்வைக்கவில்லை என்றால்தான் அது பிழை.

அந்த அழகியலை, அது வெளிப்படும் நுண்களத்தை முற்றிலும் உணராத ஒருவர் வெளியே இருந்து கேட்கும் கேள்வியாகவே உங்கள் கடிதத்தை எடுத்துக் கொள்கிறேன். அதற்குரிய பதில் ஒன்றே, வாசித்துப் பாருங்கள். ஒருவேளை உங்களுக்கு அந்த அழகியல் பிடிகிடைக்கக் கூடும். அதன்பின் கேள்வி எழாது. அவ்வாறு அது பிடிகிடைக்க இயல்பான நுண்ணுணர்வு இருக்கவேண்டும். மொழி, இலக்கியவடிவம், தத்துவம், வாழ்க்கை சார்ந்த பயிற்சி கொஞ்சம் வேண்டும். அனைத்துக்கும் மேலாக உண்மையாக முயல்வதற்கான நல்லெண்ணம் வேண்டும். இந்த வம்புகள் முதலில் தகர்ப்பது அந்த நல்லெண்ணத்தையே.

உங்கள் கேள்வியின் சாரமாக அமைந்துள்ள ஓர் அறவீழ்ச்சி பற்றிச் சுட்டிக்காட்டவேண்டும். நம் காலகட்டம் உருவாக்கிய மாபெரும் கவியுள்ளங்களை, படைப்பாளிகளை நீங்கள் உங்கள் வம்பின் களத்திற்கு இழுக்கிறீர்கள். அவர்களை உங்களைப்போன்ற ஒருவராக எண்ணிக்கொள்கிறீர்கள். அவ்வாறு எண்ணிக்கொள்ளும் ஒருவர் என்றேனும் இலக்கியத்தைச் சென்றடைய முடியுமா?

ஜெ

மைத்ரி நாவல் வாங்க 

மைத்ரி மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைகுளச்சல் மு.யூசுப் கடிதம்
அடுத்த கட்டுரைதேவியும் மகளும் -கடிதங்கள்