அன்புள்ள ஜெமோ,
கடந்த இரண்டரை வருடங்களாக வெண்முரசு வாசித்து இன்றுடன் நிறைவடைந்தது. இந்த வாசிப்பனுபவத்தை விவரிக்க என்னால் சொல்கோர்க்க முடியவில்லை. ஆனாலும் இந்த அனுபவத்தை எங்களுக்கு அளித்த உங்களுக்கு நன்றி சொல்வதே இந்த கடிதத்தின் நோக்கம். நீங்கள் வெண்முரசு எழுத ஆரம்பித்த பொழுது அதை வாசிக்க முயற்சி செய்தேன், ஆனால் அப்பொழுது என்னால் உங்கள் எழுத்தை பின்தொடர முடியவில்லை. ஆனால் அதன் பின் உங்களின் பல நூல்களை வாசித்தேன், பல ஆசிரியர்களின் நூல்களை வாசித்தேன். 05-ஜூலை-2020 வெண்முரசு குரு பூர்ணிமா நாள் நிகழ்வுகளில் இணைய வழி மூலம் கலந்து கொண்டேன். அன்று வெண்முரசு வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டரை வருடங்கள், வேலை மாற்றம், குடும்பம் என பல சவால்கள் வந்தாலும் தொடர்ந்து வாசித்து இன்று முடித்தேன். நான் இது போல ஒரு உந்துதலுடன் தொடர்ந்து ஆண்டு கணக்கில் என் உழைப்பை அளித்தது, பொறியியல் முதுநிலை நுழைவு தேர்வுக்கு என்று நினைக்கிறேன். அதில் தோல்வி உற்று மனப்பிறழ்வு வரை சென்று திரும்பினேன். ஒரு விதத்தில் அந்த முயற்சியும் அந்த தோல்வியும் தான் என்னை இலக்கிய வாசிப்பு பக்கம் அழைத்து வந்து இங்கே நிறுத்தி உள்ளது.
வெண்முரசு ஆயிரக்கணக்கான நிகர் வாழ்வை வாழ வைத்துள்ளது. எத்தனை சிரிப்பு, கண்ணீர், வஞ்சம், நெகிழ்ச்சி. மகனாக பாண்டுவின் தோளில் ஏறி காட்டை சுற்றி இருக்கிறேன், திருதராஷ்டிரரின் பெருந்தோள்களில் விளையாடி இருக்கிறேன். அதே நேரத்தில் அவர்களாக ஆகி, ஒரு பெருத்தந்தையாகி மகிழ்ந்தும் துயருற்றும் இருக்கிறேன். பீமனின் சமையல், காதல், அர்ஜுனனின் காமம், கர்ணனின் நிமிர்வு அழகு, துரியோதனனின் நட்பு பாசம், தருமனின் அலைக்கழிவு, துரோணரின் கீழ்மை, துருபதனின் அழியா நெருப்பு, இளைய யாதவனின் ஞானம்… இன்னும் எத்தனை எத்தனை. இதில் எவர் பக்கம் அறம் உள்ளது என்பதை யாரும் கண்டறிய முடியாது. என்னளவில் நான் அதிகம் கண்ணீர் சிந்தியது துரியோதனனுக்காக.
தான் வளர்த்த பாண்டவர்களின் புதல்வர்களில் ஒருவரை கூட அவன் கொல்ல ஒப்பவில்லை… கிருஷ்ணையிடம் பரீக்ஷித் பாதுகாப்பாக இருப்பானா என்ற கேள்விக்கு “அவள் துரியோதனனின் மகள்” என்று பதில் கூறப்படுகிறது. இது போல இதில் வரும் ஒவ்வொரு கதை மாந்தர்களையும் அணுகி, விலகி பார்க்கலாம் அவர்களாக மகிழலாம், துயர் கொள்ளலாம், அல்லது ஒட்டுமொத்தகமாக இதற்கெல்லாம் என்ன பொருள் என்று மெய்வழி நோக்கி, இளைய யாதவனை நோக்கி செல்லலாம், அல்லது மீண்டும் மீண்டும் இதன் உள்ளேயே பல நிகர் வாழ்கையை வாழ்ந்து, அவர்களுடன் பாரதவர்ஷத்தை சுற்றி திரிந்து நிறைவடையலாம். ஒரே நேரத்தில், உலகின் அனைத்து வினைகளுக்கும் கேள்விகளுக்கும் பொருளையும், பொருளின்மையையும் பெற்ற உணர்வை வெண்முரசு வாசிப்பு ஏற்படுத்துகிறது.
நீங்கள் பலர் வெண்முரசை ஒரு முறைக்கு மேல் வாசிக்க மாட்டேன் என்று கூறியிருப்பதாக எழுதி உள்ளீர்கள். ஏன் நீங்களே, வியாசனனின் குரலாக அதற்கான காரணத்தையும் முதலாவிண்ணில் சொல்லி விட்டீர்கள். ஆனால் என்னளவில் நான் வெண்முரசுவில் இருந்து மீள்வேன் என்றோ, மீள வேண்டும் என்றோ தோன்றவில்லை. “இப்படி படித்து என்ன அடைந்தீர்கள்,” என்று என்னிடம் கேட்கும் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நான் சொல்வது ஒன்று தான். “இனி என் வாழ்நாள் முழுக்க என்னை ஒரு இருட்டறையில் அடைத்து வைத்தாலும், வெண்முரசின் ஒவ்வொரு கதை மாந்தரையும் மீட்டி மீட்டி, அதே இடத்தில் நிறைவான நூறு வாழ்வை என்னால் வாழ முடியும். வேறெதுவும் தேவையில்லை.“ என் வாழ்வில் இன்னும் இரண்டு முறையேனும் வெண்முரசை முழுமையாக படிக்கவேண்டும்.
இந்த பெரும் காவியத்தை அளித்த வியாசனின் பாதங்களை பணிகிறேன்.
நன்றி
பிரதீப்
***
அன்புள்ள பிரதீப்,
பலர் வெண்முரசை மீண்டும் மீண்டும் வாசிக்கிறார்கள். எட்டாண்டுகளாக அதிலேயே வாழும் பலரை நான் அறிவேன். அது செவ்விலக்கியங்களின் இயல்பு, அவை ஒன்றிலேயே அனைத்தையும் காட்டுபவை. பெருங்கோயில்களுக்கும் அவ்வியல்புண்டு. பலர் அவற்றிலேயே வாழ்ந்து நிறைவடைவார்கள்.
செவ்விலக்கியங்கள் அனைத்தையும் காட்டிவிடுகின்றன. அந்த அனுபவம் ஒவ்வொன்றையும் அவற்றின் இடத்தில் சென்றமையச்செய்கிறது. ஒட்டுமொத்தப்பார்வையை அளிக்கிறது. அது ஒரு முழு வாழ்க்கையையும் வாழ்ந்தமைந்த நிறைவை அளிக்கிறது.
எனக்கும்தான்
ஜெ
***