முதற்கனல் அன்னையரின் கதை

முதற்கனல் செம்பதிப்பு வாங்க

முதற்கனல் மின்னூல் வாங்க 

வெண்முரசின் முதல் நாவல் முதற்கனல்.ஆழமானது. செறிவானது. கலைடாஸ் கோப்பை திருப்பி பார்ப்பது போல நாவலை மீளமீள அணுகும் தோறும் வண்ணம் பல காட்டுவது.அவ்வாறு ஒரு கோணத்தில் அன்னையரின் கதையாக முதற்கனலை காண முயலுவது  இது.

அன்னையரை அவர்களிடமிருந்து வரப்போகும் தலைமுறைகளையும் சேர்த்துதான் மதிப்பிட வேண்டும்என்ற இந்நாவலின் வரியொன்றையே இதன் மையச் சரடாகக் கொள்ளலாம்.பல்வகைப் பட்ட அன்னையாளுமைகள்   ஊடும் பாவுமாக அஸ்தினபுரி அரசியலில் அதன் மூலம் பாரதவர்ஷத்திலும் நிகழ்த்துவனவற்றை காட்டுவதாக முதற்கனலைப் பார்க்கலாம் .அன்னையரின்  இயல்புக்கேற்ற அவர்களின் எண்ண நுண்வடிவம்  குழவியாக உருப்பெறும் தருணங்களை நாம் முதற்கனலில் மீளமீள காண்கிறோம் .

மானசாதேவி முதற்கனலில் வரும் முதலன்னை.நாகர்குலத் தலைவி மானசாதேவி ஆஸ்திகனின் தாய்.ஆஸ்திகன் ஆற்றும் பெருஞ்செயலுக்கான ஆதாரம்.ஜனமேஜயன் செய்யும் சர்பசத்ர வேள்வியால் சத்வகுணம் மேலோங்கி தமோ ரஜோ குணங்கள் இல்லாமலாகி பிரபஞ்சம் சமநிலை குலையும் நிலையை மாற்றுகிறான் ஆஸ்திகன்.

அப்பெருஞ்செயலுக்காகவே அவனை ஈன்றெடுத்து, அதற்கான கல்விகளை ஊட்டி வளர்த்து, அவன் ஆற்ற வேண்டியதை வழிகாட்டி அனுப்புகிறாள் அவள்.மானசாதேவியின் நுண்வடிவமான எண்ணம் ஆஸ்திகனின் பருவடிவ பெருஞ்செயலாக நிகழும் சித்திரத்தை முதற்கனலில் காண்கிறோம்.

பாரதக்கதை அறிந்ததிலிருந்து பெண்ணியத்தின் முகமாக நாம் பார்க்கும் அம்பையை ஒரு பேரன்னையாக முதற்கனலில் உணர்கிறோம்.மீளமீள வருணைகள் வழியாகவும், வேறுவேறு பாத்திரங்களின் கூற்றுகளின் வழியாகவும் எரிகழல் கொற்றவையாக பிரபஞ்சத்தின்

பேரன்னையாக பேருரு கொண்டெழுகிறாள் அம்பை. பாய்கலை ஏறிய பாவை போன்றவள் எனவே அறிமுகமாகிறாள்.

இடிபட்டெரியும் பசுமரம்போல சுருங்கி நெரிந்து துடித்த அவளுடலில் இருந்து சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலம் கிளம்பியது.’ என்று அவள் கொற்றவையாக மாறும் தருணத்தை கூறுகிறது வெண்முரசு.

அவள் நகரை நீங்கி புறங்காடுவழியாக சென்றாள்.அவளை அன்று கண்ட மிருகங்களும் பறவைகளும்கூட தலைமுறை தலைமுறையாக அவளை நினைத்திருந்தன. அங்குள்ள அத்தனை உயிர்களும்மா!’என்ற ஒலியைமட்டுமே எழுப்பின. பின்னர் கவிஞர் அதை மாத்ருவனம் என்று அழைத்தனர்.’ என்று வருணித்து செல்வது அவளை  ஆதியன்னை என நம்மை உணரச் செய்வது.

கூப்பிய கரங்களுடன் தன் முன் கண்மூடி குனிந்து அமர்ந்திருந்த விசித்திரவீரியன் தலைமேல் தன் கருகித்தோலுரிந்த காலைத் தூக்கி வைத்தாள். கண்ணீர் வழிய நடுங்கியபடி விசித்திரவீரியன் அமர்ந்திருந்தான். அவனுடைய அலைகடல்மேல் குளிர்நிலவு உதித்ததுஎன வரும் இடம் கொற்றவையில் வெளிப்படும் கனிவெனக் கொள்ளலாம்; பேரன்னையாக அஸ்தினபுரியிடம் அவள் காட்டும் பெருங்கருணை என்றும் ஒரு வகையில் சொல்லலாம்.

மற்றுமொரு வடிவில் சிகண்டியின் அன்னையாக அவளாகும் தருணம் வெண்முரசுக்கேயான தனித்துவத்துடன் கவித்துவத்துடன் முகிழ்கிறது.

அவன் பிம்பத்தை தன்னுள் வாங்கிச்சுருட்டிக்கொண்ட கிண்ணக்குமிழ் போல அவள் அவனை தன்னுள் அள்ளிக்கொண்டாள். மடியில் அதைப்பெற்று அள்ளி மார்போடணைத்து முலையூட்டினாள்

சிகண்டி அம்பையின் குழந்தையாகும் தருணமது.

கருவுறுதல் என்றால் என்ன? காமத்தால்தான் கருவுறவேண்டுமா, கடும் சினத்தால் கருவுறலாகாதா? உடலால்தான் கருவுறவேண்டுமா, உள்ளத்தால் கருவுறலாகாதா?”’ என்று தொடங்கும் அக்னிவேசரின் கூற்றின் மூலம் தந்தையைக் கொல்ல விழையும்  அக்கணமே காலமாக ஆகிய மைந்தன் என சிகண்டியைக் காட்டுகிறது முதற்கனல்.

பேரன்னையாக விளங்கும் கொற்றவையாகவும்,பீஷ்மரைக் கொல்ல பிறப்பித்த சிகண்டியின் அன்னையாகவும் இருமுக அன்னையாக அம்பையைக் காண்கிறோம். ஆனால் உர்வரையாக பீஷ்மரையே காக்க முனையும் அன்னையின் மற்றுமொரு மூன்றாம் முகத்தையும் நுட்பமாக காட்டிச் செல்கிறது முதற்கனல்.

பிறப்பால் மச்சர்குலத்தவளான சத்யவதி விழைவால் ஒரு தூய சத்ரிய அன்னையாக பேருரு கொள்வது முதற்கனலில் நிகழ்கிறதுமுழுத் தகுதி கொண்ட தேவவிரதனை வனத்திற்கு அனுப்பி தன் குருதியினரை முன்னிறுத்தும்  அவளின் ஆளுமை நாவலுக்குள்ளேயே இராமனை காட்டுக்கு அனுப்பி பரதனை நாடாளச் செய்த கேகய அரசியுடன் ஒப்புநோக்கப் படுகிறது. சத்யவதியின் மனநிலையின் மூன்று தருணங்கள் எவ்வாறு மூன்று வேறு வேறு ஆளுமை கொண்ட வியாசர்,சித்ராங்கதன், விசித்திரவீர்யன் என்ற மூன்று மைந்தர்களாக உருவாகுகிறார்கள் என்பது வாசிக்குந் தோறும் நமக்குள் ஆழமாக விரிவது.

தன் குருதி மண்ணாள வேண்டுவதற்காக அவள் இயற்றும் ஆணைகளை காட்டிக் கொண்டே செல்கிறது முதற்கனல்.

விசித்திரவீர்யன் பகடியாக சொல்லும் ஓரிடம்அன்னையே, இந்தக் கோடைகாலத்தில் இன்னும் சற்று காற்றுவீச நீங்கள் ஆணையிடலாமே”  ஆணைகளால் எவ்வாறு அஸ்தினபுரியை நடாத்தி செல்கிறாள் எனக் காட்டுவது அது.பிடித்தமான மைந்தனாகிய பரசுராமனால் கொல்லப்பெறும் அன்னை  ரேணுகையின் கதையையும் பிடித்த சித்ராங்கதனின் இறப்புக்கு காரணமாகும் சத்யவதியையும் உடன்நிறுத்தி முதற்கனல் நமக்கு காட்டும் சித்திரம் சத்யவதி எவ்வாறு பெருவலிவுடைய கொல்வேல் பேரரசப் பேரன்னையாக திகழ்கிறாள் என்பதே.

சத்யவதியின் எதிர் முனையாக கங்கையைக் காணலாம். மச்சர் குலத்திலிருந்து எழுந்து வந்து அஸ்தினபுரியின் அரியணையமர்ந்து பாரதவர்ஷத்தையே ஆளும் பெருவிழைவு  கொண்ட மனவலிவும் திறனும் கொண்ட அரசன்னையாக சத்யவதியைக் காண்கிறோம்.கங்கையோ தான் பிறந்த மலைநாட்டையும் கங்கையையும் கடக்க முடியாதவளாக வருகிறாள்.காளிந்தியின் வண்ணம் கொண்டவள் சத்யவதியென்றால் கங்கையின் வண்ணம் கொண்ட  தெய்வத்தன்மை  கூடிய பெண்ணாக வரும் கங்கை மலைநிலத்திற்கும் சமநிலத்திற்கும் இடையே ஊசலாடும் அன்னையாக பரிணமிக்கிறாள். இழந்த குழந்தைகளை சுமந்து கொண்டே பரிதவிக்கும் கங்கையின் மைந்தன் தேவவிரதன் அன்னையைப் போலவே தன் உடன் பிறந்தோரை தோளிலிருந்து இறக்க இயலாதவராய் காண்கிறோம்.கங்கையின் தத்தளிப்பும் ,ஏழு குழந்தைகளை இழந்த பெரும்  பாரமும் ,மலைநாட்டுக்குரிய அவளின் வெல்லவியாலா பெரு உடல் வலிமையும் பீஷ்மர் என்ற மைந்தனின் உருப்பெறுகிறதெனலாம்.

சூரியனில் தகிக்கும்  சிபி நாட்டு சுனந்தை சூரியஒளியை விலக்கும் தேவாபிக்கு அன்னையாகும் விந்தையைக் காட்டுகிறது முதற்கனல். சுதந்திரமாய் சுற்றியலைந்த சிபிநாட்டு இளவரசி கட்டுண்ட அஸ்தினபுரியின் அரசியாக நேரும்போது அவளைடையும்  மூன்று மனநிலைகள் தேவாபி சாந்தனு பால்ஹீகன் என மூன்று மைந்தராகும் பரிணாமத்தை  நாவல்  காட்டி விரிந்து செல்கிறது.

விசித்ரவீர்யனில் தான் விழையும் பெருவலுவை ஏற்றிப் பார்க்கும் நுண்தருணத்தை திருதராஷ்டிரன் என்ற மைந்தனாகப் பெற்றெடுக்கிறாள் அன்னையாகிய அம்பிகை.தனது குழந்தைமையால் களித் தோழனாக, கைப்பாவையாக விழையும் கணவனின் உருவையே பாண்டு என்னும் மைந்தனாகப் பெறுகிறாள் அன்னை அம்பாலிகை.

காவியங்கள் கற்ற சிவை காவியமியற்றும் ஒருவருடனேயே இணையப் பெறும் வாய்ப்பை  பொற்தருணமாக்கி நிறைமதியின் பூரண அறிவுடைய மைந்தனைப் பெற்றெடுக்கும்   அன்னையாகிறாள் .

ரஜோ,தமோ, சத்வ மூன்று குணங்களின் தருணத்தை அம்பை,அம்பிகை,அம்பாலிகை என்ற மூன்று தேவியரைப் பெறும் புராவதி அன்னை. அம்பை நிலையெண்ணி அவள் சிதையேறும்  வரை அன்னையின் தூய பேரன்பை அவளில் உணரலாம்.

இவ்வாறு அன்னையரின் நிரையையும்,அவர்களின் மக்களின் நிரையுமே முதற்கனலாகக் காணும் தருணத்தில், மானசா தேவியை விசாலாட்சியன்னையாகவும் ஜெயமோகனை ஆஸ்திகனாகவும் காணலாம். அன்னையின் நுண்விழைவே மைந்தனின் வெண்முரசென்னும் பருவடிவம் எனலாம்.

சிவமீனாட்சி செல்லையா

முந்தைய கட்டுரைதமிழவன் -தமிழ்ச்சிந்தனையின் மடிப்புமுனையில்…
அடுத்த கட்டுரைபாகுலேயன்பிள்ளை,நான்,அஜிதன் – கடிதங்கள்