அன்புள்ள அய்யா,
மிக அருமையான பட்டியல். குறிப்பாக சரத் சந்திர சட்டர்ஜி எழுதிய நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்பு நூல்கள் விபரம்.நானும், என் தாயாரும் சரத் சந்திர சட்டர்ஜி எழுத்துக்களின் ஆத்மார்த்த வாசகர்கள்.” அமுல்யன் ” என்ற அவருடைய குறு நாவல் நாங்கள் இருவரும் மீண்டும் மீண்டும் அனுபவித்து படித்து மகிழ்கின்ற பொக்கிஷம்.
குழந்தை தன் சித்தியை அம்மா என்றும்,தன் சித்தப்பாவை சித்தப்பா என்றே அழைப்பதும்,தன் சொந்த தாயை அக்கா என்றும்,தான் தகப்பனை அப்பா என்றே அழைப்பதும்,நம் மரபின் உன்னத காட்சிப் படுத்தல்.எளிய சிறிய குடும்பக் கதைதான்.ஏழை பெரிய மருமகள்,வசதியான , குழந்தை பேறு அற்ற, மூத்தவள் குழந்தையை ,மிக ஆசை ஆசையாக வளர்க்கும்சின்ன மருமகள் என்று சாதாரண மக்களின் கதைதான்.ஆனால்மிக நேர்த்தியான சொல் ஓவியம்.இந்த நூலை படித்த பின்தான் ஏன் சரத் சந்திர சட்டர்ஜி, மறைந்து 85 ஆண்டுகள் சென்ற பின்னும், இன்றும் கொண்டாடப் படுகின்ற அதிசயம் புரிகின்றது.
நான் 1970 – 80 காலத்தில்,திருச்செங்கோடு அரசாங்க நூலகத்தில் படித்த ஒரு அருமையான நூல் நினைவுக்கு வந்தது. சரத் சந்திர சட்டர்ஜி எழுதிய ” பதேர் தாபி ” நமது இந்திய சுதந்திரப் போராளிகள் சிலர் பர்மாவில் வாழ்ந்த கதைப் பின்னணி.தமிழ் மொழி பெயர்ப்பு செய்தவர்அ. கி. ஜெயராமன் என்று நினைவு.தமிழ் புத்தகத்தின் பெயர் ” வழி வேண்டுவோர் அல்லது பாரதி “இந்த புத்தகம் எங்காவது கிடைத்தால், மொழி பெயர்ப்பு என்பது ஒரு அற்புதமான கலை என்பது மக்களுக்கு புரியும்.கடந்த 30 ஆண்டுகளாக இந்த புத்தகத்தை தேடி வருகிறேன்.கிடைக்கவில்லை.அல்லையன்ஸ் பதிப்பகத்துக்கு அவசியம் மறுபதிப்பு செய்ய வேண்டும் என்று அன்புடன் கோரிக்கை வைத்துள்ளேன்.இன்னும் காரியம் சித்தியாகவில்லை.அதற்கான முகூர்த்தம் வர வேண்டும் அல்லவா !
அன்புடன்.
இரா சி தனசேகர்.
***
அன்புள்ள தனசேகர்
நாம் நூல்களை கேட்டுக்கொண்டே இருந்தால் அவை எப்படியும் அச்சில் வெளிவந்துவிடுமென நினைக்கிறேன்.
இப்போது சாகித்ய அக்காதமி வெளியிட்டுள்ள பல நூல்கள் தாங்கமுடியாத அச்சுப்பிழைகளுடன் உள்ளன (உதாரணமாக ஆரோக்கிய நிகேதனம்) மெய்ப்பு பார்க்கப்படவே இல்லை, அதற்கு நிதியளித்து நியமிக்கப்பட்டவர் அப்படியே திருப்பிக்கொடுத்து காசை எடுத்துக்கொண்டுவிட்டிருக்கிறார்.
சாகித்ய அக்காதமி வெளியீடுகளில் தீஸ்தா நதிக்கரையில், துருவன் மகன் இரு நாவல்களையும் நல்ல இலக்கியவாசகர் வாங்கி படிக்கவேண்டும் என நினைக்கிறேன்
ஜெ