சில பதிப்பகங்கள்

இந்த புத்தகக் கண்காட்சியில் பொதுவாக அறியப்பட்ட பதிப்பகங்களை நாடிச்சென்று நூல்கள் வாங்கும்போதே  சில அறியப்படாத பதிப்பகங்களையும் கருத்தில்கொள்ளவேண்டும். அதில் ஒன்று அழிசி பதிப்பகம். க.நா.சுவின் புதிய நூல்களை தொடர்ச்சியாக மறுபதிப்பு செய்து வருகிறது அது. இந்நூல்கள் ஏன் முக்கியம் என்றால், இவற்றில் பல இன்னும் மற்றொரு அச்சாக வெளிவர நீண்டகாலமாகும் என்பதனால்தான். (க.நா.சுவின் புதிய நூல்கள்- அழிசி பதிப்பகம்) ஓர் இளம் வாசகனுக்கு இந்நூல்களில் படித்திருக்கிறீர்களா மிக முக்கியமான ஒரு நூல். அந்த நூல் உண்மையில் ஒரு பட்டியலாக நீண்டகாலம் இலக்கியச் சூழலில் புழங்கியது. நவீனத்தமிழிலக்கியத்திற்கான முதன்மைநூல்களை அதுவே தொகுத்துக் காட்டியது. பின்னர்தான் அந்த பட்டியலை ஒட்டிய கட்டுரைகளை க.நா.சு. எழுதினார். (அழிசி பதிப்பகம்) (கடை எண் 214, 215)

 

இலக்கியவாசகர்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் தவறவிடக்கூடாத இன்னொரு பதிப்பகம் யாவரும். இன்று யாவரும் பதிப்பகம் இளம்படைப்பாளிகளின் தொகுப்புகளை வெளியிடுகிறது. பொதுவாக குறைவான பிரதிகளே அவை அச்சிடப்படுகின்றன. வேறு பதிப்பகங்கள் வெளியிடும் இளம்படைப்பாளிகளின் நூல்களும் யாவரும் பதிப்பகத்தில் கிடைக்கும். இலக்கியத்தில் ‘இன்று’ என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று அறிய விரும்புபவர்கள் அந்நூல்களை தேடி வாங்கியாகவேண்டும். (யாவரும் பதிப்பகம்) (கடை எண் 214,215)

இன்னொரு பதிப்பகம் சீர்மை. (சீர்மை பதிப்பகம்) அராபிய, இஸ்லாமிய இலக்கியங்களை தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்து வெளியிடுகிறார்கள். தமிழில் அரிதாகவே மொழியாக்கங்களை நம்பி வாங்க முடியும். சீர்மை நூல்கள் எவையும் இன்றுவரை என்னை ஏமாற்றியதில்லை. (கடை எண் 301)

நூல்வனம் பதிப்பகம் அச்சுநிபுணர் மணிகண்டனால் நடத்தப்படுவது. மிக அழகிய பதிப்புகளாக நூல்களை வெளியிட்டு புகழ்பெற்றது. எம்.கோபாலகிருஷ்ணனின் மொழியாக்கத்தில் ஆண்டன் செகாவ் கதைகளை வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு யுவன் சந்திரசேகரின் பெயரற்ற யாத்ரிகன் என்னும் ஜென் கவிதைகளின் தொகுதியை ஆறு வண்ணங்களில் ஆறு வகை அட்டைகளுடன் வெளியிட்டுள்ளது. (கடை எண் 265)

முந்தைய கட்டுரைசீனலட்சுமி- கடிதம்
அடுத்த கட்டுரைகொஞ்சம் அறபியில், மிச்சம் தமிழில் – ஆக மொத்தம் உலக இலக்கியம்- கொள்ளு நதீம்