மூச்சே நறுமணமானால்
பெருந்தேவி, தமிழ் விக்கி
ஒரு விசித்திரமான நிகழ்வு வழியாக நான் அக்கமகாதேவியை கண்டடைந்தேன். ஜெயமோகனின் ‘குமரித்துறைவி’ நாவலை நான் 2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படித்துக்கொண்டிருந்தேன். 14-ஆம் நூற்றாண்டில் மதுரையை சுல்தானிய ஆட்சியிலிருந்து மீட்ட நாயக்க சாம்ராஜ்யத்தின் பேரரசியான கங்கம்மா தேவி அந்த நாவலில் ஒரு கதாபாத்திரம். குமரியில் வாசமிருக்கும் மீனாட்சியம்மையை மதுரையின் அப்பனான சுந்தரேசுவரனுக்கு மணம் முடித்து, அம்மையை மதுரைக்கு அழைத்து வர சம்மதித்து அவள் எழுதும் ஒரு மடல் நாவலில் இடம்பெரும். மனதைப் பெருமளவில் நெகிழச்செய்யும் கடிதம் அது. திருமணத் தாக்கலுக்கு சம்மதம் தெரிவித்து அவள் பிள்ளையை பெற்றவளின் இடத்தில் நின்று எழுதியாக வேண்டியது. ஆனால் இங்கே பிள்ளையோ பரமசிவன்.
அந்தக் கடிதத்தில் அவர் தன் பெயரை ‘சிவதாசி‘ என்று கையொப்பமிட்டிருப்பார். அந்த தருணத்தில் உணர்ச்சியினாலோ என்னவோ, ‘சிவதாசி’ என்ற வார்த்தை என்னை பெருமளவில் ஆட்கொண்டது. அந்த வார்த்தையின் பிச்சித்தனம் தான் காரணம். அந்த சொல்லை நான் பின்தொடர்ந்து சென்றேன். வரலாறு வழியாக நம்மிடம் வரும் கங்கம்மா தேவி ‘சிவதாசி‘ என்ற பதத்திற்கு உரியவரா என்று நம்மால் உறுதியாக ஏதும் சொல்ல முடியாது. அது வரலாற்றின் எல்லை. ஆனால் சிவதாசி என்ற வார்த்தை மரபு வழியாக உருவாகி வந்துள்ளதென்றால் அதன் ஊற்று எங்கேயோ இருந்தாக வேண்டும். அப்படித்தான் நான் கங்கம்மா தேவின் பூர்வீக நிலத்தில் அத்து அலைந்த சிவதாசியான அக்கா என்ற அக்கமகாதேவியை கண்டடைந்தேன்.
அக்கமகாதேவி தமிழின் பக்தி மரபில் வந்த காரைக்கால் அம்மையாருக்கு நெருக்கமானவர். 12-ஆம் நூற்றாண்டில் இன்றைய கர்ணாடக மாநிலத்தின் சிவமொக்காவுக்கு அருகே பிறந்தார். இளம் வயதிலேயே தன்னை சிவ பக்தையாக உணர்ந்த அக்கமகாதேவி திருமணத்தை துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அலைந்து பயணித்தார். ஆடைகள் இல்லாமல், தன்னுடைய நீண்ட கூந்தலாலேயே உடலை மறைத்தவாரு இவர் பயணித்ததாக அந்த காலகட்டத்து பாடல்கள் இவரை வர்ணிக்கின்றன. வீரைசைவ மரபைச் சேர்ந்த குருமார்களான அல்லம்மபிரபுவையும் பசவரையும் சந்தித்தார். இம்மூவரும் கன்னட மொழியில் ‘வசனம்‘ என்று சொல்லப்படும் ஒரு வடிவில் சிவனை அடைய வேண்டி தங்கள் பரிதவிப்பை பக்திக்கவிதைகளை எழுதினார்கள். அதில் அக்கமகாதேவியின் கவிதைகள் தனித்துவமானவை, புகழ்பெற்றவை. பாவியல்பு தன்மையும் தத்துவார்த்தத் தன்மையும் கொண்ட கவிதைகள் இவை. பித்து நிறைந்தவை.
சிவதாசியான அக்கமகாதேவியை அவருடைய வசனங்களின் ஆங்கில மொழியாக்கம் வழியாக நான் கண்டடைந்து இது தமிழில் வரவில்லையா என்று தேடிக்கொண்டிருந்த நாட்களில் தற்செயலாக ஒரு நாள் கவிஞர், மொழிபெயர்ப்பாளர் பெருந்தேவியிடம் பேச நேரிட்டது. அவர் அப்போது அக்காவின் வசனங்களை தமிழில் மொழியாக்கம் செய்துகொண்டிருப்பதாக சொன்னது எனக்கு தற்செயலென்று இப்போது தோன்றவில்லை.
அக்கமகாதேவியின் வசனங்களை பெருந்தேவி ‘மூச்சே நறுமணமானால்‘ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 2022 முற்பகுதியில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னால் தமிழில் இருவர் அக்காவை மொழியாக்கம் செய்திருப்பதாக தன் முன்னுரையில் கூறும் பெருந்தேவி, அவை பக்தி மனநிலையில் செய்யப்பட்ட மொழியாக்கங்கள் என்றும், தானோ கவிதையின் பக்கம் நின்று தன்னுடைய மொழியாக்கங்களை நிகழ்த்தியதாகவும் கூறுகிறார். ‘இறை என்பது மொழியானால் அது கவிதையாகவே இருக்கும் என்று நம்புபவள்‘ என்று தன்னை பற்றிக் கூறும் பெருந்தேவி, இந்த நூலில் நமக்கு வழங்குவது நவீனமான மொழியில், பாவியல்புடைய கவிதைகளை வாசிக்கும் பரவசம்.
‘மூச்சே நறுமணமானால்‘ முதன்மையாக ஒரு கவிதை நூல். தமிழ் பக்தி கவிதைகளையும், அதற்கு முன்னால் வந்த சங்கக் கவிதைகளையும் நினைவு படுத்தும் வகையில் இருப்பவை அக்காவின் வசனங்கள். அந்த மரபின் தொடர்ச்சி துலங்கும் வகையில் அதே சமயம் கவிதையின் சுவை குன்றாமல் அக்காவின் வசனங்களை கவனத்துடனும் மொழிபிரக்ஞையுடனும் மொழியாக்கம் செய்திருக்கிறார் பெருந்தேவி.
மின்னல் மின்னுகையில்
அடங்குகின்றன என் பசியும் தாகமும்
முகில் கிழிந்து பொழிகையில்
நீராடுகிறேன் தீர்த்தத்தில்
மலை என் மீது விழுந்தால்
மலரென்கிறேன் அதை
சென்னமல்லிகார்ச்சுனனே
என் தலை வெட்டுப்பட்டு விழுந்தால்
என் உயிர் உனக்கு அர்ப்பணம்
இந்தக்கவிதையில் மின்னல், மழை, இடி என்று உயிர்ப்புடன் வரும் சித்திரங்கள் ஒரு சங்ககால பாடலின் இயற்கை வர்ணனையாகவும், யோக–பக்தி மரபில் சூட்சமமான ஓர் அனுபவத்தை உணர்த்தும் வரிகளாகவும், ஒரு பெண்ணின் தாபத்தைச் சொல்லும் காதல் கவிதையாகவும் ஒரே சமயம் த்வனிக்கின்றன.
வெவ்வேறு உணர்வு நிலைகளும் கூறு முறைகளும் கொண்ட கவிதைகள் இந்நூலில் இடம்பெருகின்றன. சில வரிகள் சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு கூர்மையானவை. அவள் வழிபடும் ஶ்ரீசைலத்தில் கோயில் கொண்ட சிவனான சென்னமல்லிகார்ஜுனனை இப்படி கடிந்துகொள்கிறாள்:
சந்தை மத்தியில் வீடு கட்டி
கூச்சலுக்கு நாணுகிராய் எப்படி?
கேள் சென்னமல்லிகார்ச்சுனனே
உலகில் பிறந்த பின் புகழ இகழப்பட்டால்
கோபப்படாமல் சமாதானியாக இருக்க வேண்டும்.
சில வரிகள் நவீனக்கவிதை வரிகளைப்போல் ஒலிக்கின்றன.
உன்னை அறியும் நரகமே மோட்சம்
உன்னை அறியாத மோட்சமே நரகம்
மூச்சே நறுமணமானால் யாருக்கு பூ வேண்டும்?
மேலும் சில வரிகளின் துணிவு எந்த நவீனக் கவிதையிலும் இதுவரை நான் காணதவை:
நல்ல பெண்ணாகக் குளிப்பாட்டுவேன்
சாந்தத்தோடு பூசிப்பேன்
ஒத்திசைவோடு உன்னில் கலப்பேன்
சென்னமல்லிகார்ச்சுனனே
உன்னை விட்டகலாமல்
வழிபடச் சாத்தியமானது எனக்கு.
அக்கமகாதேவியின் இந்தக் கவிதைகளை பெருந்தேவி மொழியாக்கம் செய்த விதம் சுவாரஸ்யமானது. நாராயண குரு மரபைச் சேர்ந்த வினைய சைதன்யா என்ற குரு அக்கமகாதேவியை கன்னட மூலத்திலிருந்து மலையாளத்துக்கும் ஆங்கிலத்துக்கும் மொழியாக்கம் செய்தவர். வினைய சைதன்யாவின் ஆங்கில மொழியாக்கம் மிகச்சிறப்பானது. ஒரு நீண்ட முன்னுரையில் வினையா தான் சென்னமல்லிகார்ச்சுனன் என்ற பெயரை ஆங்கிலத்தில் Chennamallikarjuna, jasmine-tender என்று மொழியாக்கம் செய்ததன் பின்னணியை விவரித்திருப்பார். மல்லிகையின் மென்மையும் அர்ஜுணனின் திண்மையும் ஒருங்கே அந்தப்பெயரில் ஒலிக்க வேண்டும் என்று வினையா கருதுகிறார். வினையாவின் ஆங்கில மொழியாக்கத்தை அடிப்படையாகக்கொண்டே பெருந்தேவி தமிழில் இக்கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆனால் தமிழில் மல்லிகையும் அர்ஜுணனும் நேரையாகவே பொருள் கொள்கிறது என்றும், சென்ன என்ற பிரியமான விளி தமிழில் ‘சன்ன‘மாக ஒலிக்கிறதென்றும் பெருந்தேவி கூறுகிறார். ஆகவே அக்காவின் மொழியிலேயே ‘சென்னமல்லிகார்ச்சுனன்’ என்று அவள் நாதனை தமிழுக்குக் கொண்டு வருகிறார். ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டாலும், வினைய சைதன்யாவின் உதவி கொண்டு வசனங்களை கன்னட மூலத்தில் வாசிக்கக் கேட்டு, அவற்றின் ஒலி அடிப்படையில் தமிழாக்கம் செய்திருப்பதாக கூறுகிறார்.
இந்த அரிய கவிதைத் தொகுப்பு தமிழுக்கு முக்கியமான வரவு. ஆனால் முற்றிலும் நவீன வரவல்ல. தமிழும் கன்னடமும் வெவ்வேறு மொழிகளாக இருந்தாலும் அதன் மொழிப்பண்பாட்டிலும் கலாச்சார உணர்விலும் எத்தனை அணுக்கமானவை என்று இக்கவிதைகள் மீண்டும் மீண்டும் பறைசாற்றுகின்றன. அலையும் சிவதாசிகளுக்கு நிலமில்லை, மொழியுமில்லை.