.
சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இம்மாதம் வெளியிடப்படுகிறது. இவரின் சிறுகதைத் தொகுப்பு ‘கனாத்திறமுரைத்த காதைகள்’, 2018 ஆம் ஆண்டில் முதல் சிறுகதை தொகுப்பு க.சீ.சிவக்குமார் நினைவு விருதையும் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான த.மு.எ.க.ச. விருதையும் பெற்றிருந்தபோதும் கொரோனா கால சிறுகதை அலையினால் வாசகர்களின் கவனத்தை இவரால் பெற முடியாது போனது என்றே நினைக்கிறேன். சிறுகதை எனும் கூரிய வடிவத்திற்குள்ளேயே மிக நிதானமாக கதை சொல்லும் இவர் சிறுகதைகளை எழுதுவதிலும் மிக நிதானமாகவே செயல்பட்டிருக்கிறார்.
சித்ரனின் படைப்பு மனம் இரு விதமாக இயங்குகிறது. ஒன்று தன் வாழ்விற்கு மிக நெருக்கமான அல்லது முற்றிலும் யதார்த்த உலகில் நடக்கச் சாத்தியமான சம்பவங்களில் சற்றே புனைவு கலந்து சிறுகதைகளை படைக்கிறார். இக்கதைகளின் அடியாழத்தில் ஒரு அமானுஷ்யமான தீவிரம் குடிகொண்டிருந்தாலும் யதார்த்தவாத தொனியைத் தொட்டுச் செல்கிறது இவரின் எழுத்து நடை. உதாரணமாக, ‘பெரியப்பா’ எனும் சிறுகதையில் ஒரு நாயின் கண்கள் அநாதிக் காலம் முதல் தொடரும் நன்றியையும் வஞ்சத்தையும் மன்னிப்பையும் தாங்கி நிற்கிறது. ஆனால் கதைக்குள் பொதிந்திருக்கும் ஆழத்தை எந்த விதத்திலும் வெளிக்காட்டிக்கொள்ளாத பாவனையில் புனைவு மொழி அமைந்திருக்கிறது. மற்றொரு விதமான கதைகள், முழுக்க கற்பனையினாலும் அணிகளையேற்ற மொழியினாலும் சிறுகதை என்ற கட்டுமானத்திற்குள் அடங்காமல் விரிந்து விரிந்து சென்றுகொண்டே இருக்கின்றன. இக்கதைகளில் உலவும் மர்மங்களும் அதனூடாக இயல்பாகவே வெளிப்படும் சுவாரசியமும் முக்கிய கூறுகளாக நிலைத்துவிடுகின்றன.
மிக நிதானமாகச் சம்பவங்களை அடுக்கிச் சொல்லும் போக்கையும் பொறுமையாகவே கதைகளை எழுதி வெளியிடும் தன்மையையும் வைத்தே தயங்கித் தயங்கிக் கதை சொல்லும் சித்ரனின் மனதை ஒருவாறு ஊகித்துவிடலாம் என்று தோன்றுகிறது. வெடித்துச் சொல்லக்கூடிய நகைச்சுவைக்கான சாத்தியம் இருந்தாலும் மெல்லிய கோணல் சிரிப்போடுதான் கதைக்குள் அவற்றை வெளிப்படுத்துகிறார். ஆனால், சத்தமில்லாமல் அவரின் சிறுகதைகளுக்குள் ஒளிந்திருக்கும் நகை முரண்களே அக்கதைகளுக்கான பலமாக இருக்கிறது. ‘ஒரு வழிப்போக்கனும் அவனது வழித்துணையும்’ எனும் சிறுகதையில் பணப் பிரச்சினையால் வேறொருவனின் ஈர்ப்புக்கு தன் மனைவியை இழந்தவன் அத்தனை ஆண்களின் பெண் ஈர்ப்பையே மூலதனமாக்கி தன் பணத் தேவையைப் பூர்த்தி செய்கிறான். எந்த முன் முடிவுகளும் இல்லாமல் இக்கதை அடிப்படை இச்சை ஒருவனுக்குப் பணத்தை ஈட்டித் தரும் வித்தையை இயல்பாக விவரிக்கிறது. குற்ற உணர்வே இல்லாமல் இப்படி பணம் பறிப்பவனும் கூட இச்சைகளின் தீவிரத்திலிருந்து முற்றிலும் விலகியவனாகத்தான் இருக்கிறான். அதுவே எந்த பிணக்கும் இல்லாமல் தன் மனைவியை இப்போதும் கூட எதிர்கொள்ளக்கூடியவனாக அவனை வைத்திருக்கிறது.
இத்தொகுப்பிலிருக்கும் மற்ற சிறுகதைகளும் உடல் வேட்கையும் அது இயற்கையுடன் நேரடியாகக் கொள்ளும் உறவையும் தொட்டுப் பேசுகிறது. பெண்களின் மீது ஈர்ப்பற்ற ஒருவனின் உடல் தீ பற்றியவுடன் பால் மாறுகிறது. மற்றொரு கதையில் பின்னாளில் சித்தனாகிப் போகும் ஒருவன் ஃ என்ற பாறை அமைப்பின் மீது நிர்வாணமாகக் கிடப்பதையே ஏகாந்தமாக எண்ணுகிறான். வரதன் என்ற சாகசக்காரனின் ஆடு திருட்டும் பெண் திருட்டும் பதின் பருவ நினைவுகளாக ஒரு கதையில் விரிகிறது. இப்படி சித்ரனின் சிறுகதைகளில் பெண் வேட்கை ஊமை வலியைப் போலத் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வேடிக்கையான புறச் சித்தரிப்புகளினால் முகமூடியிட்டு திரிகிறது.
கூர்மையாகச் சொல்ல வேண்டிய கதைகளில் கூட சம்பவங்களின் குவிப்பு சிறுகதையின் தாங்கு சக்தியை மீறிய எடையைக் கூட்டுகிறது. அனைத்தையும் கூறிவிடும் ஆர்வமும் ஆனால் அதை மிக நிதானமாக விவரிக்கும் விதமும் நாவலின் ஒரு பகுதியை வாசித்துக்கொண்டிருப்பதாய் தோன்றச் செய்துவிடுகிறது. உண்மையில் சித்ரனுக்கு நாவல் வடிவம்தான் உகந்ததாக அமையக்கூடும். இத்தொகுப்பில் கிட்டத்தட்ட அறுபது பக்கங்களுக்கு நீளும் ‘பொற்பனையான்’ எனும் நீள் கதையே இதற்கு உதாரணம். இக்கதை வரலாறும் மிகை புனைவும் முயங்கி நீளும் அதே வேளையில் இருவேறு மரபுகள் பொருந்திப் போகும் ஒற்றைக் கூறு ஒன்றை மிக சன்னமாக நூல் பிடித்துக் காட்டுகிறது. ரசவாதம் எனும் மந்திர விளையாட்டு எக்காலம் தொட்டும் கதைகளின் சுவாரசியத்தைக் கூட்டக் கூடியது. ஆனால் அந்த அம்சம் சில தலைமுறைகளாக, பல்வேறு பொற்பனையாளன்களின் ஊடாகச் சொல்லிச் செல்லும்போது அதன் முடிவை நோக்கிய கவனத்தைச் சற்றே சிதறச் செய்யும் அளவிற்கு விவரணைகளும் மொழி விளையாட்டுகளும் அமைந்துவிடுகின்றன. இருப்பினும், சித்ரன் கட்டியெழுப்பும் ஒரு புனைவுலகம் இன்னும் கூட நீண்டு ஒரு நாவலாக உருப்பெறுவதற்கான சாத்தியத்தையே கொண்டிருக்கிறது. இதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, ஐந்து குறுங்கதைகளை இத்தொகுப்பில் இணைத்திருக்கிறார். விளையாட்டாக, ஒரு ஸ்மைலியுடன், அவை உண்மையில் சிறுகதையாக நீள்வதற்கான சாத்தியங்களை கொண்டனவாக இருக்கின்றன என்று சொல்லலாம்
மேலும், சித்ரனின் சிறுகதைகள் பல்வேறு இழைகள் முளைத்து வளரும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. வாசகன் எந்த இழையைப் பற்றிக்கொள்வது என்ற பதற்றத்தை ஒரு சிறுகதை அளிக்கும்போது அது தன் கூர்மையை இழந்துவிடக் கூடும். அத்தனை இழைகளையும் விவரித்துச் சொல்லத் துவங்கும்போது அது நாவல் வடிவை நோக்கிப் பயணிக்கத்தொடங்கி விடுகிறது. இவ்விரண்டிற்கும் இடையே சித்ரன் திகைத்து நிற்கிறார் என்று படுகிறது
சித்ரனுக்கு கைகூடியிருக்கும் மொழி அழகும், இலகுவாகக் கதையை தன் போக்கில் விவரித்தபடியே செல்லும் பாங்கும், புறவுலகின் இயல்பான சூழலில் கூட மர்மங்களைக் கண்டறியும் ஆர்வமும் அவரின் படைப்புகள் மேல் ஆர்வத்தை உருவாக்குகிறது
நரேன்
***