‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற பாடல் என் சின்ன வயதில் மிகப்பிரபலம், எங்கள் எட்டாம்கிளாஸ் கணித ஆசிரியர் அதை வகுப்பில் பாடுவார். கொஞ்சம் பிசிறடித்தாலும் உற்சாகமாகக் கேட்கும்படி இருக்கும். சென்ற இரண்டாம் தேதி முதல் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். உழைப்பு? சொல்லலாம்தான். ஆனால் உழைப்பில் ஒரு முயற்சி அல்லது கட்டாயம் உள்ளது. இது செயல்களின் வழியாக ஒழுகிச்செல்லுதல். ஆகவே உற்சாகமானது
நான் ஜனவரி 3 ஆம் தேதி கிளம்பி ஈரோடு சென்றேன். அங்கே விஷ்ணுபுரம் அலுவலகம் இன்னும் வசதியான கட்டிடத்திற்கு நகரவிருக்கிறது. கிருஷ்ணன் முழுமூச்சாகச் செயலில் இருக்கிறார். ஐந்து ஆறு ஏழு தேதிகளில் தத்துவப் பயிற்சி வகுப்புகள். உற்சாகமான இளைஞர்சந்திப்பு அது. ஏழாம் தேதி அஜிதனின் நூல்வெளியீட்டுவிழாவுக்குச் செல்ல முடியவில்லை. ஏழாம் தேதி மட்டும் சென்னையில் புத்தகக் கண்காட்சி தவிர எட்டு இலக்கிய நிகழ்வுகள். அண்ணாநூலகத்தில் நிகழ்ந்த இலக்கியவிழாவில் விஷ்ணுபுரம் நண்பர்களே மூவர் பேசினர். இருந்தும் அரங்கு நிறைந்த கூட்டம் வியப்பூட்டுவது. (மைத்ரி விமர்சன அரங்கு- உரைகள்)
எட்டாம் தேதி அதிகாலை நான் சென்னை வந்துசேர்ந்தேன். அதிகாலை என்றால் அதீதகாலை, மூன்று மணிக்கு. மூன்றரைக்கு வளசரவாக்கத்தில் அருண்மொழி, சைதன்யா, அஜிதன் தங்கியிருந்த மாளிகைக்குச் சென்றேன். என்னை லண்டன் முத்து கேசவன் ஒரு டாக்ஸியில் ஏற்றிவிட்டார். சென்றதுமே ஹாய் அருண்மொழி என குழறலாகச் சொல்லிவிட்டு அப்படியே குப்புற விழுந்து தூங்கிவிட்டேன். ஒன்பது மணிக்கு எழுந்து ஒன்பதே காலுக்கு தன்னறம் விருதுவிழாவுக்குக் கிளம்பிவிட்டேன்.
தன்னறம் விருது இவ்வாண்டு சு.வேணுகோபாலுக்கு. தம்பி மிக உற்சாகமாக இருந்தார், வழக்கமாகவே அப்படித்தான் இருப்பார், அன்று கொஞ்சம் கூடுதலாக. நான் ஆற்றிய உரை கொஞ்சம் பிந்தித்தான் இணையத்தில் வெளியாகியது. தம்பியின் ஏற்புரை வழக்கம்போல கொப்பளிப்பு கொண்டது. கல்லூரியில் அடுத்த ஆசிரியர் வாசலில் வந்து நிற்பது வரை வகுப்பு நடத்தும் வழக்கம் கொண்டவர். பாவண்ணன், கோகுல்பிரசாத் ஆகியோர் பேசினார்கள். (தன்னறம் விருது விழா)
மாலையில் இன்னொரு இலக்கிய விழா. தெய்வீகனின் நூல் வெளியீடு. அதில் ஒரே ஈழநண்பர்களின் திரள். ஷோபா சக்தி வந்திருந்தார். நெடுங்கால நண்பர் கருணாகரன், ‘காலம்’ செல்வம், ‘கருப்பி’ சுமதி ஆகியோர் வந்திருந்தார்கள். நெகிழ்ச்சியான ஒரு மனநிலையில் இருந்த மாலை. விருப்பத்திற்குரிய அனைவரும் ஒரே இடத்தில் கூடிவிட்டதுபோல. நானே அவ்வப்போது அப்படியே கிளம்பிச்சென்று அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம் இருவரையும் சந்தித்தாலென்ன என்று எண்ணிக்கொண்டிருக்கும் நாட்கள் இவை.
(கடவுச்சீட்டு வெளியீடு,உரைகள்)
தெய்வீகனின் நிகழ்வு உற்சாகமானதாக இருந்தது. சிரிப்பும் நையாண்டியுமாக நடந்த சுருக்கமான கூட்டம். வெற்றிமாறன் இரண்டுநிமிடம் நீண்டு நின்ற பேருரை ஒன்றை ஆற்றினார். நான் பேசி முடித்தபோது கூட்டம் களைப்படைந்துவிட்டிருந்தது. ஏனென்றால் பாதிப்பேர் உலகத்திரைப்பட விழாக்களில் படம் பார்ப்பதுபோல ஒரே நாலில் ஐந்து இலக்கியக்கூட்டங்களில் பங்கெடுத்திருந்தனர். சிறில் அலெக்ஸ் மூன்றுகூட்டங்களில் கலந்துகொண்டு ஒரு கூட்டத்தில் அவரே பேசி அரைமயக்க நிலையில் இருந்தார்.
மாலை எங்கள் வாடகை மாளிகைக்கு தெய்வீகனும் ஆஸ்திரேலியச் செய்திநிலையத்தில் அறிவிப்பாளரான ரேணுகாவும் வந்திருந்தார்கள். இரவு 12 மணிவரை உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம். ரேணுகாவை பார்க்க இலங்கையின் நகைச்சுவை நிகழ்வான சந்துரு- மேனகா இணையரில் மேனகா போல இருந்தது. அதை அவரிடம் சொன்னேன். மேனகா என் தங்கைதான் என்றார். எனக்கு அவர்களின் சரளமான நடிப்பு, இலங்கைத்தமிழ் உச்சரிப்பு ஆகியவற்றில் ஒரு பெரிய மோகம் உண்டு. பெரும்பாலான நாட்களில் சந்துரு மேனகா ‘ஸ்கிட்’ ஒன்று பார்த்துவிடுவேன். (மேனகா சந்துரு நகைச்சுவை)
மறுநாள் ஒன்பதாம்தேதி அருண்மொழியும் சைதன்யாவும் நாகர்கோயில் கிளம்பினர். நான் பத்தரை மணிக்கு கிளம்பி ஐடிசி சோழா விடுதிக்குச் சென்றுவிட்டேன். அது ஒரு மாபெரும் புதிர்மாளிகை. ஏராளமான ‘லவுஞ்சுகள்’ அவற்றில் யார் யாரோ. சில லிஃப்டுகள்தான் நம் அறைக்குச் செல்லும். உள்ளே நடமாட ஊழியர் உதவி தேவை. மலையாள நடிகர் ஆசிஃப் அலியை சந்தித்தேன். ஒரு சினிமா செய்வதாக இருக்கிறோம்.
அன்று சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். முன்னரே அறிவித்திருந்தமையால் தொடர்ச்சியாக வாசகர்களும் நண்பர்களும் வந்துகொண்டே இருந்தனர். மாலை 5 முதல் இரவு 9 வரை நின்றுகொண்டே நூல்களில் கையெழுத்திட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே இருந்தேன். நூல்களும் சிறப்பாக விற்றன.
அன்றுமாலை சாம்ராஜ், நான், அஜிதன், ‘காலம்’ செல்வம் மற்றும் அவருடைய மகள்களுடன் ஒரு சைவ உணவகம் சென்று சாப்பிட்டோம். முதலில் உணவகத்தின் பெயரைச் சொல்லி டாக்ஸியில் ஏறிச் சென்று இறங்கிய இடம் ஒரு சிறு உணவகம். இதுவாக இருக்காதே என சந்தேகமிருந்தாலும் தோசைக்கு ஆணையிட்டு வரவழைத்த்விட்டோம். பிறகுதான் இடம் மாறிவிட்டது என்று தெரிந்தது. சாப்பிடாமலேயே கிளம்பினோம். ஓட்டல்காரரிடம் பணம் தருவதாகச் சொன்னாலும் அவர் மறுத்துவிட்டார்.
நடந்தும் பின்னர் ஒரு ஷேர் ஆட்டோவிலுமாக நாங்கள் உண்மையில் உத்தேசித்த உணவகத்துக்குச் சென்றோம். அந்த அனுபவத்தை செல்வத்தின் மகள்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். சின்னவளாகிய கஸ்தூரிக்கு ஷேர் ஆட்டோ ஒரு மெய்சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருப்பதை காணமுடிந்தது. இரவு டாக்ஸிகள் வராமல் அழைப்பை ரத்துசெய்துகொண்டே இருந்தனர். ஆட்டோவில் ஐடிசி சோழாவில் சென்றிறங்கியபோது என்னை பலர் அபூர்வமான மனிதராக எண்ணி மரியாதையுடன் பார்த்தனர்.
பத்தாம்தேதியும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். மீண்டும் ஐந்தரை மணிநேரம் நின்றுகொண்டே வாசகர்களைச் சந்தித்தேன். என் வாசகர்களிடம் ஒரு பொதுவான அம்சத்தை கவனிக்கிறேன். அவர்கள் என்னிடம் என் இலக்கியத்தின் கலை, இலக்கிய இன்பம், கருத்து பற்றி பேசுவது குறைவு. பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கையையும், அதில் என் எழுத்து உருவாக்கிய மாற்றத்தையும் பற்றியே பேசுகிறார்கள். நெகிழ்வும் கண்ணீரும் பரவசமும் நட்புமாக.
இலக்கியம் நேரடியாக வாழ்க்கையுடன் உரையாடவேண்டும் என்பதே என் நோக்கம். என்னிடம் என் படைப்பு ஒரு வகை அழகிய கலைப்பொருள் என ஒருவர் சொன்னால் எரிச்சலடைகிறேன். நான் முன்வைப்பது நான் வாழ்ந்த, உணர்ந்த வாழ்க்கையையே. ஆகவேதான் உத்திசோதனை, புதியமுறையில் சொல்லிப்பார்த்தல் போன்றவற்றின்மேல் எனக்கு ஒவ்வாமையும் உள்ளது. புதியவடிவங்களில் நானும் எழுதியிருக்கிறேன், அதெல்லாம் அந்த கதையை அப்படித்தான் சொல்லமுடியும் என்பதனால்தான்.
பத்தாம்தேதி மாலையே நானும் லண்டன் முத்துவும் கிளம்பி ஈரோடு சென்றோம். எங்கள் மலைத்தங்குமிடத்தில், குளிரில் நான்குநாட்கள் பதினாறு நண்பர்கள் தங்கியிருந்தோம். அதி தீவிரமான இலக்கிய – தத்துவ உரையாடல்கள். குறையாத சிரிப்பு. பதிநான்காம் தேதி ஈரோட்டில் இருந்து கிளம்பி கோழிக்கோடு. அங்கே ஓர் இலக்கிய விழா. இலக்கியத்தில் இருந்து இலக்கியத்திற்கு.