இயற்கை, மனிதன், கனவு – டெர்சு உசாலா

இயற்கையைக் கண்டடைதல்என்று ஒரு தனி நிகழ்வு உண்டு. நாம் எண்ணுவதுபோல அது இயல்பான ஒன்று அல்ல. அதற்கு முதலில் இயற்கையுடன் தொடர்பின்றி அகலவேண்டியிருக்கிறது. அதன் வழியாக ஒருவகை பழக்கமிழப்பு நிகழ்கிறது. அதன்பின் குழந்தைக்குரிய புதிய விழிகளுடன் நாம் இயற்கையைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இயற்கை புத்தம்புதியதாக நம் முன் தோன்றுகிறது. இயற்கை பிறந்து எழுகிறது

இயற்கையில் இருந்து நாம் விலகுவது நம் சிந்தனையால். அச்சிந்தனைகள் தங்களுக்குரிய வெளிப்பாட்டை இயற்கையில் கண்டடையும்போது இயற்கை படிமங்களாக பெருக ஆரம்பிக்கிறது. அதன்பின் நாம் காண்பதுஅர்த்தம் ஏற்றப்பட்ட இயற்கையை’ . நம்முள் பெருகியிருக்கும் எல்லையின்மையை தன் உள்ளுறையாகக் கொண்ட இயற்கையை. 

அந்த இயற்கையின் முடிவின்மை ஒன்று உண்டு. அது நம் முடிவின்மையை தான் பிரதிபலிக்கத் தொடங்கும்போது ஒரு பெருவெளி உருவாகிறது. கலைடாஸ்கோப் போல கணந்தோறும் உருவாகும் முடிவிலா உலகம் அது.

இலக்கியத்தில் இயற்கை இவ்வண்ணமே நிகழ்கிறது. சங்கப்பாடல்களைப் பாடியவர்கள் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தவர்கள் அல்ல. அவர்களின் பெயர்களே சுட்டுவதுபோல அவர்களில் பலர்கிழார்கள். பலர் பாணர்கள். அவர்களுக்கு இயற்கையிடமிருந்த தொலைவே அக்கவித்துவத்தை உருவாக்கியது.

கபிலனும் காளிதாசனும் உருவாக்கிய அந்த இயற்கைத்தரிசனம் இலக்கியத்தில் என்றும் உள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் அது அடுத்தகட்டத்தை எட்டியது. மதங்களிலும் தத்துவங்களிலும் நம்பிக்கையிழந்த ஒரு தரப்புநேரடியாகஇயற்கையை நோக்கிச் சென்றது. இயற்கைவாதிகள் (Naturalists) என அழைக்கப்படும் அந்த அறிவுத்தரப்பின் முதன்மை ஆளுமைகள் கவிஞர்களும் ஓவியர்களும். அவர்கள் இயற்கையை வெறும் படிமவெளியாகக் காணவில்லை. அதை பிரபஞ்ச ரகசியங்கள் பொறிக்கப்பட்ட ஒரு பரப்பாக உணர்ந்தனர்.

உலகம் முழுக்க பத்தொன்பதாம்நூற்றாண்டுச் சிந்தனையில் இயற்கைவாதம் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. அதன் விளைவாக இயற்கையை முற்றிலும் புதியதாக கண்டடையும் படைப்புகள் உருவாயின. இம்முறை பழங்காலப் படைப்புகளில் இல்லாத ஒரு கூறு இணைந்துகொண்டது. அறிவியல்.

அறிவியல் பதினெட்டாம் நூற்றாண்டில் நாம் இன்றுகாணும் பேருருவை அடையலாயிற்று. புறவயமான அணுகுமுறை, தொகுப்புபகுப்பு என்னும் ஆய்வுமுறை ஆகியவை உருவாகி வலுப்பெற்றன. அவை இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்தியபோது பழைய கற்பனாவாதக் கவிதைகளின் உலகம் உரைநடையில் விரிவாக்கம் பெற்றது. அவற்றில் கற்பனாவாத மனநிலை உள்ளுறையாக இருந்தது, ஆனால் பேசும்முறை புறவயமான  அறிவியல்தன்மை கொண்டதாக அமைந்தது.

அத்தகைய உரைநடை ஆக்கங்கள் உலகமெங்கும் உருவாகி மிகுந்த வீச்சுடன் இயற்கையின் பெருஞ்சித்திரத்தை உரைநடையில் உருவாக்கத் தொடங்கின. அவற்றில் தொடக்ககால எழுத்துக்களுக்கு இரண்டு கதைவடிவங்கள் இருந்தன. ஒன்று, வேட்டை. உலகமெங்கும் அறியப்பட்ட நூல்களான ஹெர்மன் மெல்விலின் மோபிடிக், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் ஆகியவை உதாரணம். இன்னொரு வகை வடிவம் பயணம். ஒருவன் ஏதோ ஒரு காரணத்தால் புதிய நிலமொன்றுக்குச் செல்கிறான். அங்கே புதிய ஒரு வாழ்க்கையைக் கண்டடைகிறான்.  அண்மையில் புகழ்பெற்ற ஓநாய் குலச் சின்னம் அத்தகைய நாவல்.

இந்தியமொழிகளில் விபூதிபூஷண் பந்த்யோபாத்யாயவில் வனவாசி (ஆரண்யக்) அத்தகைய பயணநூல்களுக்கு மிகச்சிறந்த உதாரணம். அதில் விரிந்து வரும் இயற்கைச் சித்திரம் இன்றுவரை இந்திய இலக்கியத்தை ஆட்கொள்ளும் ஒன்றாக உள்ளது. பங்கர்வாடி உட்பட பல நாவல்கள் அந்நிரையில் வருவன.

அத்தகைய பயணத்தன்மைகொண்ட இயற்கை விவரணையை முன்வைக்கும் நாவல்களில் ஒன்று விளாதிமிர் கே. ஆர்சென்யேவ் (Vladimir Klavdiyevich Arsenyev) எழுதி அவைநாயகன் மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்திருக்கும் டெர்சு உஸாலா.  

ஆர்சென்யேவ்  பழைய ஜார் ஆட்சிக்காலத்தில் ராணுவ அதிகாரிக்கான பயிற்சி எடுத்துக்கொண்டவர். ருஷ்ய நிலப்பகுதிகளை நேரில் கண்டு ஆவணப்படுத்துவது, எல்லைகளை வகுப்பது ஆகிய பணிகளை அரசின்பொருட்டு மேற்கொண்டார். ருஷ்ய நிலங்களினூடே என்னும் தலைப்பில் அவருடைய பயணக்குறிப்புகள் நூல்களாக வெளிவந்தன.

ரஷ்யப்புரட்சியின்போது ஆர்சென்யேவ் கிழக்கு குடியரசின் இனச்சிறுபான்மையினருக்கான அதிகாரியாக பணியாற்றினார். 1922ல் கிழக்குக் குடியரசு தோற்கடிக்கப்பட்டு சோவியத் ருஷ்யாவுடன் இணைக்கப்பட்டபோது நாட்டை விட்டு வெளியேற மறுத்து  விளாடிவஸ்டாக்கிலேயே வாழ்ந்தார்.1930ல் மறைந்தார். அவர் மறைந்த பின் அவருடைய மனைவி மார்கரிட்டா கைது செய்யப்பட்டார். ருஷ்ய கம்யூனிசத்திற்கு எதிராகச் சதிசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பத்தே பத்து நிமிடம் நீண்ட நீதிமன்ற விசாரணைக்குப்பின் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய மகளும் பின்னர் கொல்லப்பட்டார்.

இந்நாவல் உலக மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூன்று திரைவடிவங்கள் வெளியாகியுள்ளன. இந்நாவலின் ஒரு திரைவடிவம் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழில் அவைநாயகனின் மொழியாக்கம் சரளமான வாசிப்பனுபவத்தை அளிப்பதாக உள்ளது.

இது ஒரு நாவல் என முழுமையாகச் சொல்லிவிடமுடியாது. நாவலின் அமைப்பு இதற்கு உள்ளது. இது பழைய சோவியத் ருஷ்யாவின் வடகிழக்கு நிலத்தை அளந்து அடையாளப்படுத்த பயணமான ஓர் அதிகாரியின் பயணக்குறிப்புகளாக இந்நூல் அமைந்துள்ளது. விளாடிவாஸ்டாக் முதல்  ஜப்பான் கடலின் மேற்புறத்தில் பயணம் செய்து கபரோவ்ஸ்க் என்னுமிடத்தில் முடியும் பயணம் இது. 1902 ,1906, 1097 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த தனிப் பயணங்கள் இவை. 

இதில் அங்கே குடியேறியிருக்கும் சீனர்கள், கொரியர்கள், மற்றும் தொல்குடிகளின் கிராமங்கள் வழியாக செல்கிறார்கள். ஆறுகளையும், சதுப்புகளையும், புல்வெளிகளையும், குன்றுகளையும் கடந்து செல்கிறார்கள். பலசமயம் ஆறுகள் வழியாக படகுகளில் செல்கிறார்கள் .அந்தப் பயணத்தின் புறவயமான சித்திரங்கள் வழியாகச் செல்லும் நீண்ட விவரணையே இந்நூல். 

டெர்சு உசாலாவுடன்

இந்நூலின் ஆசிரியரே கதைசொல்லி. அவர் தன் பயணத்தில் சந்திக்கும் டெர்சு உஸாலா என்னும்கோல்டுபழங்குடி மனிதனே கதைநாயகன். கதைசொல்லி இயற்கையை அறியவும், வெல்லவும் விழைவுகொண்டவர். டெர்சு உஸாலா இயற்கையின் ஒரு பகுதியாகவே வாழும் மனிதன். வியப்பும் மெல்லமெல்ல உருவாகும் வழிபாட்டுணர்வுமாக கதைசொல்லி டெர்சு உஸாலாவை அறிவதுதான் இந்நாவலின் கதையோட்டம் என்பது. அது இயற்கையின் நுட்பங்களை அறிவதாகவும், இயற்கையின் வெல்லமுடியாத பிரம்மாண்டத்தை உணர்வதாகவும் நாவலில் வெளிப்படுகிறது.

டெர்சு உஸாலா ஒரு வேட்டையன். வேட்டைவிலங்கு என்றே அவரைச் சொல்லிவிட முடியும். வேட்டையாடும் விலங்குகளுக்குள்ள கூர்ந்த புலன்கள் அவருக்கு உள்ளன. விலங்குகளின் காலடிகளைக்கொண்டு அவற்றின் எடையைக்கூட அவரால் சொல்லிவிட முடியும். வான்குறிகள் பறவைகளின் இயல்புகளைக்கொண்டு புயலை கணிக்கிறான். உணவுக்காக விலங்குகளைக் கொன்று சுமந்து செல்கிறான். முக்கியமாக, கடுங்குளிரிலும் திறந்தவெளியிலேயே தூங்குகிறான்

ஆனால் அவன் மனிதனும்கூட. நகரத்தினர் ஓர் இடத்தில் குடிலமைத்து தங்கியபின் விளையாட்டாக அந்த குடில்களை எரித்துவிட்டுச் செல்கிறார்கள், ஆனால் டெர்சு அதைச்செய்வதில்லை. அந்தக்குடிலில் தீப்பெட்டி, கொஞ்சம் அரிசி, உப்பு ஆகியவற்றை கட்டித்தொங்கவிட்டுச் செல்கிறான், அங்கே வரப்போகிறவர்களுக்காக. மனிதர்கள்மேல் ஆழ்ந்த நம்பிக்கையுடனும், நட்புடனும் இருக்கிறான்

அற்புதமான சைபீரிய நிகழ்வுகள் இந்நூலை தீவிரமான வாசிப்பனுபவமாக ஆக்குகின்றன. சைபீரியாவின் மாபெரும் பறவைப்பெருக்கின் சித்திரம், பனிப்புயலுக்கு முன் அவை அப்படியே மறைந்து விடுவதும், அவர்கள் பனிப்புயலில் சிக்கிக்கொள்ளும்போது புற்களை முறுக்கி கூடாரம் அமைத்து உள்ளே ஒடுங்கிக்கொண்டு உயிர்பிழைப்பதும் நுணுக்கமாக சொல்லப்பட்டுள்ளன. டெர்சுவுக்கு நீர் நெருப்பு எல்லாமே உயிருள்ள ஆளுமைகள்தான். குறும்பும், கனிவும், சீற்றமும் கொண்டவை. அவற்றுடன் அவர் கொள்ளும் உறவு ஒருவகை உறவாடல்தான் 

இப்போது வாசிக்கையில் கதைசொல்லியும் அவருடைய அணியும் இயற்கையை ஊடுருவுவதும், வெறுமே ஆர்வத்திற்காகவே உயிர்களைக் கொல்வதும் ஓர் இயற்கையியல் வாசகனுக்கு சிறு ஒவ்வாமையை அளிக்கலாம்.  ஆனால் இந்நாவல் இன்றைய இயற்கையியல் பார்வைகள் உருவாகாத காலத்தில் உருவான நூல் இது.

நுண்விவரணைகள் வழியாக உருவாகும் நிலச்சித்திரம் இந்நாவலின் பேசுபொருள். ஆனால் அதனுள் நுணுக்கமான ஒரு கற்பனாவாதம் உள்ளது. இயற்கையின்கருணைஅல்லதுநலம்பயக்கும் தன்மையைஇந்நாவல் தொடர்ச்சியாக முன்வைக்கிறது. இயற்கையை ஒட்டி வாழும் வாழ்க்கையை  இலட்சியப்படுத்துகிறது. டெர்சு உசாலா இறுதியில் காப்டனால் நகரத்துக்கு கொண்டுவரப்படுகிறார். நீரும் விறகும் விலைக்கு விற்கப்படும் ஒரு வாழ்க்கையில், சிறு அறைகளுக்குள் மனிதர்கள் குளிர்கால வாத்துக்கள் பொந்துகளில் புகுந்து ஒண்டியிருப்பதுபோல அமைந்திருக்கும் சிறுமையில் அவர் திகைப்படைகிறார். மிக எளிதாக நோயுற்று மறையும் டெர்ஸு உஸாலாவின் கல்லறைகூட நகர்மயமாக்கத்தில் காணாமலாகிறது. வானில் செல்லும் பறவைகள் போல தடமில்லாது மறைகிறார்.

இந்நாவலுக்கு முன்னுதாரணமாக டால்ஸ்டாயின் கொஸாக்குகள் போன்ற நாவல்கள் ருஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ளன. இந்நாவலின் வழிநூல்கள் இன்று வரை வெளிவந்துகொண்டிருக்கின்றன. பலமுறை திரைப்படமாகவும் வெளிவந்த இந்நாவல் இன்றும் வாசிப்பிற்கு கிளர்ச்சியூட்டும் அனுபவத்தை அளிப்பதாக, படிமங்களாக நம்முள் வளர்வதாகவே உள்ளது. 

டெர்சு உஸாலா விளாதிமிர் கே.ஆர்சென்யேவ் 

முந்தைய கட்டுரைமு.மு.இஸ்மாயில்
அடுத்த கட்டுரைதன்னறம் விருது விழா