பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு பற்றி கடிதமெழுதி ஓராண்டாகிவிட்டது. ஐந்தாறு வருடம் நவநீதம் அவர்கள் மற்றும் என் மிகச்சிறு பங்களிப்புடன் 67 பறவைகள் கொண்ட அறிமுக கையேட்டை அனுப்பினேன் அல்லவா! இப்போது இந்த ஓராண்டுக்குள் அது நூறாகியுள்ளது. உங்களுக்கு கடிதமெழுதிய பிறகு சிறந்த இளைஞர் குழு அமைந்தது. விடுமுறை நாட்களில் தொடர்ந்து நீர்நிலைகளைச் சுற்றிப் பயணித்தோம். அதன் பலனாக எங்கள் ஊரில் மட்டும் நூறு பறவை இனங்களைக் கண்டுள்ளோம்.
பறவைகள் பற்றிய நுண் விவரிப்புகள், ‘போறபோக்கில்‘ மக்கள் பறவைகளை பற்றி சொல்லும் சொலவடை, பறவைகளுக்கு ஆங்காங்கே வழங்கப்படும் பெயர்கள், வெவ்வேறு இனங்களுக்குள் உள்ள உறவுகள், சண்டைகள், பறவைகள் செய்யும் சாகசங்கள், திருட்டு என எத்தனை அறிதல் ஓராண்டுக்குள்! கணக்கெடுப்புக்குச் செல்லும்போது ஆங்காங்கே சொல்லி கேட்ட குறிப்புகள் பேருதவியாக இருந்தது.
நாங்கள் ஒருபக்கம் அறிவியல் உதவியோடு பறவைகளை அறிந்து வருகிறோம். அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ஒரு செயலியின் உதவியோடு இக்கணக்கெடுப்பு நடக்கிறது. மற்றொரு பக்கம் தங்கும் பறவைகள் மட்டும் வலசை வரும் பறவைகள் படிமங்களாக மக்களிடையே இருந்து வருகிறது. குறிப்பாக ஊரிலேயே முழுநேரம் செயல்படும் மக்களிடம் இவை புதைந்துள்ளது. அந்த அனுபவ அறிவை வெளிக்கொணர்வதென்பது தான் சவால் என்று நினைக்கிறேன். படிமங்கள் மற்றும் அறிவியல், இவை இரண்டிலொன்று இல்லாத பறவைகள் வெறும் குறிப்பாகவும் எண்ணிக்கையாகவுமே இருக்குமென்று நினைக்கிறேன். இதை கருத்தில் கொண்டு நாங்கள் பொது இடங்களில் ஒரு பொறி போடுவதுண்டு. அது கூட்டத்தில் பேச்சாகி கதைகளும் சொலவடைகளும் வந்து தெறிக்கும். அந்த கதைகளை பையில் போட்டுகொண்டு திரும்புகிறோம். வேட்டையாடுபவர்களிடமே கதைகளும் குறிப்புகளும் கொப்பளிக்கின்றன.
விஜயபாரதி அண்ணனைப் பற்றி குறிப்பிட வேண்டும். அறிதலின் பொருட்டு எங்களை பார்க்க ஊருக்கு வந்தார். அதற்குப் பிறகு அவரின் கணக்கெடுப்பு வேகத்தை ஈடுகொடுக்க எங்களுக்குச் சிரமமாக இருக்கிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் உள்ள பறவை ஆர்வலர்களோடு தொடர்ந்து பயணிக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது.
சில காரணங்களால் புதுப்பிக்கப்பட்ட கையேட்டை தயாரிப்பதில் தாமாதமாகியுள்ளது. விரைவில் தயாராகுமென்று நினைக்கிறேன்.
இறுதியாக, இவ்வாண்டு பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 15-18 நடைபெறுகிறது. அதை பற்றிய அறிமுகம் மற்றும் தகவல் – https://birdcount.in/event/pongal-bird-count-2023/
பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக பறவைகள் கணக்கெடுப்பும் இருக்க அனைவரையும் இவ்வுலகத்திற்குள் எங்கள் குழு சார்பாக அழைக்கிறேன். இயற்கையைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தலின் முதல் படி அவற்றை அவதானித்தாலே என நம்புகிறேன்.
நன்றி
கோ வெங்கடேஸ்வரன்
Nature group – மன்னங்காடு
பட்டுக்கோட்டை