ஊமைச்செந்நாய், கடிதங்கள் மீண்டும்

அன்புள்ள ஜெயமோகன்
நான் தினமும் உங்களை படிக்க ஆரம்பித்து விட்டேன். நன்றி. எனக்கு இப்போது ஒரு பதில் கிடைத்திருக்கிறது.எழுத்தாளருக்கு ஒரு ஸ்டைல் வேண்டுமா என்று ஒரு கேள்வி இருந்தது. உங்கள் மத்தகத்தை படித்து விட்டு ஊமைச்செந்நாய் படித்தேன்.இரண்டுமே முற்றிலும் வேறுபடவை.  உங்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களை படிக்க வைக்கிறீர்கள். ஒருகிளாசிக்கல்ஆங்கில கதையை படிப்பதுபோலிருந்தது.

Any work of art is successful only if it cannot be expressed in any other media  என்று யாரோ சொன்னது உங்கள் எழுத்துக்கு சாலப்பொருந்தும்.


அன்புடன்
இளம்பரிதி

அன்புள்ள இளம்பரிதி அவர்களுக்கு

பொதுவாக சில எழுத்தாளர்களுக்கு ஒரேவகையான நடை இருக்கிரது. சிலருக்கு மொழியின் போக்கில் சென்று வேறுபட்ட நடைகளை அடைய முடிகிறது. நான் பொதுவாக தொடர்ந்து என் மொழியைக் கவனிப்பவன். ஆகவே என்னுடைய தேய்வழக்குகள் எனக்கு உடனே தென்படும்.ஆகவே எனக்கு ஒரு தனி நடை என இல்லாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. ஆனால் தனியான நடை இருப்பதோ இல்லாமல் இருப்பதோ இலக்கிய ரீதியாக பெரிய முக்கியத்துவம் கொண்டது அல்ல. எந்த அளவுக்கு ஆழமாக- கவித்துவமாக- வாழ்க்கையில் செல்ல முடிகிறது என்பது ஒன்றே அளவுகோல்
ஜெ

**

அன்பு ஜெயா சார்,

தங்களின் ஊமை செந்நாய் சிறுகதையை  உயிர்மை இதழில் படிக்க நேர்ந்தது. எவ்விதம் சொல்வது என்று தெரியவில்லை…இத்தகைய சிறந்த சிறுகதையை நான் இதுவரையில் படித்ததில்லை என்றுதான் கூர வேண்டும்.வார இதழ்களில் இருந்து இப்போது தான் இலக்கிய இதழ்களை படிக்கிறேன்…தங்களது மத்தகம் நாவலை விட ஊமை செந்நாய் என்னை மிகவும் பாதித்தது.நான் இப்போது வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருப்பதால் உங்களது மற்ற கதைகளை படிக்க இயலவில்லை.ஜெயகாந்தன், சுஜாதா இவர்கள் மட்டுமே சிறந்த எழுத்தாளர்கள் என்று நினைத்து கொண்டு இருந்த நான் இப்போதே தங்களை போன்றரை கண்டுகொண்டேன்.

உங்களுடைய பணி சிறக்க என்னுடை வாழ்த்துக்கள்…

நன்றி….

வேலா

அன்புள்ள வேலா

ஜெயகாந்தனும் சுஜாதாவும் அவர்கள் அளவில் சிறந்த எழுத்தாளர்கள். ஒருவகையில் எனக்கு முன்னோடிகள். அவர்களிடமிருந்து நான் பெற்றவை பல. இலக்கியம் அவ்வாரு கொள்ளல் அடைதல் வழியாகவே முன்னகர்கிறது. இளமையில் நான் என இருக்கும் தன்முனைப்பு கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் ஆகிறது. நாம் இங்கே செய்வது அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீரை மீண்டும் நதியிலேயே விட்டுவிடுதல்தான் [சுகுமாரன் கவிதை] என்று சொல்லலாம்

ஜெ

அன்புள்ள ஜெ
ஊமைச்செந்நாய் கதையை இப்போதுதான் படித்தேன். உண்மையில் அ.முத்துலிங்கம் உங்களை எடுத்த பேட்டிதான் அதை படிக்க என்னை தூண்டியது. ஏன் என்றால் நான் நெடுநாட்களாகவே கதைகள் வாசிப்பதை விட்டுவிட்டிருந்தேன். பல கதைகள் சாரமற்று நேரத்தை வீணாக்குவதாக எனக்கு தோன்றியது. நான் வாசித்த நல்ல கதைகளில் ஒன்று ஊமைச்செந்நாய். சந்தேகமே இல்லை. அதில் உள்ள அற்புதமான நிதானம் ஒரு கிளாசிக் தன்மை. மிகச்சில எழுத்தாளர்களுக்கே அது கைவரும்.

ஜாக் லண்டன், ஹெமிங்வே போன்றவர்கள் எல்லாம் வேட்டைக்கதை எழுதினார்கள். ஆனால் அவற்றில் அந்த கிளாஸிக் தன்மை வரவில்லை. அவர்கள் நிதானத்தைக் கொண்டுவருவதற்காக ‘மேட்டர் ஆ·ப் ·பேக்ட்’ நடையை உருவாக்கிக் கொண்டார்கள். ஆனால் அதன் மூலம் அவர்களால் இயற்கையின் அழகை சொல்லமுடியாமல் போய்விட்டது.

என்னுடைய வாசிப்பில் போரும் அமைதியும் நாவலில் உள்ள வேட்டைக்காட்சிதான் உலக இலக்கியத்தில் சிகரம். அதன்பின் பலர் எழுதியிருக்கிறார்கள். ·பார்ஸ்டர், தாமஸ் மன்… உங்களுக்காக பெயர்களை நினைவில் இருந்து எடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது ஓய்வுபெறபின் வாசிப்பது மண்டையைச் சிக்க வைக்கிறது. ஒருகாலத்தில் வாசிப்பது மட்டுமே வாழ்க்கையின் இன்பம் என்று எண்ணிக்கோண்டிருந்தேன்.

வேட்டைக்கதைகளை சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம். ஒரு நல்ல வேட்டைக்கதையில் காட்டுக்குள் செல்வது மனதுக்குள் செல்வதற்குச் சமானமாக இருக்க வேண்டும். யுலிஸஸ் இன்பெர்னோவுக்கு சென்றது போல . என் ஆங்கிலக் கலப்பை மன்னியுங்கள். எழுதி நெடுநாளாகிறது. உங்கள் கதையில் மனம் காடாக இருக்கிறது. ஆகவே அது ஒரு கிளாசிக்

பாலசுப்ரமணியம்
டெல்லி

அன்புள்ள பாலசுப்ரமணியம்

நன்றி. உங்கள் கடிதம் உற்சாகமூட்டுகிறது. சங்கப்பாடல்களில் நீங்கள் சொல்லும் அதே விதி இருக்கிறது. அவை காட்டும் நிலம் மனித மனமேதான். அப்போது எல்லாமே குறியீடாக ஆகிவிடுகிறது.

நித்யா சொல்வார் கடவுள் உண்மையில் ஒரு பெரிய உவமையை மட்டும்தான் படைத்தார் என– பிரபஞ்சம்! ஆகவே அவனை தனக்குவமை இலலதான் என்று சொல்லக்கூடாது என்பார்.

உங்கள் கடிதத்தை செம்மை செய்துகொள்கிறேன்

ஜெ

ஊமைச்செந்நாய், கடிதங்கள் இன்னும்

ஊமைச்செந்நாய்:மேலும் கடிதங்கள்

ஊமைச்செந்நாய்:கடிதங்கள்

ஊமைச்செந்நாய்

முந்தைய கட்டுரைநாக்கு ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவன்னி:கடிதங்கள்