மரணமின்மை எனும் மானுடக்கனவு- சௌந்தர்

மரணமின்மை எனும் மானுடக் கனவு வாங்க

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விழாவில் வெளியிடப்பட்ட நூல்களில் முக்கியமான ஒரு நூல் சுனில் கிருஷ்ணனின் கட்டுரை தொகுப்பான  மரணமின்மை எனும் மானுடக்கனவு.இந்த நூலை வாசித்து விட்டு சுனிலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.   

காந்தியும் ,இலக்கியமும் அவர் வாழ்வில் குறுக்கிடாமல் இருந்திருந்தால், நமக்கு சரகரின் நீட்சியாக சுஸ்ருதரின் கண்ணியாக, ஆகச்சிறந்த இந்திய மருத்துவ அறிஞர் ஒருவர் கிடைத்திருப்பார்.அல்லது சரக சம்ஹிதைக்கு உலகின் சிறந்த உரை எழுதப்பட்டிருக்கும். ஏனெனில் ‘ ‘நான் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற ஆயுர்வேத மருந்தவனாக வருவேன் என என் ஆசிரியர்கள் நம்பினர் , ஆனால் எனக்கு வேறொரு கிறுக்கு பிடித்துக்கொண்டது. வாசிக்கவும் எழுதவும் அனுமதிக்கும் சுதந்திரத்துடன் கூடிய இலகுவான தொழில் வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்தேன் ‘  என முகவுரையில் சொல்கிறார்

மொத்தம் பதினைந்து கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பில், சுனில் அறிமுகப்படுத்தியிருக்கும் உசாத்துணை நூல்கள் மட்டுமே வாசித்து முடிக்க நமக்கு அடுத்த மூன்று ஆண்டுகள் தேவைப்படலாம்

ஆயுர்வேத நூல்கள் என்றாலே மூலிகைகளை அரைத்தல், கஷாயம் காய்ச்சுதல், பத்தியம் இருத்தல் என நம் அன்றாடத்திற்கு சம்பந்தமே இல்லாதவற்றை பேசிக்கொண்டிருக்கும் அல்லது சம்ஸ்கிருத சுலோகங்களை மேலே எழுதி அதை கீழே தமிழ்ப்படுத்தி நம்மை மேலும்படுத்திஎடுப்பவை.  

இந்த சிக்கலை உடைத்து தரமான ஆயுர்வேத நூல் எனும் மாபெரும் அறிவுக்களஞ்சியமானதிரிதோஷ மெய்ஞ்ஞான தத்துவ விளக்கம்எனும் நூலை தந்தவர் சுனில் மற்றும் எனக்கும் ஆயுர்வேதத்தில் மானசீக ஆசிரியரான தெரிசனங்கோப்பு இல.மஹாதேவன் சார்இது சார்ந்து ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரை  { PARNASALAI- பர்ணசாலை

சுனிலின் இந்த கட்டுரை தொகுப்பு அதன் தொடர்ச்சி என்றே சொல்வேன்ஒவ்வொரு கட்டுரையிலும் ஆசிரியரின் பெயர் நன்றியுடன் நினைவு கூறப்படுகிறது.

இத்தொகுப்பின் முதல் பகுதி வேத காலத்தில் தொடங்கி காலனிய காலம் வழியாக கோவிட் தொற்று வரை ஆயுர்வேதத்தின் பங்களிப்பும் எல்லைகளும், தக்க சான்றுகளுடன், பேசப்படுகிறது

அதில் முக்கியமாக நியாயவைசேஷிக தரிசனங்கள் கூறுகளை ஆயுர்வேதம் எப்படி சரளமாக பயன்படுத்திக்கொள்கிறது. சீன மருத்துவத்தின்மெரிடியன்என்கிற கருத்துக்கும் , யோக மரபின்நாடிஎன்கிற கருத்துக்கும் இணையாகஸ்ரோதஸ்எப்படி கையாளப்படுகிறது என்கிற பகுதியும்.

விடுதலைக்கு முந்தைய கால பிரபல ஆயுர்வேத வைத்தியர் ப்ருஹஸ்பதி தேவ திரிகுணாஜி பற்றிய சுவாரஷ்யமான வாய்மொழிக்கதையும்

மரபு மருத்துவர்களின் அதீத தன்னம்பிக்கையின் காரணமாக உடற்கூறு மற்றும் உடலியங்கியல்  புரிதல் ஏதுமின்றி புற்று நோய் முதல் மரபணு குறைபாடு வரை எல்லாவற்றையும் தீர்க்கமுடியும் என மார்தட்டிக்கொள்ளும் அரைகுறை வைத்தியர்கள் பற்றியும் சொல்லிவிட்டு , மஹாதேவன் சார் போன்ற, தங்கள் மரபின் எல்லைகளை தெரிந்தும் அதன் போதாமையை ஒத்துக்கொண்டும் நவீன மருத்துவதையோ, நிகரான வேறு முறைமைகளையோ ஏற்றுக்கொள்வதில் தயக்கமில்லாத அசல் வைத்தியர்களையும் பிரித்தறியும் பகுதியும்.

இந்திய மருத்துவ முறைகளை பற்றி புரிந்துகொள்ள  உண்மையில் ஐரோப்பிய அறிஞர்களையே சார்ந்து இருக்கவேண்டியுள்ளது என சொல்லி , டொமினிக் உஜாஸ்ட்டிக், ஜீன் லாங்போர்ட், கென்னத் ஜிஸ்க் ,டாக்மர் உஜாஸ்ட்டிக், முள்ளன் பால்ட், ராச்சல் பெர்கர், ரிச்சர்ட் வெய்ஸ்  என அறிஞர்களின் பெயர்களையும் அவர்களின் பங்களிப்பையும் விரிவாக சொல்லும் பகுதியும்.

வேதமும் ஆயுர்வேதமும் எனும் கட்டுரை ஒரு க்ளாசிக் நாவலுக்கு சற்றும் சளைக்காத பகுதி. இந்திரனில் தொடங்கி ஆத்ரேயர், அக்னிவேஷர் வழியாக பெளத்தத்தின் பங்களிப்பு வரை குரு பரம்பரை பேசப்படுவதுடன் , அதர்வ வேதத்திலிருந்து சம்ஹிதைகள் வழியாகவும் , கெளசிக சூத்திரம் போன்ற சூத்திரங்களின் வழியாகவும் பெளத்த நூல்களான வினய பிடகங்களில் இந்திய மருத்துவ மாண்புகள் பற்றியும், மிக விரிவான சித்தரத்தை அளிக்கிறது.

இந்த அத்தியாயத்தில் தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கும் நூல்களை ஒருவர் தேடிச்சென்று படித்தாலே, ஆயுர்வேதத்தின் பார்வை விசாலமாகிவிடும்

இரண்டாவது பகுதி இந்திய மருத்துவத்தின் உன்னதமான ஆளுமைகள் மற்றும் நூல்கள் பற்றிய அபாரமான பகுதி முதலில் டாக்டர் மஹாதேவன் பற்றிய  பிஷக் உத்தமன் {மருத்துவர்களில் தேர்ந்தவன் } எனும் கட்டுரை ஏற்கனவே படித்தது, அதில் மேலதிகமாக அவருடைய சமீபத்திய நூல்கள் பற்றிய பகுதியும் ,

சுனில் பல்வேறு இணைய இதழ்களில் எழுதிய சிறிய கட்டுரைகளும், மிக முக்கியமாக டாக்டர்.பி.எம் ஹெக்டே பற்றி டாக்டர் ஜீவானந்தம் மொழிபெயர்த்தமருத்துவத்திற்கு மருத்துவம்என்கிற கட்டுரையும்.

சுனில் முக்கியமாக பரிந்துரைக்கும் நூலான PHYSICAL DIAGNOSIS  பற்றிய விரிவான கட்டுரையும்.

அனைத்திற்கும் உச்சமாக சரக சம்ஹிதைக்கு சுனில் எழுதியிருக்கும் ஆத்மார்த்தமான கட்டுரை. இந்த கட்டுரை நிச்சயமாக சுனிலால் மட்டும் எழுதப்பட்டிருக்க முடியாது, அவருடைய ஆன்மாவும் , ஐந்து தலைமுறை வைத்திய குடும்பம் என்பதால் அவர் முன்னோர்களாலும் சரகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட நன்றியுரை போல தான் உள்ளது.

சுனிலுக்கு சுஸ்ருதரை விட சரகர் மேல் அலாதி பிரியம். நானோ சுஸ்ருதரை தொடர்பவன்இதை படித்து முடித்தவுடன் என் ஆசிரிய நிரையை மனதில் எண்ணிக்கொண்டேன், என்றேனும் சுஸ்ருதருக்கு இப்படி ஒரு கட்டுரையை சமர்ப்பணம் செய்துவிட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அப்படி ஒரு உற்சாகமான வாசிப்பனுபவம்.

இறுதி அத்யாயம்ஆரோக்கிய நிகேதனம்மற்றும்சுளுந்தீநாவலை முன்வைத்து இந்திய மருத்துவ முறையுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இலக்கியமும் மருத்துவமும் இணையும் பகுதி.

துறை சார்த்த நூல்களில் இருக்கும் பெரும் சவால், நீங்கள் பத்து நூல்களை படித்தால் மட்டுமே அதில்  மதிப்பு மிக்க ஒன்றை கண்டடைய முடியும். அதிலும் ஆயுர்வேதம் ,யோகம் போன்ற வணிகமும் மரபும் முட்டிக்கொண்டிருக்கும் துறைகளில் நூற்றுக்கு எண்பது புத்தகங்கள் ஏற்கனவே சொன்னவற்றை வெட்டி ஒட்டி அட்டைப்படமும் தலைப்பையும் மட்டும் மாற்றி சந்தை படுத்திக்கொண்டிருப்பவை, மீதி இருக்கும் இருபது நூல்களில் பதினெட்டு நூல்கள் உலகின் எல்லா அறிவும் இங்கிருந்தே வந்தது. எனும் பிரகடன நூல்கள், மிக அரிதாகவே உண்மைக்கு அருகில் ஒருசில நூல்கள் நிற்கின்றன அவை தொன்று தொட்டு கையளிக்கப் பட்டதால், அதை உணர்ந்து எழுதும் எழுத்தாளன் தன் ஆணவத்தை சிறிது நேரம் கழற்றி முன்னோர் காலடியில் வைத்துவிட்டு வெறும் கருவியாக நிற்கிறான். அந்த முன்னத்தி ஏர் இவனை உந்தி தள்ளி தனக்கானதை எழுதிக்கொள்கிறது.இந்த நூல் அப்படியான ஒன்று.

அன்புடன் 

செளந்தர் .G

முந்தைய கட்டுரைமைத்ரி விமர்சன அரங்கு- உரைகள்
அடுத்த கட்டுரைகே.பாலமுருகனின் தேவதைகளற்ற வீடு