அறமெனும் பரிசு

அன்புள்ள ஜெ

இணையத்தில் இந்த புகைப்படத்தைப் பார்த்தேன். முதல்வருக்கு அரசியல்வாதி ஒருவர் அறம் நூலைப் பரிசளிக்கிறார். இது எப்படி நடந்தது என்ற ஆச்சரியம் இருந்துகொண்டே இருக்கிறது.

கே. பிரபாகர் மருது

அறம் (தமிழ்)வாங்க 

Stories of the True வாங்க

அன்புள்ள பிரபாகர்,

அறம் மு.கருணாநிதி அவர்களுக்கு எஸ்.கே.பி.கருணா அவர்களால்   பரிசாக அளிக்கப்பட்டு அவரால் படிக்கப்பட்டிருக்கிறது. அவர் மேஜையில் அது இருக்கும் படமும் வெளியாகியிருக்கிறது. வெவ்வேறு ஆளுமைகளுக்கு அது பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதற்குமுன்புகூட ஒரு மாவட்ட ஆட்சியரால் அது முதல்வருக்குப் பரிசாக வழங்கப்பட்டது. அது ஒரு சிறந்த பரிசுப்பொருளாக கருதப்படுகிறது. திருமணங்களில், விழாக்களில், வெவ்வேறு அமைப்புகளின் நிகழ்வுகளில் அது தொடர்ச்சியாக பரிசாக வழங்கப்படுகிறது.

அது ஏன் பரிசாக வழங்கப்படுகிறது என்று என் கோவை நண்பர் ஒருவர் சொன்னார். ஒரு புத்தகத்தைப் பரிசாக வழங்கினால் அதை வாங்கியவர் எப்போதேனும் அதைப் படித்துவிட்டு, படித்ததைப் பற்றிச் சொல்லவேண்டும். அது வெறும் காகிதத்தொகுப்பாக, அடையாளமாக நின்றுவிடக்கூடாது. என் நூல்களில் அறம், சங்கசித்திரங்கள், பொன்னிறப்பாதை ஆகிய மூன்றுக்கும் அந்த தகுதி உண்டு. அவற்றைப் பெற்றவர்கள் ஒரு கதையாவது, கட்டுரையையாவது படிப்பார்கள். உடனே அழைப்பார்கள். பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் முதல் வாசிப்பனுபவமாக அத்தருணம் அமைந்துள்ளது.

அறம் இலக்கியவாசகர்களுக்கு மட்டும் உரிய நூல் அல்ல. இலக்கியவாசகன் அதன் ஆழத்து கட்டங்களை பலவகையிலும் கண்டடையலாம். யானைடாக்டர் படிக்கும் ஒரு பொதுவாசகர் டாக்டர் கே என்னும் ஆளுமையின் மாண்பையும் காடுகளின் அழிவையும் உணர்வார். இலக்கியவாசகர் அதில் புழுவுக்கும் யானைக்குமான ஓர் படிம உரையாடல் இருப்பதை கண்டடைந்து விரிவாக்கிக் கொள்வார். மிக அரிதாகவே நூல்கள் அத்தகைய இலக்கியத்தகுதியையும் பொதுவாசிப்புக்கான தகுதியையும் அடைகின்றன. அறம் அதிலொன்று. இன்று குமரித்துறைவி அத்தகைய ஒரு தகுதி கொண்ட நாவலாக உள்ளது.

அனைவராலும் உணரப்படும் எளிய விஷயங்கள் கூட அரசியல்நிறக்குருடு கொண்டவர்களுக்கு புரியாது. (இங்கே அரசியலென்பது பெரும்பாலும் சாதியும் மதமும்தான்)  அவர்கள் எதையும் தங்கள் அரசியலுக்குள் கொண்டுவந்தே புரிந்துகொள்வார்கள். அவர்களால் அறம் கதைகளில் திகழும் அடிப்படையான விழுமியங்களையும் உணர்வெழுச்சிகளையும் தொட்டறிய முடியாது. அவர்களால் அது எப்படி அரசியல் எல்லைகளை கடந்துசெல்கிறதென்பதையும் அறியமுடியாது. அத்தகையவர்களிடமிருந்து உங்களுக்கு வந்த வியப்பு இது என்று புரிந்துகொள்கிறேன்.

அறம் தொகுதியின் கதைகள் ஏன் எழுதப்பட்ட கணம் முதல் இன்றுவரை அதே தீவிரத்துடன் வாழ்கின்றன? ஒரே காரணம்தான், அவை பேசும் விழுமியங்கள் என்றுமுள்ளவை, இன்றைய காலகட்டத்தில் ஆழ்ந்த ஐயங்கள் அவற்றின்மேல் எழும் சூழலில் ஆழ்ந்த கவனத்திற்குரியவை.

என்னிடம் ஒருவர் கேட்டார்,  ‘நான் ஏன் சுயநலமாக இருக்கக் கூடாது? ஏன் அறத்துடன் இருக்கவேண்டும்? ஒரு காரணம் சொல்லமுடியுமா?’ இது ஒரு வழக்கமான கேள்வி. “இப்பல்லாம் எங்கசார் அறம்? எல்லாம் சுயநலமாப்போச்சு”

மாபெரும் போர்களும் பஞ்சங்களும் நிகழ்ந்த காலங்களைக் கடந்து வந்து இருநூறாண்டுகளாகவில்லை. மனிதர்களை மனிதர்கள் அடிமைகளாகப் பிடித்து விற்ற நாட்கள், மனிதர்களை மனிதர்கள் விலங்குகளாக நடத்திய நாட்கள் வழியாக வந்தே இந்தக் காலத்தை அடைந்துள்ளோம். அறம் அறம் என ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி அணுவணுவாக நகர்த்தி இங்கு வந்துள்ளோம். இனியும் முன்னகர்வோம்

அந்த நண்பருக்கு நான் சொன்னேன். “நீங்கள் அறத்துடன் இருக்கவேண்டியதில்லை என்றே கொள்வோம். ஆனால் உங்களைச் சூழ்ந்திருப்பவர்கள் அறத்துடன் இல்லை என்றால் நீங்கள் ஒருநாள்கூட வாழமுடியாது”

நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கடப்பதே அறம் என ஒன்று இங்கே திகழ்வதனால்தான். அறத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர் ‘இது நியாயமா?” என்று எந்நிலையிலும் எவரிடமும் கேட்கக்கூடாது. “இது நியாயமல்ல” என்று எந்நிலையிலும் எவரையும் கண்டிக்கக்கூடாது. எவரிடமும் எந்த நல்லெண்ணத்தையும் எதிர்பார்க்கக்கூடாது. அவ்வண்ணம் ஒரு மனிதர் இங்கே வாழமுடியுமா?

ஏழாம் உலகத்தில் மனிதர்களை விற்கும் போத்திவேலு பண்டாரம்கூடத்தான் “இது நியாயமா?” என்கிறார். அவருக்கும் அவர் செல்லும் தொலைவுக்கு ஓர் அறத்தின் எல்லை உள்ளது.

அறம் என்றும் பேசுபொருள்தான். ஏனென்றால் அது பேசிப்பேசி வளர்க்கப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒன்று. நாள்தோறும் வளர்ந்து விரிவாகிக்கொண்டிருப்பது. நாம் இங்கு வாழ்வது அதன்மேல்தான். அந்தக் காலடிநிலத்தைப் பற்றி பேசுவதனால்தான் அறம் என்றும் கவர்வதாக உள்ளது. இக்கதைகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு இதே வீரியத்துடன் நீடிக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைஆரணி குப்புசாமி முதலியார்
அடுத்த கட்டுரைகாந்தி காட்சிகள், காகா காலேகர் -பிரவீன்குமார்