பெருங்கை, கடிதங்கள்

பெருங்கை

அன்புள்ள ஜெ,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கேசவனின் பெருங்கையால் ஆசீர்வாதம். இதை விட சிறப்பான தொடக்கம் ஒரு புதிய ஆண்டுக்கு அமைந்து விட முடியமா என்ன? நீல வளையல்களை வைத்துக் கொண்டு கேசவன் ஆடும் விளையாட்டு, அழகும் குறும்பும் மிளிர்கின்ற கவிதை.

மலை மேல் பாறைகளின் அடியில் ஒட்டிக்கொண்டு  வாழும் மனிதர்கள் போல, கேசவன் அருகில் குடிலில் வாழும் அவன், அவனுக்கு ஒரு பெயர் கூட இல்லை கதையில். காட்சிகளும் உரையாடல்களும் கவிதையாய் வழிந்தோடுகிறது கதை முழுவதும். சில சமயம் ஒரு பஷீர்தன்மை வந்து விடுகிறது உங்கள் எழுத்தில். பஷீர் இந்த கதையை வாசித்தால் உங்களை கட்டி பிடித்து முத்தமிட்டு விடுவார்.

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் லஷ்மி என்றொரு யானை இருந்தது. சமீபத்தில்தான் இறந்தது. டிசம்பர் மாதம் காலண்டர் புகைப்படம் மாற்றும்போது, லஷ்மி யானையின் புகைப்படம் கண்டு திகைத்து விட்டேன். டிசம்பர் முழுவதும் லஷ்மியின் முகத்தை பார்த்தபடி ஒரு பித்து நிலைதான். ‘வலம் இடம்’ சிறுகதையில் தாய் எருமை இறந்தவுடன், வாழ்வா சாவா, வலமா இடமா என்று நடு வீதியில் நின்று தவிக்கும் போது, ஒரு புதிய எருமை கன்றுக்குட்டி வாயில் செம்பருத்தி கிளையை கவ்வியபடி துள்ளி குதித்து ஓடி வரும். வாழ்வில் நம்பிக்கையுடன் பற்றி கொள்ள சிறு செம்பருத்தி கிளை ஒன்று போதுமே. லஷ்மி யானையால் உருவான வெற்றிடத்தை கேசவனின் ஆசீர்வாதத்தால் நிரப்பிக்கொண்டேன்.

மிக்க நன்றி.

அன்புடன்,

வெற்றிராஜா

***

பெருங்கை. எவ்வளவு அழகான கதை! ஒரு யானையின் Feather touch. ‘பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும்’ என்ற குறுந்தொகை வரியை வெகு நேரம் அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். அந்த அசைவில் உள்ள பெருந்தன்மை. கவனம். ‘நசை பெரிது’.

ஆனால் இன்னொன்றும் சொல்ல வேண்டும். மீண்டும் கதையின் முதல் வரியை படிக்கும் போது ஒரு சின்ன நடுக்கம் ஏற்பட்டது. “கேசவன் எப்போது வேண்டுமானாலும் ராத்திரியைக் கொண்டுவரக்கூடியவன்.” கதை முழுவதும் யானையின் இருட்டு எப்படியெல்லாம் உருமாறிக்கொண்டே வருகிறது என்பது தான் எனக்கு இந்தக் கதையின் மாயம். அந்த டிவினிட்டி சிலிர்க்க வைக்கிறது. யானை ஒரு தெய்வம்.

சுசித்ரா

***

அன்புள்ள ஜெ

பெருங்கை ஓர் அழகான கதை. ஒரு புத்தாண்டில் ஒரு நல்ல கதையுடன் தொடங்குவதே அழகானது. நான் இந்த ஃபேஸ்புக் நடையில் எழுதப்படும் சுருக்கமான சம்பவக்கதைகளைக் கண்டு சலித்துப்போயிருந்தேன். இந்தக்கதையிலுள்ள ’டீடெயில்’ எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஒரு நாவலுக்குரிய முழுவாழ்க்கைக் களமும் கதையில் இருந்தது. முழுமையான கதாபாத்திரங்கள். ஒரு முழுசினிமாவாகவே இந்தக்கதையை எடுக்கலாம். இதில் கதைநாயகனின் சப்கான்ஷியஸ் அல்லது soul தான் யானை. அவனுக்குள் இருக்கும் பெரிய ஒருவனின் கைதான் யானையின் தும்பிக்கை.

செல்வக்குமார்

முந்தைய கட்டுரைமுதுநாவல், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅ.மா.சாமி