பெருங்கை, கடிதங்கள்

பெருங்கை

அன்பு ஜெ,

இந்தச் சிறுகதையில் இழையோடும் மெல்லிய காதல் இனிமையானது. சொல்லுவதற்கு முந்தய கணம் வரை இருவருக்கும்  இருக்கும் தத்தளிப்பே கதையை நகர்த்திச் செல்கிறது. “கொண்டு குடு மக்கா. ஒன்ன எனக்கு சீவனாக்கும்னு சொல்லுததுக்கு வளவி குடுக்கறது மாதிரி வளி ஒண்ணுமில்ல” என்று அவனிடம் சொல்லப்பட்ட இடம் உணர்வுப்பூர்வமாக இருந்தது. இறுதியில் கையில் வளையல் வாங்கிக் கொண்ட அவளின் புன்னகைக்குப் பின், கதையின் ஆரம்பத்திலிருந்து அவள் அவனிடம் நடந்து கொண்ட யாவுமே இன்னொரு படி உணர்வைக் கூட்டி விடுகிறது. இந்த ஆண்டில் நான் வாசித்த முதல் புனைவு “பெருங்கை”.

பெருங்கையின் கேசவன் வழி ஒரு கணம் புனைவுக் களியாட்டு கோபாலகிருஷ்ணனை சென்று தொட்டு வந்தேன். இருவரின் ஆன்மாவும் ஒன்று தான். முதன் முதலாக அவனை “ஆனையில்லா” சிறுகதையில் தான் சந்தித்தேன். பிரம்மாண்டம், மலைப்பு, பயத்தைத் தாண்டி யானைகளைக் கண்டவுடன் குழந்தை போல மனம் துள்ள ஆரம்பித்தது கோபாலகிஷ்ணனை புனைவில் சந்தித்த பின்பு தான். அவன் வரும் கதைகளிலுள்ள மனிதர்கள் மட்டும் கூடுதலான கள்ளமின்மையை ஒளித்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றும். சொற்களுக்கு இடமில்லாத அவனைச் சுற்றி சொற்களாலும் எண்ணங்களாலும் அலைக்கழியும் மனிதர்கள். அவன் இருக்கும் இடத்தில் யாவும் அவனை மையமாகக் கொண்டே சுழல்வது போல மிக இயல்பாக கதைகள் அமைந்திருக்கும். அவனை அப்புனைவின் மனிதர்கள் குழந்தையாய் பாவிப்பதற்கு இணையாகவே கோபால கிஷ்ணன் “பாவம் எளிய மானுடர்கள்” என்ற சிந்தனையை அவர்கள் மேல் கைக் கொண்டிருப்பது போலத் தோன்றும்.  ஆட்கள் கஷ்டப்பட்டு எடுத்துவைக்க முற்பட்டுக் கொண்டிருக்கும் கேட்டை போகிற போக்கில் கோபாலகிருஷ்ணன் தூக்கி நிறுத்தி விட்டுப் போகும் ஒரு தருணத்தைச் சொல்லியிருப்பீர்கள். அந்த இடம் கேசவன் பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திலுள்ள கற்களை இயல்பாக எடுத்து வைக்கும்போது ஞாபகம் வந்தது.

வளையலை கேசவன் சந்திரியின் கையில் கொடுக்கும் உச்சமான தருணத்தில் “ஏலெ ஆனைக்க கை உனக்க கையில்லா?… இந்தப்பெருங்கையைக் கொஞ்சம் கொடுலே நாலு கல்லத்தூக்கி வெச்சிட்டுபோட்டும்.” என்ற வாத்தியாரின் சொல் வழி அதன் பெருங்கையையும், அது அவனின் கையாகவும் இருப்பதை உணர முடிந்தது. அந்தக் கைகளில் தன் எடையை, மன சஞ்சலத்தை என யாவையும் வைத்து விடுகிறான் என்றே பட்டது.

புனைவுக்களியாட்டு சிறுகதைகளுக்குப் பின் உங்களையும் அப்புனைவிடங்களையும் அணுக்கமாக்கிக் கொள்ளவே கன்னியாகுமரி- நாகர்கோயில் பயணம் செய்தேன். அந்தப் பயணத்தில் திற்பரப்பு அருவி நோக்கி சென்று கொண்டிருந்தபோது பின்னால் கூச்சல் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது மலைத்து ஒதுங்கி விட்டேன். கோபலகிஷ்ணனே தான் என்று மனம் அரற்றிக் கொள்ளுமளவு அவனை பாகனுடன் மிக அருகில் அங்கு பார்த்தேன். பெருங்கையே தான் ஜெ.

பிரேமையுடன்

ரம்யா.

***

அன்புள்ள ஜெ

இருட்டையும், பகலையும் உருவாக்குபவன் கேசவன் என்ற வரியே கேசவன்தான் அந்த பாகனுடைய தெய்வம் என்று காட்டிவிடுகிறது. அவன் செய்வது ஒரு தெய்வத்துக்கான பணிவிடையைத்தான். மனிதர்களுக்கு மிகப்பெரிய பாரம் எல்லாம் தெய்வத்துக்கு சின்ன விளையாட்டு. எல்லாமே விளையாட்டுதான் கேசவனுக்கு. கூழாங்கல்லை பொறுக்கி வாயில்போடுவது முல்லைப்பூவை பொறுக்கி கொடுப்பது கல்தூண்களை தூக்கிவைப்பது. அதேபோலத்தான் அந்த வளையலையும் கொடுக்கிறது. அதுதான் மனிதவாழ்க்கையில் தெய்வம் தலையிடும் தருணம். தெய்வத்தின் பெருங்கை.

ஜி.குமார்

***

முந்தைய கட்டுரைஅட்டையும் தாளும்
அடுத்த கட்டுரைசிரிப்பின் கலை -கடிதங்கள்