யார் சார் வாசிக்கிறாங்க இப்பல்லாம்?

வெண்முரசு நூல்கள் வாங்க

Stories of the True : Translated from the Tamil by Priyamvada

2022 ஆம் ஆண்டில் என்னென்ன நூல்களை வாசித்தேன் என்று தோராயமாக பார்த்தேன். ஒருமாதிரி நெஞ்சடைத்தது. வாசித்து தள்ளியிருக்கிறேன். ஏற்கனவே நான் வாசிப்பாளன், இப்போது தமிழ் விக்கி வாசிப்புக்கான ஒரு சாக்கு. தமிழ் விக்கியில் உள்ள எல்லா பதிவுகளையும் வாசித்திருக்கிறேன். அதைவிட, அதன்பொருட்டு தொடர்புள்ள பலநூல்களை வாசித்திருக்கிறேன்.

இவ்வாண்டு பதினெட்டாம்நூற்றாண்டு புராணங்கள் மட்டும் பன்னிரண்டு வாசித்திருக்கிறேன். சுருக்கமான வாழ்க்கை வரலாறுகள் முந்நூறுக்கும் மேல். பல நூல்களை நாற்பது நிமிடங்களுக்குள் வாசித்திருக்கிறேன். தமிழில் கட்டுரைநூல்கள் மிக தொய்வான நடையில், திரும்பத்திரும்ப வரும் சொற்றொடர்களுடன், தேய்வழக்குகளுடன் அமைந்துள்ளன. என் வாசிப்பென்பது ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை அப்படியே ஆயிரம் அல்லது இரண்டாயிரம் வார்த்தைகளுக்குள் ஒரு கலைக்களஞ்சியப் பதிவாக ஆக்கிவிடுவது. எனக்கு முன்னரே அதுதான் வழக்கம். எழுதினாலொழிய எனக்குள் ஒரு அறிதல் சுருங்கி, செறிவாகி என்னுடையதாக ஆவதில்லை.

தொல்நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் தவிர வாசித்தவை வணிகநாவல்கள். பெரும்பாலும் அவற்றைப் பற்றிய குறிப்புகளுக்காக.நாளுக்கொரு நூலாவது வாசித்திருப்பேன் என நினைக்கிறேன். ஆச்சரியமான ஒரு புரிதல் வந்தது. பழைய வார இதழ் தொடர்கதைகளை நூல்வடிவமாக வாசிக்கும்போது அவை எத்தனை சுருக்கமானவை என வியப்பேற்படுகிறது. ஒரு வாரத்துக்கான ஓர் அத்தியாயம் சாதாரணமாக ஆயிரம் வார்த்தைகள், பலசமயம் எழுநூறு வார்த்தைகள். (வெண்முரசின் எல்லா அத்தியாயங்களும் சராசரியாக இரண்டாயிரம் வார்த்தைகள்) ஆகவே ஓராண்டு முழுக்க வெளிவந்த ஒரு நாவலை ஒரு மணிநேரத்தில் வாசிக்கமுடியும். நான் வாசந்தி எழுதிய எட்டு நாவல்களை ஒரே ரயில்பயணத்தில் வாசித்து முடித்தேன்.

வெண்முரசு முடிந்தபின் அமெரிக்கா சென்றிருந்தபோது ஒரு நண்பர் என்னிடம் ‘25000 பக்கம் சார், யார் எதிர்காலத்திலே வாசிப்பாங்க?” என்றார்

”ஏன்?” என்றேன்

“இது அவசர யுகம்சார். இப்பல்லாம் எல்லாரும் சுருக்கமா, நூறு வார்த்தைகளுக்குள்ள இருந்தாத்தான் வாசிக்கிறாங்க” என்றார்.

நான்  “அப்படியா?” என்று கேட்டுவிட்டு அப்படியே விட்டுவிட்டேன்.

அன்று மாலை ஒரு விருந்து. விவேக் என்னும் நண்பரின் இல்லத்தில். அவருடைய 6 வயது மகள் என்னிடம் வந்து அவள் வாசித்த நூல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அமெரிக்கக் குழந்தைகளிடம் நம்மூர் குழந்தைகளிடம் இருக்கும் தயக்கம் இருப்பதில்லை. “ஜெயமோகன் தாத்தா, யூ நோ இன் திஸ் புக்…” என ஓயாத பேச்சு. அவள் வாசித்த புத்தகத்தை எனக்குக் காட்டினாள். முழுக்க எழுத்துக்களாலான முந்நூறு பக்க புத்தகம்.

“இத எப்ப்போது ஆரம்பித்தாய்?” என்றேன்.

“நேற்று… இன்றைக்கு முடிப்பேன்”

என்னருகே அந்த நண்பர் அமர்ந்திருந்தார். நான் அவரைப் பார்த்தேன், அவர் கொஞ்சம் திகைத்தவர்போலிருந்தார்.

அந்த குழந்தைதான் Stories Of the True நூலுக்கு ஒரு மதிப்புரை பேசி அனுப்பிய வர்ஷா.

திரும்பும்போது அந்நண்பர் சொன்னார் “என் பையன் படிக்கிறதே இல்லை சார்”

“எல்லா குழந்தைகளும் படிக்க வாய்ப்பில்லை. ஆனால் படிக்கிற குழந்தை என்றால் இந்தக் காலத்தில் அதுக்கு பக்க எண்ணிக்கை ஒரு கணக்கே இல்லை. என் அப்பா தலைமுறையை விட நான் வாசிச்ச வேகமும் பக்கங்களும் ஜாஸ்தி. என்னை விட என் மகனும் மகளும் வாசிக்கிற வேகமும் பக்கங்களும் ஜாஸ்தி…அது கூடிட்டேதான் போகும்” என்றேன்

”நீட்டி அடிச்சா கம்பராமாயணம் பொன்னியின் செல்வனிலே ஒரு பகுதிக்குத்தான் வரும். வெண்முரசு பொன்னியின் செல்வன் மாதிரி ஏழு மடங்கு….என்ன காரணம்? தொழில்நுட்பம். அது உருவாக்குற எழுதுற, வெளியிடுற, வாசிக்கிற வசதி” என்றேன். “மனுஷ மனசோட வேகம் ஜாஸ்தியாகிட்டே போகுது. விளையாட்டுகள், கேளிக்கைகள்லாம் அந்த வேகத்தை எட்டிப்பிடிக்கணும்னு ஓடுது. அந்த விளையாட்டுக்கள் கேளிக்கைகள் வழியாகவே மனுஷ மனம் இன்னும் வேகமா ஓடக்கத்துக்கிடுது… உங்க மகன் கம்ப்யூட்டர்கேம் ஆடுவானா?”

“ஆமா”

“அவன் ஆடுற வேகத்தை போன தலைமுறையிலே நினைச்சே பாக்கமுடியாது” என்று நான் சொன்னேன். “வாசிப்பும் அதைப்போலத்தான். எந்த ஒரு சமூகத்திலும் அறிவார்ந்த ஒரு வட்டம், கிரீம் மட்டும்தான் வாசிக்கும். நம்மூர்ல அது லட்சத்திலே நாலஞ்சுபேர். இங்கே அது நூத்துக்கு நாலஞ்சுபேர். அதான் இவங்க இப்டி இருக்காங்க, நாம அப்டி இருக்கோம்”

அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை

“வெண்முரசு யாருக்குன்னு கேட்டீங்கள்ல? இந்த பொண்ணுமாதிரி குழந்தைகளுக்காகத்தான்…அவங்களுக்கு இதெல்லாம் பத்தாது…அதிகம்போனா ஒருமாசத்திலே படிச்சிருவாங்க… இதை சுருக்கி ஞாபகம் வைச்சுக்கிற நவீன வழிமுறைகளும் அவங்களுக்குத் தெரியும்”

வெண்முரசின் இன்றைய தலைமுறை வாசகர்களைப் பார்க்கிறேன். பெரும்பாலானவர்கள் வெண்முரசு 2014 ல் தொடங்கப்பட்டபோது பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் மிகவிரைவாக படித்து முடித்துவிடுகிறார்கள். சென்ற சில மாதங்களாகவே எனக்கு வாசகர்களின் அழுத்தம் கூடி வருகிறது. நான் புனைவு எழுதி நாளாகிறது என்கிறார்கள். “படிக்க ஒண்ணுமே இல்லை சார்” என்னும் கோரிக்கையை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

வெண்முரசு எழுதும்போது அதை எளிதில் கடந்துவிடமுடியாத ஒரு சொல்வெளி என்னும் எண்ணம் எனக்கிருந்தது. அதை உடைத்த நண்பர் யோகேஸ்வரன் ராமநாதன். கணிப்பொறியாளரான அவர் வெண்முரசை வாசிப்பதற்காக வேலையை விட்டுவிட்டு ஆறுமாதக்காலம் மாயவரத்தருகே தலைச்சங்காடு என்னும் தன் ஊரில் அமர்ந்து ஒரே மூச்சில் படித்து வந்து எட்டிவிட்டு அடுத்த வேலையை தேடிக்கொண்டார். என்னால் அதை நினைத்தே பார்க்கமுடியவில்லை. வேறு யுகம், வேறுவகை வேகங்கள். சூர்யகுமார் என்னும் இளைஞரை விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்தேன். வெண்முரசு வாசிக்கப்போறேன் சார் என்றார். பதினைந்து நாட்கள் ஆகவில்லை. நான்காவது பெருநாவலை முடித்துவிட்டதாக கடிதம் போட்டிருக்கிறார். இன்று இன்னொரு கடிதம், சோழராஜா என்னும் கல்லூரி மாணவர் எழுதியது.

பக்கங்களைக் கண்டு மலைப்பவர்கள் எவர் என பார்க்கிறேன். கொஞ்சம் வயது முதிர்ந்தவர்கள். வார இதழ்களில் எழுநூறு வார்த்தைகொண்ட ஓர் அத்தியாயத்தை ஒரு வாரம் வைத்து வாசித்தவர்கள். இருநூறு பக்க நூலை பெரிய நூல் என நினைத்துப் பழகியவர்கள். இப்போது வாசிப்பை பெரும்பாலும் நிறுத்திவிட்டவர்கள். இன்னொரு சாரார், பொதுவாக வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்கள்.

நான் நிறைவடைய இரண்டு விஷயங்கள். கன்யாகுமரி எக்ஸ்பிரஸுக்காக காத்து நாகர்கோயில் ரயில்நிலையத்தில் நின்றிருந்த நாற்பத்தைந்து நிமிடங்களில் நான் ஒரு நாவலை முடித்து திரும்ப பைக்குள் வைத்துக்கொண்டேன். 25000 பக்கம் எழுதியிருக்கிறேன். இரண்டுவகையிலும் உருவாகி வரும் தலைமுறையுடன் இருக்கிறேன்.

யாருக்காக ?

அறம், ஆங்கில விமர்சனம்

முந்தைய கட்டுரைகொத்தமங்கலம் சீனு 
அடுத்த கட்டுரைஎழுகதிரும் சினிமாவும்