யோக முகாம், கடிதம்

அன்பிற்கினிய  ஜெயமோகன்,

அந்தியூர்  யோகப் பயிற்சி முகாமுக்கு பெயர் கொடுத்த பின்,  செல்ல முடியாமல் போய் விடுமோ என்ற கவலை இருந்து கொண்டேயிருந்தது. அதற்கேற்றாற்போல் வகுப்பு தொடங்குமுன்  இரண்டு நாட்கள் கடுமையான உடல் வலி மற்றும் தலைவலி. மருந்துகள் எடுத்துவிட்டுதான் பேருந்து ஏறினேன்.

ஆனால் முகாம் வந்து சேர்ந்ததும்  அப்படி ஒரு உடல் வலி இருந்தது நினைவில் எழவே இல்லை. சிரிப்பும் கொண்டாட்டமும் தான்!

யோகப் பயிற்சி வகுப்புகள், மிக அருமையாக கட்டமைக்கப்பட்டிருந்தது.  ஆசிரியர் அவர்கள் அடிப்படை விளக்கங்களை  எளிமையாகவும்  தெளிவாகவும் அழகு தமிழில் விளக்கினார். வகுப்புகளில் இப்படி தூய தமிழ் கேட்டு நெடு நாள் ஆகி விட்டது.  மற்ற மரபுகளை, குறிப்பாக  நவீன மருத்துவத்தை அவர் discount செய்யவில்லை. அதுவே இந்த யோகப்பயிற்சியின் மேல் மிகுந்த மதிப்பை உருவாக்கியது .

எந்த ஒரு அமர்வும் ஒன்றரை நேரத்திற்கு மேல் இல்லை. போதுமான இடைவேளை கொடுக்கப்பட்டது.மூன்று நாள் வகுப்புகளிலும் Learning மட்டும்தான் இருந்தது, Training என்பது இல்லை. தொடர்ந்து பயிற்சி செய்வது ஒருவரின் சுய ஒழுக்கத்தில் வருவது என்பது சொல்லாமல் சொல்லப்பட்டது.

சனிக்கிழமை காலை வகுப்பை எப்போது தொடங்கலாம் என்று ஆசிரியர் கேட்டபோது, காலையில் குளித்துவிட்டு வர வேண்டுமா என்று எதிர்க்கேள்வி கேட்கப்பட்டது. அப்படியெல்லாம் அவசியம் இல்லை என்று ஆசிரியர் சொல்லிவிட்டதால் (ஆஹா..இவரல்லவா ஆசிரியர்!)  அடுத்த நாள் காலை குளிரில் ஏழு மணிக்கே வகுப்புகள் தொடங்கியது.

ஞாயிறு காலை பைபிள் வசனத்துடன் வகுப்பைத் தொடங்கியது ஒரு முத்தாய்ப்பு!

வெள்ளி சனி இரவுகளில் உணவுக்குப்பின் எங்கள் அறையில் தி.ஜானகிராமன், ஆதவன், ப.சிங்காரம்  முதல் ஆல்பெர் காம்யு, நீகாஸ் கசந்த்சாகீஸ் வரை பல்வேறு எழுத்தாளர்கள் அலசப்பட்டார்கள். உண்மையிலேயே, இப்படி ஒரு வாய்ப்பு அமைவது அரிதினும் அரிது. அந்த இரவுகள் எங்களுக்கு அருளப்பட்டவை!

முகாமில் இருந்த நூலகம் தாறுமாறாகப் பயன்படுத்தப்பட்டது. நான் லயன் காமிக்ஸ் -இல் ஒரு புத்தகம் படித்தேன். 1960 – களில் கல்கி இதழில் அரு .ராமநாதன் எழுதி தொடர்கதையாக வந்த  குண்டுமல்லிகை  bind செய்யப்பட்டு கிடைத்தது. அதில் இருந்த துணுக்குகள் வழி கல்கி இதழ் ராஜாஜியின் சுதந்திராக் கட்சியின் பக்கம் சாய்ந்திருந்தது தெரிகிறது.

ஒரு மதிய வேளையில் மகாபாரதம் படங்களாக விரிந்த ஒரு புத்தகத்தை வைத்து நண்பர் ஒருவர் குழந்தைகளுக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தார். அதில் பீஷ்மர் திருதராஷ்டிரனுக்கும் , பாண்டுவுக்கும்  பெண் தேடி அம்பை, அம்பிகை, அம்பாலிகையை  சிறையெடுக்கச் சென்று கொண்டிருந்தார்.

மூன்று நாட்களிலும் வழங்கப்பட்ட உணவைப்பற்றிச் சொல்லியாக வேண்டும்.  எந்த ஒரு உயர்தர சைவ உணவகத்தையும் விட  மிக மிக சுவையான உணவு.  பல வகை உணவுகளை கொடுத்து தேர்வு செய்யும் வாய்ப்பை உண்பவனுக்கு கொடுக்கா விட்டாலே, உணவு சுவையாகி விடக்கூடும் என்று தோன்றுகிறது.

அந்தியூர் மணியண்ணன் மிகச் சிறப்பாக  இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது மட்டுமன்றி , நிறைய இலக்கியம் பேசினார். அவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல.  அரசியல் மேடைப்பேச்சுக்குரிய குரல் அவருடையது!

ஐயமே இல்லை, இந்த முகாமில் கலந்து கொண்ட எல்லோருக்குமே இனிய நினைவுகளாக மட்டுமே இந்த அனுபவம் இருக்கும்.

இதை நிகழ்த்திட உதவிய அனைவருக்கும் நன்றி!

அன்புடன்
உதயசங்கர்

அன்புள்ள உதயசங்கர்

சென்ற ஆண்டில் நண்பர்களுடன் பேசி முடிவெடுத்த ஒன்று இந்நிகழ்வுத்தொடர்.இந்நிகழ்வுகளின் நோக்கம் என்பது ஒரு நண்பர்குழாமை உருவாக்குவதுதான். கொரோனா காலகட்டத்தின் சோர்வு, தனிமை, அவநம்பிக்கை ஆகியவற்றை வெல்ல நண்பர்களை நாளும் இணையத்தில் சந்தித்ததும், பலவகை கூட்டுச்செயல்பாடுகளும் உதவின. இணையான ரசனைகொண்ட நநண்பர்களின் கூட்டம் இன்று இலக்கியம், ஆன்மிகம் அனைத்துக்கும் தேவையாகிறது. ஏனென்றால் வாசிப்பதனாலேயே, சிலவற்றை தேடுவதனாலேயே நாம் தனிமைகொண்டிருக்கிறோம். அத்தனிமையை வெல்லவே இந்தக் கூடுகைகள். அந்நட்புச்சூழல் அளிக்கும் மகிழ்வு புதியவை கற்க மிக உதவியான ஒன்று

ஜெ

சௌந்தரும் நானும்…

முந்தைய கட்டுரைதத்துவக் கல்வி, கடிதம்
அடுத்த கட்டுரைMasterly! – An Interview with Jeyamohan