அன்பு, இலக்கியம் – ஓர் எதிர்வினை

விஷால்ராஜா

இடைவெளியும் தொடர்ச்சியும்- விஷால் ராஜா

ஓராண்டு- ரம்யா

அன்புள்ள ஜெ,

புதுவருடப் பிறப்பின்போது இயல்பாகவே நம்பிக்கை வந்து சூழ்ந்துகொள்கிறது. புதிய தொடக்கத்தை உற்சாகத்துடன் அணுகுகிறேன். கோடை விடுமுறை முடிந்து முதல்முறை பெரிய வகுப்புக்கு போகும் சிறுவன் போல. அதே மிடுக்கு. அதே எதிர்பார்ப்பு. சாத்தியம்தானே கற்பனையின் முதல் வாசல். எனவே இந்த புத்தாண்டிலும் அழகிய கனவுகளோடு நுழைகிறேன். ஆசிரியருக்கு, புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இப்போது, ஒரு பதில்.

உங்கள் தளத்தில் இரம்யா எழுதிய பதிவை வாசித்தேன். சில விஷயங்களை தெளிவுப்படுத்த வேண்டும் என தோன்றியது. இன்னொரு கோணமும் பதிவாகட்டுமே என்பதற்காக.

இரம்யா தன் பதிவில் நிறைய விஷயங்களை தொட்டுச் செல்கிறார். அறிவு, அன்பு, பெண்த் தன்மை, தேடல் என்று கலவையான பேசுபொருட்களை அதில் குறிப்பிடப்படுகின்றன. இப்படி பலவற்றை ஒரே இடத்தில் சேர்க்கும்போது, குழப்பமான முடிச்சுகள் விழுந்துவிடுவதோடு ரொம்ப எளியான கேள்விகள்கூட சிக்கலானவை போல் தெரிய ஆரம்பித்துவிடும். நேரடி பதில்கள்கூட கண்ணில் படாமல் போகும்.

என்னுடைய கட்டுரையில் அன்புக்கும் பரிவுக்கும் நடுவிலான வேறுபாட்டை சுட்டிக் காட்டியிருக்கிறேன். ஆனால் அந்த வேறுபாட்டினை அறிவின் தரப்பிலிருந்து நான் செய்யவில்லை. அப்படி புரிந்துகொள்வது பிழை. “அன்பை தரவும் பெறவும், நம்மில் ஒரு பகுதியை இழக்க வேண்டிவருகிறது. அதற்கான துணிச்சல் இக்கதைகளில் வெளிப்படவில்லை” ௲ இதுதான் நான் சொல்லியிருப்பது. தன்னை இழப்பதற்கான துணிச்சல் என்பது அறிவுக்கே எதிரான நிலைப்பாடு. எனவே, அந்த இடத்தில் முழுமையாக, வாழ்க்கை அனுபவத்தின் தரப்பிலிருந்தே நான் பேசுகிறேன். நான் கோருவது அனுபவ சாட்சியினையே. அன்பை போதிப்பது வேறு. அன்பை பயில்வது வேறு. இரண்டுக்கும் நடுவே இருக்கும் வித்தியாசத்தையே நான் சுட்ட முயற்சிக்கிறேன்.

அன்பு, பரிவுப் போன்ற அந்தரங்கமான உணர்ச்சிகளை பகுப்பது கடினம். மதிப்பிடுவதோ இன்னும் சவாலானது. எனவே “இரண்டையும் எதை வைத்து பிரிக்கிறீர்கள்?” எனும் கேள்வியின் நியாயத்தை நான் முழுமையாக புரிந்து கொள்கிறேன். அதே நேரம் இலக்கிய உரையாடல் என்பதே தனிமனிதனின் ரசனையை பகிர்வதே. இன்னொரு வாசகனும் தன்னைப் போலவே உணர்ந்திருப்பான் எனும் நம்பிக்கையில் கருத்தை முன்வைப்பது. அதையே ஜேம்ஸ் வுட் வாசிப்பின் ஒற்றுமை (Sameness) என்கிறார். ஒரேயொரு நிர்பந்தம், தனிமனித ரசனை அழகியல் மரபை சந்திக்க வேண்டும்.  இலக்கியம் செயல்படும் வழியிலேயே வாசிப்பும் செயல்படுவதால் இந்த நிர்பந்தம் உருவாகிறது. ஆம் என்றால் ஆம். இல்லை என்றால் இல்லை. அவ்வளவுதான். எனவே அந்த சட்டகத்திற்கு வெளியே நின்று அன்பு, பரிவு மட்டுமில்லாமல் எந்த இலக்கிய கருத்துருவம் பற்றியும் பேச முடியாது. கனவும் யதார்த்தமும் முயங்கும் இலக்கியத்தில் இந்த வரையறையை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

“இக்கதைகளில் அன்பு இருப்பதுப் போல தெரியவில்லை” என்று சொல்லப்படும் கருத்தை, “இந்த உலகில் அன்புக்கே இடம் இல்லையா?” என்று மடை மாற்றிவிட்டால், உரையாடல் நீர்த்துவிடும். அப்புறம் அன்பை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு உணர்ச்சிவசப்பட நேரும். அன்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி அவசியமில்லாத இடங்களில் எல்லாம் ஒருவர் அன்பை நிரூபிக்க ஆரம்பித்தால், அன்பு தன் முக்கியத்துவத்தையே இழந்துவிடும். இக்கதைகள் மேல் நான் வைக்கும் குற்றச்சாட்டுமே அதுதான். அரியப் பொருளை தெருவில் தொலைக்கலாமா என்பதே கேள்வி.

இலக்கிய உரையாடலில் விமர்சனக் கருத்துக்களை முன்வைக்கும்போது உடனடியாக வரக் கூடிய இரண்டு கேள்விகள்.
“இலக்கியத்தை இப்படி தர்க்கபூர்வமாக அணுகலாமா?”
“தனிமனிதனின் ரசனையை எப்படி பொதுமைப்படுத்தலாம்?”

எனக்கு தெரிந்து, ஜெ, நீங்கள் இக்கேள்விகளுக்கு எண்ணற்ற முறை பதிலளித்துவிட்டீர்கள். ஆனால் இக்கேள்விகள் திரும்ப திரும்ப மாறு வேஷங்களில் தோன்றியபடி உள்ளன. என் எல்லைக்குள் நின்று, நான் தேடி அறிந்த பதில்களையும் சொல்லி வைக்கிறேன்.

இலக்கிய அனுபவம் தர்க்கவெளியில் நிகழ்வதில்லை என்பதே என் மாறாத நம்பிக்கை. எனில் தர்க்கம் எங்கே வருகிறது? இலக்கிய
அனுபவம் நிகழாதபோதுதான் தர்க்கம் எட்டி பார்க்கிறது. யாரும் இலக்கிய அனுபவத்தில் தன்னை இழக்காமல் இல்லை.
புனைவுவெளிக்குள் தர்க்கத்துடனும் அலையவுமில்லை. மாறாக, ஏன் இலக்கிய அனுபவம் நிகழவில்லை என்பதையே தர்க்கத்தினால் விளக்க முற்படுகிறோம்.

ஒரு நல்ல கதையை கவித்துவமான மொழிபு வழியே -அறிவின் நேரடி துணையில்லாமல்- நாம் எதிர்கொள்ள முடியும். ஒரு சுமாரான கதையை எப்படி எதிர்கொள்வது? அங்கேதான் தர்க்கத்திடம் போகிறோம். அந்த அடிப்படையிலேயே “இடைவெளியும் தொடர்ச்சியும்” கட்டுரையில் ஒரு வரிசைப்படுத்தலையும் கொடுத்திருக்கிறேன். “கதைகளில் தென்படும் அவசியமில்லாத அலைபாய்தல், கவனம் கோராத மொழி, பொதுபுத்தியின் எல்லையை மீறாத பரிவுணர்ச்சி” ௲ இங்கிருந்தே அன்பு மற்றும் பரிவு சார்ந்த உரையாடலுக்கு நான் முன்நகர்கிறேன். என் கருத்து ஏற்பிற்குரியதா அல்லது விமர்சனத்திற்குரியதா என்பது வேறு விவாதம். ஆனால் உரையாடலின் முறைமையை தன் வசதிக்கேற்ப வளைத்துவிடக்கூடாது. முதலில் அனுபவம். அது நிகழாதபோது தர்க்கத்தின் இடையீடு. இதுதான் என் முறைமை.

இரண்டாவதாக, இலக்கிய அனுபவத்தினை தனிமனித ரசனை எனும் அளவில் குறுக்கிவிட்டால் மதிப்பீடு என்பதே இல்லாமல் ஆகிவிடுகிறது. கலாச்சாரக் கோட்பாட்டாளர்கள் பல நேரங்களில் அப்படி செய்வதுண்டு. போலவே, ரசனையாளர்களாக தம்மை முன்வைப்பர்களிடமும் மதிப்பீடு சார்ந்த விலக்கம் இருப்பதை கவனித்திருக்கிறேன். இலக்கியத்தில் விளக்கவே முடியாத மர்மமான இடமொன்று உள்ளது. அந்த இடத்தை கோட்பாட்டாளர்கள் அரசியல், கலாச்சாரம், மொழி முதலியவற்றால் ரத்து செய்கிறார்கள் என்றால், சில ரசனையாளர்களோ அங்கே ஒரு நாற்காலியைப் போட்டு தான் உட்கார்ந்துவிட முடியுமா என்று பார்க்கிறார்கள். இரண்டுமே அபாயமானது. தெய்வத்திற்குரியது தெய்வத்திற்கே என்பதே என் நிலைப்பாடு. ஆனால் இந்த விஷயத்தில், கோட்பாட்டாளர்கள் விமர்சிக்கப்படும் அளவுக்கு ரசனையாளர்கள் ஏனோ விமர்சிக்கப்படுவதில்லை. அறிவின் இடைவெளியையும், அறியாமையின் இடைவெளியையும் ஒரே மாதிரி அணுகும் இடத்திற்கு இனி நாம் போக வேண்டுமோ என்னவோ.

ஏற்கனவே சொன்னது போல, அழகியல் மரபும் தனிமனித ரசனையும் சந்திக்கும் புள்ளியிலேயே இலக்கியம் சார்ந்த மதிப்பீடு நிகழ்கிறது. ஏனென்றால் தனிமனித உணர்ச்சி என்பது அநித்தியமானது. இடம், சூழல் பொருத்து மாறுபடுவது. ஒருவர் மெகா சீரியல் பார்த்து உண்மையாகவே துடித்து கண்ணீர் விட முடியும். அந்த கண்ணீரையே நாம் கலையை மதிப்பிடும் அளவுகோலாக கொள்ள முடியுமா என்ன? யோசித்து பாருங்கள். வைரமுத்து கவிதைகளை படித்து உருகுபவர்களை மேட்டிமை நோக்குடன் கடக்கும் நவீன இலக்கிய வாசகன், தன்னுடைய உணர்ச்சியை மட்டும் கண்ணாடிப் பொருள் போல பாதுகாப்பானாயின், அது இரட்டை வேடமில்லையா?

அத்துடன், இலக்கியத்தை இலக்கிய கருவிகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும். கதையில் கதாபாத்திரம் உதிர்க்கும் கருத்தையோ அல்லது மேடையில் எழுத்தாளர் முன்வைக்கும் பிம்பத்தையோ ஆதாரமாகக் கொண்டு பேச முடியாது. ஓர் எழுத்தாளர் தன்னை பற்றியும் தன் படைப்புலகம் பற்றி பல கருத்துக்களையும், பல நம்பிக்கைக்களையும் உருவாக்கி வைத்திருக்க முடியும். அவற்றை அப்படியே எதிரொலிப்பது இலக்கிய வாசகனின் பணியல்ல. தமிழில் எந்த எழுத்தாளரைக் கேட்டாலும் அவர் நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்றுதான் சொல்வார். எனில் அந்த கூற்றுகளை எல்லாம் வைத்துதான் இனி நாம் இலக்கிய அபிப்ராயங்களை உருவாக்கப் போகிறோமா?  எந்த குறிப்பிட்ட எழுத்தாளரையும் அடிக்கோடிட்டு நான் இங்கு பேசவில்லை. எழுத்தாளன் எழுத்துக்கு வெளியே அவ்வளவு நம்பிக்கைக்குரியவன் அல்ல என்பதையே சொல்ல வருகிறேன்.

O

அன்பு பற்றி பேசுவதால் தச்சன்மகனின் சொற்கள் இங்கே

“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. தற்பொழிவை நாடாது”

O

இரம்யாவின் பதிவை ஒட்டி இன்னொரு விஷயம் பற்றியும் பேச தோன்றுகிறது.

நம் சூழலில் அறிவும் உணர்ச்சியும் எதிர்நிலைகளாகவே தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. நம் பொது புத்தியிலும் அது அப்படியே பதிவாகியுள்ளது.  கிறிஸ்துவ இறையியலிலிருந்து இலக்கியத்துக்கு வந்து நிலைபெற்ற பார்வைகளில் ஒன்றாக இது இருக்கலாம். அறிவை சாத்தானின் மாயைகளில் ஒன்றாகவே நாம் அறிந்திருக்கிறோம். இந்திய மரபில் அறிவு மீது அத்தகைய விலக்கம் இல்லை என நினைக்கிறேன். அறியாமை அல்லது அவித்தையானது இருள் என்றே சுட்டப்படுகிறது.

இங்கே சிந்தனை மரபுகளின் வேறுபாடுகளுக்குள் நான் செல்ல முற்படவில்லை.  நான், அந்த துறைசார் நிபுணனோ அறிஞனோ அல்ல. எழுத்தாளன் எனும் எல்லைக்குள் நின்றே எல்லா உரையாடல்களையும் மேற்கொள்கிறேன். அவ்வகையில் அறிவுக்கும் உணர்ச்சிக்குமான தொடர்பு பற்றி பேசுவதும் அவசியமே. ஏனெனில் தனிப்பட்ட முறையிலும் பல நண்பர்கள் இக்கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இலக்கியம் பற்றி படிப்பது இலக்கியத்தை பாதிக்காதா எனும் கேள்வியை பல தடவை நான் எதிர்கொண்டிருக்கிறேன். இலக்கிய கட்டுரைகள் எழுதுவதால் நண்பர்கள் இதை என்னிடம் கேட்கிறார்கள்.

அறிவு படைப்பாக்கத்திற்கு எதிரானது என்பதும், அது உணர்ச்சியை அசுத்தப்படுத்திவிடும் என்பதும் இங்கே பொதுவாக உள்ள நம்பிக்கை. சமீபத்தில்கூட ஒரு நண்பர் என்னை கேட்டார் “இலக்கியம் பற்றிய கருத்துக்கள் உங்கள் புனைவெழுத்தை பாதிக்கவில்லையா?” இந்த கேள்விக்கான நியாயத்தையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆங்கில கட்டுரைகளிலும் எழுத்துப் பட்டறைகள் சார்ந்து நிறைய சந்தேகங்கள் குறிப்பிடப்படுகின்றன. எழுத்தாளனை அதீத தற்பிரக்ஞை உடையவனாக அவை மாற்றிவிடக்கூடும் என்பது உண்மைதான். அதே நேரம், இலக்கியம் குறித்து சொந்த கருத்துக்களும் கண்டடைதல்களும் இல்லாத போது சூழலிலுள்ள சரியும் தவறுமான பல கருத்துக்கள், நாம் அறியாமலேயே நம்மை வழி நடத்தக்கூடும் என்பது இன்னொரு உண்மை. எழுத்தாளன் இரண்டையும் கடக்க வேண்டியுள்ளது. அப்புறம் புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தர ராமசாமி, பிரமிள், ஜெயமோகன் என்று படைப்பியக்கத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட அறிவார்ந்த நிரையொன்று தமிழில் இருக்கும்போது, நாம் எதை உண்மையில் அஞ்சுகிறோம்?

நான் அறிந்த இன்னொரு விஷயமும் இருக்கிறது. அசலான படைப்புத் தருணங்களை, மிக மெலிதாக என்றாலும், ஒரு முறையேனும் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒருவருக்கு உறுதியாக தெரிந்திருக்கும் ௲ எழுதும்போது தான் கைவிடப்பட்டே இருக்கிறோம் என்று. ஒருவகையில், எழுத்தாளன், தான் அறிந்த எல்லா விஷயங்களும் தோற்றுப் போவதை காண்பதற்காகவே புனைவெழுதுகிறான் என்று சொல்லலாம். அவன் அறிவு, உணர்ச்சி எல்லாமே அங்கு பரிசீலனைக்கு போகிறது. அந்தரத்தில் வீசியடிக்கப்படுகிறது. அந்த இடத்தை வந்தடையும் வாசகனுக்கு தெரியும்- எழுத்தாளன் எவ்வளவு தனியனாக இருக்கிறான் என்பது. கூடவே, தனிமையின் வலியும் பித்தும் அவனை எப்படி வாட்டுகின்றன என்பதும். எனவே நாம் உண்மையாக கேட்க வேண்டிய கேள்வி ௲ “அறிவு படைப்பாக்கத்தை என்ன செய்கிறது?” என்பதல்ல. “படைப்பாக்கம் அறிவை என்ன செய்கிறது?” என்பதே. அறிவு படைப்பாக்கத்தை வெல்லக்கூடும் என்கிற பயத்திலிருந்தே முதல் கேள்வி பிறக்கிறது. இன்றைய தேதியில் அறிவின் ஆற்றல் மேல் எனக்கு அவ்வளவு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் கிடையாது. எனவே நான் இரண்டாவது கேள்வியையே முன்வைப்பேன்.

O

பெண்ணெழுத்து பற்றியும் அப்பதிவில் பேசப்பட்டுள்ளது. கொஞ்சல் சிக்கலான சர்ச்சைக்குரிய இடம் அது. இலக்கிய விமர்சனத்தை தன் இருப்பு மற்றும் அடையாளம் சார்ந்ததாக மாற்றிவிட்டால், அப்புறம் அங்கே ஓர் எழுத்தாளன் சொல்வதற்கு ஒன்றுமில்லாமல் போய்விடும். இன்றையச் சூழலில் பெண்ணெழுத்து சார்ந்து பெண்கள் பேசுவதே சரியானதாக இருக்க முடியும். அவர்கள் எதிர்கொள்ளும் அடையாளச் சிக்கல்களை யாரும் மறுதலிக்க முடியாது. மேலும், ஓர் அமைப்பின் பிரச்சனைக்கு அந்த அமைப்பின் பகுதியாக இருந்து அதன் நன்மைகளை அனுபவிப்பவர்களால் தீர்வு சொல்ல முடியாது. எனவே பெண்களின் குரலுக்கு ஆண்கள் காது கொடுப்பதே நியாயம். ஆனால் என் ஆசிரியர் ஒரு MCP என்பதனால், அவர் அடியொற்றி நானும் கொஞ்சம் எல்லைமீறி இங்கு கருத்து சொல்ல விழைகிறேன்.

என்னோடு உரையாடலில் இருக்கும் நண்பர்களுக்கு நான் தவறாமல் பரிந்துரை செய்யும் எழுத்தாளர் – அமெரிக்க நாவலாசிரியையான மெரிலின் ராபின்சன். அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். கிறிஸ்துவ இறையியல் தத்துவவாதியியான கால்வினால் செல்வாக்கு பெற்ற ராபின்சன், அறிஞர் என்று அழைக்கத்தக்க இடத்திலேயே உள்ளார். அவருடைய முதல் நாவலின் தலைப்பு “வீட்டை பராமரித்தல்” (House Keeping). அமெரிக்க நனவிலியை கட்டமைத்த பெருநாவல்களில் ஒன்றான மெல்வில்லின் “மோபி டிக்”-கை தத்துவார்த்தமாக எதிர்கொள்ளும் படைப்பு அது.

திமிங்க வேட்டைகளும் வாள்ச் சண்டைகளும் போதுமானவரையில் இலக்கியத்தில் வந்துவிட்டன என ஆண்மைய கதையாடலை ராபின்சன் ஒரு பேட்டியில் மென்மையாக கிண்டலடிக்க்கிறார். ராபின்சனின் படைப்புலகத்துக்கான சாவி, அந்த வாக்கியம். அதே சமயம், பெண் மையநோக்கை வெறும் பரிவு என்றோ குடும்ப அக்கறை என்றோ அவர் குறுக்கவில்லை. இறையியல், வரலாறு என்று விரித்துக் கொண்டேச் செல்கிறார்.

மெர்லின் ராபின்சனின் நாவல் தொடரான “கிலியட்” (Gilead) நான்கு பகுதிகள் கொண்டது. அந்த நான்கு நாவல்களையும் அமெரிக்கக் காவியம் (An American epic) என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். அமெரிக்காவை இன்று வரை அரித்துக் கொண்டிருக்கும் இனமோதலை தத்துவார்த்தமாக தன் எழுத்தில் அணுகுகிறார் ராபின்சன். அவரும் அன்பையே பேசுகிறார். ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மேல் அன்பு செய்வது எவ்வளவு சவாலானது என்பதை அவர் படைப்புகளில் தெரிந்துகொள்ளலாம். ஒருவன் தன்னை மன்னிப்பதும் இன்னொருவனை மன்னிப்பதும் எவ்வளவு தூரத்துக்கு ஆன்ம பலத்தை கோருகின்றன என்பதை தஸ்தாயெவ்ஸ்கி அளவுக்கே தீவிரமாக விசாரிக்கிறார் அவர். நான் லட்சியமாக நினைக்கும் அன்பு அதுதான். நான் லட்சியமாக நினைக்கும் எழுத்தாளர் அத்தகைய ஒருவர்தான்.

O

சிந்திக்கும்போது உணர்ச்சிவசப்படுதற்கு நிகராகவே உணர்ச்சிவசப்படும்போது சிந்திப்பதும் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும். உடன், கவிதை எழுதுவதைவிட கவிதை மாதிரி ஒன்றை எழுதுவது எப்படி எளிதானதோ அதேப் போல உணர்ச்சிவசப்படுவதைவிட உணர்ச்சிவசப்பட்டதாய் நினைத்துக் கொள்வதும் எளிதானது. இந்த வேறுபாட்டை சுந்தர ராமசாமி அடிக்கடி சொல்கிறார். அதனால்தான் மாட்டுக்கு சொரிந்துக் கொடு, மனிதனுக்கு சொரிந்துக் கொடுக்காதே என்றார் அவர். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி என எல்லா மேதைகளையும் குறிப்பிட்டதுதான் இது. மனிதன் தனக்கு தானே பொய் சொல்லக்கூடாது. நவீன தமிழ் இலக்கியமானது இந்த அடிப்படைமேல் தான் கட்டப்பட்டிருக்கிறது. உண்மை பற்றிய அந்த தவிப்பு இல்லாமல் இங்கு செயல்பட முடியாது. இது பின்-உண்மை காலமாகவே இருந்தாலும் ஆதார விசை மாறாததுதான். ஒவ்வொரு எழுத்தாளரும் ஏதோவோர் கணத்தில் அதை எழுத நேர்கிறது. அது இன்னொருவருக்கு சொல்வதற்காக மட்டுமல்ல.

அன்புடன்,
விஷால் ராஜா.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா கடிதம்
அடுத்த கட்டுரைஜே.எஸ்.ஆழ்வார் பிள்ளை