விஷ்ணுபுரம், ஓர் ஓவியத்தின் கதை

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

விஷ்ணுபுரம்  வெள்ளிவிழா செம்பதிப்பு  வாங்க

அன்பு ஜெ,

விஷ்ணுபுரம் விழாவிற்கு பின்னால் அமைப்பாளர்களாக இருக்கும் நண்பர்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன், துல்லியமான செயல்திட்டத்துடன்- அதை நிறைவேற்றுவதில் எவ்வளவு கச்சிதமாக இருப்பார்கள் என்று – 2021 விழாவின் போதே தெரிந்து கொண்டேன். திரு.வாடரேவு வீரபத்ருடு அவர்களை அழைப்பதற்கு பின்னால் அவர்களின் செயல்பாடுகளை நேரிலும் பார்த்தேன். ‘விஷ்ணுபுரம் பதிப்பகம்’ அதற்கு மாறாக இருக்காது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

டிசம்பர் 3 ஆம் தேதி காலை, பதிப்பகத்தின் மீனாம்பிகா அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘விஷ்ணுபுரம் நாவலின் வெள்ளி விழா பதிப்பு வெளியிடறோம் ராஜு! அதன் கவர் பேஜ்-க்கு படம் வரையவேண்டிய சண்முகவேல் கடைசீ நிமிடத்துல தவிர்க்க முடியாத காரணத்தினால் அதை கொடுக்க முடியல. இதற்கு சரியாக பொருந்தும் படத்திற்காக நெட்-ல தேடிக்கிட்டு இருந்தோம். நிறைய பார்த்தோம். அதில் ஒண்ணு நாவல் பேசும் கருவுக்கு ரொம்ப சரியானது என்று பட்டது. அது ஸ்ரீகாந்த் பாபு என்பவருடைய படம். அவருடையது ஹைதராபாத்-தான். நெட்-ல கொடுத்து இருக்கிற நம்பர்-ல பேசினா ‘நாட் பாஸ்ஸிப்ள்’ என்கிறார்கள். எங்களுக்கு மொழி ஒரு தடையா இருக்கு. நீங்க அவர்களிடம் பேச முடியுமா? திங்கள்கிழமையே அச்சு பணிக்கு கொடுக்கணும்…’ என்றார்கள்.

நான் உடனே ‘அது கொஞ்சம் மாத்தி நாம உபயோகிக்கலாம் இல்லையா மேடம்!’ என்றேன். எல்லாம் இந்திய பத்திரிக்கையாளர்களின் புத்தி! அந்த மேடமோ ‘அது சரியில்ல ராஜு. ஓவியர் சண்முகவேல் நம்ம வெண்முரசுக்கு வரைந்த ஓவியங்களை இப்படித்தான் நிறைய பேர் செயகிறார்கள். அதை பார்த்து நாங்களும் ஆதங்க படறோம். இன்னொரு ஓவியரின் படத்தை நாம எப்படி திருடுவது?’ என்றார். ஜெ.மோ.வின் நண்பர்கள் வேறு எப்படித்தான் இருக்கமுடியும்! நான் என்னுடைய முயற்சியில் இறங்கினேன்.

உண்மை சொல்லவேண்டும் என்றால்… உங்களின் மகத்தான நாவலின் வெள்ளிவிழா பதிப்பிற்கு நானும் ஒரு சிறு செயல் புரிய எனக்கு வாய்த்த நல்வாய்ப்பாகவே இதை நினைத்தேன். தெலுங்கில் சொல்லவேண்டும் என்றால் ‘உடுத்த சேவா’ (ராமனுக்கு அணிலின் உதவி). நான் ‘கடவுளே… இந்த காரியம் நிறைவேறுமாறு பார்’ என்றுதான் வேண்டிக்கொண்டேன். மீனாம்பிகை மேடம் அனுப்பிய படத்தை பார்த்தேன். விஷ்ணுபுரம் நாவலுக்கு இது மட்டும்தான் கன கச்சிதமாக பொருந்தும் என்று பட்டது.

முதலில் மீனாம்பிகை மேடம் பேசிய அந்த எண்ணை தொடர்புகொண்டேன். ஒரு பெண்மணி எடுத்தார். நான் தெலுங்கில் பேசினால் அவர்கள் கறாரான ஆங்கிலத்தில் பேசினார்கள். நான் உங்களின் நாவலை பற்றியும் உங்களை பற்றியும் ஒரு சிறு அறிமுகம் கொடுத்தேன். அதை கேட்டுவிட்டு… ‘நாங்கள் ஆன்லைன் விற்பனை முகவர்கள்தான். இதை பற்றி ஓவியரிடம் கேட்டு சொல்கிறோம்’ என்றார். அவர்கள் பேச வாய்ப்பு இல்லை என்று புரிந்தது. ஆனாலும், அது ஒரு சிறு வெளிச்சம். ‘நமக்கு ‘நாட் பாசிபிள்’ என்று சொன்னது ஓவியர் இல்லை.. முகவர்கள் தான். அதனால் ஓவியர் இடம் பேசுவதற்கு நமக்கு வாய்ப்பு இருக்கிறது..’ என்ற நம்பிக்கை பிறந்தது. அவர் யார் என்று தேட ஆரம்பித்தேன். தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் செய்தி குறிப்புகள் சில கிடைத்தன. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாதில் உள்ள மாநில ஓவிய கலைக்கூடத்தில் அவர் ஒரு கண்காட்சியை நடத்தி உள்ளார். மொத்தம் 10 ஆயிரம் ஓவியங்களுடன் நிகழ்த்திய அந்த கண்காட்சி ஒரு உலக சாதனை என்று ஒரு செய்தி குறிப்பு சொன்னது. அந்த கண்காட்சி நடந்த இடத்தை சேர்ந்த எங்கள் ஈனாடு பத்திரிக்கை நிருபரை தொடர்புகொண்டு ஓவியரின் தொலைபேசி நம்பரை கேட்டேன். இல்லை என்றார்… ஆனால், கலைக்கூடத்தின் மேலாளரை அழைத்து கேட்பதாக சொன்னார். பத்து நிமிடத்தில் ஓவியரின் எண் கிடைத்தது. இவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்ததற்கு ஆனந்தப்பட்டாலும் ‘அவர் முடியாது என்று சொன்னால்…?’ என்ற சந்தேகமும் வந்து பதட்டம் பெருகியது. கலைஞர்களின் மனம் எப்படியும் போகலாம்…

‘நாம கேட்டால் அவர் ஒரு வேளை முடியாது என்று சொல்லலாம். அவரின் நண்பர்கள் மூலமாய் கேட்க வைப்போமே’ என்று பட்டது. யார் இருக்கிறார்கள் என்று பார்த்தேன். கடந்த ஆண்டு நம் விருந்தினர்களின் ஒருவரான வாடரேவு வீரபத்ருடு அவர்களும் ஓவியர்தான். அவருக்கு தெரிந்து இருக்கலாம் என்று தொடர்புகொண்டேன். ‘தெரியாதுப்பா’ என்றார். எங்கள் பத்திரிக்கையில் வேலை செய்யும் ஓவியரிடம் கேட்டேன். அவர் ஸ்ரீகாந்த் பாபுவின் படங்களை பார்த்துப் பிரமித்து போனார். ‘இதெல்லாம் அசாதாரணமான ஓவியம். இவருடைய ரேஞ்சு வேற… நம்ம வட்டத்துக்குள்ள இவர்களெல்லாம் வரமாட்டாங்க’ என்றார். ஆனால், ‘அவர் கூட நீயே பேசலாமே!’ என்றார். ‘நான் பேசி ஒத்துக்கலேன்னா?’ என்றேன். ‘நீ ஒரு பத்திரிக்கையாளர் தம்பி…’ என்றார். அவ்வப்போது எனக்கு யாரவது இப்படி ஞாபகப்படுத்த வேண்டி இருக்கிறது. என்னை நான் தயார் படுத்திக்கொண்டேன். முதலில் உங்களை பற்றி விளக்குவது, அப்புறம் நாவல் பற்றி, அதன் வெள்ளி விழா பற்றி… இப்படி வரிசையாக பேசவேண்டும் என்று ஒரு நிரல் அமைத்துக்கொண்டேன்.

இதெல்லாத்தையும் விட… ‘ஒரு ஓவியருடைய படத்தை நாம திருடக்கூடாது’ என்கிற மீனாம்பிகை மேடத்தின் நேர்மைக்காகவாவது அவர் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். போன் செய்த உடனேயே ஓவியர் எடுத்தார். நான் விளக்கத் தொடங்கினேன்… ஒரு நிமிடத்திலேயே ‘அது நான் வரைஞ்ச எந்த படம் என்று ஊகிக்க முடியல. வாட்சாப் பண்ணுங்க’ என்றார். உங்களை பற்றி ஒரு சிறு குறிப்பும் சேர்த்து அனுப்பினேன். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ‘ஓகே’ என்று அனுப்பினார். மனம் ஆனந்தத்தில் அலறியது. இருந்தும் நிச்சயமாக தெரிந்துகொள்ளணும் என்று ‘சார் அந்த படம் நாங்கள் எடுத்து கொள்ளலாமா?’ என்றேன். ‘ஆமாம்’ என்றார். என்னுடைய குதூகலம் கொஞ்ச நஞ்சமல்ல. மீனாம்பிகை மேடத்திற்கு போன் செய்தென். ‘மேடம், அவர் ஒத்துக்கிட்டார்’ என்றேன். மேடம் நான் முகவரை பற்றி சொல்கிறேன் என்று முதலில் நினைத்தார்கள். நான், ஓவியர் தந்தார் என்ற உடன்… அப்படி சந்தோஷப்பட்டார்! கலகல என்று சிரித்து விட்டோம். வாழ்க்கையில் எப்போதோ அபூர்வமாகத்தான் அப்படி ஒரு வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். நம் கையில் எதுவும் இல்லை என்று தெரிந்து, ஏதோ ஒரு சக்தி அதை நிறைவேற்றி வரும்போது வருகிற மகிழ்ச்சி அது. அதற்கு பிறகு ஓவியர் எங்களை தினமும் கேட்க ஆரம்பித்தார், ‘புத்தகம் பிரிண்ட் ஆயிடிச்சிங்களா…’ என்று.

ஆனால், அடுத்த திங்கள் கிழமை ஒரு பிரச்சனை வந்தது. நாவலுக்காக நெட்டில் எடுத்த அந்த ஓவியத்தின் புகைப்படம் மிக குறைந்த ரிசலுஷன்(Resolution)-இல் இருந்தது. முகப்பு படமாக வர… குறைந்தது 1 எம்.பி. யாவது இருக்கணும். அந்த படம் அப்படி இல்லை. மீனாம்பிகை அவர்கள் என்னை அழைக்க… நான் ஓவியரை அழைத்தேன். அவர் அந்த ஓவியத்தை – இதற்கு முன் யாரோ எடுத்த பெரிய போட்டோ ஒன்று அனுப்பிவைத்தார். அது பெருசுதான்… 1 எம்.பி. தான்… அதில் அந்த போட்டோவில் அதை எடுத்தவரின் நிழலும் விழுந்து இருந்தது! அதனால், அசல் ஓவியத்திற்கும் இந்த புகை படத்திற்கும் நிறம் வேறுபட்டு இருந்தது. மீண்டும் ஓவியரை தொடர்பு கொண்டால், ‘இந்த ஒரு புகைப்படம் தான் இருக்கு. ஓவியத்தை யாருக்கு விற்றேன் என்று ஞாபகம் இல்லை’ என்றார். அது மட்டும் அல்ல ‘அது சரியாய் வரவில்லை என்றால் இந்த படங்களை பாருங்க’ என்று மேலும் ‘பள்ளிகொண்ட பெருமானின்’ பல ஓவியங்களை அனுப்பினார். நான் அவைகளை மீனாம்பிகை அவர்களுக்கு அனுப்பி, ‘மேடம். ஜெ. சார், விஷ்ணுபுரத்திற்கு ஹம்பி சிதிலங்கள் தான் இன்ஸபிரேஷன் என்பார். அந்த பாழடைந்த மண்டபங்களையே யூஸ் பண்ணலாமே’ என்றும் சொல்லிவைத்தேன்.

‘இல்ல ராஜு. இந்த படம் மங்களகரமாகவே இருக்கணும். விஷ்ணுபுரம் எவ்வளவுதான் அவலத்தையும் சிதைவையும் பேசினாலும், அதனுடைய லட்சியம் நேர்மறையானதா மட்டுமே இருக்கமுடியும். மத்த படங்களை விட… இது தான் கரெக்ட். நான் டீடீபீ நிபுணர் கிட்டபேசி பார்க்கிறேன். இந்த மாதிரி கடைசி நிமிடத்தில் பிரச்சனைகள் வருவது இதற்கு முன்பும் எவ்வளவோ நடந்திருக்கு. நம்ப முடியாதபடி ஏதோ ஒன்னு கைகூடி வந்து அந்த பிரச்னையை போக்கிடும். இதுவும் அப்படிதான் ஆகும். இந்த வெள்ளிவிழா புத்தகம் விஷ்ணுபுரம் விருது விழாவிலேயே வெளியிடணும். அதற்காகத்தான் இந்த அவசரம். ஆனால், முடிஞ்சுடும். அந்த நம்பிக்கை இருக்கு…’ என்றார். அவர் வெற்றிக்கரமாக முடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு பூரணமாக இருந்தது.

விழாவிற்கு வந்த சனிக்கிழமையிலேயே விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் ஸ்டாலில் இந்த புத்தகத்தை பார்த்தது குதூகலமாய் இருந்தது. மீனாம்பிகை மேடத்தையும், செந்தில் அவர்களையும் நேரில் பார்த்தது மிகவும் சந்தோஷப்பட்டேன். நீங்கள் வந்த பிறகு ஓவியரின் பெயரில் உங்களின் கையொப்பம் வாங்கினார். நான் ஞாயிறு விழா முடிந்தவுடன் எடுத்து செல்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், ஞாயிறு இரவு சென்னை செல்லவேண்டும் என்று நினைத்த நான்… நேராக ஹைதராபாத் செல்லவேண்டியதாயிற்று. ஞாயிறு மாலை 4 மணிக்கு பஸ். நீங்கள் மட்டுறுத்திய சாருவின் அமர்வு முடிந்தவுடன்… ஓட்டமாக ஆட்டோவை பிடித்து கோவை காந்திபுரம் சென்று விட்டேன். புத்தகத்தை மறந்து விட்டேன். மீனாம்பிகை மேடம்… அதை போனவாரம் அனுப்பிவைத்தார். ஒரு பரிசு சுருளில் வந்து சேர்ந்த பொக்கிஷம் போன்ற அந்த புத்தகத்தை அடுத்தநாள் ஓவியரின் வீட்டுக்கு சென்று அளித்தேன். அவரைச் சந்தித்ததும் ஒரு மறக்க முடியாத அனுபவமே. அதை பற்றி மீனாம்பிகை அவர்களுக்கு கீழ்வருமாறு கடிதம் எழுதினேன்…

’மேடம், போட்டோ பார்த்து இருப்பீர்கள்! இன்று விஷ்ணுபுரம் வெள்ளிவிழா பதிப்பினை ஓவியர் திரு.ஸ்ரீகாந்த் பாபுவிடம் அவரின் இல்லத்துக்கு சென்று அளித்தேன். மிகவும் சந்தோஷப்பட்டார். இல்லை, கொண்டாடினார். தன் தாயிடம் சென்று ‘அம்மா! நான் சொன்னேனே அந்த புத்தகம் வந்திருக்கு’ என்றார். அவரையும், தன் மனைவியையும் அழைத்து அவர்களுடன் சேர்ந்தே புத்தகத்தை பெற்றுக்கொண்டார்! பின் அட்டையில் தன் பெயரை பார்த்து மகிழ்ந்தார். இரண்டாம் பக்கத்தை பார்த்து இதில் பெயர் வரவில்லையா என்றார்… ‘நம் கவர் வடிவமைப்புக்கு முன்னாடியே புத்தகம் ப்ரிண்டிங் முடிந்துவிட்டது. அதனால், இரண்டாம் பக்கத்தில் உங்கள் பெயர் இல்லை. இனிவரும் பதிப்பில் வரலாம்’ என்றேன் (அதிக பிரசங்கித்தனமோ!). சரி என்றார். ஜெ.வை பற்றி ஆர்வமாக கேட்டு தெரிந்துகொண்டார். தன்னைப் பற்றியும் சொன்னார்.

தெலுங்கானாவில் நெசவு தொழில் குடும்பம் அவர்களுடையது. பத்மசாலிகள் என்பார்கள். தமிழ்நாட்டிலும் முக்கியமாக காஞ்சியில் இந்த இன மக்கள் மிக்க அதிகம். தேவாங்கர்கள் சைவர்கள் என்றால் இவர்கள் வைணவர்கள். இவர்களுடன் பிரிந்து வீர சைவத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான் தேவாங்கர்கள் என்ற கூற்று உண்டு. அவர்களோ, இவர்கள்தான் பிரிந்தார்கள் என்பார்கள். எது எப்படியோ…

தெலுங்கானாவில் பத்மஸாலிகள் ஓவியக்காரர்களாகவும் புகழ் பெற்றார்கள். அவர்களில் ஆலெ.லக்ஷ்மன் என்ற ஓவியர் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தவர். இங்குள்ள பத்திரிக்கைகளில் ஓவியர்களாகவும், பக்க வடிவமைப்பு (லே அவுட்) கலைஞர்களாகவும் இவர்கள்தான் இருப்பார்கள்.

தெலுங்கானாவில் மற்ற நெசவு குடும்பங்களை போலவே ஸ்ரீகாந்த் அவர்களின் குடும்பம், தம் குடும்ப தொழிலுக்கு தூரமாகியது. அப்பா மாநில போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக இருந்தார். ‘அப்பாவுடன் சேர்ந்து அன்றைய ஒன்று சேர்ந்த ஆந்திரத்தின் எல்லா கோயில்களையும் பார்த்தேன். அந்த சிற்பங்களும், அவற்றின் தொன்மங்களும் என்னுள் எத்தனையோ கனவுகளை விதைத்தன’ என்றார். அந்த கனவுகள்தான் இவரை நெசவின் ஒரு அங்கமாக திகழ்ந்த ஓவியத்தை பின்பற்றுமாறு செய்தன. தூரிகையை கையில் எடுத்தவர்… ஹைதெராபாத்-தில் உள்ள ஜவஹர்லால் நேரு நுண்கலை கழகத்தில் சேர நினைத்தாராம். நுழைவு தேர்வில் நல்ல ரேங்க் வந்தாலும்… அங்கு போக முடியவில்லை. காரணம்… அப்பாவின் அகால இறப்பு. வீட்டில் ஸ்ரீகாந்த் பெரியவர் என்பதால் குடும்பத்தின் சுமைதாங்கியாய் ஆகிவிட்டார். ஜவுளி கடை வியாபாரம் செய்தார். அது அப்படி ஒன்றும் பெரிய வியாபாரமாய் இல்லை. நாள் முழுக்க சைக்கிளில் திரிந்து… வீதிகளில் விற்பாராம். ஒரு கட்டத்தில் தீவிர நஷ்டம். வீடும் விற்று விட்டார்கள். அப்படி இருந்தும் அவர் ஓவியத்தை விடவில்லையாம். அந்த கட்டத்தில் தான்- கமல்ஹாசனின் தசாவதாரம் பார்த்தாராம். ‘அந்த முதல் பாடலில் வரும் திருவரங்கனின் சிலை… என்னை என்னமோ செய்தது! தூக்கத்திலும் விழிப்பிலும் கண்ணில் கரிய சிலையே வந்து கொண்டு இருந்தது. தூரிகையை மீண்டும் தீட்டினேன். சினிமாவில் உள்ளவனை அல்ல, என் கனவில் வரும் கரியனை… அரவு துயில்கொள்வோனை வரைய முற்பட்டேன். பகலெல்லாம் வியாபாரம் பார்த்துக்கொண்டு அந்தப் படத்தை வரைய மூன்று மாதங்கள் ஆனது. ஒரு சிறிய கண்காட்சியில் அதை வைக்க அனுமதி கிடைத்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய ஒரு மந்திரியின் மகள் அதை 50 ஆயிரத்திற்கு வாங்கினார்கள்! என் கனவுக்கு இவ்வளவு மதிப்பா என்று வியந்தேன். அன்று முதல் ஓவியமே என் முழு நேர தொழிலாகியது. பண ரீதியாக நெறய கஷ்டங்கள் இருந்தன. எங்காவது வேலை கிடைக்குமோ என்று மல்டிமீடியா கூட கற்றேன். ஒரு ஸ்டூடியோவில் வேலையும் பார்த்தேன். cubism ஓவியமுறைகளையும் மிகவும் முயற்சித்து கற்றேன். அது என் ஓவியத்திற்கு தனி முத்திரையை அளித்தது’ என்றார்.

இந்து புராணங்களின் அடிப்படையில் அவர் வரையும் ஓவியங்களுக்கு தேசிய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹைதராபாதின் சினிமா, அரசியல் சார்ந்தவர்கள் வாங்க ஆரம்பித்தார்கள். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர் நானியின் இல்லங்கள், தெலுங்கானா முதலமைச்சரின் அலுவலகங்களில் அவரின் ஓவியங்கள் உள்ளன. இங்குள்ள பிர்லா அறிவியல் கூடத்தில் சாஸ்வத ஓவியங்களாக அவரின் படைப்புகளை வைத்து இருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் அவர்கள் பல தேசிய போட்டிகளில் பரிசுகளை வென்றார். சொந்த வீடு கட்டினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநில கலைக்கூடத்தில் (ஸ்டேட் ஆர்ட் கேலரி) 10 ஆயிரம் ஓவியங்களை கண்காட்சியாக வைத்தார். ஒரு ஓவியர் அவ்வளவு படைப்புகளை கண்காட்சியாக வைத்தது ஒரு உலக சாதனை என்றே கருதப்படுகிறது. ஆனால், 2019-ல்  பெய்த பேய் மழையில் ஹைதராபாத் ‘கர்மான் காட்’ பகுதியில் உள்ள அவரின் வீடு மூழ்கி 10 ஆயிரம் ஓவியங்களும் நனைந்துவிட்டன. அன்று எல்லா பத்திரிகைகளும் இதை பற்றி எழுதி ஆழ்ந்த வருத்தங்களை பதிவு செய்தன.  அந்த சம்பவத்துடன் ஹரியானாவின் ஒரு தொழில்நுட்ப கம்பெனியின் உதவியுடன் தன் வீட்டை அப்படியே… jumper களை வைத்து அப்படியே 5 அடி உயர்த்தினார். அதுவம் ஒரு செய்தியாக இங்கு நாளிதழ்கள் வெளியிட்டன.

நான் சென்ற அந்த வீட்டின் முகப்பே சொல்லிவிட்டது இது ஒரு கலைஞனின் வசிப்பிடம் என்று. வராண்டாவில் உள்ள உள்சுவரை துளைத்து ஒரு சிற்பம் இருந்தது. அதுவும் பத்மநாபனுடையது தான். அதை பார்த்து ‘ஓவியம் அளவுக்கு இல்ல. சுமாராத்தான் இருக்கு’ என்று நினைத்தேன். அதை அறிந்தவர் போல ‘இத இருட்டில பார்த்தீங்கன்னா ஒரு குகை ஓவியத்தை பார்க்கின்ற எபெக்ட் வரும். அதனால தான் இப்படி வடிவமைச்சாங்க’ என்றார் ஸ்ரீகாந்த். இதை வடிவமைத்தவர் அவரின் பெரிய மகளாம். அவரும் ஓவியர்-சிற்பி மட்டுமல்ல கட்டிட வடிவமைப்பாளர் கூட. முன்னாள் பிரதமர் பீவி நரசிம்மராவ் அவர்களின் மகள் நடத்தும் எஸ்.வீ.ஓவிய கல்லூரியில் படித்தவராம். அடுத்து வீட்டின் ஹாலிலேயே ஒரு பெரிய ஓவியம். 21 அடி அகலம் கொண்டது! ‘என்னோட எல்லா ஓவியங்களும் பெரியவைதான்… இந்த விஷ்ணுபுரம் புத்தக முக அட்டை ஓவியம் உட்பட’ என்றார். அவரிடம் பேசிக்கொண்டு இருந்த நேரமெல்லாம்… புத்தகத்தில் இருக்கும் இந்த ஓவியத்தை அதனுடைய பளீச் நீல நிறத்தில் அவ்வளவு பெரிய காட்சி விரிப்பாக ஊகிக்க முயன்றுகொண்டேதான் இருந்தேன்.

மன நிறைவான இந்த அனுபவம் உங்களால்தான் சாத்தியம் ஆகியது. நன்றி…’

இந்த நன்றி உங்களுக்கும் உரித்தானது ஜெ.

மிக்க அன்புடன்,
ராஜு.

எண்திசைத் தேடல்

முந்தைய கட்டுரைகோவை சங்க இலக்கிய உரை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைகூந்தல், கடிதம்