பிரபஞ்சன்

பிரபஞ்சன் மறைந்து நான்காண்டுகள் கடந்துவிட்டன. பீட்டர்ஸ் காலனியில் அவருடைய பழைய அடுக்கில்ல வீட்டுக்குச் சென்று அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். நண்பர்கள் பலர் உடன்வந்துள்ளனர். ஓர் உரையில் பிரபஞ்சன் பசிக்காமல் வாழ வழியிருந்திருந்தால் இன்னும் சிறப்பாக எழுதியிருப்பேன் என்று சொல்கிறார். அது அந்நேரத்து உண்மை. முழு உண்மை அல்ல.

அவரிடமிருந்த ஒரு குணம், செழிப்பான குடும்பப்பின்னணியில் இருந்து வந்தது. கையில் பணமிருந்தால் அவர் ஒரு சீமான். டாக்ஸி பிடித்து நல்ல காபி சாப்பிடுவதற்காக நெடுதொலைவு செல்வார். உடன்சேரும் நண்பர்களுக்கெல்லாம் வாங்கிக்கொடுப்பார். நான் அவரை சந்தித்த எல்லா நேரத்திலும் ஓட்டல் பில்லை அவர்தான் கொடுத்தார். அது அவருடைய கௌரவப்பிரச்சினையும்கூட. அதுவும் மிகநல்ல ஓட்டலில் மிக நல்ல உணவை வாங்கித் தந்தபின்பு.

அக்கணங்களில் அவர் இளவரசன் போன்றிருப்பார். உயர்தர ஆடை, உயர்தர சிகரெட், உயர்தர வாசனைத் திரவியம். பிரபஞ்சன் வறுமையால் வாடவில்லை, அவருள் வாழ்ந்த கலைஞன் அவரை அவ்வாறு வாடவைத்தான். இறுதிநாட்களில் பவா செல்லத்துரை வேடியப்பன் போன்றவர்கள் நண்பர்களுடன் அவருக்கு சேர்த்தளித்த நிதி அவருக்கு பேருதவியாக அமைந்தது. ஓர் அரசு செய்யவேண்டியவற்றை பவா செய்கிறார்

பிரபஞ்சன்

பிரபஞ்சன்
பிரபஞ்சன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசுடர்களின் மது, கலை கார்ல்மார்க்ஸ்
அடுத்த கட்டுரைநேற்றைய புதுவெள்ளம்