அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் கார்த்திக் சரவணன். பெங்களூரில், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்கள், சொற்பொழிவின் இடையே உங்கள் கதைகளை மேற்கோள் காட்டுவார் .அதன் மூலம் தங்களின் அறம் சிறுகதை தொகுப்பு பற்றிய அறிமுகம் கிடைத்தது.வாங்கி வாசித்தேன்.
ஒரே வாசிப்பில் படித்து முடிக்க வேண்டிய புத்தகம் அல்ல அது. சில கதைகளை மறுவாசிப்பு செய்யும் போதெல்லாம் புது புது அனுபவம் ஏற்படுகிறது. தொடர்ந்து உங்கள் புத்தகங்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். எழுகதிர், தேவி, வெள்ளையனை வாசித்து முடித்து விட்டேன். உங்கள் கதைகளின் வழியாக நாகர்கோவில் வட்டார வழக்கு மொழி நடையை மிகவும் ரசிக்கிறேன். அடுத்ததாக வெண்முரசு படித்துக்கொண்டிருக்கிறேன்.
எழுத்தாளர் ஒருவருக்கு முதல் முறையாக இது போல கடிதம் எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் மன்னிக்கவும். உங்கள் எழுத்துக்கள் வழியாக எழுந்துவரும் ஜெயமோகன் எனக்கு ஆசானாக தரிசனம் தருகிறார், அறம் பேசுகிறார். சஞ்சலம் மிகுந்த தருணங்களில் எது சரி எது தவறு என உள்ளிருந்து உணர்த்துகிறார். மிக்க நன்றி ஜெ.
விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் இணைய விரும்புகிறேன். இலக்கியம் சார்ந்த பணிகளில் ,விவாதங்களில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்க விரும்புகிறேன். வலைத்தளத்தில் தமிழ்விக்கி பற்றிய உங்கள் முயற்சியை அறிந்து கொண்டேன். நானும் பங்கேற்கலாமா? நிச்சயம் என்னால் முடியும். ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
இப்படிக்கு,
கார்த்திக் சரவணன்.
*
அன்புள்ள கார்த்திக்
விஷ்ணுபுரம் வட்டம் என்பது ஒரு நட்புக்குழுமம் அல்லது நட்புச்சூழல் மட்டுமே. அமைப்பு அல்ல, ஆகவே உறுப்பினர் ஆகவேண்டிய அவசியம் இல்லை. உறுப்பினர் அடையாளமே இல்லை. ஆர்வமிருந்தால் எங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம். அங்கே நண்பர்களுடன் அறிமுகமாகலாம். நண்பர்கள் உங்களுக்கும் நீங்கள் நண்பர்களுக்கும் பழகும்போது நீங்களும் உள்ளே வந்துவிடுவீர்கள். சாம்பார் வாளியை கையில் தந்துவிடுவார்கள்.
தமிழ் விக்கி பங்களிப்பை பொறுத்தவரை அதன் பங்கேற்புக்காக உள்ள வழிகாட்டுநெறிகளை படியுங்கள். அதன்படி சில பதிவுகளை அனுப்புங்கள். சரிபார்த்து வலையேற்றுவோம். பதிவுகள் சம்பந்தமான விவாதங்களும் நிகழும். உங்கள் பதிவுகள் கண்டபின் உங்களை தொகுப்பாளர் பட்டியலிலும் சேர்ப்போம்.
அன்புடன்
ஜெ