யார் தருவார் எனக்கான ஓலைச் சிலுவையை ?

அறம் புதிய பதிப்பு வாங்க

Stories of the True (அறம் ஆங்கில மொழியாக்கம் )வாங்க

அறம் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் பள்ளியில்  படிக்கிற காலத்தில் என்னை  பற்றி அறிந்துகொள்ள நான் முயன்றதே இல்லை. ‘தனித்தன்மை’ என்ற ஒன்று இருப்பது கூட தெரியாமல் பள்ளிப்படிப்பை முடித்தேன். பள்ளியில் இறுதி ஆறு ஆண்டுகள் (7th to 12th) பெறும் வெறுமை ஒன்றை உணர்ந்து கொண்டுதான் இருந்தேன். வெறுமையாக தான் உணர்ந்தேன் என்பதையே கடந்த ஆறு மாதமாக பள்ளி வாழ்க்கையை திரும்பி பார்க்கையில் தான் தெரிகிறது.

பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் மூன்றாவது இடம் பிடித்தேன். 97% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அப்போது எனக்கு  அப்படிப்பின் மீது பெரும் ஆர்வம் இருந்ததே இல்லை. ஆசிரியர்கள் மீது மதிப்பு உருவாகவே இல்லை. குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வில்  வெற்றி பெற வேண்டும் என்பதை தாண்டி அவர்களில் வேறெதையும் நான் கண்டுகொண்டதே இல்லை. வேறு எதை செய்வது என்று தெரியாமல் எந்த வித ஆர்வமும் நோக்கமும் இன்றி படிக்க வேண்டுமே என்று தான் படித்தேன். போட்டியும் தேர்வும் எனக்கு அர்த்தமான ஒன்றாகவும் அதில் பெற்ற வெற்றியில் பிறரைப் போல் ஆனந்தமாக இருந்தேன் என்றும் சொல்லமுடியாது. பட்டயக் கணக்காளர் படிப்பை தேர்ந்தெடுத்தேன். கல்லூரி படிப்பும்  பட்டயக் கணக்காளர் படிப்பும் சேர்ந்தே படிக்கும் சூழல். இன்று நினைத்து பார்க்கையில் கல்லூரி வாழ்க்கையும் வெறுமையில் தான் சென்றது என்று எண்ணுகிறேன். பட்டயக் கணக்காளர் படிப்பில் இறுதி தேர்வும் எழுதி உள்ளேன். ஆனால் அப்படிப்பின் மீது ஆர்வம் துளி கூட இல்லை.

பொருளாதார தேவைக்கு அப்பால் எனக்கு அப்படிப்பு வாழ்வில் எதற்கு என்று தெரியவில்லை. சிறு வயதில்(பத்து வயது முதலே நினைவில் இருந்து) இருந்தே மனிதர்களின் துயரம் என்னை மிகவும் மன ரீதியாக தொந்தரவு செய்தது, இது என்ன என்று புரியவில்லை? இது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கும் அதிலிருந்து யார் கடவுள் என்ற கேள்விக்கும் அழைத்து சென்றது. கோவிலின் உள் செல்லும் முன்னே பிச்சை எடுக்கும் மனிதர்களின் நிலைமை என் மனதை கவலை அடைய செய்யும். இக்கேள்வி மனதில் ஓடிக் கொண்டே இருக்கும்.

நண்பர்கள் என்று நான் பழகிய மனிதர்கள் எல்லாம் எனக்கான  நண்பர்கள் இவர்கள் இல்லை என்றே தோன்றவைக்கிறது. அவர்கள் நல்ல மனிதர்கள் தான். ஆனாலும் அவர்களிடம் பேசி  நேரம் செலவழித்துவிட்டு வந்தால் எனக்கு எதிராக நான் இருப்பது போல் ஒரு உணர்வை அடைகிறேன். அவர்களிடம்  நான் பழகுவதற்கு காரணம் சமூகத்தின் பழக்கம் போல்தான் எனக்கு தோன்றுகிறது. ஒரே ஒரு நண்பன் இருக்கின்றான், இரண்டு பேருக்கும் தேடலும் கேள்விகளும் இருக்கிறது அது தான் எங்களை இணைக்கிறது. கடந்த நான்கு வருடமாக நாங்கள் பேசுகிறோம் சிந்திக்கிறோம், என்னால் உறுதியாக சொல்ல முடியும் நாங்கள் வீண் பேச்சு இன்று வரை பேசியதில்லை. எங்கள் பேச்சில் அரசியல் இல்லை மதம் இல்லை நாடும் இல்லை, மனிதனும் மனிதனின் வாழ்வும் வலியும், நாங்கள் யார் என்ற கேள்வியை சுற்றி தான் மொத்த உரையாடலும் இருக்கும். எல்லா மனிதர்களும் நமக்கானவர்கள்தானா?

இவர்கள் வாழும் இந்த லௌகீக உலகம் எனக்கு பொருளாதார அடிப்படை வசதிக்குமேல் எனக்கு ஒன்றையும் வழங்கவில்லை, அப்பொருளாதார வசதிக்கு கூட வாழ்வை பிடிக்காத செயலில் ஈடுபட்டு அடைவது எனக்கு மனச்சோர்வை தான் தருகிறது. என் சிந்தனை மனித வாழ்வை சுற்றியும் அதன் அர்த்தம் சுற்றியும் மக்களை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை சுற்றியுமே செல்கிறது. பிரச்சினைகளை மட்டுமல்ல அதற்கான தீர்வையும் நோக்கியே அறிவும் மனமும் முன் செல்கிறது. லௌகீக வாழ்வை பற்றி பேசும் மனிதர்களிடம் இருந்து விலகி இருப்பதே பெறும் நிம்மதியையும் மன புத்துணர்ச்சியையும் தருகிறது.

எனக்கு அறம் சிறுகதை தொகுப்பில்  மதிப்பிற்குரிய ஓலைச் சிலுவை டாக்டர் சாமர்வேலையும், கோட்டி பூமேடை ராமையாவும், மெல்லிய நூல் காந்தியும், உலகம் யாவையும்  காரி டேவிஸும் தான் எனக்கான குருவாக உணரமுடிகிறது. இத்தகைய மன அமைப்பு கொண்ட நான் எதை கற்க, எதையெல்லாம் செய்வதை தவிர்க்க என்று வழி காட்டுங்கள். தற்போது தேர்தலையும் அதன்  தேர்ந்தெடுக்கும் முறையையும் அரசாங்க அமைப்பின் தேவையையும் மனித வாழ்வில் அதன் எல்லையையும் பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தலைமுறை வரலாற்று தொடர்ச்சி இல்லாத தலைமுறையாக தான் எனக்கு தோன்றுகிறது. இன்று வரை நான் பேசிய நண்பர்களில் எத்தகைய பெறும் ஆளுமைப் பற்றியும் அறிவான கலந்துரையாடல் நிகழவே இல்லை.

யார் தருவார் எனக்கான ஓலைச்சிலுவையை?

ஞானசேகரன் ரமேஷ்

முந்தைய கட்டுரைஅருஞ்சொல் – கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்-7