விஷ்ணுபுரம் விழா பற்றி ஒற்றைவரி கடிதங்கள், ஆங்கிலக்கடிதங்கள் ஏராளமாக வந்தன. ஒருசிலர் ஐயங்களையும் கேட்டிருந்தார்கள். தனித்தனியாக ஐயங்களுக்கான பதில்களைச் சொல்ல முடியாமையால் இப்பதிவு. இங்கே விழா பற்றிய பதிவுகளை முடித்துக்கொள்வதனாலும்.
இந்த பதில்கள் பலமுறை முன்னரே சொல்லப்பட்டவையும்கூட. ஆனால் தமிழ்ச்சூழலில் பொதுவாக புரிந்துகொள்ளும் திறன் மிகக்குறைவானவர்கள் பொதுவெளியில் நிறையப் பேசுபவர்களாக இருக்கிறார்கள். ஆகவே மீண்டும் தொகுத்துச் சொல்கிறேன்.
அ. விஷ்ணுபுரம் விழாவில் எதிர்விமர்சனம், விவாதம் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை?
இலக்கியநிகழ்வுகளில் கலந்துகொண்ட, இலக்கியத்தில் அரிச்சுவடி தெரிந்த எவருக்கும் தெரியும், இது விவாத அரங்கு அல்ல. இது இலக்கியவாதியுடனான வாசகர் சந்திப்பு. இந்த அரங்கில் தமிழில் கவனிக்கப்படவேண்டிய படைப்பாளிகளை, குறிப்பாக இளம் படைப்பாளிகளை, வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். அரங்கினர் அவர்களை வாசித்துவிட்டு வரும்படி கோருகிறோம். பல மாதம் முன்னரே அறிவித்து அதற்காக அரங்கை தயார் செய்கிறோம். அந்த படைப்பாளிகளின் படைப்புகள் மீதான கூர்ந்த அவதானிப்புகள் கேள்விகளாக எழுப்பப்படலாம். அதற்கு எவருக்கும் உரிமை உண்டு.
இந்த அரங்கின் நோக்கம் அந்த படைப்பாளியை அணுக்கமாக அறிவதே. அவருடைய தரப்பை கேட்பதற்கான அரங்கு இது. அவர் பேசுவதற்குரிய களம். அதன்பொருட்டே கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆகவே கேள்வி என்ற பெயரில் எவருக்கும் தன்னை முன்வைத்து பிலாக்காணம் வைக்க அனுமதி இல்லை. ஓர் இளம்படைப்பாளி தன் எழுத்துக்கள் எவ்வண்ணம் வாசிக்கப்படுகின்றன என அறிவதற்கான மேடை இது. அது அவருக்கு தன்னம்பிக்கையையும் எதிர்கால திட்டங்களையும் அளிக்கும். உலகமெங்கும் இத்தகைய meet the author நிகழ்ச்சிகள் நடைபெறுவது இப்படி, இந்த நோக்கத்துடன் மட்டுமே. உலகமெங்கும் இத்தகைய அரங்குகளில் கலந்துகொண்ட அனுபவத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சந்திப்பு நிகழ்வுகளில் பார்வையாளர்களில் எவரும் எங்கும் ஆசிரியருடன் விவாதிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆசிரியர் மீதான தாக்குதல்களும் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், பார்வையாளர்கள் எவர் வேண்டுமென்றாலும் வரலாம் என்னும் அனுமதி இருப்பதுதான். உலகில் எந்த அறிவார்ந்த அரங்கிலும் எவர் வேண்டுமென்றாலும் எழுந்து என்னவேண்டுமென்றாலும் பேசலாம் என்னும் நிலை இருப்பதில்லை.
ஒரு நிகழ்வில் மிக முக்கியமானவர்கள் அரங்கினரே. அவர்களே நேரம் ஒதுக்கி வந்து அமர்ந்திருப்பவர்கள். அவர்களுக்கு கற்க, அறிய, மகிழ அரங்கில் நிகழ்வுகள் இருக்குமென்னும் உறுதிப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் அரங்கில் இருக்கும் அந்த 600 பேருக்கும் அந்த மேடையில் இருக்கும் எழுத்தாளர் பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரைக் கேட்கவே வந்து அமர்ந்திருக்கிறார்கள். விவாதிக்கிறேன் என்று ஒன்றும் தெரியாத ஒருவர் எழுந்து பேசித்தள்ளினால் அரங்கினர் அதை ஏன் கேட்கவேண்டும்?
இங்கே எந்த அரங்கிலும் அழையாவிருந்தாளியாகப் புகுந்து பேசித்தள்ளி, வேறெவரும் பேசமுடியாமலாக்கும் ஒட்டுண்ணிகள் உண்டு. சென்ற இருபதாண்டுகளில் இங்கே இலக்கியநிகழ்வுகள் அனைத்தையும் சீரழித்தவர்கள் அவர்கள். ஜனநாயகம் என்ற பேரில் அவர்களுக்கு இடமளிப்பது அரங்கினர் மீதான வன்முறை. இங்கே அறிவியக்கப் பயிற்சியற்றவர்கள் நடத்தும் பெரும்பாலான கூட்டங்களில் நிகழ்வது அரங்கினர் மீதான நேரடி வன்முறை மட்டுமே. ஆகவேதான் ஒருமுறை வந்தவர் அக்கூட்டங்களுக்கு மறுமுறை எட்டிப்பார்ப்பதில்லை.
விஷ்ணுபுரம் அரங்குகளில் பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு தெரியும், படைப்பாளிகளின் படைப்பை ஒட்டியே கேள்விகள் இருக்கும். படித்துவிட்டு வந்து அப்படைப்பாளியின் உலகு, அவருடைய அழகியல் பார்வை பற்றி எழுப்பப்படும் ஆழமான கேள்விகள் அவை. மூத்த எழுத்தாளர்களும் சகஎழுத்தாளர்களும் கேட்கும் கேள்விகள் அவற்றில் பெரும்பகுதி. அந்த எழுத்தாளர் அவருடைய வாழ்க்கையில் சந்தித்த முதன்மையான வாசகர்திரளாகவே விஷ்ணுபுரம் அரங்கு இருக்கும். இன்னொரு அரங்கு அதற்கிணையானதாக அவருக்கு அமைய நீண்டகாலம் பிடிக்கும். ஏனென்றால் இத்தகைய அரங்குகள் தமிழகத்தில் அனேகமாக வேறில்லை.
விவாத அரங்கு என்பது முற்றிலும் வேறு. அது இணையான பல தரப்புகள் நடுவே நிகழ்வது. அங்கே எதிர்விமர்சனம் வைப்பவருக்கும் இடமுண்டு. ஆனால் அவரும் தெரிவுசெய்து அழைக்கப்பட்டவராகவே இருப்பார். அவர் அழைக்கப்பட்டிருப்பதும், அவர் பேசுவார் என்பதும் அரங்கினருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கும். அரங்கினர் அதற்கு தயாராக இருந்தால்தான் அங்கே வந்திருப்பார்கள். விஷ்ணுபுரம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கவிதைவிவாத அரங்குகளில் கவிஞர், விமர்சகர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளர்கள் பேசமுடியாது. ஆகவேதான் அவை மிகக்கூர்மையாக அமைந்தன. இன்றுவரை அத்தகைய அமர்வுகள் நடைபெற்றுவருகின்றன.
விவாத அரங்குகள் மட்டுப்படுத்தப்பட்ட சபையினர் முன்னிலையில்தான் நடத்தப்பட முடியும். ஏனென்றால் விவாதிக்கும் தரப்புகள் தகுதியானவையாக இருக்கவேண்டும். அண்மையில் நிகழ்ந்த எம்.கோபாலகிருஷ்ணன் அரங்கு உட்பட அந்த தளத்திலேயே நிகழ்ந்தன. எவரும் எதுவும் சொல்லலாம் என்றால் அதன்பெயர் விவாதம் அல்ல, உளறல் அல்லது சண்டை. அதுதான் இங்கே பெரும்பாலும் நிகழ்கிறது.
உலகம் முழுக்க நிகழும் விவாத அரங்குகளில் விவாத நெறிமுறைகள் உண்டு. எப்படி ஒரு தரப்பை முன்வைக்கவேண்டும், எப்படி அதை மறுக்கவேண்டும், என்னென்ன எல்லைகளுக்குள் நின்று பேசவேண்டும் என்பதெல்லாமே கல்விநிலையங்கள் வழியாகவே கற்கப்படுகின்றன. எதிர்ப்புகள், மறுப்புகள் கூட அந்த அரங்கநெறிகளுக்கு உட்பட்டே நிகழ்கின்றன. நானும் கேரளத்தில் அத்தகைய பல அரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறேன். தமிழகத்தில் நமக்கு அப்பயிற்சி இல்லை. ஆகவே இங்கே எல்லாமே அரங்கில்லாமல் வட்டாடுதல்தான்.
எவர் வேண்டுமென்றாலும் எதைவேண்டுமென்றாலும் சொல்லலாம் என்றால் அது ஏதேனும் அறிந்தவர்களுக்குச் சாதகமான அரங்காக இருக்காது. ஒன்றுமே தெரியாமல் கூச்சலிடும் மூர்க்கர்களுக்கான அரங்காகவே இருக்கும். அப்படி ஓர் அரங்கை நாம் ஏன் சிரமப்பட்டு உருவாக்கித்தரவேண்டும்? என்ன தலையெழுத்து?
நாங்கள் விவாத அரங்குகளை உருவாக்கி நடத்தி வருகிறோம். பல ஆண்டுகளாக. அவை மிகக்கடுமையான முரண்பாடுகள், விவாதங்கள் வழியாக முன்னகர்பவை. மலையாள -தமிழ் கவிஞர்களுக்கு இடையேயான விவாத அரங்குகள் மிகப்பெரிய தொடர்விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன. இன்று கால்நூற்றாண்டுக்குப் பிறகும் நீடிக்கும் விவாதங்கள் அவை. அண்மையில்கூட அவற்றைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.
வெவ்வேறு கொள்கைகள், அழகியல்தரப்புகள் பற்றிய விவாதங்களை ஒருங்கிணைக்கிறோம். இன்னும் ஒருங்கிணைப்போம். அவற்றில் அந்தந்த துறைசார்ந்த அறிஞர்களே பங்குகொள்வார்கள். நாட்டாரியல் என்றால் அ.கா.பெருமாள் வருவார். மொழியியல் என்றால் டி.பி.ராஜீவன் வருவார். சிற்பவியல் என்றால் சுவாமிநாதன் வருவார். இயற்கையியல் என்றால் தியோடர் பாஸ்கரன் வருவார். ஒன்றுமே தெரியாமல் சும்மா ஜல்லியடிக்கும் கும்பலை புறக்கணிக்கவேண்டும் என்னும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது எங்கள் அமைப்பு.
அந்த விவாதங்கள் வழியாக உருவாகி வந்த இளம்படைப்பாளிகளே இன்று தமிழகத்தின் முதன்மையான இலக்கிய ஆளுமைகள். இன்று எங்கே எந்த இலக்கியக்கூட்டம் என்றாலும் அவர்களே முகங்கள். முகநூலில் சலம்பும் கும்பல் அல்ல, இவர்களே தமிழ் அறிவியக்கத்தையோ இலக்கியத்தையோ முன்னெடுப்பவர்கள்.
சென்ற காலங்களில் சிற்றிதழ் சூழலில் இலக்கிய அரங்குகள் இருபது முப்பது பேருக்குள் நிகழ்ந்தன. அவற்றை சம்பந்தமே இல்லாதவர்கள் வந்து கண்டபடி சலம்பி சீரழித்தனர். விளைவாக இலக்கிய அரங்குகளே இல்லாமலாகியது. அந்த நிலைகண்ட கசப்பில்தான் விஷ்ணுபுரம் அரங்குகள் சர்வதேச அளவிலான நெறிகளுடன் ஒருங்கமைக்கப்பட்டன. அவை மிகப்பெரிய நல்விளைவுகளை உருவாக்கியுமிருக்கின்றன. விஷ்ணுபுரம் அமைப்புக்கு வெளியே எங்கே இலக்கிய விவாத அரங்கு என ஏதாவது நிகழ்கிறது? அதை எண்ணிப்பார்த்தாலே நிலைமை புரியும்.
இதற்கப்பால், இத்தகைய பொது அரங்குகளில் தீவிரமான தனிப்பட்ட விவாதங்கள் நிகழலாம். அவை நட்பார்ந்தவை, இயல்பாக கூடுபவை. அவ்வண்ணம் ஒவ்வொரு விஷ்ணுபுரம் விழாவிலும் நடைபெற்ற விவாதங்களை பலர் குறிப்பிடுவது செய்வதுண்டு. ஆனால் பொதுவாக விவாத அரங்குகளை பதிவுசெய்யக்கூடாதென்பது எங்கள் கொள்கை (அதுவும் உலகம் முழுக்க உள்ள நெறிதான். தன்னியல்பான ஒழுக்கு குறையும், அரசியல்சரிகள் சார்ந்த எச்சரிக்கைகள் உருவாகிவிடும் என்பதனால்)
இம்முறை விஷால்ராஜா, சுரேஷ் பிரதீப், லக்ஷ்மி மணிவண்ணன் ஆகியோருடனான தனிப்பட்ட விவாதங்கள் மிகச்செறிவாகவும் தீவிரமாகவும் இருந்தன எனறு சொன்னார்கள். ஏ.வி.மணிகண்டன் ஓவியம் பற்றி ஆற்றிய உரையும் தொடர்ந்த விவாதமும் மிகத்தீவிரமானவை என்று அறிந்தேன். அவை இத்தகைய கூடுகைகளின் இன்னொரு பக்கம்.
ஆ. அரசியல் ஏன் தவிர்க்கப்படவேண்டும்? இது ஃபாசிசம் அல்லவா?
இங்கே அரசியல் என பேசப்படுவது நூறு சதவீதம் உள்ளூர் கட்சியரசியல் மட்டுமே. அரசியல் கொள்கைகள் அல்ல, கோட்பாடுகள் அல்ல, சர்வதேச அரசியல்கூட அல்ல. அவரவர் தரப்பை ஓங்கிச்சொல்லும் நக்கல் நையாண்டி கலந்த சலம்பலையே இங்கே அரசியல்விவாதம் என்கிறோம். அந்த தரப்பு மிகப்பெரும்பாலும் அவரவர் சாதி, மதம் சார்ந்தது. வேறேதேனும் அரசியல் ஏதேனும் மேடையில் பேசப்பட்டதாக நான் கேள்விப்பட்டதுகூட இல்லை.
அந்த அரசியல்தான் இரவுபகலாக இங்கே முகநூலில், டிவியில், டீக்கடையில் நிகழ்கிறதே. அதற்கு எதற்கு செலவு செய்து தனியாக இன்னொரு அரங்கு? நாம் எங்கும் ஒன்றையே பேசும் கூட்டம். www.quora.com என ஒரு தளம் உண்டு. உலகமெங்கும் அது வாசகர்கள் ஒருவர் கேள்விக்கு ஒருவர் பதில்சொல்லி அறிவைப் பகிரும் களம். தமிழில் பாருங்கள் 99 சதவீதம் சினிமா, அரசியல் கேள்விகள். அதற்கான அசட்டுத்தனமான, அரட்டைத்தனமான பதில்கள். அதுவே எங்குள்ளது, முகநூல் உட்பட.
விஷ்ணுபுரம் அரங்கு இந்தப் பொதுப்போக்கில் இருந்து விலகியவர்களுக்காக மட்டுமே ஒருங்கிணைக்கப்படுவது. இலக்கியத்தை, அழகியலை நம்புபவர்களுக்கானது. அவர்கள் தங்கள் அறிதலை பரிமாறிக்கொள்ளும் களம் இது. இங்கே அந்த அரசியலுக்கு இடமில்லை. அந்த வம்புகளுக்கு இடமில்லை.
இப்படி தனிப்பட்ட அறிவுவட்டங்கள் இங்கே ஏராளமாக உள்ளன. தொழில்நுட்பம் சார்ந்தவை, வணிகம் சார்ந்தவை, ஆன்மிகம் சார்ந்தவை. அவற்றிலொன்று இது. எங்களுக்கு கட்சி அரசியல் வேண்டாம். நாங்கள் இலக்கிய அழகியலை, இலக்கியம் பேசும் சமூகவியலை பற்றி மட்டுமே பேசுகிறோம். அரசியல் வேண்டும் என்பவர்கள் தங்கள் அரங்குகளை அமைத்து அங்கே அரசியல் பேசலாமே. அங்கே நாங்கள் வருவதில்லையே.
இந்த கட்சியரசியல் ஆட்கள் சொல்வதென்ன? ‘எங்களுக்கு தெரிந்தது கட்சியரசியல். அதையே எங்கும் பேசுவோம். வேறெதையும் பேசவிடமாட்டோம். வேறெது பேசப்பட்டாலும் அவர்களை வசைபாடுவோம்’ என்கிறார்கள். இது ஃபாசிசமா? இல்லை, எங்களுக்கு தேவையானதை நாங்கள் பேசுகிறோம், நீங்கள் உங்களுக்குரியதை பேசுங்கள் என்று நாங்கள் சொல்வது ஃபாசிசமா?
விஷ்ணுபுரம் அரங்கில் அழைக்கப்பட்டு மேடையேறும் எழுத்தாளர்கள் அவர்களின் புனைவின் அரசியலை முன்வைக்க எந்த தடையும் இல்லை. பவா செல்லத்துரை, கவிஞர் வெயில் , கார்த்திக் புகழேந்தி ஆகியோர் தங்கள் இடதுசாரி அரசியலையோ, ராஜ் கௌதமன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் தங்கள் தலித் அரசியலையோ, பெருந்தேவி , லீனா மணிமேகலை ஆகியோர் தங்கள் பெண்ணிய அரசியலையோ, அகரமுதல்வன் அவருடைய ஈழவிடுதலை அரசியலையோ முன்வைக்க தயங்கியதுமில்லை. போகன் சங்கர் அவருடைய அரசியலுக்கெதிரான அரசியலையும் முன்வைத்திருக்கிறார்.
ஆனால் அதை மறுத்துப்பேச அரங்கில் எவருக்கும் அனுமதி இல்லை. ஏனென்றால் அது அந்த எழுத்தாளர்களின் மேடை. அவர்கள் சொல்வதென்ன என்று கேட்கவே அரங்கினர் அமர்ந்திருக்கிறார்கள். கேட்க வந்தவர்கள் ஆளாளுக்கு தங்கள் அரசியலைப் பேசுவதை கேட்பதற்காக அவர்கள் வரவில்லை. அப்படி அந்த அரங்கிலே பேசும் தகுதி ஒருவருக்கு உண்டு என கருதினால் அவரை அழைப்போம், மேடையேற்றுவோம், அப்போது பேசலாம்.
இ. நெறிமுறைகள் விதிப்பது ஆசாரவாதம் அல்லவா?
நெறிமுறைகள் இல்லாத ஒரே ஒரு அமைப்பு கூட எங்குமில்லை. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அமைப்புகளின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். எனக்குத் தெரிந்து இடதுசாரி அமைப்புகளின் நிகழ்வுகள் மிகமிக தீவிரமான நெறிமுறைகள் கொண்டவை. அவற்றின்மேல் எவருக்கும் புகார் இல்லை. அங்கே போய் மீறல் பேசினால் பிடரியில் அடி விழும். திமுக போன்ற கட்சிகளின் நிகழ்வுகளில் தரவரிசை புரோட்டக்கால் எல்லாம் உண்டு. அதில் எல்லாம் நம் எழுத்தாளர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கல்லூரிகளின் நிகழ்வுக்கு செல்பவர்கள் நெறிமுறைகள் பற்றி புகார் சொல்வதில்லை.
நெறிமுறைகள் ஏன்? ஒருவர் ஒரு கேள்வி கேட்கிறார். அவர் சுருக்கமாக கேட்டாரென்றால் இன்னும் சிலருக்கு வாய்ப்பு அமையும். கேட்கப்பட்ட எழுத்தாளர் பதிலளிக்க நேரமிருக்கும். ஆகவே சுருக்கமாகக் கேட்கவேண்டும் என்பது ஒரு நெறிமுறை. ஓர் எழுத்தாளர் எழுதிய எழுத்தைப் பற்றி அவரிடம் கேட்கவேண்டுமே ஒழிய அவருக்கு தெரியாத களங்கள் பற்றி கேட்கக்கூடாது என்பது இன்னொரு நெறிமுறை. இதெல்லாம் கட்டுப்பாடுகள் அல்ல. இந்த நெறிமுறைகள் வழியாகவே சிறந்த விவாதம் நிகழமுடியும்.
மீண்டும் சொல்கிறேன், அமர்ந்திருக்கும் சபையே முக்கியம். அவர்களுக்கு அறியவும் கற்கவும் ஏதேனும் கிடைகவேண்டும். அவர்களின் நேரம் மதிக்கப்படவேண்டும். அதற்குத்தான் நெறிமுறைகள். அந்நெறிமுறைகள் இருப்பதனால்தான் ஓர் இளம் எழுத்தாளர் பேசும் அரங்குக்கு 600 பேர் வந்து அரங்கு நிறைந்து அமர்ந்திருக்கிறார்கள். நெறிமுறை வேண்டாம் என்னும் கும்பல் வேறு அமைப்புகளை உருவாக்கலாம்.
நெறிமுறைகள் எங்கள் நிபந்தனை. அதை ஏற்காத எவரும் வரவேண்டாம். மறுக்கலாம், புறக்கணிக்கலாம். எங்களுக்கும் அவர்கள் ஒரு பொருட்டு அல்ல. 13 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நெறிமுறைகளை ஏளனம் செய்து புறக்கணித்தவர்கள் உண்டு. அவர்கள் பலர் எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை. நாங்கள் எங்கள் வாசகர்களை, எங்களை தொடரும் எழுத்தாளர்களை உருவாக்கி ஓர் அறிவியக்கமாக ஆகியிருக்கிறோம்.
ஈ. இங்கே நவீனக் கோட்பாடுகள், இலக்கிய சிந்தனைகளுக்கு இடமில்லையா?
விஷ்ணுபுரம் அரங்கு இலக்கியவாதிகளின் அறிமுகத்திற்கும் உரையாடலுக்குமானது. அந்த எல்லைக்குள் கண்டிப்பாக இடமுண்டு. ஆனால் இலக்கியம், சமூகவியல், நாட்டாரியல் என எந்த துறையானாலும் உண்மையிலேயே அவற்றைக் கற்று, தெளிவாகவும் மதிப்பிற்குரிய முறையிலும் பேசும் அறிஞர்களையே இடம்பெறச் செய்வோம். ஒன்றும் புரியாமல் பேசும் அரைவேக்காடுகளை அண்டவே விடமாட்டோம். அவர்கள் கடந்த காலத்தில் உருவாக்கிய குழ்ப்பங்கள், அழிவுகளை அறிந்து அவற்றை தவிர்க்க உருவாக்கப்பட்ட அமைப்பு இது.
இங்கே நாட்டாரியல் அறிஞர் அ.கா.பெருமாள் பேசியிருக்கிறார். பேரா.ராஜ் கௌதமன், பேரா.ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற சமூகவியலாளர் பேசியிருக்கிறார்கள். நவீன இலக்கியக் கோட்பாடுகள் பற்றி அவற்றை முறையாகக் கற்று, சர்வதேச அரங்குகளில் அவற்றைப் பற்றி பேசும் தகுதி கொண்ட டி.பி.ராஜீவன், கே.ஜி.சங்கரப்பிள்ளை, ஜெனிஸ் பரியத் போன்ற பேராசிரியர்கள் பேசியிருக்கிறார்கள். இவ்வாண்டும் பேரா.பி.கே.ராஜசேகரனை அழைத்திருந்தோம். அவர் வர இயலவில்லை. உள்ளறைக் கூட்டங்களிலும் சூம் செயலி சந்திப்புகளிலும் துறைசார்ந்த அறிஞர்கள் பங்கெடுத்துள்ளனர். வரும் ஆண்டுகளில் சர்வதேசப்புகழ்பெற்ற அறிஞர்கள் பங்கு கொள்வார்கள். ஆனால் அறிஞர்களுக்கே இடம்.
இத்துடன் முடித்துக் கொள்வோம்.