விஷ்ணுபுரம் விழா கடிதம்

அன்புள்ள ஜெ,

தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக விஷ்ணுபுரம் விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியிருக்கிறேன். இலக்கிய நிகழ்வுகளில் பங்குகொள்வதற்க்கு இணையாக நண்பர்களைச் சந்திக்கும் நாட்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கச் செய்யும் விழா இது. நோய்க்காலத்துக்குப் பின்பான கடந்தவருட விழாவில் பங்கேற்றது ஏற்கனவே இனிய அனுபவமாய் நிறைந்திருந்தது. இந்தமுறையும் எழுத்தாளர்களுடனான அரங்குகள், புதிய புத்தகங்கள் என மீண்டுமொரு மகிழ்வான அனுபவம். அரங்குகள் முடிந்தபின் இடைவேளைகளில் எழுத்தளர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களிலும் நண்பர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுக் கொண்டிருந்தனர்.

அமர்வுகளில் குறிப்பாக இலக்கிய முகவர் பற்றிய கனிஷ்கா மற்றும் மேரி ஆகியோரின் கருத்துக்கள் இதுவரை நான் கேள்விப்படாத ஒன்று. இத்துறையின் வெவ்வேறு சாத்தியங்களையும் சவால்களையும் தெளிவாக முன்வைத்தார்கள். எழுத்தாளரே படைப்பாளியாகவும், படைப்பை அறிமுகம் செய்து சந்தைப்படுத்துபவராகவும், விமர்சனக்கூட்டங்களை முன்னெடுப்பவராகவும் இருக்கும் தமிழ்ச்சூழலில் இலக்கிய முகவர் என்னும் இவ்வகைமை பற்றிய விவாதங்கள் முற்றிலும் புதிய எழுத்துச் சூழல் பற்றிய கருத்தக்கதை முன்வைத்தன.

அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மமங் தாய் அமர்வு சீனா-இந்தியா இடையில் உள்ள இம்மாநிலத்தின் ‘ஆதி’ பூர்வகுடி மக்களின் மொழியையும், பண்பாட்டினையும் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளரின் பார்வையில் வெளிப்படுத்தியது. இந்த அமர்வை வழிநடத்திய ராம்குமார் இ.ஆ.ப எழுத்தாளர் மமங்தாய் அவர்களின் பதில்களோடு தேவைப்படும் இடங்களில் தன் பணி அனுபவங்களையும் பகிர்ந்து விவாதங்களைச் செம்மைப்படுத்தினார்.

இரு நாட்களும் சுநீல் கிருஷ்ணன், காளிப்பிரசாத், சுரேஷ் பிரதீப், விஷால் ராஜா, செந்தில் ஜெகந்நாதன், சுஷில் குமார் ஆகியோருடன் சாருவின் படைப்புகள் பற்றியும், அவரது விமர்சன பங்களிப்பைப் பற்றியும் உரையாடிக்கொண்டிருந்து நிறைவழித்த அனுபவம். கவிஞர் இசையுடனான சந்திப்பில் அவரது கவிதை ஒன்றினைப் பற்றிய என் தனிப்பட்ட அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து அவரைக் அணைத்துக் கொண்டேன். அருண்மொழி அக்காவிடம் ‘பனி உருகுவதில்லை’ நூலினை என் மனைவிக்காக பெயர் எழுதி கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டேன். புத்தகங்களோடு ஊருக்குத் திரும்பியபின் அக்கா மகன்கள் இருவரும் தேகம், குமரித்துறைவி நாவல்களை ஆளுக்கொன்றாக எடுத்துச் சென்று படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கூடவே கடந்த முறையைப் போலவே இந்த வருடமும் நான் எப்போதும் மறக்க முடியாத சில நிகழ்வுகள் எனக்கு நடந்தன.

விழா தேதிகள் அறிவிப்பிற்குப் பின்னும் என்னுடைய பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக டிசம்பர் முதல் வாரம் வரை காத்திருக்கவேண்டியிருந்தது. பிறகு பயணத்தைத் திட்டமித்தவுடன் தங்குமிடம் பதிவுசெய்து கொண்டேன்.

இந்த வருடம் எனக்கு டாக்டர் பங்களாவில் ஒதுக்கியிருந்தார்கள். சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து இயக்கப்படும் இரவுப்பேருந்து ஒன்றில் கிளம்பி அதிகாலை 4 மணிக்கே கோவை காந்திபுரம் வந்து சேர்ந்தேன். தங்குமிடம் தொடர்பான அறிவிப்பில் பஸ், ஆட்டோ, டாக்சி வழியாக ராஜஸ்தானி சங் வருவதற்க்கு வழிகளை ஏற்கனவே அனுப்பியிருந்தார்கள். காலையில் பஸ்கள் தாமதமாகத்தான் கிளம்பும் என்று தெரிந்தபின் கூகுளில் தேடியபோது மொத்தமே 30 நிமிட நடைதான் என்று தெரிந்து கோவையின் அதிகாலை சாலையில் நடந்தே ராஜஸ்தானி சங் வந்து சேர்ந்தேன். (அடுத்தமுறை இந்த 30 நிமிட நடை பற்றிய சிறு குறிப்பையும் மின்னஞ்சலில் சேர்க்கச்சொல்ல வேண்டும்).

அந்நேரத்திற்கே சுதா மாமி கையில் பட்டியலுடன் வருவோர்க்கு உதவிக்கொண்டிருந்தார். எனக்கு டாக்டர் பங்களா என்றவுடன் சற்றே காத்திருக்கச் சொல்லிவிட்டு ஜி. எஸ். எஸ். வி. நவீன் கிளம்பியதும் என்னை அங்கு காரில் இறக்கிவிட்டுச் செல்லச் சொன்னார். அறிமுகமாகியபின் பேசிக்கொண்டே வந்த நவீன் ஒரு பங்களா வாசலில் இறக்கிவிட்டு “உள்ளே சென்று விஷ்ணுபுரம் என்று சொல்லுங்கள், அவர்களே பார்த்துக்கொள்வார்கள்” என்று வழியனுப்பிச் சென்றார். பெரிய வராந்தா கொண்ட அந்த இருண்ட மாளிகையின் உள் சென்றபோது கதவு பூட்டியிருந்தது. அப்படியே வீட்டின் பக்கவாட்டில் ஒரு முறை சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் வராந்தா வந்தபோது வேகமாக உள்ளே வந்தவர் ‘யார் நீங்க, எதுக்கு உள்ள போனீங்க’ என்று கேட்டுக்கொண்டே நெருங்கினார். நான் நிதானமாக ‘விஷ்ணுபுரம்’ என்று கூறினேன். அவர் ‘யாருங்க நீங்க, என்ன சொல்றீங்க, எதுக்கு உள்ளே வந்தீங்க’ என்றவுடன் நிலைமை புரிந்து நண்பர் நவீனை ஒரு தடவை நினைத்துக்கொண்டேன்.  ‘இது தங்குறதுக்கான கெஸ்ட்கவுஸ்னு நினைச்சு வந்துட்டேன்’ என்று சொல்லி அவரைச் சமாளித்துவிட்டு வேகமாக வெளியேறி அருகில் ‘டாக்டர் பங்களா’ பற்றி விசாரிதேன். தெருவின் இரண்டு முனைகளிலும் கெஸ்ட்கவுஸ் பங்களாக்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டதும் எதற்கு சிக்கல் என்று மீண்டும் நடந்து ராஜஸ்தானி சங் வந்து விஷயத்தைச் சொன்னேன்.

அப்போது தான் அங்கு அறைக்காக இன்னொரு நண்பருடன் வந்திருந்த எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் விடியும் வரை தன்னுடனேயே அறையில் இருக்கலாம் என்று அழைத்தார்.  அடுத்த இரண்டு மணிநேரங்கள் சுரேஷ் பிரதீப்புடன் இலக்கியம் பற்றியும் அவரது ‘Tamil literary talks’ இலக்கிய சானல் பற்றியுமான ஆரவமூட்டும் உரையாடலாக அமைந்தபோது நண்பர் நவீனுக்கு மனதார நன்றி சொல்லிக்கொண்டேன். கூடவே அந்த அறைக்கு வந்த எழுத்தாளர் செந்தில் ஜெகந்நாதன் இதில் கலந்து கொண்டது இன்னும் சுவாரசியமாக இருந்தது. பிறகு நாங்கள் டீ குடிக்கச் சென்றுவிட்டு வரும்போது நீங்கள் நண்பர்களோடு வந்துகொண்டிருப்பதைப் பார்த்து உங்களோடு சேர்ந்துகொண்டோம் . அப்போதே மொழியாக்கம் பற்றிய விவாதம் துவங்கி, மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பு, அவர்களின் பல்வேறு ஆக்கங்கள் என உரையாடல் போய்க் கொண்டிருந்தது. அறைக்குத் திரும்பி மீண்டும் சிறுகதைகளைப் பற்றிய உரையாடலில் இருந்தபோது அந்த அறைக்கான இன்னொரு நபராக எழுத்தாளர் விஷால் ராஜா வந்து சேர்ந்தார். மீண்டும் இலக்கியம், விமர்சனம் பற்றிய உரையாடல் தொடர்ந்தது.

அறையில் இருந்து போனில் அழைத்த சுக்கிரி நண்பர்கள் அங்கு அனைவரும் கிளம்பி விட்டதால் குளியலறையைப்  பயன்படுதிக்கொள்ளலாம் எனக் கூறினா். அங்கு சென்று குளித்து முடித்து மீண்டும் பழைய அறைக்குச் செல்லலாம் என்று வெளியேறியபோது அறையின் கதவு திறக்கவில்லை. இடையில் அறைக்கு வந்த ஒருவர் அறையில் யாருமில்லை என்று நினைத்து கவனமாகப் பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். அன்றைய நிகழ்வுகளை அழகாகத் தொகுத்தளித்த ஜாஜா தான் என்னை உள்ளே வைத்துப் பூட்டியவர் என்று பிறகு தெரிந்தது. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு மேலாக ஒரே சீராகத் தட்டிக்கொண்டிருந்த போது வெளியே வராந்தாவில் நடந்து வந்த சிலரிடம் உள்ளே மாட்டிக்கொண்டதைச் சொன்னேன். அவர்கள் கீழே சென்று ஆட்களை வரச்சொல்வதாகச் சொல்லிவிட்டு நான் யாரென்று கேட்டபோது ‘நான் ராஜேஸ் பேசுறேன்’ என்றதை ‘யாரோ, நாகேஸ்வரராவாம்’ என்று அவர்களுக்குள் பேசியபடி கீழே சென்றார்கள். பிறகும் நெடுநேரம் யாரும் வராதாதால் இந்தமுறை ஒரேமாதிரி தட்டாமல் வேறுவேறு மாதிரி கதவைத் தட்டி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தேன். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து வந்த பார்த்து விசாரித்த குரல் லாஓசி சந்தோஷ் என்று தெரிந்து மாட்டிக்கொண்டதைச் சொன்னேன். அவரும் கீழே போய் ஆள் அனுப்புகிறேன் என்று சொன்னபோது பயந்து ‘எங்கும்  செல்லவேண்டாம், இங்கிருந்தே ஏதாவது செய்யுங்கள்’ என்று கேட்டுக்கொண்டதால் ஒரு வழியாக கதவு திறக்கப்பட்டு விரைந்து வெளியேறி அரங்கிற்கு சென்று அமர்வுகளில் பங்கேற்கத்துவங்கினேன்.

தேநீர் இடைவேளையில் என்னைச் சந்தித்த ஜாஜா ‘கிட்டதட்ட கொலைக்கேசுக்கு இணையான குற்றம் போல’ நண்பர்கள் அவரைக் காலை முழுவதும் இதுபற்றி விசாரித்துகொண்டிருந்ததாகச் சொல்லிச் சிரித்தார். மதிய உணவின் போதுதான சந்திப்பில்தான் தெரிந்தது, அடைபட்டிருந்தபோது என்னை ‘யாரோ நாகேஸ்வரராவாம்’ என்று கூறிக் கடந்து சென்றவர்கள் என்னோடு காலையில் இருந்தே அறையில் பேசிக்கொண்டிருந்த செந்தில் ஜெகன்னாதனும், சுரேஷ் பிரதீப்பும் தான் என்று. பிறகு விழா முடியும் வரை அவர்கள் என்னை நாகேஸ்வரராவ் என்றே அழைத்துக்கொண்டிருந்தனர்.

இரண்டாம் நாள் நிகழ்வின் முடிவில் அரங்கின் படிகளில் உங்களோடும் நண்பர்களோடும் அமர்ந்திருந்த போது அங்கொரு அறையில் கிளம்பிக்கொண்டிருந்த திருமூலநாதனை நெடுநேரமாக யாரோ அறையில் வைத்து அடைத்துள்ளார்கள் என்று பதட்டமாக நண்பர்கள் சாவியைத் தேடிக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த நவீன் தன்னிடம் தான் சாவி இருக்கிறது என்று சொன்னபோது அங்கு பெரும் சிரிப்பொலிதான் எழுந்தது. அதன் பிறகு என் அனுபவத்தையும் உங்களோடும் நண்பர்களோடும் சொல்லிச் சிரித்தது என்றும் இவ்விழாவினை என் நினைவில் தங்கச் செய்யும்.

இதோ, விழாவிலிருந்து வந்த அதே மனநிலையைத் தக்கவைக்கும் விதமாக சுநீல் 2023 ம் ஆண்டுக்கான 1000 மணிநேர வாசிப்பு சவாலை மீண்டும் துவங்கியுள்ளார். பெரிய திட்டங்களோடு இணைந்து இந்த புதுவருடத்தைத் தொடங்குகிறேன். நன்றி ஜெ.

அன்புடன்,

ராஜேஸ்.

இங்கிலாந்து.

*

அன்புள்ள ராஜேஷ்

இத்தகைய நிகழ்வுகளின் பயன் என்பதே இதைப்போன்ற தற்செயலாக கைகூடும் இலக்கியவிவாதங்களும் தனிப்பட்ட உரையாடல்களும்தான். மறக்காமலிருக்க நீங்கள் சொன்னதுபோன்ற சில அனுபவங்களும்.

ஜெ

முந்தைய கட்டுரைஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும், ஒரு பார்வை
அடுத்த கட்டுரையோகம், ஆசிரியர்