நீ தொட்டால்…

நான் ஐந்தாம்கிளாஸ் படிக்கும்போது வந்தபடம். இப்பாடல் அப்போதே புகழ்பெற்றது. ஏராளமான கூம்புவடிவ ஒலிபெருக்கிகளில் கல்யாணவீடுகளில் ஒலித்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்  ‘உங்கள்’ கே.எஸ்.ராஜாவுக்கு பிரியமானது. இந்தப்படத்தை அதன்பின் இரண்டாம் வெளியீட்டில் 1979 ல்தான் பார்த்தேன். நான் அப்போது கல்லூரி சென்றுவிட்டிருந்தேன்.

இப்போது பார்க்கையில் இந்தப்பாட்டை எடுத்திருக்கும் விதம் ஆச்சரியமூட்டுகிறது. மிகமிக எளிமையாக, எந்த நடன அசைவுமில்லாமல், ஒரே இடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இருவரும் வலைத்தொட்டிலில் இருந்து எழவே இல்லை. அந்த இடத்தில் சாத்தியமான எல்லா காமிராக்கோணங்களும் வைக்கப்பட்டுள்ளன. நடிப்பு மிகமிக மிதமாக, செயற்கை முகபாவனைகளே இல்லாமலிருக்கிறது. எம்.ஜி.ஆர் கே.ஆர்.விஜயா இருவரின் சிரிப்பும் அழகாக உள்ளன. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தமான காட்சியமைப்புக்கும் இக்காட்சியின் அழகியலுக்கும் சம்பந்தமே இல்லை.

இந்த ஆச்சரியத்தை சினிமாவில் மிகமூத்த ஒருவரிடம் கேட்டேன். தேவர் படங்களில் முன்பு எம்.ஏ.திருமுகம் இயக்குநர். (பின்னர் தியாகராஜன்) அவர் தேவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். மாப்பிள்ளை என்றுதான் படப்பிடிப்பு அரங்கிலேயே சொல்வார்கள். அடிப்படையில் அவர் ஒரு நல்ல எடிட்டர். வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு வகையில் எடுக்கப்பட்ட காட்சிகளை அவர்தான் ஒரே ஓட்டமான, சுருக்கமான காட்சிகளாக வெட்டிஒட்டுவார். தேவர்படங்களே எடிட்டிங்கில் உருவானவை. (எஸ்.பி.முத்துராமனும் அடிப்படையில் எடிட்டர்தான்)

அன்று எம்.ஜி.ஆர் பல காட்சிகளை இயக்குவார். உதவி இயக்குநர்கள் இயக்குவார்கள். சண்டைக்காட்சிகளை சண்டைநிபுணர்களும், பாடல்காட்சிகளை நடன இயக்குநர்களும் இயக்குவது இன்றும்கூட சாதாரணம். இந்தக் காட்சி நடன இயக்குநர் தங்கப்பனால் அமைக்கப்பட்டிருக்கலாம். அவருக்கு சினிமா சார்ந்த நுண்ணுணர்வு மிகுதி. எம்.ஜி.ஆருடன் அவருக்கு நல்ல நெருக்கமும் உண்டு.

தங்கப்பனின் உதவியாளராக கமல் நிறைய படங்களில் பணியாற்றியிருக்கிறார். அவர்களுக்கிடையே இருந்த அணுக்கமே தங்கப்பன் மாஸ்டர் வழியாகத்தான்.

முந்தைய கட்டுரைவெண்முரசின் அருகே
அடுத்த கட்டுரைகாவியங்கள், தமிழ் விக்கி, கடிதங்கள்