காந்தி காட்சிகள், காகா காலேகர் -பிரவீன்குமார்

காகா காலேகர் காந்தியைப் பற்றி தன்னுடைய நினைவுக் குறிப்புகளை “காந்தி காட்சிகள்” என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காந்தியை பற்றி அவருடைய அணுக்கர்கள் எழுதிய பெரும்பாலானவை வழிபாட்டுணர்வுடனும், மிகை துதியும் கொண்டவையாக இருக்கும். ஒவ்வொரு சிறு விசயத்தையும் கூட சற்றே மிகையாக்கி, அவர் சொன்ன எளிய வார்த்தைகளுக்கும் கூட தெய்வத்தன்மையைத் தந்து அவரை கடவுளுக்கு மிக அருகில் கொண்டு சென்று அமர்த்தக் கூடிய எழுத்துக்களை அவர்களால் வேறெப்படி எழுதிவிட முடியாது என்று தோன்றும். (அந்நூல்களுள் கடும் ஒவ்வாமையை கொடுத்த நூல் ‘நவகாளி யாத்திரை. சாவி எழுதியது. ஒரு கேளிக்கை நூலை படிப்பது போல இருக்கும். நவகாளியாத்திரையை ஒரு கேளிக்கை யாத்திரை என்பது போன்ற கண்ணோட்டத்தில் எழுதிவைத்திருப்பார். காந்தி கோயிலுக்குச் சென்று அங்கிருந்த நாயன்மார் சிலைகளுக்கு தரிசனம் கொடுத்தார் என்றெல்லாம் எழுதிவைத்திருப்பார்.)

இந்த நூலிலும் அப்படிப்பட்ட சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. காகா காந்திக்கு மிக நெருக்கமான மாணவராக, உரிமை எடுத்துக் கொள்ளும் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறார் என்று அவரது எழுத்துக்களில் புலப்படும். அதனால் அவரால் நிதானமாக எழுத முடிந்திருக்கிறது. அதே நேரத்தில் பரவசமும் அப்படியே பதிவாகியிருக்கிறது. சில சம்பவங்கள் எழுதப்பட்ட விதம் ஒரு குன்றிமணி அளவிற்கு ஏற்றிச் சொல்லியிருந்தால் கூட அது தொன்மக்கதையாக புராணக்கதையாகவோ மாறியிருக்கக் கூடியவையாக இருந்தன.

காந்தி ஒரு கிராமத்தில் வந்து தங்கிவிட்டு கிளம்ப இருக்கிறார். காந்தி அவர்களை விட்டு கிளம்புவதற்கு மக்கள் விரும்பவில்லை. முடிந்த வரைக்கும் கிளம்பும் நேரத்தை தாமதப்படுத்தவே முயன்றனர். அவரைக் கூட்டிச் செல்ல வேண்டிய வண்டி பழுதாகிவிட்டதென்று சாக்கு சொல்கிறார்கள். பொறுத்துப் பார்த்து கோபமுற்று காந்தி கால்நடையாக நடந்து செல்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார். அப்போதும் பாதையை மாற்றிச் சொல்லிவிட்டால் வழிமாறி போய்விட்டு திரும்பி கிராமத்திற்கே வந்துவிடுவார் என்று கணக்கு போடுகிறார்கள். இறுதியில் பாதை மாறிச்சென்று கால்களில் முள் குத்தி காயங்களோடு வந்த காந்தியை பார்த்து வருந்தியிருக்கிறார்கள்.

எரவாடாவில் சிறைப்பட்டிருந்த காந்தியை சரியாக பேணக்கூடாது என்று தீர்மானித்த சிறையதிகாரி அவருக்கு துணையாக ஒரு ஆஃப்ரிக்க கைதியை நியமிக்கிறார். சிறைக்குள் இந்துக்களும் முகமதியரும் காந்தியை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவே அவர்களை விடுத்து இந்த ஆஃப்ரிக்கனை நியமிக்கிறார். மொழிகூட தெரியாத அவனுக்கு காந்தியையும் தெரியாது என்பது அவனது எண்ணம். தனக்கு தெரிந்த ஒன்றிரண்டு சொற்களையும், சைகை மொழியைக் கொண்டும் காந்தியோடு உரையாடி பணிவிடை செய்து வருகிறான். அவனுக்கு கையில் ஒரு நாள் விஷத் தேள் கொட்டிவிடுகிறது. காந்தி அவனது கையை பிடித்து கடிபட்ட இடத்தை சுத்தம் செய்து, விசத்தை வாயில் உறிஞ்சி எடுத்துத் துப்பி முதலுதவி செய்கிறார். மீண்டு வந்தவன் காந்தியின் நிழலைப் போலவே ஆகிவிடுகிறான். காந்தி ராட்டையில் நூல் நூற்பதைக் கவனித்து வந்தவன், அதற்காக உதவி வந்தவன், தானும் அவரிடம் நூல் நூற்க கற்றுக்கொள்கிறான். மேலும் நெருங்கியவனாகிப் போகிறான்.

மற்றொரு சிறையில் இருக்கும் போது, காலில் நோவு கொண்ட ஒரு மராட்டிய கைதி ஒருவனை காந்தி கவனிக்கிறார். நொண்டி நொண்டி நடக்கும் அவனுக்கு சிறையதிகாரி மருத்துவ சிகிச்சை கொடுப்பதைக் பார்த்துவிட்டு அவரது அனுமதியோடு சிகிச்சையளிக்கத் துவங்குகிறார். குடல் சுத்தத்தில் துவங்கி உணவுக்கட்டுப்பாடு, மருந்துகள் என்று அவனை பேணுகிறார். கொஞ்ச நாட்கள் சென்றதுமே அவன் மீண்டுவிடுகிறான்.நெடு நாட்கள் கழித்து, அந்த கைதி பம்பாய்க்கு பயணம் வந்திருந்த பாபூவை சந்திக்க வருகிறான். ஒரு பலகார கடை வைத்து நல்லபடியாக வாழ்வதை காந்தியிடமும் காகாவிடமும் சொல்கிறான். நேரம் குறைவாக இருந்ததால் அவனை மறுநாள் வருமாறு கூறுகிறார் காந்தி. மறுநாள் வராத அவனை எதிர்பார்த்துவிட்டு காகாவிடம் “சரி வியாபாரம் செய்யும் கடையை விட்டுவிட்டு அவனால் நேற்று வந்ததே பெரிது” என்று வருந்துகிறார்.

காந்தி ஒவ்வொரு முறை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் போதும் அவரது சீடர்களை கனிவு வார்த்தைகள் சொல்லி சமாதானம் செய்த பிறகே நோன்பிருக்க முடிகிறது. நோன்பிருக்கக் கூடாது என்று வாதிடுகிறார்கள். சண்டைபிடிக்கிறார்கள். தங்களுக்குள் “இந்த கிழவன் இருக்கானே..”என்று எரிச்சலோடு அங்கலாய்க்கிறார்கள். அவையெல்லாவற்றையும் மீறி வாதிடமுடியாமல் போகும் போது அவர்களும் பாபூவுடன் சேர்ந்து விரதமிருப்போம் என்று கோருகிறார்கள். அன்பாக மிரட்டுகிறார்கள். எல்லோரையும் காந்தி சமாளிக்க வேண்டியிருக்கிறது. அவர்களை களப்பணியை, அதன் முக்கியத்துவத்தை ஞாபகப்படுத்தி அவர்களை தடுக்கிறார்.

பலதரப்பட்ட மக்கள்-பெரும் பணக்காரர்கள், முதலாளிகள், கடை முதலாளிகள் முதல் கடைக்கோடி மக்கள் வரை சிறிதும் பெரிதுமாக பாபூவிற்கு பணத்தை காணிக்கையாக அளித்துக் கொண்டேயிருக்கிறார்கள். கல்யாண தம்பதிகளிடம் கட்டாயமாக ஹரிஜனங்களுக்காக பணம் பெற்ற பிறகே ஆசிர்வதிக்கிறார். பாபூ நலனில் அக்கறை கொண்ட மருத்துவர் அவரை பரிசோதிக்க விருப்பத்தை தெரிவிக்கும் போது அவரிடம் கட்டணம் பெற்றுக்கொண்டே தன்னை சோதிக்க அனுமதிக்கிறார். பள்ளிக்கட்டடம் கட்ட பணம் கொடுத்த தனவந்தர்கள் அங்கே எல்லா சாதிகளுக்கும் கல்வி பயிற்றுவிக்கப் பட உள்ளது என்பதையறிந்து அவரிடம் முறையிடுகிறார்கள். இந்த சாதிக்காரர்களை உள்ளே விடாமல் இருந்தால் நாங்கள் பணம் தருகிறோம் என்றவர்களிடம் அப்படியொரு நிபந்தனையுடன் இந்தியாவிற்கு சுயராச்சியமே கிடைத்தாலும் இந்தியா அதை ஏற்காது. உங்கள் பணத்தை எடுத்துச் சென்றுவிடுங்கள் என்று மறுதலித்துவிடுகிறார்.

ஒரிசாவில் சுற்றுப்பயணம் சென்ற போது ஏழை மக்களிடம் பணம் பெற்றதைப் பற்றி சொல்கிறார்: ஏழைமக்களுக்கு தாமிரத்தில் செய்யப்பட்ட ஓட்டைக் காலணாக்களைப் பார்ப்பதே பெரிய அதிசயம். அப்படிக்கிடைக்கும் சொற்ப காசுகளையும் அவர்கள் செலவளிக்க மனமின்றி துணியில் முடிந்து மண்ணில் புதைத்து வைத்துவிடுகிறார். அதனால் பாசம் பிடித்து பச்சைபசையேறி இருக்கின்றன காசுகள். அவற்றை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள் திரள். ஒரு கட்டத்தில் பச்சை பாசியாகிவிட்ட தன் கையை பாபூவிடம் காட்டி, பேச ஒரு வார்த்தையின்றி நீர்தளும்ப வெறுமே பார்க்கிறார்.

“ஏன் பாபூ இவர்களிடம் இருந்து பணம் பெறவேண்டுமா?” “அது நாம் பெறக்கூடிய புண்ணிய தானமல்லவா? நமக்குக் கிடைக்கும் தீட்சை இவை. ஏமாற்றத்திலேயே இருந்த அவர்களுக்கு இது நம்பிக்கையை உண்டாக்கும் என்று நம்புகிறேன். இந்தக்காசுகள் நம்பிக்கையின் சின்னம். நமக்கு இனி நல்லது நடக்கும் என்று அவர்கள் நம்பத் தொடங்கியதாலே அவர்கள் நமக்கதை மனமுவந்து அளிக்கிறார்கள். எனவே இருதரப்புக்கும் இத்தானத்தில் மேன்மையே” என்கிறார்.

காந்தி தன் சீடர்களுடன் கொண்டிருந்த உறவு வெளிப்படும் பல இடங்கள் வருகின்றன. பாரிஸ்டராகி இந்தியா வந்த வல்லபாய் பட்டேல் ஒரு வெற்றிகரமான வக்கீலாகி சம்பாதித்துவிட்டு மாலைகளில் குடித்து சீட்டாடிக்கொண்டிருக்கிறார். தலைவரென்று வரக்கூடியவர்களோடு பேசி அவர்களை ஆழம் பார்த்து எடைபோட்டபின் அவர்களை ரகளை செய்து கொண்டிருந்தார். காந்தியை பற்றி கேள்விப்பட்டு அவரையும் வெளிநாட்டில் படித்துவிட்டு இங்கே வந்து நாட்டை மாற்றிவிடுவோம் என்று நினைக்கக் கூடிய ஒருவராக இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன் அவரை சந்தித்து உரையாடுகிறார்.முடிவில் இவர் மற்ற எல்லா மனிதர்களைப் போன்றவர் இல்லை என்று கண்டுகொள்கிறார். அவரது தொண்டராகிறார். மக்கள் அவரை குருட்டு பக்தர் என்று அழைக்கிறார்கள். வல்லபாய் பட்டேல் சரிதான் என்று ஆமோதிக்கிறார்.

ஒரு முறை தமிழக பயணத்தின் போது கன்னியாகுமரியில் கடலில் சிறிது நேரம் நீராடுகிறார் காந்தி. விவேகானந்தர் பாறையை எல்லம் கண்டுவிட்டு திரும்பியவர், காகாவை அழைத்து உனக்கு இந்த கடலைப் பார்ப்பது பிடிக்குமென்று தெரியும் நீ மறுபடி ஒருமுறை சென்று நிதானமாக பார்த்துவிட்டு வா என்று அனுமதிக்கிறார் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கார் வந்து விட்டதா என்று விசாரித்து துரிதப்படுத்துகிறார். இதே போன்ற அக்கறை வேறொருவரிடமும் வெளிப்படுகிறது.மஹாதேவ் பாபுவோடு சென்ற ஒரு ரயில் பயணத்தில் தொடர்ச்சியாக பத்து மணி நேரத்திற்கும் மேல் தூங்காமல் எழுத்து வேலையில் இருக்கிறார். வேலை முடிந்ததும் களைத்து போய், எழும்ப வேண்டிய நேரம் தாண்டியும் தூங்கிக் விட்டிருக்கிறார். காந்தி அவருக்காக தேநீரும், ரொட்டியும் வெண்ணெயும், தயாரித்து விட்டு எழுப்புகிறார். எழுந்தவருக்கு நாணம் உண்டாகிறது. நேரம் தாண்டி தூங்கியதற்காகவும், பாபூவிடம் மறைத்து வைத்திருந்த தேநீர் பழக்கம் அவரால் கண்டுபிடிக்கப்பட்டதே என்றும். காந்தி அவரை பலவாறாக சமாதானம் செய்து இனிக்க இனிக்க பேசி அவரை சாப்பிட வைக்கிறார். (எனக்குப் பிடித்த காட்சி இது தான்)

காகா காந்திக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்று தெளிவாகப் புலப்படும் காட்சியிது: இதே மகாதேவ் தன் நண்பருக்கு ”கிழவன் என்னை நல்லா வேலை வாங்கிக் கொண்டிருக்கிறான்.” என்று அங்கலாய்த்து கடிதமெழுதுகிறார்.அலுவல் ரீதியான கடிதமாக இருக்கக் கூடும் என்று பிரித்துப் படித்துவிட்டு வருந்துகிறார் பாபூ. கிழவனிடம் மன்னிப்பு கின்னிப்பு எல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதே அவ்வளவு தான் உன்கதை நான் சொல்வதைப் போல செய் என்று ஆற்றுப்படுத்துகிறார் காகா. “ அதெப்பிடி நீங்கள் கடிதத்தை படிக்கலாம். நல்லவேளை இன்னும் மோசமாக எழத இருந்தேன். எழுதாமல் விட்டேன் பாபூஜி.. நாங்கள் எளியவர்கள் உங்களையன்றி யாரை இப்படி பேசுவோம், இப்படிக் கூட இளைப்பாறுதல் இல்லாமல் நாங்கள் வேறெப்படி இயல்பாக இருப்பது. இப்படியெல்லாம் உம்மைபேசித்தானே எங்கள் பக்தியை அதிகமாக்க முடியும்?” என்று எழுதச் சொல்கிறார். அதற்கு நல்விதமாக பலன் கிட்டுகிறது.

காந்தி அரசாங்கங்களின் பிரச்சனைகளையும் எடுத்துக் கொண்டு தீர்க்கிறார். எளிய பையன் ஒருவனின் கல்யாணத்திற்காகவும் தீர்வளிக்கிறார். முரண்டு பிடிக்கும் மணமகனை சமாதானம் செய்து வழிக்குக் கொண்டு வருகிறார். பிறகு மணப்பெண்ணிடம் இப்படியொரு முரண்டு பிடிக்கும் பையன் உனக்குத் தேவைதானா என்று கேட்டு கல்யாணத்தை நிறுத்துகிறார். ”காகா.. நமக்கு கோ ரட்சை மட்டுமா முக்கியம் இப்படிப்பட்ட வாயில்லா பெண்களை காப்பாற்றுவதும் முக்கியம்” என்கிறார். சம்ப்ரான் போராட்டம் எத்தகைய மகத்தான போராட்டம்? அதில் பங்கெடுத்துக் கொண்டபடியே ஆசிரமத்தில் புதிய கழிவறையை கட்ட வேண்டிய கட்டாயத்தை தபால் அனுப்பி நினைவூட்டுகிறார். அங்கிருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வந்து புதிய பள்ளியின் செயல்பாடுகளை மேற்பார்வை பார்த்துச் செல்கிறார். தனக்கு வரும் கடிதங்களைல் காலி பக்கங்களில் பதிலெழுதி அனுப்புகிறார். வேப்பங்குச்சியில் பல் துலக்கி விட்டு உடைத்துச் சேமித்து அடுத்த நாளுக்கு வைத்துக் கொள்கிறார். ஒரு சிறையதிகாரி காந்தியின் அறையில் மேசை நாற்காலி, விளக்கு என்று வசதி செய்து கொடுத்து விட்டு, மாதச் செலவிற்கு 300 ரூபாய் அரசிடம் கேட்டு கடிதமெழுதுகிறார். குவளையையும் தட்டையும் எடுத்துக் கொண்டு மற்றெல்லாவற்றையும் ஒதுக்கிவிடுகிறார். மாதம் 70 ரூபாய் கூட தன்னால் செலவாகாது என்கிறார். இன்னும் இன்னும் பல காட்சிகளில் காந்தி என்ற மனிதரின் குணங்கள், குணவிசித்திரங்கள், மேன்மை, பல பரிமாணங்களில், பல கோணங்களில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. காகா காந்தியை ரசித்து, வழிபட்டு, ஒவ்வொரு சிறு தெறிப்புகளையும் விடாது, நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.

பிரவீன்குமார்

முந்தைய கட்டுரைஅறமெனும் பரிசு
அடுத்த கட்டுரைமுதுநாவல், கடிதங்கள்