விஷ்ணுபுரம் விழா கடிதம்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்திருந்தேன். நான் முக்கியமாக விழாவுக்கு வருவது விருதுவழங்கும் சடங்குக்காக அல்ல. அது ஒரு மங்கலவிழா. ஒரு மூத்தபடைப்பாளியை கொண்டாடுவதுதான். அது ஒரு நிறைவை அளிக்கிறது. கிளம்பி வரும்போது ஒரு மகிழ்ச்சியுடன் வரமுடிகிறது. ஆனால் அந்த இரண்டுநாட்களிலும் நடக்கும் இலக்கியவிவாதங்கள் அளிக்கும் தீவிரத்துக்காகவே நான் விஷ்ணுபுரம் விழாவுக்கு வருகிறேன்.

இதுவரை நடந்த அனேகமாக எல்லா விழாவுக்கும் வந்திருக்கிறேன் என நினைக்கிறேன். இதுவரை நிகழ்ந்த விழாக்களில் சிறப்புவிருந்தினர்களுடன் நடைபெற்ற விவாதங்களில் எச்.எஸ்.சிவப்பிரகாஷ், டி.பி.ராஜீவன், ஜெனிஸ் பரியத் ஆகியோருடனான விவாதங்கள் உச்சம். அவர்கள் சொன்ன கருத்துக்களால் அல்ல. அதெல்லாம் ஒருவேளை புத்தகங்களிலேயே கிடைக்கும். அவர்கள் தொட்டுத்தொட்டு செல்லும் அந்த வேகம்தான் கவனிக்கவேண்டியது. அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்று கண்கூடாக பார்க்கமுடிந்தது. டி.பி.ராஜீவன் படிமங்களின் அதிகாரம் பற்றி சொன்னதும் சரி, டி.ஆர்.நாகராஜ் மதமும் ஆன்மிகமும் தொட்டுக்கொள்ளும் இடம் பற்றிச் சொன்னதும்சரி, ஜெனிஸ் பரியத் ஆங்கிலம் நம்முடைய நாட்டார் தொன்மங்களை எப்படி மாற்றுகிறது என்று சொன்னதும் சரி அற்புதமான உரையாடல்கள். இன்றைக்கும் நம் நினைவிலே நீடிப்பவை.

விருந்தினர்களில் தேவதச்சன், அபி இருவரும்தான் சிறப்பான பேச்சுக்கள். அவர்கள் இருவருமே கவிஞர்கள். ஆனால் அற்புதமான உரையாடல். ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள் சென்ற உயரம் அற்புதமானது. கவிஞர்கள்தான் அந்த உயரத்துக்குச் செல்ல முடியும். அத்துடன் அவர்களுக்குச் சாதகமான சூழலும் அமையவேண்டுமென நினைக்கிறேன். அவர்களைச் சீண்டுவதும் அவர்களுடன் தர்க்கம் பண்ணுவதும் உதவாது. உடனே அவர்கள் வாசல்களை மூடிவிடுகிறார்கள். அவர்களை நாம் புரிந்துகொள்கிறோம் என்று அவர்கள் நம்பவேண்டும். அவர்களுக்கு நாம் நல்ல வாசகர்கள் என்று தெரியவேண்டும். அந்த வகையான ஓர் உரையாடல் இன்று தமிழ்நாட்டில் எங்குமே நடைபெறுவதில்லை.

இளம் எழுத்தாளர்களுடனான உரையாடலும் எழுத்தாளர் சந்திப்புகளும் மிக மிக முக்கியமானவை. இதைப்போன்ற சந்திப்புகள் இன்றைக்கு தமிழகத்தில் வேறெங்குமே நிகழ்வதில்லை. நான் தொடர்ச்சியாக இலக்கியக்கூட்டங்களுக்குச் சென்றுகொண்டிருப்பவன். எல்லாவகையான இலக்கியக்கூட்டங்களுக்கும் செல்வேன். எங்குமே ஓர் ஆழமான விவாதத்தைப் பார்க்கமுடியாது. பெரும்பாலானவர்கள் படிக்காமல் வருவார்கள். கூட்டத்தின் மையமே நடக்காது. ஆளாளுக்குப் பேசுவார்கள். ஜாலியாகப்பேசுவதாக நினைத்து அசட்டு ஜோக்குகள் அடித்து உளறுவார்கள். அல்லது அரசியல்பேசுவதாக எண்ணி எதையாவது கத்துவார்கள். இங்கே இலக்கியக்கூட்டம் என்றால் அரசியல் ரெண்டுவகைதான். பொலிடிகல் கரெக்ட்னெஸ் பேசுவது. இல்லாவிட்டால் கட்சியரசியல் பேசுவது. அதுக்குரிய நையாண்டிகள், பாவலாக்கள் எல்லம் உண்டு

விஷ்ணுபுரம் அரங்கிலேதான் இளைய படைப்பாளிகள் மேடையிலே இருக்க கீழே ஆடியன்ஸில் மூத்த படைப்பாளிகள் இருந்து கேள்விகேட்கிறார்கள். தேவதேவன், போகன், லட்சுமி மணிவண்ணன், கீரனூர் ஜாகீர்ராஜா, சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் என்று ஏகப்பட்ட எழுத்தாளர்கள் அரங்கிலே இருந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன் மேடையிலே இருந்த இளம் எழுத்தாளர்களான சுரேஷ் பிரதீப், விஷால்ராஜா, சுசீல்குமார் போன்றவர்கள் தொகுப்பு போட்டு எழுத்தாளர்களாக எஸ்டாபிளிஷ் ஆகிவிட்டார்கள்.

இளம் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. இந்தமுறை அகரமுதல்வன், கமலதேவி ஆகியோர் திட்டவட்டமாக பதில்களைச் சொன்னார்கள். கார்த்திக் புகழேந்தி, கார்த்திக் பாலசுப்ரமணியம் ஆகியோரிடம் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் எல்லா கேள்விகளுமே கூர்மையானவை. அவர்களின் படைப்புகளை கூர்மையாக வாசித்துவிட்டு வந்த மூத்த வாசகர்களும் எழுத்தாளர்களும் கேட்டவை. அதற்கு உடனடியாக பதில்சொன்னார்கள் என்பதே ஆச்சரியமான விஷயம்தான்.கார்த்திக் பாலசுப்ரமணியம் நோக்கி வந்த பல கேள்விகள் எதிர்விமர்சனத்தன்மை கொண்டவை. ஆனாலும் நிதானமாகப் பதில் சொன்னார். எல்லாருமே எதிர்விமர்சனக்கேள்விகளை நிதானமாக எதிர்கொண்டார்கள். இதுவரை மேடையிலே ஒருவர்தான் சுருங்கிப்போய் பேசமுடியாமல் இருந்தார். அரங்கிலிருந்தவர்களுக்கு அவர்  மேல் பெரிய அபிப்பிராயம் இல்லை என்று தெரிந்தது. அதோடு கேள்விகேட்டவரும் கடுமையாகக் கேட்டார். அவர் கூசிப்போய் தன்னைத்தானே டிஸ்மிஸ் செய்து பேசினார். அது அவருக்கு ஒரு புண்படுத்தும் அனுபவமாக இருந்திருக்கும். ஆகவேதான் எதிர்மறைக் கடுமை தேவையில்லை என்று நான் உங்களுக்குக் கடிதமெழுதினேன்.

அரங்கு முழுக்க நிறைந்திருந்த இளம்வாசகர்களை இன்றைக்கு தமிழகத்தின் எந்த இலக்கியக்கூட்டத்திலும் பார்க்கமுடியாது. இங்கே உள்ள தீவிரத்தை எங்கும் பார்க்கமுடியாது. பன்னிரண்டு ஆண்டுகளாக இந்த தீவிரம் இப்படியே நீடிக்கிறது. நான் ஒன்றை கவனித்தேன். இங்கே வராதவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் இங்கே நடப்பது என்ன என்றே தெரியாமலிருக்கிறார்கள். (இந்த ஆண்டு சாரு நிவேதிதாவோ அவருடன் வந்தவர்களோ ஒரு அரங்கிலேகூட உட்கார்ந்து கவனிக்கவில்லை. அவர்கள் சாரு சந்திப்புக்கும் விழாவுக்கும் மட்டும்தான் வந்தார்கள்) ஏனென்றால் இது இப்படி தீவிரமாக நடக்குமென அவர்களுக்குத் தெரியாது. அடுத்த ஆண்டுமுதல் விவாதங்களையும் முறையாக ஒளிப்பதிவுசெய்து வலையேற்றலாம் என நினைக்கிறேன்.

இந்த ஆண்டுவிழாவிலும் சில கேள்விகள் பதிலளிக்கப்படாமல் சிந்தனைக்குரியவையாக எஞ்சின. அகரமுதல்வனிடம் கேட்டகேள்வியில், இலங்கையில் இருந்து மொத்த ஈழத்தமிழ்வரலாற்றையும் பண்பாட்டையும் உள்ளடக்கிய ஒரு நாவல் எப்போதுவரும் என்ற கேள்வி. அவர்களுக்கு ரியாலிட்டி தான் ரியலிசம் என்னும் மாயை கைலாசபதி வகையறாக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் மீறமுடியாது. எந்த சமரசத்துக்கும் இடமில்லாத துரோகம் என ஒன்று அரசியல்களத்தில் உண்டா என்ற கேள்வியும் எதிக்ஸ் அல்லது ஆக்ஸியம்ஸ் சார்ந்தது. கார்த்திக் புகழேந்தியிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் பொதுவான சாராம்சம் நாட்டாரியலில் உள்ள கற்பனையை திரித்து நவீன அரசியல் சார்ந்த வேல்யூஸை அதில் ஏற்ற எழுத்தாளனுக்கு உரிமை உண்டா என்பது. அப்படி பல கேள்விகளுடன் நாம் திரும்புவதனால்தான் இது ஓராண்டு முழுமைக்கும் நீடிக்கும் உற்சாகத்தை அளிக்கும் நிகழ்வாக உள்ளது

ராம்குமார் அருண்

முந்தைய கட்டுரைமைத்ரி விமர்சன அரங்கு
அடுத்த கட்டுரைஅன்பு, இலக்கியம் – ஓர் எதிர்வினை