யோக முகாம், கடிதம்

முழுமையான யோகம்

ஐயா,

முதலில் யோகா வகுப்பு அமைத்து தந்ததற்கு மிக்க நன்றி.

சௌந்தர் ராஜன் அவர்கள் புன்னகை, தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் தரும் விதம், ஆசனத்தின்  வேர் வரை சென்று விளக்குவது, பல உபநிஷங்கள் மேற்கோள் காட்டுவது, இவை அனைத்தையும் தாண்டி, நான் முன்பு சந்தித்த குருமார்கள் மேல் இருந்த ஒரு விலக்கம், இவரிடம் இல்லை, அதனால் மனம் திறந்து பேச முடிந்தது . இந்த அணுக்கம் காரணமாக, ஒரு முறை ஒரு நல்ல timing ஜோக்கை அடித்தார், நான் மனம் விட்டு சிரித்து, என் நீண்ட கால நண்பர்களுடன் கையை தட்டி மகிழ்வது போல, நான் சட் என்று அவருடைய கையை தட்டி மகிழ்ந்தேன்.

முன்பு நான் கற்ற யோக முறைகளில் எங்கும் தத்துவத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. எங்கள் பயிற்சிக்கு பின், நீண்ட உரையாடலில் இன்னும் விரிவாக, தத்துவம் ஏன் முக்கியம் என்றும், தத்துவத்தின் வெளிப்பாடு தான் யோகம் என்றும் தெரிந்தது.

நான் விஷ்ணுபுரம் நண்பர்களுடன் மூன்று நாள் தங்குவது இதுவே முதல் முறை. அனைவருடனும்  எனக்கு இதுவே முதல் அறிமுகம். பயிற்சிக்கு பின்னான நீண்ட உரையாடலில், ஒருவர் தங்கள் கேள்வி/கருத்தை கூறும் போது, மற்றவர்கள், அதை கூர்ந்து கவனிப்பதும், அது முடிந்த பின்பு, தங்கள் கேள்வி/கருத்தை முன்வைப்பதும், யாரும் முறைப்படுத்தாமல், தன் இயல்பாக அமைந்தது  சிறப்பாக இருந்தது. அந்தியூர்  மணி மற்றும் சௌந்தர் ராஜன் இருவரும், ஜெயமோகன் போலவே, கேள்விகளுக்கு, நீண்ட ஆழமான விளக்கங்கள் அளித்தார்கள். மிக்காரைச் சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.

நாங்கள் கற்ற ஆசனத்தில், ஒற்றைக்கால் தவம், எனக்கு பல புதிய அனுபவங்களை தந்தது. மற்ற ஆசனம் போல அல்லாமல், செய்யும் போது, மிக சிறு பிழை இருந்தாலும் உடம்பு தடுமாற்றம் கண்டு விடும். உடல், மனம், இரண்டும் 100% சதவீதம் உடன்படாமல் சாத்தியமில்லை. இதை செய்து பிறகு, ஜெயமோகன் கதைகள் இன்னும் நன்கு உள்வாங்க முடிகிறது, இனி ஏக பாதத்தில் நின்ற பிறகு தான் புத்தகங்கள் படிக்க திட்டம்.

மூன்று நாளும், அனைத்தும், நமது இந்திய குரு சிஷ்ய மரபுப்படி நடந்தாலும், குரு எனது முழு உடல் வணக்கத்தை அனுமதிக்கவில்லை.

மூன்று வேளையும்  சுட சுட சுவையான உணவு. அருமையாக சமைத்த அக்கா அவருக்கு உதவிய அவரது தம்பி.  தேநீரை அனைவருக்கும் வாஞ்சையாக அறை தேடி வந்து கொடுத்த சிறுவர்கள், எனக்கு தந்த மாஸ்டர் சாய், குடிக்க மனமில்லையென்றாலும் அவனது அன்பிற்காக குடித்த அந்த தருணம். அனைவருக்கும் அன்பாக பரிமாறிய ஆறுமுகம் அண்ணா, எனக்கு தடுமன் பிடித்த போது, சூடு நீருக்கு, அவரது பிளாஸ்க்கை தந்து உதவினார். நான் பரிமாறும் நேரத்தில் அன்பாக நீங்க சாப்பிட்டாச்சா என்று கேட்டும் பல அன்பு உள்ளங்கள்.

எப்போது புல் புடுங்கும் யோகா என்று மாஸ்டரை விரட்டும் குட்டி (குழந்தை என்றால் அவளுக்கு கோபம் வருகிறது).

அனைத்தும் சிறப்பாக நடக்க, பம்பரமாக ஓடிக்கொண்டிருக்கும் அந்தியூர் மணி அண்ணா, இடைப்பட்ட நேரத்தில், ஆசனத்தில் சற்று தூக்கம்.

கடந்த ஒரு வருடமாக, குடும்ப சூழ்நிலைகளால் மிகுந்த மன உளைச்சல்கள், அதனால் உடல் உபாதைகள் ஏற்பட்டு, முன்பு கற்ற யோகா பயிற்சியில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவித்த நேரம், இந்த யோக வகுப்பு அமைந்தது. கடைசி நேரம் வரை, சூழ்நிலைகள் காரணமாக, வகுப்புக்கு வர முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.  ஆனால், பல இனிமையான நினைவுகள்.

வள்ளிராஜன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏ.பெரியதம்பிப் பிள்ளை -ஆசிரியர்களும் மாணவர்களும்