விஷ்ணுபுரம் விழா, கடிதம்

அன்புள்ள ஜெ ,

“வெயிலிது வெறும் வெயிலல்ல கடவுளின் அருள்தான் பாரடா” என்ற ‘குவெம்பு’வின் வரிகளை உண்மையாக்கும் டிசம்பர் குளிருக்கிடையே  வரும் மெல்லிய வெயிலைப் போன்ற சில இதமான நிகழ்வுகளையும்  கொண்டாட்டங்களையும் தன்னுள் வைத்திருக்கிறது டிசம்பர் மாதம் , கார்த்திகை தீபம் , அதிக வேலைப்பளு இல்லாத கிருஸ்மஸ் காலம் , கடந்த சில வருடங்களாக விஷ்ணுபுரம் விருது விழா என கொண்டாட்டங்கள் நிறைந்த மாதம் இது.

சாருவிற்கு விருது அறிவிக்கப்பட்டவுடனே  யூட்யூபில் அராத்து புத்தக வெளியீட்டு விழாவில் நீங்களும் சாருவும் ஓரே மேடையில் நிகழ்த்திய கொண்டாட்டம் நிறைந்த உரையாடல் ஞாபகம் வந்தது , அதை மீண்டும் நேரில் பார்க்க ஆவலாக இருந்தது .

17தேதி ஆம் காலை நண்பர்களோடு அரங்கிற்கு வெளியே பேசிக்கொண்டிருந்தபோது , ராணுவ ஒழுங்கோடு நேரம் தவறாமல் சரியாக 10 மணிக்கு முதல் இலக்கிய அமர்வுக்கான அறிவிப்பு கேட்டதும் உள்ளே வந்து அமர்ந்தோம் அரங்கம் நிரம்பிவிட்டிருந்தது ,  கார்த்திக் பாலசுப்பிரமணியன் அவர்களோடு உரையாடல் நல்ல தொடக்கமாக அமைந்தது , மென்பொருள் பணியாளர்களுக்கு அவர்கள் செய்யும் பணி குறித்த நிறைவு ஏன் பெரிதாக கிடைக்கவில்லை என்பதையொட்டி அருமையான விவாதம் ஒன்று நிகழ்ந்தது.

எனக்கும் அந்த நிறைவு குறித்த கேள்வி நான் வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே தோன்றியது  , அடுத்ததாக கமலதேவி அவர்களின் அமர்வில் கேள்வியாக எந்த பந்தை வீசினாலும் சிக்ஸர்களாக மாற்றிக்கொண்டிருந்தார் , மிகவும் ரசித்த அமர்வு , ஒருவருடைய எழுத்து பிடித்துவிட்டால் தொடர்ந்து அவருடைய அனைத்து படைப்புகளையுமே தொடர்ந்து வாசிப்பேன் என அவர்சொன்னதும் , சிறுவயதில் காந்தி குறித்த பார்வை அவருக்கு என்னவாக இருந்தது என்பதையும் , இப்போது காந்தி அவருக்கு ஆதர்ஷமாகவும் இருப்பதை சொன்னார் .

விஜயா வேலாயுதம் அவர்களுடனான அமர்வு சற்று புதியது , சமீப காலமாக பதிப்பகங்களின் வீழ்ச்சியை பற்றியும் , அதன் சிக்கல்களையும் பேசினார் , கார்த்திக் புகழேந்தியின் அமர்வுகள் அவருடைய படைப்புகளில் இருக்கும் தொன்மம் சார்ந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன , அருடையாட பாட்டியின் நினைவுகலிருந்து சொல்லும் கதைகளும் , தொ பரமசிவன் அவருடனான பழக்கமும் அவருடைய புனைவுலகில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தின என்பதையும் சொன்னார் .

குளச்சல் மு. யூசுப் அவர்களுடனான அமர்வு மொழிபெயர்ப்பு சார்ந்து எனக்கிருந்த நிறைய சந்தேகங்களை தீர்க்கும் விதமாக அமைந்தது, நிறைய முறை கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்க முயன்று சில கேள்விகள் எழுந்து தடைபட்டுகொண்டேயிருக்கின்றன அத்தகைய கேள்விக்கு குளச்சல் அவர்களிடமிருந்து முக்கியமான விடைகள் கிடைத்தன , அவர் முழுக்க முழுக்க வாசிப்பு இன்பத்திற்காகவே மலையாளம் கற்று அந்த மொழியின் உன்னத படைப்புகளை தமிழுக்கு மிக செறிவாக மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பது மிகவும் வியப்பாக இருந்தது.

அ.வெண்ணிலா அவர்களுடைய அமர்வும் சுவாரஸ்யமாக இருந்தது, கங்காபுரம் நாவல் குறித்த நிறைய கேள்விகள் எதிர்பார்க்காத வகையில்  இருந்தது குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஹிரண்யகர்ப்பம் என்ற சடங்கு குறித்தான கேள்வி.

இரவு  செந்தில் அவர்கள் நடத்திய இலக்கிய விநாடிவினா அற்புதமான அனுபவம் , கேள்விகள் எதுவாக இருந்தாலும் 2 பேர் பதில் சொல்ல கை தூக்கியதை பார்த்தால் திகிலாக இருந்தது , ஒருவகையில் கல்லூரி காலத்தை மீண்டும் நினைவுபடுத்திய நிகழ்வு, பரிசாக வழங்கப்படும் புத்தகங்களில் கையெழுத்திட மூன்று மூத்த எழுத்தாளர்கள் இங்கே இருக்கிறார்கள் என நிகழ்வை தொகுத்த செந்தில் சொன்னதும் உங்களுக்கு பக்கத்தில் இருந்த அருண்மொழி அம்மாவை நீங்கள் பொய்யான அதிர்ச்சியோடு பார்த்த தருணம் மிக அழகானது . கவிஞர் தேவதேவன் , அருண்மொழி நங்கை, ஜெ  கையெழுத்திட்ட எந்த புத்தகமும் பரிசாக கிடைக்காதது சற்று வருத்தம்தான் .

இரண்டாம் நாள் மேரி குர்தலாங் மற்றும் கனிஷ்கா குப்தா அவர்களுடைய அமர்வு தமிழ் சூழலில் மிகவும் புதிய அனுபவம் எழுத்தாளர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்கும் புதிய பணி இந்திய இலக்கிய சூழலில் உருவாகியிருப்பதையும் , அதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் நல்ல அம்சங்கள் என் அனைத்தையும் இருவரும் சிறப்பாக விளக்கினார்கள்,  கனிஷ்கா மடை திறந்த வெள்ளம் போல் பேசிக்கொண்டே சென்றார் , மொழிபெயர்த்து தொகுத்த செந்தில் அடிக்கடி அணை கட்டி தடுக்கவேண்டியிருந்தது.

சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் மமாங் தாய் அவர்களுடைய அமர்வில் அவருடைய படைப்புகளில் நதி எனும் படிமம் சார்ந்தும் , அவர்களுடைய ஆதி எனும் மொழி சாரந்த நிறைய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் புதிய திறப்புகளை அளித்தன , ஆங்கிலம் வாசிப்பதற்கு சற்று சிக்கல் இருந்தாலும் அவருடைய படைப்புகளை வாசிக்க தூண்டியது.

விருது விழாவின் முக்கிய அம்சமான சாரு நிவேதிதா அவர்களுடனான அமர்வு , இந்த அமர்வை தொகுத்து வழங்க எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம் என சொன்னவுடன் அரங்கம் அதிர்ந்தது , நான் மிகவும் எதிர்பார்த்த நிகழ்வு , உங்களுக்கும் சாரு அவர்களுக்கும் இருக்கும் கருத்து மற்றும் ரசனை முரண்களை சாரு சொல்லிய விதம் மிக அருமை , அவருக்கு steak என்ற உணவுவகை சுத்தமாக பிடிக்காது அதனால் சீலேவில் சரியாக சாப்பிட முடியவில்லை என சொல்லி முடித்த அடுத்த தருணத்தில் “எனக்கு உலகத்தில் இருக்கும் உணவு வகைகளிலேயே பிடித்தது steakதான் என்று சொன்னது போன்ற அருமையான தருணங்கள் கொண்ட அமர்வாக இருந்தது , இத்தனை முரண்கள் இருந்தும் இரு துருவங்களை ஒன்றாக இணைப்பது இலக்கியம்தான் .

1 – 1:30 மணி நேர அமர்வுகள் சில நிமிடங்களில் முடிந்ததைப்போல பெரும்பாலான அமர்வுகளில் தோன்றியது , ”  கேள்வி கேட்பதற்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது , தயக்கம் கொஞ்சம் விலகி கேள்வி கேட்கலாம் என நினைக்கும்போது அமர்வே முடிந்துவிட்டது ” என பக்கத்தில் இருந்த நண்பர் சொன்னார் அந்த அளவிற்கு அமர்வுகள் சீக்கிரம் முடிந்ததாக தோன்றியது அதற்கு முக்கிய காரணம் இந்த முறை கேள்விகள் மிக செறிவானவை , நேரத்தை வீணாக்கும் அல்லது கவன ஈர்ப்புக்கான கேள்விகள் சுத்தமாக இல்லை. சுருக்கமாக ஆனால் நுட்பமாககேள்வி கேட்கும் முறை ஒன்று மரபு போல விஷ்ணுபுரம் விழாவில் உருவாகியிருக்கிறது , என்னை வெகுவாக ஈர்த்தது சக்திவேலின் கேள்விகள் , மிக மிக நுட்பமாக கேட்கப்பட்ட கேள்விகள் அவருடையது . பதில்களும்  நேரத்தில் எவ்வித தயக்கமோ பதற்றமோ இல்லாமல் இயல்பாக இருந்தது , வளர்ந்து வரும் எந்த எழுத்தாளர்களுக்கும் 500 பேர் கொண்ட அவையில் வாசகர்களோடு உரையாடும் இந்த களம் மிக முக்கியமானது.

2020 ஈரோடு புதிய வாசகர் சந்திப்பில் அறிமுகமான சில நண்பர்கள் சேர்ந்து எழுத்தாளர் போகன் சங்கரிடம் பேய் கதைகளை சொல்லுமாறு வலியுறுத்திகொண்டிருந்தோம் , அமர்வுகள் முடிந்ததும் ராஜஸ்தானி சங் அறையில் இட நெருக்கடியில் அமர்ந்துக்கொண்டு நள்ளிரவு வரை நீளும் உங்கள் உரையாடல் கொண்டாட்டமானது இந்த முறையும் அமர்க்களமாக  இருந்தது.

தேநீர் மற்றும் உணவு இடைவெளிகளில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களோடு உரையாடும்போது படைப்பாளிகளுக்கு டெல்லி , மும்பை போன்ற பெருநகரங்களில் வசிப்பதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் எப்படி அவர்களுடைய புனைவுலகை வேறு தளத்திற்கு எடுத்துச்செல்கிறது என்பதைப்பற்றி பல விஷயங்களை சொன்னார் , ஒருநாள் முழுவதும் அவர் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு சுவாரஸ்யமான உரையாடல்.

விருது வழங்கும் விழாவில் அவை நிரம்பி வழிந்தது , விருது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வந்துகொண்டிருந்த வீண் சலசலப்புகள் நுரை போல் அடங்கிய தருணம் அது என நினைத்துக்கொண்டேன் , வாழ்த்துரைகளும் மிக செறிவானவை குறிப்பாக உங்கள் வாழ்த்துரை சமீப காலங்களில் உங்களுடைய அருமையான உரைகளில் ஒன்று.

வழக்கமாக விழா முடிந்த அடுத்தநாள் உங்களோடு மீண்டும் ஒரு உரையாடல் நிகழும் இந்த முறை அது நிகழவில்லை ஆனால் குளச்சல் யூசுப் அவர்களோடு தனிபட்ட முறையில் நிறைய உரையாட வாய்ப்பு கிடைத்தது.

அருமையான உணவும் , மற்ற ஏற்பாடுகளையும் சிறிய குறைகள்கூட இல்லாமல் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்த விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவரும் மிக்க நன்றி.

ராஜஸ்தானி சங் படிக்கட்டுகளில் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இருந்த உற்சாகமும் , வெடிச்சிரிப்புகளும் புத்தாண்டில் அனைவருக்கும் அமைய வேண்டுகிறேன்.

அன்புடன் ,

ஷிமோகா பாலு

முந்தைய கட்டுரையோகம்: நல்லூழ் விளைவு
அடுத்த கட்டுரைதக்கை ராமாயணம்